திக்கு தெரியாத உலகில் ….

தற்காலிகப் பேரிடர் என்று கொரானாவை மதிப்பிட்டால் நீடித்த பெரும் பேரிடர் என்ற வகையில் சுற்றுச்சூழலைப் பொறுத்த அளவில் பல விசயங்களை இந்தக் கொரானா காலத்தில் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அதில் முக்கியமானது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி சுரங்கங்களை தனியாருக்கு விடுவது என்பது .

இன்னும் சில முக்கியமானவைகளில்  மீத்தேன் எடுப்பதில் உள்ள நடைமுறைகளை லகுவாக்கியது மற்றும் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்    500 நிலக்கரி சுரங்கங்கள் ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும் என்பதும் , அதில் 50 சுரங்களின் செயல்பாடுகள் உடனடி செயலுக்கு வருவதும் தூய்மை மின்சாரம் தத்துவத்தை பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை , சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவை பல பத்தாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விடும்.

மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டங்களில் அபாயம் தரப்போகிறவைகளில் அருணாசல பிரதேச புலிகள் சரணாலயம், அசாமின் யானைகள் காப்பகம், கர்நாடகப்பகுதியின் புலிகள் காப்பகம், குஜராத்தின் சிங்கங்கள் சரணாலயம், பெல்காமின் பசுமை மாறாக்காடுகள், கர்நாடகாவின் தாராவதி சரணாலயம் , தெலுங்கானாவின் யுரேனிய சுரங்கங்கள்  பகுதிகள் போன்றவை முக்கியமானவை.

கிரின்பவர்- பசுமை சக்தியை மேம்படுத்த உலக நாடுகளின் உச்சி மாநாடுகளில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதை  மீறி காற்றாலை , சூரிய மின் ஒளி மூலம் மின்சாரத்திற்கு வழிகோலுவதை விட்டு விட்டு உலகநாடுகள் கைவிட்டு வரும் நிலக்கரி சுரங்கங்கள் மூலமான எரிசக்திகளுக்கு வழி வகுத்திருப்பதும் நிர்பந்திப்பதும்  முறையானதல்ல… கார்ப்பரேட் நிறுவன லாப வேட்டைக்கு உதவும் நடவடிக்கைகளே இவை.

இத்திட்டத்தில் 30 பல்லுயிர்க் காடுகளைத் தனியாருக்கு தாரைவார்க்கிறது மத்திய அரசு.இந்த 30 காடுகளில் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு உள்ளது   இங்குள்ள  மிஷ்மி சமூகத்தின் கலாச்சார நடைமுறைகள் மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே வலுவானது . மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக இத்திட்டம் தரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி என்பது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனக்கொள்கைக்கு எதிரானது.

அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானை காப்புப் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புகல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இருபது  புலிகள் காப்புப் பகுதிகள், சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் , வனபகுதிகள் பாதிக்கப்படும்.

இனி மேற்குத் தொடர்ச்சி மலை பற்றி..

இந்தியப்பரப்பில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பரப்பளவு 2லட்சம் சதுர கிலோமீட்டர். தாவர வகைகள், மீன், பறவை, பாலூட்டி வகைகளில் 30 சதவிகிதத்தைத் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிப் பாயும் 40 நதிகளுக்கும், மேற்கு நோக்கிப் பாயும் 30 நதிகளுக்கும் பிறப்பிடமாக விளங்குகிறது. கோதாவரி, கிருஷ்ணா, மண்டோவி, காவிரி, ஸுவாரி ஆகிய சில முக்கிய நதிகளுக்கு அதுதான் பிறப்பிடம். சுமார் 25கோடி மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலையைத்தான் நீராதாரத்துக்குச் சார்ந்துள்ளனர்.

2,500 வகையான ஓரிடவாழ் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், நீர்நில வாழ்விகள் உள்ளன. இத்தகைய சூழலியல் பெருமை வாய்ந்த மலைத்தொடரின் ஒரு பகுதி வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுதல் நல்லதல்ல.

மலை முகடுகளில் மழை நின்ற பிறகும்கூட, நீரோடைகளாகப் பல மாதங்களுக்கு நீர் வழிந்தோடும். அதன்மூலம் வறண்ட காலங்களில் கூட நீர் இருக்கும்.

