ஆயிரம் சொற்கள் -4

இந்தக் கேள்வியை எல்லோரிடமும் கேட்க வேண்டும். இப்படி ஒருமுறை கேட்டால் போதும் மடை திறந்த வெள்ளமாய் மனத்திலிருந்து கொட்டும். இந்த உலகமே பிடித்தவை பிடிக்காதவை என்கிற வேறுபாடுகளின் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தான் வாழ்கிறது. பெரும்பாலும் பிடித்தவற்றின் அருகிலிருந்து தான் பிடிக்காதவைகளில் பலவும் ஏற்படுவதாக என் எண்ணம்.

எனக்கு மேடைக்கச்சேரிகள் அறவே பிடிக்காது. மெல்லிசை நிகழ்ச்சிகள் மேடைக்கச்சேரிகள் தொலைக்காட்சி நிகழ்வுகள் ஸ்ம்யூல் போன்ற பாடுவதற்கான அப்ளிகேஷன்கள் என எந்த மாறுவேடமானாலும் மனசார நோ மட்டுமே சொல்வேன். பல பாடல்களைக் கேட்பது தாண்டி விடியோவுடன் பார்ப்பது கூடப் பிடிப்பதில்லை. இன்று நேற்றல்ல. கிட்டத் தட்ட முப்பது வருடங்களாக இப்படித் தான். என்னளவில் பாடல் என்பது முதல் முறை அதாவது ஒரே முறை நிகழ்வது மட்டும் தான்.அதை மறுபடி பிறப்பிக்க முடியாது. வேண்டுமட்டும் அந்த முதல்முறையை ஒலிக்கச் செய்து கேட்டு இன்புறலாம். இசைத்தவரோ பாடியவரோ கூட வெட்ட வெளியில் எதிரொலிப் பேரிரைச்சலுக்கு மத்தியில் பாடல்களை இசைத்துக் காட்டுகையில் முன்னே பின்னே ஆகிற எந்த ஒரு சிறு தருணத் துளியையும் என்னால் தாளவே முடியாது. என்ன தான் சொல்லுங்கள் பாட்டென்பதை கேட்கிற விதத்தில் மட்டும் தான் கேட்க வேண்டும். இது என் அபிப்ராயமல்ல. என் வழிபாட்டு முறை.

ஒன்று மட்டும் சத்தியம். பலரது வாழ்க்கையிலும் பதின்பருவத்தின் எண்ணப் பீறிடல் தான் படைப்பூக்கம் மிகுந்ததாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. நினைவிலிருந்து பேசும் போது என்னவெல்லாம் நேர்ந்து விடுகிறது? கன்றுக்குட்டியின் கண்களை மயில் இறகாகப் பார்க்க முடியுமா..? ஒரு நேர் பேச்சின் இடையே இந்த வாக்கியம் வந்து போயிற்று. அதாவது மற்றவெல்லாம் வந்து போகிறாற் போலவே இடையில் நிகழ்ந்தது. என்னால் அந்த வாக்கியத்திலிருந்து விலகி வெளிப்படவே முடியவில்லை. தீபாவளி அன்று   கையில் பட்டாசு சுட்டாற் போல் இதனை எப்படிப் பிரித்து உரித்து எடுத்து வெளியேற்றுவது என்று தெரியாமல் அப்படியே உறைந்திருக்கிறேன். இன்னும் ஒன்று தோன்றுகிறது. இதென்ன பிசாசா பூதமா, ஒரு வாக்கியம் தானே இருந்துவிட்டுப் போகட்டும் என்று அதையும் சுமந்தபடி வலம் வருகிறேன்.

குரலுக்கென்று ஒரு தனித்த வாழ்வு இருக்கத் தான் செய்கிறது. நாமெல்லாருமே குரலால் வாழ்பவர்கள் தான் இல்லையா? உன் குரல் முன்பு போல் இல்லை என்பதைத் தாளவொண்ணாமல் குலுங்கிக் குலுங்கி அழுத ஒருவரை எப்போதோ சந்தித்திருக்கிறேன். குரலை இழத்தல் என்ன மாதிரியான துன்பம் என்று வகைப்படுத்த இயலாது. பாடகர்களில் வெகு சிலருக்கு மாத்திரமே நீள நெடுங்காலம் ஒரே அதே குரல் நிரந்தரமாய் நிலைத்து ஒலிக்கும். பெரும்பாலும் தொடக்கத்திலிருந்தே உடல் எங்ஙனம் சிதைந்தவண்ணம் வாழ்வெலாம் மாறுபடுகின்றதோ அவ்வண்ணமே குரலும் மாறி மாறித் திளைக்க வல்லது.குரலென்பது வெறும் குரலல்ல. அதற்கும் மேலே வேறு பல.

