4. மதுரை – எல்லாமே எப்போதுமே

மன்னன்

**********

எனக்குத் தலைவனாகும் உரிமை

உண்டு.அதை எந்

நேரமும் நான் உபயோகப் படுத்திக்

கொள்ள முடியுமென்கிற

நம்பிக்கை

உனக்கு ஓட்டுப்

போட்டு உன்னைத் தலைவனாக்கி

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

பா.வெங்கடேசன் எட்டிப் பார்க்கும் கடவுள் இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2015 விருட்சம் வெளியீடு

எனக்கு முதல் முதலாகத் தன் சின்னஞ்சிறிய கையெழுத்தால் ஒரு பெரிய கோடு போடாத பரீட்சை பேப்பர் நிறைய நுணுக்கி நுணுக்கிக் கவிதைகளை எழுதி அனுப்புவார் சேகர். சி.ஏ, படிப்பதைத் தன் லட்சியமாகக் கொண்டு, இளங்கலை கணிதம் முடித்துவிட்டு, ஒரு நன்னாளில் எனக்கு அறிமுகமான சேகர், என் அக்காவின் கல்லூரி சீனியர், என்னை விட ஐந்து வயது மூத்தவர். வினோதமான, எளிதில் மலர்ந்துவிடாத நட்பு எங்களுடையது. ‘பகிர்வதற்குத் துணையில்லாத, ரசனை ஆளில்லாத காட்டில் அலையும் பேய் போன்றது’ என்று மனக்குகைச் சித்திரங்கள் எனும் என் தொடரில் எழுதினேன். அப்படியான பகிர் பங்காளிகளாக நாங்கள் ஒருவருக்கொருவர் ஆனோம். மென்மையான ரசனைகளின் தொகுப்பு சேகர். ரசனை என்பது ஒரு சொல் அல்ல, அது ஒரு செயல்முறை. சிந்தித்துப் பார்த்தால் இப்போதைய தலைமுறைக்கு கடிதம் என்ற ஒன்றின் நிமித்தம் பல வருடகாலம் சமூகத்தில் அதற்கிருந்த தனி மற்றும் கூட்டு அந்தஸ்து ஆகியவற்றை எப்படியும் புரியவைக்க முடியாது என்றே தோன்றுகிறது. ராஜசேகர், மூவேந்தன், ராஜா என்று என் பதின்ம வயதில் கடிதங்களால் நிரம்பிய தோழர்களைத் தனியே எண்ணிப் பார்க்கிறேன். கடிதங்கள் ஞாபகச் சிற்பங்கள் என்றால் வியப்பதற்கில்லை.

உலகின் வினோதங்களில் ஒன்று, கடைபிடிக்க வேண்டியவற்றைக் கட்டாயப்படுத்துகிறாற் போலவே, அறிந்துணர வேண்டியதையும் நிர்ப்பந்திக்கிறது. ரசிப்பதை எங்கனம், எவ்விதம் என்று தானாய் அறியவேண்டியிருக்கிற உச்சித் தேன் என்றே வைத்திருக்கிறது. சேகர் என்கிற ராஜசேகர், அந்த நான்கு பக்கக் காகிதம் நிறைய நிறைய ஆத்மாநாமின் கவிதைகளை எனக்கு அறிமுகம் செய்தார். வாழ்வில், குன்றாத அதிர்ச்சி ஒன்றைப் போல் அறியக் கிடைத்தார் ஆத்மாநாம். எழுபதுகளின் தனித்த, சதா மனம் புழுங்கிய தனிமை. மெலிய மறுக்கும் யானை போல், காலத்தோடு எல்லாப் பொழுதும் சமர் புரிந்த, தமிழில் கிடைத்த உலகக் கவி ஆத்மாநாம். காலமும், அரசியலும், தன் கூட்டு முகத்தைக் கலைத்துக்கொண்டு, காற்று எங்கனம் விஷத்தைப் பொதுவில் எல்லோருக்கும் பகிருமோ, அப்படி தனி மனிதனுக்குள் ஏற்படுத்திய முரண் சிதைவுகளைப் பிரதிபலிதம் செய்துபார்க்க விழைந்தவர். ஆத்மாநாமின் கவிதை கருப்பொருட்களை விடவும், அவரது தொனி முக்கியமானது. மேலும், வாழ்வின் மீதான நிரந்தர ஒவ்வாமை, தேசம் அழிந்தவனின் கனவில் மட்டும் வாய்க்கிற திரும்புதல்களென முற்றிலும் அறிந்த இயலாமை இட்டுச் செல்லுகிற விடைவராத கணிதத்தின் தசம பின்னப் படிக் குறிப்புகள்.

