காந்தமுள் 2: 1965

அப்பா, க.பாலகிருஷ்ணன். யாப்புக் கவி புனைவதில் வல்லவர். ஆசு கவி. போகிற போக்கில் வெண்பா சொல்வார். மகளின் மஞ்சள் நீராட்டு விழா அழைப்பதழையும் ஆசிரியப்பாவில் அச்சடித்தவர். பி.ஏ. ஹானர்ஸ் படித்தவர். பச்சையப்பன் கல்லூரியில் டாக்டர் மு.வரதராசனார், அ.ச.ஞானசம்பந்தன், க.அன்பழகன் ஆகியோரின் மாணவர். கொள்கை பிடிப்புள்ள மனிதர். பெரியார்தான் அவருக்கு வழிகாட்டி. அண்ணாதான் அவருடைய அரிச்சுவடி. கலைஞர் அவருக்குத் தலைவர். தினசரி என்றால் முரசொலி. வாழ்நாள் முழுதும் அவற்றை மாற்றிக்கொள்ளாதவர். அன்றைய முரசொலியில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய செய்திகள் அதிகமாக இடம்பெற்றிருக்கலாம். அது, 1965.

தனிவாழ்விலும் அவருக்குச் சில தனிப்பட்ட விருப்பங்கள் இருந்தன. சோப்பு என்றால் சந்திரிகா, செருப்பு என்றால் டுயரபல் க்ரோம் ஃபேக்டரி, வேட்டி என்றால் ஃபின்லே, வாட்ச் என்றால் ஃபேவர் லூபா, லாண்டரி என்றால் டிப் டாப், சைக்கிள் என்றால் ராலெ என அவர் எல்லாவற்றிலும் பிடிவாதமாக இருப்பார். இவை எல்லாம் என்னுடைய ஒரு வயது பிராயத்திலேயே தெரிந்ததா என்றால் ஓரளவுக்குத் தெரிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்பாவோட வாட்ச் எது என்றால் காட்டிவிடுவேன் என நினைவு தெரிந்த நாட்களில் சொல்வார்கள். அப்பாவோட தலைவர் எனக்கு சொல்லத் தெரியாமல் இருந்திருக்கலாம். கேட்டிருந்தால் முரசொலியில் காட்டியிருப்பேனோ என்னவோ?

ஏறத்தாழ நூறு பேர் வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த சம்பவங்கள் அன்றைய செய்தித்தாளில் பெரிய தலைப்புகளில் வெளியாகின. அந்தச் செய்திகள் அனைத்தையும் அவர் முரசொலி மூலமாகவே படித்தார். அதுதான் உண்மையைச் சொல்லும் ஒரே நாளிதழ் என அவர் 2005-ல் இறக்கும் வரை நம்பினார்.

அவருடைய பிடிவாதங்களைச் சொந்த பந்தங்கள் அனைவரும் அறிந்திருந்தனர்.  அப்படி ஒன்றும் செல்வம் புழங்கும் வீடு இல்லை என்றாலும் அவர் வாழும் காலம் வரை அவர் இஷ்டப்படிதான் இருந்தார். முன்னோர்கள் சேர்த்த சொத்துக்கள் அவருக்கு இருந்தன. சாதாரண மளிகைக்கடை பாக்கிக்கெல்லாம் அவர் கிராமத்து நிலங்களை விற்பார். பணம் அவருக்கு ஒரு பொருட்டாக இருந்ததாகவே நான் பார்த்ததில்லை. குடும்பத்தோடு சர்க்கஸுக்கோ, சினிமாவுக்கோ செல்வதென்றால் டாக்ஸியில்தான் அழைத்துச் செல்வார். இ.பி-யில் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து அவருக்கு வந்த கிராஜுயூட்டி பணம் ஒரு லட்சத்தை ஒரே நாளில் சீட்டாட்டத்தில் இழந்துவிட்டு வந்துவிட்டார். நிலம், நகை, சம்பளம் எதுவுமே அவருக்குப் போதவில்லை. எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழக்கும் அப்பாவித்தனமான துணிவு அவரிடம் இருந்தது. எதையோ வாங்குவதற்காகக் கடைக்குப் போனவர், எதிரில் வாயில் குடத்தைக் கவ்வியபடி சைக்கிள் ஓட்டி சாகஸம் புரிந்தவனுக்கு கையில் இருந்த 10 ரூபாயைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார். அப்போது தங்கம் சவரன் 200 ரூபாய். எங்கள் வீட்டு வாடகை 40 ரூபாய். அவர் உணர்ச்சிவசப்பட்ட மனிதராக, கருணை உள்ளம் கொண்டவராக இருந்தார். இத்துடன் எளிதில் கோபப்படுபவராகவும் அவர் இருந்தார். பலர் அவரைவிட்டு விலகிப் போகவும் அது காரணமாக இருந்தது.

நகையை விற்று குழந்தைகளுக்கு ஒயிட் ஃபீல்டு பேக்கரியில் கேக் வாங்கித் தரும் அப்பா அவர். குல்மொஹர் ஓட்டலில் பலூடா வாங்கித் தருவதற்காகவே ரிக்‌ஷாவில் அழைத்துச் செல்லும் அப்பா. அப்பாவிடம் கேட்டுவிட்டால் அது உடனே கிடைத்துவிடும். எனக்கும் என் அக்காவுக்கும் ‘அண்டைவீட்டுக்காரரின் பொறாமை’ அதிகமாகவே இருந்திருக்கும் அப்போது. அப்பாவை நேசிக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் இருந்தன.

என்னுடைய முதல் வயது நிறைவில் என்னைப் புகைப்படம் எடுக்கக் கூட்டிச் சென்ற நினைவுகள் புகைபோல நினைவிருக்கிறது. அது புகைப்படமாகவும் பதிவானதால் அந்த நினைவு ஒரு வயது தொட்டே வலிமையாகியிருக்கலாம். வேப்பேரி பகுதியில் கந்தன் ஸ்டூடியோ பிரபலம். ஐந்து கிலோ மீட்டர் சுற்றுவட்டார மக்கள் எல்லோரும் அங்குதான் ஜடைவைத்து சீமந்த போட்டோ எடுப்பார்கள். அம்மாவும் அப்பாவும் நின்று எடுத்துக்கொண்ட சீமந்த வைபவ போட்டோ ஒன்று எங்கள் வீட்டில் உண்டு. அம்மாவின் ஜடை மட்டும் அவருக்குப் பக்கவாட்டில் வைத்த நிலைக்கண்ணாடியில் முழுதாகத் தெரியும். அங்குதான் என் முதல் வயது போட்டோ எடுக்கக் கிளம்பினோம்.
ரிக்‌ஷா வந்துவிட்டது. அம்மா கிளம்பிவர நேரம் ஆனது. என்னையும் அக்காவையும் அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்துவிட்ட அப்பா, இரண்டு முறை வீட்டின் உட்புறம் பார்த்து குரல் கொடுத்தார். அம்மா வரவில்லை. ‘‘நீ வண்டியை எடுப்பா’’ என்றார் ரிக்‌ஷாகாரரைப் பார்த்து. நாங்கள் மூவர் மட்டும் நிற்கும் அந்த போட்டோவை இப்போது பார்க்கும்போதும் கிளம்பிப் போய்க்கொண்டிருந்த ரிக்‌ஷாவுக்குப் பின்னால் அம்மா அவசரமாக ஓடிவந்து நின்றகோலம் மாய பிம்பமாய் தோன்றும். அம்மா எனக்குச் சொன்ன தகவலின் படி ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டரின் நான் பார்த்த முதல் திரைப்படம், எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்.

நான் வளர்ந்த நிலையில் ஊரில் சொத்து இல்லை. கடன் இருந்தது.
அதனால், அப்பாவின் பாதிப்பு என்னை ‘பாதித்தது’. நான் அவரை பலவிஷயங்களில் நேர் எதிராகப் பின்பற்றினேன். எந்த சோப் என்றாலும் குளிப்பேன், எந்த கம்பெனி செருப்பென்றாலும் அணிவேன், எந்த உடையும் திருப்திதான், எந்த உணவும் சிறப்புதான்… ஓர் அளவுக்கு சிக்கனமாக வாழ அறிந்தேன். பெரியார் பற்றைத் தவிர அவரிடம் இருந்து அனைத்திலும் மாறுபட்டுப் போனேன். இன்னொரு வகையில் சிக்கனமாக இருப்பதும் பெரியாரின் கொள்கைதானே?

எவ்வளவு மாறுபட்ட போதும் அப்பாதான் எனக்கு வழிகாட்டி.
அவரிடம் இருந்த பாசம்மட்டும் மாறவில்லை. சில நேரங்களில் யாரிடமாவது முரண்பட்டாலும் அவர்களை வெறுக்காமல் இருக்கும் பயிற்சி எனக்கு என் அப்பாவில் இருந்துதான் ஆரம்பித்தது.

(தொடரும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. 1970: அண்ணா நகர்,  கலைஞர் கருணாநிதி நகர்- தமிழ்மகன்
  2. 1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்
  3. 1968 : இந்த அத்தியாயத்தில் சிறிய முன்கதை சுருக்கம். - தமிழ்மகன்
  4. 1967: அண்ணா கண்ட தமிழகம்- தமிழ்மகன்
  5. 1966 அண்ணாவின் குரல்: நாடு மாறியது… வீடு மாறியது!- தமிழ்மகன்