நாம் வாழும் காலம் – 3

ஜூலை 22-ஆம் தேதி உலக மாம்பழ தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாம்பழ உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா முதல் இடம் வகிக்கிறது என்றாலும் உலகிலேயே விலை அதிகமான மாம்பழம் ஜப்பானில் விளைகிறது. மியசாகி நகரில் விளைவதால் அந்தப் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த மாம்பழம் பன்னாட்டுச் சந்தையில் ஒரு கிலோ 2,70,000 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. ஒவ்வொரு பழமும் டைனோசர் முட்டை வடிவத்திலும் 350 கிராம் எடையும் செக்கச் செவேர் என்ற நிறத்திலும் இருக்கிறது. இந்த நிறத்தினாலும் வடிவத்தினாலும் ‘ட்ராகன் முட்டை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கடுமையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட  பழங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றைச் ‘சூரியனின் முட்டைகள்’ என அழைக்கிறார்கள். மத்தியப்பிரதேசத்தில் ஜபல்பூர் நகரில் வசிக்கும் சங்கல்ப் பரிஹர் பழத்தோட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்.

அதில் பலவிதமான மாமரங்களை வளர்க்கிறார். கடந்த ஜூன் மாதத்தில் சங்கல்ப் பரிஹர் தன் பழத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்துக்குக் காவலாகப் பாதுகாவலர்களையும் காவல் நாய்களையும் ஏற்பாடு செய்தார். விஷயம் இதுதான். சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய தோட்டத்தில் வளரும் மாம்பழங்களை மும்பையைச் சேர்ந்த வணிகர் ஒருவர் கிலோ ஒன்றுக்கு 21,000 ரூபாய் விலைகொடுத்து வாங்க முன்வந்தார், அப்போதுதான் அவை மியசாகி மாம்பழங்கள் என்பது சங்கல்புக்குத் தெரியவந்தது. தொலைக்காட்சியில் இந்தச் செய்தி ஒளிபரப்பானதும் மாம்பழத்தைத் தேடித் தோட்டத்திற்குள் திருடர்கள் புகுந்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தினால் சங்கல்பும் அவர் மனைவி ராணியும் ஒரே நாளில் பிரபலங்கள் ஆகிவிட்டனர். அது சரி. ஜப்பான் மாம்பழம் சங்கல்பிடம் எப்படி வந்தது? ஒரு முறை சென்னையில் இருந்து இரயிலில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் இரண்டு மரக்கன்றுகளைக் கொடுத்தாராம். அவை மியசாகி என்பது இப்போதுதான் தெரியவந்ததாம். தன் தோட்டத்தில் விளையும் மியசாகி பழங்களுக்கு ‘தாமினி’ என்று தன்னுடைய தாயின் பெயரைச் சூட்டியிருக்கிறார் சங்கல்ப்.

வழக்கம்போல இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது படித்த இன்னொரு செய்தி. கொஞ்சம் பழையது என்றாலும் சுவாரசியமானது. 2016-ஆம் ஆண்டில் வெனிசுவேலா நாட்டின் பிரதமராக இருந்த நிகோலஸ் மடுரோ கலந்துகொண்ட கூட்டத்தில் அவர்மீது மாங்காயை விட்டெறிந்தார் ஒரு பெண். யார் என்று தேடிப்பிடித்துச் சிறையில் அடைக்கப்பட்டார் என்று நீங்கள் நினைத்தால், இல்லை. மாங்காயின்மீது அந்தப் பெண்ணின் பெயரும் தொடர்பு எண்ணும் கோரிக்கையும் எழுதியிருந்ததைப் பார்த்த மடுரோ அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். நல்ல விஷயம். இருந்தாலும் வெனிசுவேலாவில் மாங்காயா என்று மனதில் கேள்வி எழுந்தது? உங்களுக்குமா?