‘ஏறக்குறைய சொர்க்கம்’ எனும் சுஜாதாவின் தொடர்கதை ஒரு பாதி ஆத்மாநாம் கவிதை ஒன்றோடு தொடங்கி, இருபத்து சொச்ச அத்தியாயங்களுக்குப் பின்னால், அதே கவிதையின் முழு பிரசுரித்தலுடன் முடிந்து போயிற்று. தன்னைத் தொடர்கிற பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களைக் கிரைய சாசன சொற்புகழேந்திகளெனத் தான் மட்டும் சொந்தம் கொண்டாடாமல், அடுத்த சில ஜன்னல்களைத் திறந்து ஒரு தரிசன முழுமையை ஏற்படுத்தி கொடுக்க விழைந்த சுஜாதாவுக்கும், சேகருக்கும் என்ன செய்தாவது தங்கள் உளம் ஒரு கவிஞனால், அவன் கவிதையால் அடைந்த உள்ளார்ந்த அதிர்வு ஒன்றை இன்னும் சில கரங்களுக்குக் கடத்திவிட மாட்டோமா என்கிற வாசக அவஸ்தை. ஆத்மாநாம் கவிதைகள், சுஜாதா, சேகர், நான், நீங்கள், இன்னும் பலரென ஓடிக்கொண்டே இருக்கும் அழிவற்ற நதி.

நாலாய் மடித்த காகிதங்களின் வழி ஏற்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட காதல்களுக்கென்று சென்ற நூற்றாண்டில் எப்படியான இடம் இருந்திருக்கிறது..? செல்வின் என்பவர் நான் டிகிரி முதல் வருடம் படிக்கும் போது எம்காம் படித்தார். அவரோடு வகுப்பில் படித்த ராணி எனும் பெண்ணும்  காதலித்தார்கள். இருவரும் நேரே கண்ணோடு கண் நோக்கிக் கொள்வதே அபூர்வம். ஒரு வார்த்தைகூட யாரெதிரிலும் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். எல்லாமே கடிதவழி உரையாடல்கள்தான். அப்போது ஃபோன் அபூர்வம். செல்ஃபோன்கள் பேஜர்களெல்லாம் புழக்கத்தில் வராத காலம் என்பதையும் சேர்த்துக்கொண்டால் கடிதங்களின் முக்கியத்துவம் புரியலாம். கடிதம் கடிதம் என்கிறேனே தவிர அதிலும் மர்மப் படத்தின் ட்விஸ்ட் இருந்ததுதான் கூறவந்த தகவல். செல்வின் கேஷூவலாக செய்தி சுமக்கும் கடிதத்தை கசக்கி உருட்டிக் குப்பையாக வகுப்பின் மூலையில் எறிவார். அதை ராணி எடுப்பதற்கு வெவ்வேறு உபாயங்களைக் கையாள்வார். மோதிரத்தை விரலில் இருந்து கழற்றி அந்த மூலைக்கு உருட்டுவார். அதை எடுக்கிற சாக்கில் கடிதம் கவர்வார். அல்லது தண்ணீர் பாட்டிலின் மூடி அல்லது பேனா அல்லது சில்லறை நாணயம் என எதெல்லாம் லாஜிக்கல்லி பாசிபிள்ஸோ அத்தனையையும் உருட்டிவிட்டு கடிதத்தையும் அபேஸ் செய்வார். யாரும் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மூன்றாம் நபருக்குத் தெரியாமல் வைத்திருந்து இரண்டு வருட காலம் தங்கள் காதலை பொத்தி வைத்த மல்லிகை மொட்டாகவே பராமரித்தார்கள். பிறிதொரு நாள் கல்யாணத்தையே அரேஞ்சு மேரேஜ் என்று இருவரும் புளுகி பத்திரிகை தந்த சீனில் கூடப் படிக்கும் மகாலிங்கம் கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு தெனமும் பேப்பரைக் கசக்கி கசக்கி எறிஞ்சப்ப சரி. இப்பத் தான் கலியாணம் நிச்சயமாயிட்டுதுல்ல..? அப்பறமும் ஏண்டா பொய் சொல்றே..?ராணியிடம் திரும்பி யம்மா காய் வேணும் காபித்தூள் வேணும்னா மாமியாவீட்ல சத்தமா உரிமையா கேளு.மறந்து போயி பேப்பர்ல எழுதி மூலையில சுருட்டி எறிஞ்சுரப் போறே..ஆனா ஒண்ணு, நீயே எறியலைன்னாலும் மாப்ளை தெனமும் மூலையில எதுனா கெடக்கான்னு பார்க்காம இருக்க மாட்டான் என்று அறிந்த கதையின் ஆத்திரத்தை நகைச்சுவையாக்க பொய்க்கோழிகளுக்கு ஒரே வெட்கம்.

