தீராத பாதைகள்

‘தீராத பாதைகள்’ என்னும் இத்தொடர் எந்தவித முன் முடிவுகளும் இன்றி ஆரம்பிக்கப்பட்டதுதான். உண்மையில் புனைவுகளே எனக்கு விருப்பமானது என்றாலும் இத்தொடரின் பதிவுகளை திட்டமின்றி எழுதிக்கொண்டேயிருக்கிறேன். சென்ற கட்டுரைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் என்று மனுஷ் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேஸ்புக்கில் வந்த கட்டுரையின் இணைப்பில் அபிலாஷ் அவர்கள் ‘மனுஷன் வாழ்றான்யா’ என்று பதிவிட்டிருந்தார். நினைவிருக்கிறதா? இத்தொடரின் முதல் கட்டுரை ஆரம்பித்த சமயம் மெல்ல மெல்ல அமெரிக்காவில் கொரோனா பரவிக்கொண்டிருந்தது. எந்தவித சலனங்களுக்குள்ளும் சிக்கிக்கொள்ளக் கூடதென்று எழுதிக்கொண்டிருந்தேன். அபிலாஷ் மற்றும் மனுஷ் போன்ற ஆசான்களின் பாராட்டு இன்னும் எழுத ஊக்கமளிக்கிறது.  மேலும் சரியான பாதையில் தான் ‘தீராத பாதைகள்’ பயணிக்கிறது என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது.

என் நண்பர்களை பலரை போல் என்னால் சாதூர்யமாக இருக்க தெரியவில்லை. அதுவும் பண விவகாரம் ஆகவே ஆகாது. தமிழ் நாட்டில் இருந்த போதும் சரி, பாஸ்டனிலும் சரி, பண விஷயங்களில் நண்பர்கள் என்னை கடிந்து கொள்வார்கள். வங்கி செயல்பாடுகளும் எனக்கு அவ்வளவாக தெரியாது. இது பிரதான காரணமாக இருந்தாலும் நம்முடைய (தமிழகம்) வங்கிகளுக்கு சென்று வருவது என்பது ஜெயிலுக்குள் சென்று வருவது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது. தனியார் வங்கிகள் கொஞ்சம் பரவாயில்லை. காவலாளி தொடங்கி அனைவரும் வாடிக்கையாளர்களை அடிமைகளை போலவே நடத்துகிறார்கள். அஞ்சல் அலுவலகங்களும் வங்கிகளும் சராசரி மனிதர்கள் அதிகம் புழங்கும் இடங்கள். அதனால் அவைகளை பற்றி சந்தேகம் இல்லாமல் எழுதுகிறேன். மற்ற அரசு அலுவலகங்கள் இதைவிட மோசமானதாகத்தான் இருக்க முடியும் என்பது என் கணிப்பு. இந்த மாதிரியான சூழ்நிலையிலிருந்து வந்த எனக்கு இங்கே சாதாரண செயல்பாடுகளும் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் கையிலிருந்த சில காசோலைகளை வங்கியில் செலுத்திவர சென்றேன் (காசோலை கைக்கு வந்து பல நாட்களுக்கு மேலாகிறது). ATMல் காசோலைகளை நம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த முடியும். மொத்தமாக காசோலைகளை செலுத்தியதால் சற்று பதற்றத்தில் காசோலைகளின் கூட்டுத்தொகையை தவறாக பதிவு செய்துவிட்டேன். வேறொரு பிரச்சனையால் தானியங்கி இன்னும் கொஞ்சம் அதிக தொகையை கணக்கில் பதிந்துவிட்டது. ஆயிரத்து ஐநூறு டாலர்கள் அதிகமாக கணக்கில் ஏற்றப்பட்டது என்று ரசீது சொல்லியது. உடனே என் தமிழ் நாட்டு கொடுங்கனவுகள் நினைவுக்கு வர, வங்கி உதவி எண்ணை அழைத்தேன். மறுபுறம் பேசிய நபர் மிகக் கனிவாக பேசினார். என் நிலையை சொன்னதும் அவர் சொன்னதை என் வாழ் நாளில் நான் மறக்கவே முடியாது, “தவறு உங்களுடையதல்ல. சிரமத்திற்கு வருந்துகிறோம். உடனே சரி செய்ய முயல்கிறோம்.” எப்படியிருக்கிறது பாருங்கள்! உண்மையில் தவறு என்னுடையதுதான் அதை நானே சுட்டிக்காட்டினாலும் என்னை குறை கூறாமல் தன்னை பழி சுமத்திக்கொண்டு உடனடியாக வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். இது நம்மூரில் நடைபெற சாத்தியமிருக்கிறதா?  இங்கு நிறவெறி சுத்தமாக ஒழிந்துவிட்டதா? இல்லை. ஆனால் சிந்தனையில் நிறத்தை குறித்து பேசுவது தவறென்று கற்பிக்கப்படுகிறது. இந்தியாவில் இது சாத்தியமே இல்லாமல் இருக்கிறது. இதனால்தான் மனு ஸ்மிருதி எரிப்பதில் நம்பிக்கையில்லை என்கிறேன். இந்தச் செய்தியை நன்கு விளக்க வேண்டும் இல்லையென்றால் நம் உலக நாயகனின் உளறலை போல நம்முடையதும் தேங்கிவிடும். மனு ஸ்மிருதியை எரிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு எரித்தல் மேம்போக்கான செயல் என்பது விளங்கவில்லை. மனு ஸ்மிருதி நடைமுறையில் இல்லை என்று வாதிடுபவர்களுக்கு, ஒவ்வொருவரது மனதிலும் அது ஆழமாக பதிந்திருக்கிறது எனற உண்மையும் புரியவில்லை. இதை தெரிவிக்க முடியாமல்தான் ‘நான் நாத்திகன் அல்ல பகுத்தறிவாளன்’ போன்ற உளறல்கள் உரக்க ஒலிக்கிறது. திரும்பவும் சொல்கிறேன், இதற்கெல்லாம் தீர்வு சிந்தனைப் பூர்வமாக நிகழ வேண்டும்.