அந்தக் கேள்வியோடு தொடர்புடைய இன்ஸ்டாகிராம் பதிவொன்றைப் படித்தேன். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பக்கத்தில் வெளியான உப்பும் மிளகாய்த் தூளும் தூவிய மாங்காய்த் துண்டங்களின் படம் ஒன்றுக்குச் சுமார் 86,000 லைக்குகள், 1000 பின்னூட்டங்கள். அவற்றில் மாங்காயைப் போலவே சுவையான பல தகவல்களும் அடங்கி இருந்தன. இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, தன்ஜானியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஹெய்தி,  க்வாம் தீவு, பிரேசில், மெக்சிகோ, நியூயார்க் நகரம் என உலகமுழுவதும் மக்களின் விருப்பமான தீனிகளுள் ஒன்று உப்பும் மிளகாய்த் தூளும் தூவிய மாங்காய்த் துண்டுகள் என்ற தகவல் வியப்பூட்டியது. கோடைக் காலத்தில் திறந்தவெளிச் சந்தைகளிலும் கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் மக்கள் எல்லோரும் விருப்பத்தோடு உண்ணும் தீனியாக இருந்தது. நியூயார்க் நகர வீதிகளில் பூக்களைப்போன்ற வடிவத்தில் அழகாக சீவப்பட்ட மாங்காய்களை விற்பவர்களை நியூயார்க் மாநகரக் காவல்துறையினர் தொந்தரவு செய்யவில்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒருவர் எழுதியிருந்தார். மாங்காயோடு மாம்பழங்களின் சுவையையும் சிலாகித்திருந்தார் இன்னொருவர்.

மாமரத்தின் பிறப்பிடம் அஸ்ஸாமுக்கும் தற்போது மியன்மார் என்ற பெயரில் அழைக்கப்படும் பர்மாவுக்கும் இடையே இருக்கும் மலைப்பகுதி என்கிறார்கள் தாவரவியலாளர்கள். 5000 வருடங்களுக்கு முன்பு தோன்றிப் பின் இங்கிருந்து உலகமுழுவதும் பரவியதாம். சில குறிப்புகள் மாமரம் 25 அல்லது 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தாவரவகை எனச் சொல்கின்றன. மாங்காயின் நெருங்கிய உறவினர் முந்திரியும் பிஸ்தாவும் என்பது இப்போதுதான் தெரியவந்தது. எல்லாம் ஒரே தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் உணவாகக் கொள்ளக்கூடிய பழங்களையோ கொட்டைகளையோ விளைவிப்பவை. ‘மேங்கோ’ என்பதன் மூலம் மாங்காய் என்ற தமிழ் அல்லது மலையாள மொழிச் சொல். நம் மண்ணின் கலாசாரம் கலை இலக்கியத்தோடு மாமரம் பின்னிப் பிணைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. முக்கனி விருந்து, மாவிலைத் தோரணம், பூரணகும்பத்தில் மாவிலை. நகைகளிலும் ஆடைகளிலும் பட்டுப்புடவைகளிலும் மாங்காய் வடிவம். நிறங்களிலும் மாந்துளிர், மாம்பழம் என எத்தனை சாயல்கள், கலவைகள்.

தாய்தந்தையரைச் சுற்றிவந்து தம்பியை முந்திக்கொண்டு மாங்கனியை பெற்றுக்கொண்ட பிள்ளையாரின் கதையை அறியாதவர் யாராவது உண்டோ. இன்றளவும் காரைக்காலில் நடைபெறும் மாங்கனித் திருவிழா அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றோடு தொடர்புடையது. பெரிய செல்வந்தரின் மகளாகப் பிறந்த புனிதவதி இறைவனை வேண்டிநின்ற மாத்திரத்தில் அவள் கையில் மாங்கனி தோன்றிய அதிசயத்தைப் பார்த்த கணவன் அவளைவிட்டுப் பிரிந்தான். இல்லறத்தை விடுத்துத் துறவறத்தைப் பூண்டதோடு இளமையும் வனப்பும் கொண்ட மனித உடலையும் அழித்துக்கொண்டு பேயுருக் கொண்டு இறைவனின் புகழைப்பாடினார் காரைக்கால் அம்மையார் என்கிறது பெரியபுராணம். கந்தபுராணத்தில் சூரசம்காரத்தின் முடிவில் மாமரமாக நின்ற சூரனை வேலினால் பிளந்து அழிக்கிறார் முருகன். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாற, அவற்றைக் கொடியாகவும் வாகனமாகவும் ஏற்றுக்கொள்கிறார்.