சில மாதங்கள் முன்பு கேரளா கவிதைத் திரு விழா ஒன்றிற்கு மன்னார்காடு செல்லவேண்டியிருந்தது. நண்பர்கள் பலரும் அட்டப்பாடி வழியாக செல்வது சிரமமாக இருக்கும் என்றார்கள். ஆனைகட்டி வழியாக செல்வது விருப்பமாக இருந்தது. காரணம் ஆனைகட்டியும் அதைத் தாண்டிய 100 கிலோ மீட்டர் பகுதிகளும் மரங்களால் சூழப்பட்டு இருப்பதும் நல்ல வெயிலிலும் இதமான சீதோஷ்ண நிலை கொண்டிருப்பதும் உவப்பாக  இருக்கும் என நினைத்தேன்.

ஆனைகட்டியிலிருந்து கேரள எல்லை கடந்து செல்லும்போது இரண்டு முக்கிய அறிவிப்பு பலகைகள் தென்பட்டன.

1. தமிழ்நாட்டின் மதுவகைகள் கேரள எல்லைக்குள் கொண்டு செல்லக்கூடாது என்று.

2 .சைலன்ட் வேலி எனப்படும் அமைதிப்பள்ளத்தாக்கு பற்றிய விவரங்களும் அங்கு செல்வதற்கான பதிவு எண்களும் குறிப்பிட்டு இருந்த இன்னொரு பலகை.

பகல் பத்து மணியளவிலேயே  வெயில் கடுமையாக தான் இருந்தது .திருப்பூர் கோவை வெயிலைவிட அந்த வெயில் அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் பேருந்தில் செல்ல செல்ல மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதிகளிலும் காடுகளும் என்று  குளுமை வந்து விட்டது .

அட்டகட்டியைக்  கடக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஏற்படும் ஒருவகை மகிழ்ச்சியும் குளுமையும் அப்போது வந்துவிட்டது .அட்டகட்டி தாண்டி செல்கிறபோது ஓரிரு இடங்களில் தீ எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது .வெயில் காலங்களில் இப்படி வறண்ட பகுதிகள் தீப்பற்றி எரிவது என்பது சாதாரணம். தான் தொடர்ந்து இதுபோன்ற காடுகள் எரிவது. 2020இல் அமேசான் காடுகள் போன்றவை நம் கவனத்தில் வந்திருக்கின்றன.

அட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மாப்பற்றி பொதி அவர்களின் முகநூலில் இருந்து தெரிந்து கொண்டேன் அவரின் பாடலும் கேட்டேன்.

கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கிராமிய தமிழ் பாடல்.அந்த பாடலுக்கும்,குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மா.

மலையாள திரையுலகமும்,மீடியாக்களும் அவரை போற்றிக்கொண்டு இருக்கிறது இப்போது.கேரளா அரசும் கிராமிய பாடலுக்கான விருதை கொடுத்து கௌரவித்து இருக்கிறது.”அய்யப்பனும் கோஷியும் ” என்ற மலையாள திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ,பாடிய அவரின் சொந்த பாடல் இன்று கேரளாவின் சூப்பர் ஹிட் பாடலாக அங்கே ஒலித்துக்கொண்டு இருக்கிறது.சினிமாவை பற்றி ஏதும் தெரியாத அந்த பாமர தமிழ் குயிலின் குரல் உலகமெங்கும் ஒலிக்க என் ஆசை.அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.பாடலை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்களை அறியாமல் உங்கள் தலையும்,கைகளும் மனமும்…அசைந்தாடும்.பாடலின் தமிழ் உச்சரிப்பும்,வார்த்தைகளும் நமக்கு புரிய சற்று சிரமமாக இருக்கும் ஏனென்றால் நாம் நாட்டுப்புற தமிழை மறந்து பல ஆண்டுகள் ஆகிப்போனது என்கிறது விதைகள் வாசகர் வட்டம்.