என் உறவினர் ஒருவர் காஃபி பிரியர். உலகின் உன்னதமான காபிக்காகவே தன் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்தவர் என்றாலும் தகும். தனக்கு வழங்கப்படுகிற எந்த ஒரு காபியையும் முன்னர் எப்போதோ தான் அருந்திய சிறந்த காபி ஒன்றோடு ஒப்பிட்டுக் கொண்டே இருப்பவர். ஒரு கப் காபியில் எது கூட்டல் கழித்தல் என்று அவர் விமர்சிப்பது காபியைப் போன்றே சுவையாக இருக்கும். காபி கசக்கவும் கூடாது இனிக்கவும் கூடாது. கசப்பும் இனிப்பும் சண்டைபோடுற யுத்தகளத்துக்குப் பேர் தான் காபி என்பார். சிரித்துக் கொள்வேன்.

மதுரையில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலுமே காபிக்கான பிரத்யேகத் தலங்கள் இருக்கின்றன. விசாலம் காபி-கோபு அய்யங்கார் பலகாரக்கடை- அரசரடி கௌரி போன்றவை அவற்றுள் சில. மதுரையின் பிரபல அரசியல் வாதிகள் சிலர் கௌரி காபிக்கு மாபெரும் ரசிகர்களாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அதிகாலையிலிருந்து அந்தி வரை பல தருணங்களில் இன்னாரெல்லாம் வந்து போவதை பொதுமக்கள் சொல்லிச் சொல்லிக் காற்றில் காபி மணம் போலவே அவர்களது வருகையும் பரவும்.

நிறையத் தலைகளாக காபி அருந்தப் போகும் போது ஒன் பை  டூ டூ பை த்ரீ என்றெல்லாம் தானும் நொந்து மாஸ்டரையும் நோகச்செய்வது நிகழ்ந்தது. இப்போதெல்லாம் அதனை சமாளிக்கத் தான் பெரிய காபி போலவே மினி காபி என்றொரு ஐட்டத்தைக் கண்டறிந்து விட்டார்கள். இனி ஒன் பை டூ என்றால் ரெண்டு மினி என்று தான் உள்ளே குரல் தருகிறார் சர்வர் சுந்தரம்.

அருள்சூசை வாத்தியார் எப்போதாவது சனிக்கிழமை கடைசி பீரியடில் வரவேண்டிய வாத்தி வராமற் போனால் ப்ராக்ஸியாக வருவார். அப்படி வருகையில் அழகாகப் பேசிக்கொண்டிருப்பார். பாடமெடுக்கையில் அவர் காட்டுகிற கடுமை எதையும் அப்போது காட்ட மாட்டார். நட்பார்ந்த அரட்டையாக அந்தக் கணம் அமையும். காபியைப் பற்றி விவரித்துப் பேசும் போது பாவனையில் ஒரு குவளை சுடுபாலை எடுத்து அதைத் தன் தம்ப்ளரில் வார்த்து விரற்கடை அளவு டிகாக்ஷனை சேர்த்து சர்க்கரையை மூக்குப் பொடி உறிஞ்சுகிறவர்களின் அதே அளவீட்டில் பாவித்து இரண்டு கரங்களிலும் தம்ளர்களை ஏந்தி சூடு பறக்க ஆற்றி மெல்ல அதிலொரு தம்ளரைத் தன் உதடுகளுக்கு அருகே கொணர்கையில் இரண்டு கண்களையும் மூடிக் கொள்வார். அந்த வகுப்பில் எங்கள் அத்தனை பேர் மீதும் காஃபியின் மணம் படர்ந்து கமழும். இன்றைக்கும் சில தருணங்களில் ஸ்கூல் பற்றிய நினைவைத் திறக்கும் போது காஃபியின் மணமும் சேர்ந்தே தோன்றுகிறது.