பாரதியின் ஆறு துணைப் பாட்டில் புல்லாங்குழலை ஊதும் குழந்தைக் கண்ணனின் மாம்பழ வாய் என்ற வர்ணனையில் அழகுணர்ச்சி பொங்கும். தமிழ் இலக்கியத்தில் ஐங்குறுநூறு, தேவாரம், குற்றாலக் குறவஞ்சி, உழத்தி பள்ளுப் பாடல்களில் தீங்கனிகளைத் தாங்கிய மாமரங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மா புனித மரமாக இருக்கிறது. கௌதம புத்தர் அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும் மாந்தோப்பில் பிரசங்கம் செய்வதும் இளைப்பாறுவதும் வழக்கம். நீண்ட பயணம் போகும் புத்த பிக்குகள் மாம்பழங்களை உணவுக்காக எடுத்துச் செல்வார்களாம். இஸ்லாமிய, கிறித்துவ சமயப் பரப்பாளர்களும் மாம்பழத்தின் பயணத்தில் பெரும்பங்கு வகித்தார்கள்.

விவிலியத்தில் சொல்லப்படும் விலக்கப்பட்ட கனி குறித்து இதுவரை எங்கும் கேள்விப்படாத வாதத்தைப் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. பண்டைய பாரசீகத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் ஏதேன் தோட்டத்தில் ஏவாள் உண்டது ஆப்பிள் அல்ல, மாம்பழம் என்கிறார்கள் ஒரு சாரார். சாலமன் அரசனின் காலத்தில்தான் ஆப்பிள் மரம் தோன்றியது என்றும் அது ஆதாம் ஏவாளின் காலத்துக்குப் பல ஆயிரம் வருடங்கள் பின்னரான காலம் என்றும் கூறப்படுகிறது. இந்த வாதத்தை உண்மையென்று நிறுவத் தொன்மவியலாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் என்ன ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் என் வரையில் மாம்பழம் ஆப்பிளைவிடவும் சுவையானது சாறுமிகுந்தது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

சங்கப் புலவர்களில் தொடங்கி, காளிதாசன், பாரசீகக் கவி அமீர் குஸ்ரூ, இரபீந்திரநாத் தாகூர், உருது கவிஞர் மிர்சா காலிப் என்று மாம்பழங்களைக் கொண்டாத கவிஞர்களே இல்லை எனலாம். சீனாவைச் சேர்ந்த பௌத்த அறிஞரும் பயணியுமான ஹுவான் சுவாங் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்தபோது மாமரங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதி இருக்கிறார்.

இந்தியாவின் வடமேற்கு எல்லைவரை நடைபோட்டு வந்த மாவீரன் அலெக்சாண்டர் இங்கிருந்து மாம்பழங்களை எடுத்துச் சென்றானாம். முகலாயப் பேரரசர்கள் ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் என எல்லோரும் மாம்பழப் பிரியர்களாக இருந்தனர். உயர்ரக ஒட்டு மாங்கனிகளை உருவாக்கிய பெருமை முகலாயர்களையும் அவர்களுக்குப் பின் வந்த போர்த்துகீசியரையும் சேரும். தங்களுடைய வணிகப் பயணங்களில் இவர்கள் மாம்பழத்தையும் வெவ்வேறு நாடுகளுக்குக் கொண்டுசேர்த்த அனுபவங்கள் சுவையானவை.

இந்தியாவில் இருந்து கிழக்குத் திசையில் பிலிப்பைன்ஸ்வரை சென்ற மாம்பழம், அங்கிருந்து மெக்சிகோ காலியன்ஸ் என்று பெயரிடப்பட்ட பெரிய வணிகக் கப்பல்களில் பசிஃபிக் கடல் வழியாக மெக்சிகோவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இந்த வகைப் பழங்களை இன்றுவரையிலும் ‘மணிலா மேங்கோ’ என்ற பெயரிலேயே மெக்சிகோவிலும் அழைக்கிறார்கள்.