பல இடங்களில் காணப்படும் பசுமைப்பரப்பு  ஆச்சர்யம் கொள்ளச் செய்கிறது. காடுகளின் பசுமைப்பரப்பு  விரிந்துள்ளது என்ற ஆய்வு கூட ஆச்சர்யப்படுத்துகிறது. காடுகளின் உள்பபகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதால் அடர்த்தியும்  குறைகிறது.  காட்டு மண், செத்துப்போன மரங்கள் , சருகுகளை, இலைகள் போன்றவை மொத்தமும் கரிமம்தான். காடுகளைப் பல்வேறு காரணங்களுக்காக அழிப்பது காடுகளின் பரப்பளவைச் சுருக்குகிறது.  திடீர் தீ போன்றவையும் காடுகளை அழிக்கின்றன.  தோட்டப்பயிர்களையும்  பசுமைப்பரப்பாகக் கணக்கிட்டு  பசுமைப்பரப்பு அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் .இந்தியாவில் 2010-18 காலத்தில் 1.25 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் காடுகள் அழிந்து விட்டதாக நம்பமான ஆய்வுகள் சொல்கின்றன. இதில் தீக்கும் முக்கியப்பங்கு உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை இதுபோல் பல்வேறு தீப்பிடிப்புச் சம்பவங்களால் அடிக்கடி செய்தித்தாளில் வந்துகொண்டே இருக்கிறது. பனிக்காலம் முடிந்து கோடை காலத்தின் முன் பருவமான இலையுதிர்காலம் தொடங்கிய மாதங்களில் இலைகள் மரங்கள் மொட்டையாகக் காட்சியளிக்கும்.அந்த  இடங்களில் இதுபோன்ற தீப்பிடிப்பு என்பது சாதாரணமாகிவிட்டது .வறட்சியால் ஊசிப் புல், புதர்கள் கருகிக் கிடக்கின்றன .தேக்கு மூங்கில் உள்ளிட்ட மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருக்கின்றன. கோடையில்  ஊசி போல் மர உதடுகள் காய்ந்து கிடக்கின்றன .தேக்கு மூங்கில் உள்ளிட்ட மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு காடு முழுக்க கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டுவந்திருக்கிறது. இது காட்டுப்பகுதியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் தீப்பிடித்து எரிவதற்கு பெரிதும் உதவியாகி விடுகிறது. காடுகளை ஒட்டிய பட்டாக் காடுகளில் காய்ந்த விறகு., சருகு  கிடைக்கும் போது அது சாதாரணமாய் காட்டுபகுதிக்குள் பரவுகிறது. பல சமயங்களில் பல சாமானியர்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் சமையல் செய்கிறார்கள். சிகரெட் பிடித்து தூக்கி போடுவதாலும் தீ பற்றுகிறது. ஒருவகையில் செயற்கையாக உருவாக்கப்படும் இந்த வகை தீப்பிடித்தலைத்  தடுக்க தீ தடுப்பு கோடுகள் வனத்துறையினர் அங்கங்கே திட்டமிட்டு போடுகின்றனர்.  குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னால் மரம் செடி கொடிகளை வெட்டி தீத்தடுப்பு கோடுகளை அமைக்கிறார்கள். மக்களிடமும் செயற்கையாக காட்டுத்தீ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள் .பழங்குடி மக்கள் இவ்வகை தீப்பிடித்தலைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவர்களுக்கு தீயணைப்புக்கான கருவிகள் எல்லாம் தரப்படுகின்றன . கையறு நிலையில் நிற்கிறார்கள் என்பது முக்கியமாக கவனத்துக்குரியது ஆக இருக்கிறது .