லிவிங்ஸ்டன் பல படங்களில் பல்வேறு வேடங்களில் தோன்றியவர். அவரது முகமே வித்யாசங்களின் தொகுப்பாக இருக்கும். நல்ல, கெட்ட, மேன்மையான, மோசமான என்று எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடிய முகம் மட்டுமல்ல பார்வை, சிரிப்பு, தொனி என முழுமையான நடிகர் லிவிங்ஸ்டன். சத்யா மூவீஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் ஜீ.எம்.குமாரோடு இணைந்து காக்கிச்சட்டை படத்தின் திரைக்கதைக்கு ஒத்துழைப்பை நல்கிய லிவிங்ஸ்டன், ஆர்.பாண்டியராஜனின் முதல் படமான கன்னிராசி படத்தின் திரைக்கதையை குமாரோடு இணைந்து உருவாக்கினார். பிற்காலத்தில் ஜீ.எம்.குமார் இயக்குனராக அறிமுகமான சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரித்த அறுவடை நாள் படத்தின் கதையை லிவி என்ற பேரில் எழுதினார். சபாபதி இயக்கத்தில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரித்த சுந்தரபுருஷன் படத்தின் திரைக்கதையை எழுதிய லிவிங்ஸ்டன் அதில் நாயகனாக நடித்தார்.

மதுரையில் பெரிய திரைகளில் ஒன்றான சினிப்ரியாவில் ரிலீஸ் ஆனது சுந்தரபுருஷன். சினிப்ரியா கிட்டத் தட்ட ஆயிரம் டிக்கெட்டுக்கள். அதிகபட்சம் நாலு வாரம் தாங்கும் என்று நினைத்த படம் 100 நாட்களைக் கடந்து தலை தெறிக்க ஓடியது. சிற்பி இசையில் ஆசோ ஆசோ என்ற பாடல் மொத்தக் காற்றையும் தன் பெயருக்கு எழுதிக் கொண்டது.லிவிங்க்ஸ்டனின் சிற்றன்னை மகனாக அதில் நடித்திருந்த வடிவேலுவுக்குத் தனித்த நகைச்சுவை ட்ராக் வழங்கப்பட்டிருந்தது. மேலும் அவர் படம் முழுக்க எல்லாருடைய காம்பினேஷனிலும் தோன்றிப் பேசுகிற காட்சிகள் இருந்தன. இதே படத்தில் அனாயாசமான குணச்சித்திர நடிப்பை வழங்கிக் காண்போர் கண்களைக் கலங்கவும் செய்தார் வடிவேலு பசியில் இருக்கும் தம்பிக்கு சாப்பாடு பரிமாறுவார் லிவிங்ஸ்டன். உருக்கமாகக் கண் துளிர்க்க அதை சாப்பிட்டுக் கொண்டே அப்பா இப்பிடித் தான் சாப்பாடு போட்டுட்டு சாப்ட்டதும் கருப்பட்டியைக் கைல குடுத்து அடிப்பாரு. நீயும் நான் சாப்ட்டதும் என்னைய அடிப்பியாண்ணே என்று கேட்கும் காட்சியில் கரையாத மனமும் உண்டோ என வினவும் வண்ணம் வடிவேலுவின் பேர் சொல்லும் படம் அது.

