இன்று இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை தொடரின் 12ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோத உள்ளனர்.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும், இரண்டாவது ஆட்டத்தில்  பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 349 ரன் இலக்கை எட்டமுடியாமல் 9 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது. அடுத்ததாக, மோர்தசா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட வங்காளதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இரண்டாவது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் போராடி வீழ்ந்தது.

இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 16ல் இங்கிலாந்து அணியும் 4ல் வங்காளதேச அணியும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொடரில் துடிப்புமிக்க இளம் வீர்ர்களைக் கொண்ட வங்காளதேச அணி வாய்ப்புக் கிடைத்தால் எதிரணியை அதிர்ச்சுகுள்ளாக்கி சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எளிதல்ல. எனவே இன்றைய ஆட்டம் வங்காளதேசத்திற்கு சவாலான ஆட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.

அணி விவரம்:

இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.