1. விவியன் ரிச்சர்ட்ஸ்

 

முதல் பதினைந்து ஓவரில் ரன்களை குவிக்கும் முறையை 96ம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கையின் ஜெயசூர்யா வெளிப்படுத்தியபோது கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தியது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜெயசூர்யா அடித்த அடியில் அப்போதைய இங்கிலாந்தின் அணித்தலைவர் ஆர்தட்டன் இப்படி ஆடலாமா என்று நடுவரிடமே முறையிட்டார். ஆனால் அதற்கு முன்பிருந்தே கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கு ஜெயசூர்யாவின் ஆட்டம் இருவரை ஞாபகப்படுத்தியிருக்கும். ஒன்று நம் ஸ்ரீகாந்த். இரண்டாவது ஸ்ரீகாந்த்தின் மனம் கவர்ந்த அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்ஸ். ரிச்சர்ட்ஸ் ஜெயசூர்யா,ஸ்ரீகாந்த் போல துவக்க ஆட்டகாரர் இல்லை. நான்காவதாக இறங்குபவர்தான். ஆனால் பந்து என்பது அடிப்பதற்குத்தான் என்பதை உலகிற்கு தன் மட்டையால் தெரிவித்தவர் ரிச்சர்ட்ஸ்.

1975 முதல் 90 வரை மேற்கு இந்தியத்தீவுகள் அணி வெல்லமுடியாத மிகச்சிறந்த அணியாக விளங்கியதற்கு முதுகெலும்பாக திகழ்ந்தவர் ரிச்சர்ட்ஸ் என்பதை சந்தேகமின்றி கூறமுடியும். ஹெயின்ஸ்,கிரீனிட்ஜ் இருவரும் மே.இ.தீவுகளின் துவக்க ஆட்டக்காரர்கள்.அவர்களது விக்கெட்டை எடுப்பதே மிகக்கடினம்.அவர்களை வீழ்த்தி பெருமூச்சுடன் அடுத்தது யார் என்று பவுலர்கள் பெவிலியன் பக்கம் திரும்பினால் அங்கிருந்து வெளிப்படுவார் ரிச்சர்ட்ஸ். மட்டையை சுழற்றியபடியும் வாயில் சுவீங்கத்தை மென்றபடியும் மெல்ல பிட்ச் நோக்கி வரும் அவரைக் கண்டவுடன் செய்வதறியாது விழிபிதுங்குவார்கள் பவுலர்கள்.காரணம் ரிச்சர்ட்ஸ் நல்ல பந்துகளையும் அனாயசமாக சிக்சர் அடிக்கக்கூடியவர்.

74ம் வருடம்தான் ரிச்சர்ட்ஸ் முதன் முதலாக களமிறங்கினார். அடுத்த வருடம் நடந்த முதலாவது ஒருநாள் உலகக்கோப்பை போட்டி பைனலில் ரிச்சர்ட்ஸ் தன் அபார பீல்டிங்கினால் மூன்று முக்கிய எதிரணி வீரர்களை ரன் அவுட் ஆக்கினார். அதன்பிறகு 79ம் வருடம் நடந்த இரண்டாவது உலகக்கோப்பை போட்டி பைனலில் ஒருபக்கம் விக்கட் விழுந்தபோதும் அசராமல் நின்று 138 ரன்களை குவித்து தன் அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார் ரிச்சர்ட்ஸ். ஒரு உலகக்கோப்பை பைனலில்  அதிகபட்ச ரன்களாக 2003 வரை நீடித்தது ரிச்சர்ட்ஸின் இந்த அற்புதமான 138 ரன்கள்.