அங்கு தீ பரவுவது போல் புற்று நோய் பரவுதலும் சுலபமாகிவிட்டது.  ஆனைகட்டி, அட்டப்படி பகுதிகளில் தென்படும் புற்று நோய் மருத்துவம் பற்றிய ஏகப்பட்ட விளம்பரம், மருத்துவமனைகள் பயம் தருகின்றன. கொங்குபகுதியில் புற்று நோய் மருத்துவ மனைகள் வெகுவாக அதிகரித்து விட்டன. இந்நிலையில் புற்று நோயை உண்டாக்கும்  ரசாயனங்களைக்கூட பகுக்கும் புதுவகைப் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டிருப்பது  ஆறுதலிப்பதாக பல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். தீ எரிவதைப் போல வீசியெறியப்படும் கழிவுகள்  என்று எதை எரித்தாலும்  அதில் வெளியாகும் ரசாயனங்கள் புற்று னோயை உருவாக்கும்.இதில் தீ தரும் ரசாயனங்கள் கூடச் சேர்ந்திருக்கலாம். இந்தப் புதிய நுண்ணுயிரியோ  எளிதில் ஆவியாகும், எல்லாவகைப் பொருட்களையும் சிதைக்கும் தன்மை வாய்ந்தது. மண்ணில் இயற்கையாக்க் கலந்திருக்கும் தாவர நார்ப்பிணைப்புகளை சிதைக்கும்  இயற்கையான கழிவுகளைக் கொண்டு இதைப் பகுத்துவிடலாம் என்கிறார்கள். இந்த நுண்ணுயிர்க்கும் மரங்களுக்கும் உள்ள இணக்கமான உறவு  என்பது இந்த நுண்னுயிரி பெருக வேண்டும் என்பதற்காக மரங்கள் இதற்குக் கரிமங்களைத் தருகின்றன. பதிலுக்கு நெட்ரஜன்., பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துகளை இது மரங்களுக்கு அளிக்கிறது  என்கிற புதுச் செய்திகள் கிடைத்திருக்கின்றன.

இந்த மேற்கு தொடர்ச்சி மலை காடுகளை காப்பாற்றும் முயற்சிகளும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை சார்ந்த ஓசை அமைப்பு 2019இல் 3 நாள் மாநாடு ஒன்றை கோவையில் நடத்தியது .அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் சார்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டார்கள் .நானும் கலந்து கொண்டு சூழலியல் தீவிரவாதம் என்ற தலைப்பில் பேசினேன். அதுபோல மேற்கு தொடர்ச்சி மலையைக் காக்கும் இயக்கத்தினுடைய பல்வேறு செயல்பாடுகளை பற்றி கு .வி  கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒரு கட்டுரை ஒன்றில் தெரிந்து கொண்டேன் ஆயிரத்து 1987 ல் -100 நாள் தொடர் பேரணி ஒன்றும் ஐந்துநாள் மாநாடும் கோவாவில் நடைபெற்று இருக்கிறது. நவாப்பூரில் தொடங்கி மேற்கு நோக்கியும் மற்றொன்று தெற்கிலுள்ள கன்னியாகுமரியில் தொடங்கி வடக்கு நோக்கியும் குழுக்களாக பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெரிய அளவு உற்சாகமாக செயல்பட்டிருக்கிறார்கள். பிறகு 2011 இல் மேற்கு மலைத்தொடரின் பல மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு ஆற்றல் நுகர்வு ,பழங்குடி மக்களுடைய பிரச்சினைகள், மனிதன் காட்டுயிர் எதிர்கொள்ளல் ,சுரங்கங்கள் ,சூழல் சுற்றுலா ,நீராதாரங்களை பேனல் அரசு செயல் திட்டங்கள் போன்ற தலைப்புகள் விவாதித்து இருக்கிறார்கள் 2017 இந்த இயக்கத்தினுடைய ஒரு விழா கொண்டாடப்பட்டு இருக்கிறது, அது முப்பதாம் ஆண்டு விழா .மற்றொரு இயக்கம்  2010 ஆரம்பிக்கப்பட்டு மேற்கு தொடர்ச்சி மலையின் சூழ்நிலை ஆய்வு செய்ய கவனம் கொண்டிருக்கிறது, 2010இல் மாதவ் காட்கில் தலைமையில் குழுவும் 2012இல் கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவும் உருவாக்கப்பட்டு அந்த அறிக்கைகள் இணைய தளத்தில் கிடைக்கின்றன ,கார்கில் குழு இந்த மலைத்தொடரின் பகுதிகள் சூழலில் காரணங்களால் பெரிதும் சீர்கெட்டு இருக்கிறது என்று சொன்னது. ஆனால் கஸ்தூரிரங்கன் குழு அவ்வளவு பாதிப்பு இல்லை என்று சொன்னது,

மேற்குத் தொடர்ச்சி மலையில் 50 க்கும் மேற்பட்ட ஆறுகள் உற்பத்தியாகின்றன. பச்சைபுல் வெளிகள் நீரைக்காத்து கசிந்து ஆறுகளாக வெளியோறுகின்றன. அவை வறண்டு விடுவதால் இந்த வகைத் தீவிபத்து தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.