மகாபானம் என்று தலைப்பிட்டு நான் கூட சில காபிக் கவிதைகள் எழுதினேன். தங்களுடைய ப்ரியத்தின் பேரேட்டில் காபிக்கு மிக முதன்மையான இடம் தந்தவர்கள் பலர். இந்த உலகத்தைக் காபி மற்றும் தேநீர் என்று இரண்டாய்ப் பிரித்து விடலாம் என்பான் நண்பன் பரணி. கடைக்குப் போகையில் ஆறேழு பேராகப் போகும் போது தான் துவந்த யுத்தம் தொடங்கும். அங்கே டீ மற்றும் காபி தயாரிப்பவருக்கு ஏன் மாஸ்டர் என்று பெயர் தெரியுமா என்பான் முனீஸ். அவனே அதற்குப் பதிலும் சொல்வான். சர்க்கரை கம்மியாக,சர்க்கரை ஜாஸ்தியாக, டபுள்ஸ்ட்ராங்காக,லைட்டாக பாலின் மேல் ஒரு லேயர் மட்டும் டிகாக்ஷனை தெளித்தாற் போல், வெறும் டிகாக்ஷனோடு சர்க்கரை சேர்த்து, சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது சர்க்கரையே இல்லாமல் எனப் பலவிதமான சேர்மான தீர்மானங்களோடு தன்னிடம் கோரப்படுகிற பானாதி வகையறாக்களை அவரவர் நிமித்தம் விலகாது தயாரித்து நல்குவதாலேயே அவர் மாஸ்டர் என்று அழைக்கப் படுகிறார் என்பான் முனீஸ்

தேசத்திலிருந்து வெளியேறுவதைப் போலத் தான் காபி பழக்கத்திலிருந்து வெளியேறுவதும். மிகக் கடுமையான பிரயத்தனங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் கடலை நோக்கி ஓடுகிற குழந்தையின் ஆரவாரத்தோடு காபி முத்தத்துக்குத் திரும்பிய வண்ணம் இருக்கிறேன். அதென்னவோ தெரியவில்லை தேநீர் என்றாலே ஸாரி என்று சொல்லி விடுகிறேன். ஞான் காபி ரசிகன் அல்லே…பின்னே

பழைய புஸ்தகம்

என் நிழலே எனக்குத் துணையாக இருந்தது. ஒருவரும் என்னை விரும்பாததால் ‘நான்’ என்பது மட்டுமே என் உள்ளத்தில் உறைந்திருந்தது நான் எனக்குள்ளாகவே இரக்கப்பட்டுக் கொண்டும், உற்சாகப்படுத்தியும் திட்டிக்கொண்டேன். பிறிதொரு பேர்வழி போல்  நானே என்னை உணர்ந்தேன்

எனது உடலின் மாற்றம் ஒருவகையில் பயத்தைத் தந்தாலும் மகிழ்ச்சியையும் அளித்தது இருப்பினும் ஒரு புதிராகத் திகழ்ந்தது. என் கையினால் அவற்றைக் தொடும்பொழுது மெல்லிய நுண்மலரை உராயும் உணர்வு உண்டாகியது.

நிகழ்காலத்தை குறித்து நான் கவனம் செலுத்தினேன். எதிர்காலம் இருக்கவில்லை தொலைவில் நோக்கத் துணிவில்லை மற்றவர் உணவை நான் உண்பதால் பகல் எப்பொழுது மாலை எப்பொழுது என்று தெரிந்திருக்க வேண்டும். இன்றேல் நான் காலத்தை உணர்ந்து கொள்ள முடியாது நம்பிக்கை இன்றேல் காலமுமி இல்லை நாளுங்கிழமைகளும் அற்ற ஒரு இடத்தில் ஆணி அறைந்து அடித்து வைக்கப்பட்டவளாகக் கருதினேன்  அம்மாவுடன் கடந்த  காலங்கள் பதினைந்தோ பதினாறு ஆண்டுகள் என நினைக்கிறேன். எனது சக மாணவர்களோ விடுமுறை திருவிழாக்கள் புத்தாண்டு எனக் காத்திருப்பார்கள் அவையெல்லாம் எனக்குப் பலனளிக்கவில்லை.