தன்னுடைய இளமைக்காலங்களில் அதிகமாக புட்பால் விளையாடியவர் ரிச்சர்ட்ஸ்.அதனால் இயல்பாகவே உடல்வலிமை பெற்றவர். மிட்விக்கட் திசையில் இவர் அடிக்கும் சிக்சர்களும் பவுண்டரிகளும் கண் இமைக்கும் நேரத்தில் எல்லைக்கோட்டை கடந்திருக்கும். பேட்ஸ்மேனின் தலையை நோக்கி வரும் பந்துகளை “ஹூக் ஷாட்” என்கிற முறையில் அற்புதமாக பவுண்டரிக்கு விரட்டுவதில் கைதேர்ந்தவர்.மிக உபயோகமான ஸ்பின்னர்.மிகச்சிறந்த பீல்டர்.இவரது தலைமையில் மே.இ.தீவுகள் அணி ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேல் எதிரணியினர் சீண்டினால் சிறுத்தையாக மாறிவிடும் குணமுடையவர்.

உதாரணமாக, இங்கிலாந்தில் ஒரு கவுண்டி போட்டி. க்ரெக் தாமஸ் என்கிற பவுலர் பந்துவீசுகிறார். ரிச்சர்ட்ஸ் மட்டையைச் சுழற்ற பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் புகுகிறது. தாமஸ் ரிச்சர்ட்ஸ் அருகில் வந்து “அது சிகப்பாக,உருண்டையாக ஐந்து அவுன்ஸ் கனமுடையது” என்று கடந்து சென்ற பந்தை பற்றி நக்கலாக சொல்கிறார். அடுத்த பந்தை வழக்கம்போல் மைதானத்திற்கு வெளியே அடிக்கிறார் ரிச்சர்ட்ஸ். பந்து காணாமல் போகிறது. தாமஸிடம் வந்தவர் “ க்ரெக்,உனக்குத்தெரியும் அது எப்படி இருக்குமென்று இப்போது போய் தேடு” என்கிறார். அதுதான் ரிச்சர்ட்ஸ்.

ஒரு நாள் போட்டியில் இருமுறை 180க்கும் மேல் குவித்தவர். அவர் ஓய்வு பெறும்போது அவரது ஒருநாள் போட்டிகளின் சராசரி 47. ஸ்ட்ரைக் ரேட் 90. இது இன்றைய கிரிக்கெட் உலகில் சாதரணமான சராசரியாகவும் ஸ்ட் ரைக் ரேட்டாகவும் தோன்றலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் கோலோச்சிக்கொண்டிருந்த எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒரு நாள் போட்டிகளில் 30களில் சராசரியும் 70களில் ஸ்ட் ரைக் ரேட்டும் இருந்தால் அதுவே சிறந்த வீரருக்கான அடையாளமாக கருதப்பட்டது. இதன் மூலம் ரிச்சர்ட்ஸின் தனித்திறமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 100 சதங்களுக்கு மேல் அடித்த ஒரே மேற்கு இந்தியத்தீவுகளின் வீரர்.

 

 

 

கிரிக்கெட்டின் பைபிள் என்று கருதப்படும் விஸ்டன் இவரை ஒருநாள் போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக தேர்ந்தெடுத்து கவுரவித்தது. இங்கிலாந்து இவருக்கு Sir பட்டம் வழங்கியது. ஒரு நாள் போட்டிகள் மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்தியவர். எட்டாயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்தவர். இங்கிலாந்துக்கு எதிராக 56 பந்துகளில் சதமடித்தது பலவருடங்கள் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது.

கிரிக்கெட் ரசிகர்களால் “கிங்” என்று செல்லமாக அழைக்கப்படும் ரிச்சர்ட்ஸ் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஐந்து வீரர்களில் ஒருவராக 2000ம் ஆண்டு இவரை 100 பேர் கொண்ட கிரிக்கெட் வல்லுனர்கள் குழு தேர்ந்தெடுத்தது. பவுன்சர்களாக டென்னிஸ் லில்லியும்,இம்ரான் கானும் வீசிய கடுமையான போட்டிகளிலும் கூட பிடிவாதமாக கடைசிவரை ஹெல்மட் அணியாமல் தன் கிரிக்கெட் மட்டையை மட்டுமே நம்பி விளையாடிய  கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் சர்.ஐசக் விவியன் அலெக்ஸாண்டர் ரிச்சர்ட்ஸ்.