நேற்று அமெரிக்க நண்பன் ஒருவன் அவசரமாக ஓடி வந்தான். அதிபர் டொனாட் ட்ரம்ப் இந்திய சென்றிருந்த போது கிருஷ்ண என்ற நபர் ட்ரம்புக்கு கோவில் கட்டியிருப்பதாக செய்திகள் வந்தன (ஆந்திர மாநிலம் என்று நினைக்கிறேன்). கோட் சூட்டுடன் சிரித்த முகத்துடன் நெற்றியில் நீண்ட பொட்டுடன் ட்ரம்பின் முழு உருவ சிலைக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்தன. கொஞ்ச நாளுக்கு முன்னால் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதியானதில்லையா? அந்த சமயம் மனமுடைந்த ட்ரம்பின் பக்தர் கிருஷ்ணா, ட்ரம்பின் உடல்நலன் தேற உண்ணா நோன்பு இருக்க ஆரம்பித்திருக்கிறார். சில நாள் தொடர்ந்த உண்ணா நோன்பில் கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். கிருஷ்ணாவின் இந்த கொடூர முடிவை அமெரிக்க நண்பன் கண்கள் விரிய பதற்றமாக சொல்லிக்கொண்டிருந்தான். என்னிடமிருந்து எந்த மிகையுணர்ச்சியும் வராததால் அதுவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி வரும்? இந்த மாதிரி ஆயிரத்து எட்டு உதாரணங்களை பார்த்து வளர்ந்தவன்தானே நான்? நடிகனுக்காக சுண்டு விரலை வெட்டிக்கொண்டது, அரசியல்வாதிக்காக தீக்குளித்தது இன்னும் எத்தனை எத்தனை அதிர்ச்சிகள்! கொரோனா காலத்தில் திரைப்படங்கள் வெளியாகவில்லை. வெளியாகிருந்தால் பாலோ பியரோ கொண்டு நம்மவர்கள் அபிஷேகம் செய்திருப்பார்கள்தானே? சமீபத்தில் வெளியான ஒரு ரஜினி படத்திற்கு விமர்சனம் கேட்டதற்கு கேமரா முன்பாக பைத்தியமாகவே மாறிய ரசிகனை நாம் பார்த்தோம்தானே? இதையெல்லாம் அமெரிக்க நண்பனுக்கு புரிய வைக்க முடியாது என்பதால் இறந்த கிருஷ்ணாவுக்காக ‘உச்’ கொட்டிவிட்டு மெதுவாக நகர்ந்துவிட்டேன். ‘பெரிய நடிகன் ஆனாலும் அவனுக்கு நா அப்பா எனக்கு அவன் கொழந்த. என்னால முடிஞ்ச நல்லத நா அவனுக்கு செஞ்சேன், செஞ்ச்ட்டே இருப்பேன்’ என்று புதிதாக கட்சி தொடங்கய ஒரு நபர் பேசியதை பார்த்தேன். ஆபாசமாக இருந்தது. இந்த சினிமா நடிகர்களை நம்பவே முடியவில்லை. திரையில் நடிக்காத நடிப்பையெல்லாம் அன்றாட வாழ்வில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் சிந்தனையில் மாற்றம் வராத வரை இந்த இயக்குனர் அப்பா – நடிகர் மகன் கூத்தையெல்லாம் பார்க்கத்தான் வேண்டும். இன்னொருவரும் நினைவுக்கு வருகிறார். கிளி, மான், மயில் பட்டாம்பூச்சி போன்றவைகளுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தவர் நலம்தானே?