மாம்பழத்தின் மேற்கு நோக்கிய பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தது போர்த்துகீசியர்கள். ஆப்பிரிக்காவை அடைந்த பிறகு அங்கிருந்து தரைவழியே மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் வழியே தென் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்தன. இந்தப் பயணங்கள் எதுவுமே எளிதானவையாக இல்லை. மாங்கொட்டை எளிதில் முளைவிடாது. நீண்ட கடல்வழிப் பயணத்தில் தாக்குப்பிடிக்காது. எனவே முளைத்த மாங்கன்றுகளை எடுத்துச்சென்றனர். மாதக்கணக்கில் ஆகும் இந்தப் பயணங்களில் கடல்காற்றும் நீரும் அவற்றின்மீது படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். முடிவில் எத்தனை செடிகள் உயிரோடு சென்று சேர்ந்து புதிய நிலத்தில் முளைவிடும் என்பது யாருக்கும் தெரியாது. இது தாவரவியலாளர்களுக்குப் பெரும் தலைவலியைத் தந்தது. வெகுகாலம் கழித்து 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் வார்டியன் பெட்டிகள் என்றழைக்கப்படும் எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய கண்ணாடிக் கூடுகளைத் தயாரித்தனர். செடிகளைக் கடல்கடந்து எடுத்துச்செல்வது எளிதானது.

18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பிரெஞ்சு நாடுகளுக்கு இடையே கடல்வழிகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கடும்போட்டி நிலவியது. பிரெஞ்சு காலனியான ரீ யூனியன் தீவில் இருந்து தற்போதைய ஹெய்திக்கு சென்றுகொண்டிருந்த கப்பலை கரீபியன் கடல்பகுதியில் கைப்பற்றினர் பிரிட்டிஷ் கடற்படையினர். கப்பலில் எண் 11 என்று குறிப்பிடப்பட்ட சரக்குப் பெட்டிகளைத் திறந்தபோது உள்ளே மாங்கன்றுகள் இருந்தன. பிரிட்டிஷார் அவற்றைத் தங்களின் காலனியான ஜமைக்காவுக்கு அனுப்பிவைத்தனர். இன்று வரை இந்த மாம்பழ வகையை ‘எண் 11’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட குதிரைகளுக்குப் பதிலாக மாம்பழங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டில் க்வீன்ஸ்லாந்தில் இருக்கும் பழத்தோட்டத்தில் 40 இந்திய வகை மாமரங்கள் நடப்பட்டன.

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றும் மக்களை நாகரிகமற்றவர்கள் என்றும் நினைக்கும் போக்கு ஒரு காலத்தில் இருந்தது. தகவல் தொழில்நுட்பம், பயணங்கள், பரவலாக்கப்படும் ஆப்பிரிக்க இலக்கியங்கள், கலை வடிவங்கள் இவற்றினால் இந்த எண்ணம் இன்று பெருமளவில் மாறியிருக்கிறது. ஆப்பிரிக்காவின் கானாவில் உள்ள ஒரு இனத்தவர்கள் மாமரம் நட்ட கதை சுவாரசியமானது. சுமார் இருநூறு வருடத்துக்கு முன்னால் அந்தப் பகுதியில் வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சண்டை நடந்தது. அப்போது டெக்கிமான் என்ற இடத்துக்குப் புதிதாகக் குடியேறியவர்கள் புதிய வகைப் பழம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தார்கள். அது உண்ணக்கூடிய கனியா இல்லை விஷத் தாவரமா என்பது சரியாகத் தெரியாததால் நடுவதா வேண்டாமா என்று யோசித்தார்கள். அப்போது அவர்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு வாலிபன் இந்தப் பழத்தைச் சாப்பிடுவதாகவும் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் அதன் விதையை நடுவோம் என்றும் முன்வந்திருக்கிறார். அதன்பிறகு கானாவில் நடப்பட்ட மரங்களுக்கெல்லாம் தாய் அந்த மரம்தான் என்று சொல்லப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக இந்த வாய்வழிக் கதையை மறக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது கூடுதல் ஆச்சரியம். உங்கள் ஊரின் மரங்களைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரியுமா? எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமே.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  12. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  13. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  14. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  15. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  16. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  17. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  18. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  19. மனித ஆற்றலின் சான்றாகும் மாரத்தான் ஓட்டம் : கார்குழலி 
  20. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  21. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  22. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  23. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி