வயது வரம்பு சட்டம் அரசு வேலைகளுக்கானது என்றான காலம் போய் இப்பொழுது காதலுக்கும் தகும் என சமூகம் விதிகள் வகுத்துக்கொள்ள முனைகிறது. நாற்பதைக்கடந்து விட்டபின் காதல் கவிதைகள் எழுதினால் புருவம் உயர்த்துகிறது சொந்தங்கள். வெள்ளிநரை எட்டிப்பார்க்கும் பொழுது, ஆசையும் காதலையும் சுருட்டி பகடை மட்டுமே விளையாடச்சொல்கிறது சுற்றம். காதல் கசிந்துருகி என் கள்வனின் கண் சுட்டி கவிதை வரைந்தால், ரெண்டடி தள்ளிப்போகிறது நட்பு.என் நெஞ்சு நரம்புகள் மீட்டுவதெல்லாம் என்னைக்கரை ஏற்றவே, உங்கள் விதிகளை கறையேத்த அல்ல.

வாய் விட்டு காதலப்பேசுனா கற்புக்கு களங்கம்னு போதனையில் வளந்த உசிரு இப்பத்தான் பேனா முனையிலையாவது ஆர்டின் வரையலாம்னு வண்ணக்கலவைய நிரப்பி வெச்சுருக்கு. சொட்டு சொட்டா அந்த வண்ணந்தெறிக்கும் போது, நா வானவில் ஆனது யாருக்காச்சும் புரியுமா.

வயசல்ல வரையரை, எந்தன் இதயத்துடிப்பே என்காதலின் எல்லை கூறட்டும். அது வரை கொஞ்சமே கொஞ்சம் நானும் ரெக்க கட்டி பறந்துக்கிறேனே, சமூகமே உங்க விதிகளை தளர்த்திக்குங்க என் காதற்சிறகடிக்கட்டுமே….