கனடா மற்றும் அமெரிக்காவில் (சுருங்க சொன்னால் வட அமெரிக்க கண்டத்தில்) மட்டுமே கொண்டாடப்படும் ஒரு திருவிழா Thanksgiving Day. அமெரிக்கர்களுக்கு இந்த நன்றியின் விழா கொண்டாடுவதில் ஒரு பெருமிதமும் இருப்பதை பார்க்கிறேன். தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடுகிறோம் அல்லவா? அதேபோல் இங்கே ‘நன்றி சொல்லும் விழா’ (Thanksgiving என்றே சொல்லுவோம் அதுதான் நன்றாக இருக்கிறது). ஏன் இது முக்கியமான விழா? அமெரிக்கர்கள் பொதுவாக வரலாற்றை போற்றுபவர்கள். அவ்வடிப்படையில் Thanksgiving திருவிழாவுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

1620ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிளைமத் (Plymouth – England) பகுதியிலிருந்து ‘மேஃபிளவர்’ என்ற கப்பல் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. திருப்பயணிகள் (Pilgrims) என்று அறியப்பட்ட அவர்கள் அதற்கு முன் ஐரோப்பாவில் நடந்த மத சீர்திருத்தத்தால் (கிறிஸ்துவ மதம்) பாதிக்கப்பட்டு தங்களது நம்பிக்கையை கைவிடாமல் வேறெங்காவது சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்று புறப்பட்டவர்கள். 1620 காலகட்டம் என்றால் கற்பனை செய்துகொள்ளுங்கள். பயணங்கள் இன்று நடப்பது போன்று எளிமையானதல்ல. உயிர்பிழைத்தல் பெரும்பாடு என்னும் நிலை. சில மாதங்களுக்கு பிறகு அவர்கள் இன்றைய மேஸசூசட்ஸ் (Massachusetts) பகுதியை அடைந்து தங்களது புதிய வாழ்விடத்தில் காலடி வைத்தார்கள். இங்கிலாந்தவர்களுக்கு எப்போதுமே தங்கள் தாயகத்தை மறக்காத தன்மை இருந்து வருவதை கவனிக்கிறேன். இந்தியாவில் அவர்கள் குடியிருந்த பகுதிகள் அனைத்தும் இங்கிலாந்தின் நினைவாக அதே பெயரிடப்பட்டவைகள். உதாரணமாக நம் உதகையில் இம்மாதிரியான பெயர்களை கவனித்திருக்கலாம்: பெட்ஃப்ர்ட் (Bedford), வெலிங்க்டன் (Wellington) போன்றவை இங்கிலாந்தில் உள்ள இடங்கள். சென்னையில் ஜார்ஜ் ஃபோர்ட், ஹாம்டன் பிர்ட்ஜ் (இன்று ‘அம்பட்டன் பாலம்’). அதேபோல அமெரிக்காவில் இங்கிலாந்தவர்கள் ஆக்கிரமித்த பகுதி இன்றும் நியூ இங்கிலாந்து மாகாணங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. பாஸ்டன் என்று இங்கிலாந்தில் ஒரு இடம் இருக்கிறது. அதுப்பற்றியும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரம் பற்றியும் அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். ஆக, திருப்பயணிகள் என்று அறியப்பட்டவர்கள் அன்றைய மேஸசூசட்ஸ் பகுதியில் இறங்கியபோது தங்களது சொந்த ஊரை நினைவில் வைத்துக்கொள்ள அப்பகுதிக்கு ‘பிளைமத்’ என்று பெயரிட்டார்கள். இன்றும் அதே பெயரில் அவ்வூர் அழைக்கப்படுகிறது. பாஸ்டனிலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கிறது. அற்புதமான இடம்.