 ஓசை அமைப்பு நடத்திய கோவை மாநாடு மாதவ் காட்கில் குழு கஸ்தூரிரங்கன் குழு ஆகியவற்றின் அறிக்கைகளை  மையமாகக் கொண்டு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தியது .காட்டுப்பகுதியில் தீ பிடிக்கிறபோது அதை அணைக்கிற முயற்சியில் பழங்குடியினர் பலவகைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  பழங்குடிகளை விட நாம் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தாக்கம் தொடர்ந்து நிலை நிறுத்தப்படுகிறது .

லெவிஸ்டிராஸ்  போன்றவர்கள் பழங்குடிகள் மேன்மை தன்மை பற்றி பல விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார். அமைப்பின் விதிகளின்படி இயற்கை அணிகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை பற்றி லெவிஸ்டிராஸ் பல அபிப்ராயங்களை கூறுகிறார். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் மையமாக மனிதன் தன்னை நிறுவிக் கொண்ட மேற்கின் நவீனத்துவ சிந்தனை முறையும் அதனால் ஏற்பட்ட வரலாறு சூழலில் பின் விளைவுகள் குறித்த  விமர்சனமும் லெவிஸ்டிராஸ்க்கு இருந்தது.. ஆனால் இயற்கை விலங்குகள் மனிதர்கள் ஆகியவற்றின் சமநிலையை பாதுகாக்க பழங்குடி சமூகங்கள் தங்கள் முழு ஆற்றலை செலுத்தினர் . பூமி பிரபஞ்சத்தின் மையம் இல்லை என்பதை கோபர்நிகசும் வாலில்லாத குரங்கு தான் மனிதர்களின் மூதாதை என்பதை டார்வினும் நனவிலியின் கருணையால் நாம் வாழ்கிறோம் என்பதை பிராய்டும் உணர்த்த இதைப்போல காட்டுமிராண்டிகள் என நம்மால் அழைக்கப்படும் பழங்குடிகளை விட நாம் உயர்ந்தவர்கள் அல்ல என்பதை லெவிஸ்டிராஸ்  அவருடைய படைப்புகளில் நிறுவியிருக்கிறார் .

பழங்குடி மக்களுக்கு காட்டுத்தீயை அணைக்கும் நவீன கருவிகள் கூட பயன்படுத்தப்பட பயிற்சிகளும் தீயணைக்கும் கருவிகள் பயன்பாடு, புகையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முகமூடிகள் மற்றும் கையுறைகள் தீப்பிடிக்காத உடைகள் உள்ளிட்டவை பயன்படுத்தும் பயிற்சிகளும் பழங்குடிகளுக்கு தரப்படுகின்றன என்பது ஒரு செய்தியாக தெரிகிறது. எப்படியாயினும் தீபரவுவது தடுக்கப்படவேண்டும் .

மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த மத்திய அரசின் புதிய நடவடிக்கைகளால் வரும் பாதிப்புகள்  புவி வெப்பமாதலுக்கும் நுண்உயிரினங்களின் அழிவுக்கும் வழிகோலும்.

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலைத்திட்டத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதித்தது போல் இவ்வகைத்திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைத்திட்டங்களை நிராகரித்து வீடியோ கான்பிரசிங் முறையில் நிறைவேற்றப்பட அவசர ஆயத்தம் செய்ததை நீதி மன்றங்கள் சரியாகக்  கண்டு கொண்டு தடை விதித்தாலே   நிம்மதி பெருமூச்சு கிடைக்கும் . இந்த அனுமதி என்பது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனக்கொள்கைக்கு எதிரானது என்பதால்நீதிமன்றங்கள் முறையாகத்தலையிட்டால்  முறையாகத் தடுக்கப்படும்..

அமைதி.. அமைதி..

நீதிமன்றங்கள் பதில் சொல்லட்டும்.

வழக்குகள் காத்திருக்கின்றன

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
  2. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
  3. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
  4. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
  5. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
  6. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
  7. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
  8. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
  9. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
  10. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
  11. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
  12. வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
  13. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
  14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
  15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்