லாவ் ஷீ எழுதிய கூனற்பிறை (Crescent Moon)
சீனமொழிக் குறுநாவல்
தமிழில் கே.கணேஷ்
சென்னை புக்ஸ் வெளியீடு
முதற்பதிப்பு மார்ச் 1990
************

புதிய புத்தகம்

யானைச் சொப்பனம்
இரா.நாறும்பூ நாதன்
நூல்வனம் வெளியீடு
விலை ரூ 120

இரா நாறும்பூ நாதன் தனது முகப்புத்தகப் பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கோத்த பதிவுகளின் தொகை இந்த நூல். இதன் வடிவ நேர்த்தி உள்ளடக்க அபாரம் இவற்றோடு நாதனின் உலர்ந்த இலகுவான மொழி இருக்கின்றதே, படிக்கப் படிக்கச் சுகமாய் விரிந்துகொண்டே போய் அடடா முடிந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்பை மனத்தில் தோற்றுவித்த வண்ணம் நிறைவடைகிறது.பதிவுகளுக்கு நாதன் இட்டிருக்கும் தலைப்புகள் இன்னொரு பதிவாகவே நீளச்சொல்லக் கூடிய அளவுக்குப் பரம சுகம். இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பதிவொன்றாகக் கந்தையா அண்ணனும் தென்னகத்து ஜேம்ஸ்பாண்டும் என்பதைச் சொல்வேன்.
யுக-நூற்றாண்டு-தசாப்தம் தாண்டிய இந்தவருடத்தின் புத்தகமாக இதனை ஆக்கித் தருவது இதனுள் நமக்கெல்லாம் கிடைக்கவல்ல தற்பொழுதின் நெடி. இன்னும் பல ஆண்டுகளுக்கப்பால் இதே நூல் அதற்கேயுண்டான காலவாசனை மாற்றத்தோடு வேறொன்றாக மலரவும் கூடும். முகப்புத்தகத்தில் எழுதுவதில் கிடைக்கக் கூடிய மாபெரும் சமாச்சாரம் என்பது எழுதியவுடன் நிகழக் கூடிய விடுபடுதல்.அந்த விடுபடுதல் இன்னொரு கூடுதல் நிகழ்வாக எழுதியவனின் கண்முன்னே சித்திர வெண்மையுடன் நிகழத் தொடங்கி ஒவ்வொன்றாக வண்ணம் பூசிக் கொள்கிற பின் தொடரும் காலமானது மேலதிக வசீகரம். அப்படித் தான் இந்த நூலிடை மௌனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.
வாசிக்க வேண்டிய புத்தகம்.
***************

இன்றெல்லாம்

ஆசை கனவே நீ வா அழகு சிலையே நீ வா
பேசும் கண்ணா நீ வா பிரியா நிழலே நீ வா
அருங்கலை கலைவாணி ஆடும் ராணி பாடும் தேனி
அழகிய சுகுமாரன் நீ நறுமணம் வீசும்
எழில்மிகு ரோஜா நய மொழி பேசும் ராஜா

என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைப்பில் தஞ்சை ராமையாதாஸ் இயற்ற டி.எம்.எஸ் பி.லீலா இருவரும் பாடிய டூயட் பாடல். “உலகம் பலவிதம்” சிவாஜியார் நாயகத்துவத்தில் 1955 ஆமாண்டு வெளிவந்த படம். கேட்டால் இனிக்கும் இன்றெல்லாம். அஞ்சு வரியை மட்டும் தந்திருக்கிறேனே என்று ஐயம் கொள்ள வேண்டாம். மொத்தப் பாட்டே அவ்வளவு தான். ஒரு வெற்றிலையின் நடுவாந்திரத்தில் எழுதிவிடலாம் போன்ற பாடல்.

காணொளிச்சாலைக்கான திறப்பு: https://www.youtube.com/watch?v=1d701hl_pU0

********************************

தற்கணத்தின் கவிதை

அருகிலோ தொலைவிலோ அல்லாமல்
இடைப்பட்ட வெளியில் தென்படும்படியான
இரு உடலுருவங்களாகித் தீண்டிக்கொள்வதைத் தவிர
வேறொன்றும் மிச்சமில்லை
நம் வசம்

எஸ்.சண்முகம்
மறதியின் புகைநிறம்
தமிழ்வெளி பதிப்பகம் வெளியீடு விலை ரூ 220

தொடரலாம்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வழியெலாம் மழை -ஆத்மார்த்தி
  2. உன் பேர் சொல்ல ஆசைதான் : ஆத்மார்த்தி
  3. சைக்கிளில் சுற்றி வருபவரின் பாடல்: ஆத்மார்த்தி