இன்றும் மேஸசூசட்ஸின் பருவநிலை எப்போது எப்படி மாறும் என்று அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது. கடந்த அக்டோபர் மாத இறுதில் திடீரென பனி பெய்ய ஆரம்பித்தது. ஆனால் அதற்கடுத்த நாட்களில் பயங்கர வெயில். அதை நம்பி குளிர் சட்டை இல்லாமல் வெளியில் செல்ல முடியாது. நினைத்து பார்க்க முடியாதபடி குளிரும். இன்றும் சீதோஷ்ண நிலை இப்படியிருக்கிறது என்றால் 1620 ஆம் ஆண்டு எப்படி இருந்திருக்கும்? பல ‘திருப்பயணிகள்’ கொடும் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்து போனார்கள். அந்த சமயம் மேஸசூசட்ஸ் பகுதியில் வசித்த பழங்குடியினர் திருப்பயணிகளுக்கு உதவினார்கள். மேஸசூசட்ஸ் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். முதலில் இப்பெயரை உச்சரிக்க தடுமாறினேன். பின்னர் கைகூடியது. இதை சொல்லும் போது ‘சூ’ என்று உச்சரிக்கும் இடத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது அற்புதமாக இருக்கும். பிறகு ‘மேஸசூசட்ஸ்’ என்பது பழங்குடியினர்கள் இட்ட பெயர் என்றும் அது அவர்கள் பேசிய ‘எல்காங்கன்’ (Algonquian) மொழி என்றும் அம்மொழியில் மேஸசூசட்ஸ் என்பதற்கு ‘மலைகள் சூழ்ந்த நிலம்’ அல்லது ‘மலையின் நிலம்’ என்று பொருள் என்றும் அறிந்துகொண்டேன். பழங்குடினருக்கு இலையுதிர்காலம் அறுவடைகளின் காலம் என்பதால் சோளமும் கடலில் இருந்து பிடிக்கப்பட்ட லாப்ஸ்டர் மற்றும் இதர மீன்கள் கொடுத்து வெளிநாட்டவர்களை ஆதரித்திருக்கிறார்கள். ஆகவே அந்த கொடும் குளிரை தாக்குப்பிடித்து பிழைத்த மற்ற திருப்பயணிகள் பழங்குடினருக்கு அடுத்த ஆண்டு நன்றி சொல்லி விழா எடுத்திருக்கிறார்கள். இப்படியாக ஆரம்பித்ததுதான் Thanksgiving Day.

அமெரிக்கர்களுக்கு Thanksgiving Day என்பது பல வகைகளில் முக்கியமான நாள். அன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக கூடி விருந்து உண்டு கொண்டாடுவார்கள். அமெரிக்கா முழுவதும் Thanksgiving அன்று ஒரே உணவு வகைகளையே உண்கிறார்கள்: கண்டிப்பாக வான்கோழி இருக்கும். அதனுடன் சேர்த்து சாப்பிட க்ரன்பரி ஸாஸ் (எனக்கு க்ரன்பரி ஜூஸ் தான் பிடிக்கும்). வான்கோழி வயிற்றில் நிரப்பப்பட்ட ஸ்டஃப்பிங் (பிரட் மற்றும் உருளைகிழங்கு இதர மசாலக்கள் சேர்க்கப்பட்டது, நம் உப்மாவை ஞாபகப்படுத்தும்). பாட்டில் பாட்டிலாக ஒயின் இருக்கும். கடைசியாக ஆப்பிள் நாட்டு சர்கரை ஓட்ஸ் சேர்த்து செய்யப்படும் ஆப்பிள் கிரிஸ்ப் என்னும் சூடான இனிப்பு. அதனுடன் வெண்ணிலா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்களுக்கு முதல் Thanksgiving மிகவும் முக்கியமானது. அந்த வகையில் நான் இங்கு வந்த சமயம் மூன்று தலைமுறைக்கு முன் அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த நண்பன் ஒருவன் அவர்கள் குடும்பத்திற்கு அழைத்திருந்தான். இதில் சிறப்பு என்னவெனில் நான் முன்பு சொன்ன பிளைமத்தில்தான் நண்பனின் வீடு. ஆக என் முதல் Thanksgiving, வரலாற்றின் முதல் Thanksgiving நடந்த இடத்துக்கு மிக அருகில். நண்பனின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். அவனுடன் பிறந்தவர்கள் பத்தோ பன்னிரண்டோ சகோதர சகோதரிகள். அனைவரது குடும்பங்களும் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.

அமெரிக்காவில் இம்மாதிரியான் விருந்துகளில் கலந்து கொள்ள முக்கியமான காரணம் அவர்கள் உணவு உண்ணும் போது செய்யும் உரையாடல். அன்று திடீரென அனைவரும் தாங்கள் இந்த வருடம் எதற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறார்கள் என்று ஒருவரொருவராக சொல்ல தொடங்கினார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு பயண குறிப்பில் இம்மாதிரியான ஒரு சம்பவத்தை படித்திருக்கிறேன். அதை அனுபவப்பூர்வமாக பார்த்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. கனடாவிலும் Thanksgiving கொண்டாடுவார்கள். ஆனால் அமெரிக்காவின் Thanksgiving முன்னதாக, சரியாக ஒரு வாரம் முன்னதாக கொண்டாடுவார்கள். கனடாவில் வசித்து வரும் அ.முத்துலிங்கம் Thanksgiving நாளன்று விருந்து மேஜையில் என்ன பேசிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறார். அவர் கலந்து கொண்ட ஒரு விருந்தில் அனைவரும் வேட்டையாடுவதில் வல்லவர்கள். அனைவரும் தங்கள் வேட்டை அனுபவத்தை பகிர்ந்து கொண்டதை அற்புதமாக எழுதியிருக்கிறார். தவறாமல் படித்துப் பாருங்கள்.

இந்த வருடம் Thanksgiving பலவிதங்களில் வித்தியாசமானதாக இருக்கப் போகிறது. நவம்பர் 26 வருகிறது. அதற்கு முன்பாகவே பள்ளிகளும் கல்லூரிகளும் முடப்படுகின்றன. கொரோனா தான் காரணம். வீடுகளில் பெரிய அளவில் மக்கள் கூடக்கூடாது என்று அரசாங்கம் சொல்லியிருக்கிறது. எனவே முதல் திருப்பயணிகள் குளிரிலிருந்து பிழைத்ததற்கு நன்றி சொன்னது போல கொரோனா கொண்டு சென்றவர்கள் போக மீதியிருப்பவர்கள் உயிரோடிருப்பதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். போன வருடம் விருந்தில் நம்மோடு கதை பேசி சிரித்து மகிழ்ந்து கட்டியணைத்து முத்தமிட்ட யாரோ ஒருவர் இந்த வருடம் விருந்தில் நம்மோடில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம்!

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  5. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  6. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  7. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  8. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  9. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  10. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  13. பெண்களுடனான உரையாடல்- வளன்
  14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்