இரயில் பாடல்களுக்கான ஒரு கேஸட் இதோ

முதல் பாடல் இந்தியில் வெளியாகி இந்தியாவைத் தன் பிடிக்குள் கொண்டுவந்த Araadhana படத்தின் Mere Sapno ki Raani அடுத்த பாடல் பாட்டுக்கு நான் அடிமை படத்தில் வருகிற தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு என்ற பாடல். அடுத்தது இணைந்த கைகள் படத்தில் அந்தி நேரத் தென்றல் காற்று கிழக்கே போகும் ரயில் படத்தில் பூவரசம் பூ பூத்தாச்சு குங்குமச் சிமிழ் படத்தில் கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திடுச்சி பூவெல்லாம் உன் வாசம் படத்தில் தாலாட்டும் காற்றே வா பாடல். பணக்காரன் படத்தில் மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் பாட்டு ஞாபகரயில் அன்பே சிவம் படத்தில் எலே மச்சி மச்சி உயிரே படத்தில் தையதைய தையா ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் என்கிற ஃபைவ் ஸ்டார் படப் பாடல் ஒரு ஃப்யூஷன் கொத்து. பச்சை விளக்கு படத்தில் கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று கருப்புவெள்ளை பாட்டு ரயில்.சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ஒரு காலகால டான்ஸ் தமாக்கா. பிரம்மா படத்தில் இடம்பெற்றிருக்கும் ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் பாடல் ஒரு மூடுமந்திரம்.

காலேஜ் ஹவுஸ் மதுரையின் சென்ற நூற்றாண்டின் அடையாளங்களில் ஒன்று. அங்கே வாசலை ஒட்டி ஒரு ஸலூன் இருந்தது. திருவிதாங்கூர் ஸலூன் என்று பெயர். இன்றைய ஸ்பாக்கள் எட்டிப் பார்க்காத 90களின் மதுரையில் மாபெரும் ஸலூன் அது தான். ஒரே நேரத்தில் எட்டு நாற்காலிகளில் ரோம அறுவடை நிகழும். அதன் உரிமையாளர் கேரள நாட்டைச் சேர்ந்தவர். சில சமயங்களில் அவரும் அங்கே சேவை புரிவார். காலை ஐந்துமணிக்குத் தொடங்கி நள்ளிரவு இரண்டு வரைக்குமெல்லாம் அந்தக் கடை இயங்கியதைப் பார்த்திருக்கிறேன். சுற்றிலும் கண்ணாடிகளில் சொந்த பிம்பங்களின் பிரதிகள் நிறைய சலூன் என்பதன் மாபெரிய ஞாபகமாக அந்தக் கடை எனக்குள் நிரம்புகிறது. அந்த ஓனர் ஒரு முறை என் தலைக்கு ஹெட் மசாஜ் செய்தார். மலையாளமும் தமிழும் கலந்த தனக்கே உரிய மொழியில் தலைக்குக் குளிச்சிட்டு சாப்டுட்டு ஒரு உறக்கம் கொள்ளணம். சிக்கன் வேண்டா. அது ச்சூடு. பக்ஷே ஃபிஷ் கறி ஓக்கே. அது ஒந்தும் ப்ரஷ்ணம் அல்லா என்று மாபெரும் புன்னகையோடு வழி அனுப்பி வைத்தார். ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் படத்தைப் பார்க்கும் போது அழகிரி என்ற நாமகரணத்தில் சொந்தமாய் பெரிய ஸலூன் வைத்திருப்பவராகத் தோன்றுவார் எம்.ஆர்.ராதா எனக்கு திருவிதாங்கூர் ஸலூன் முதலாளி ஞாபகம் வந்து போகும்.தற்போது அந்தக் கடை அங்கே இல்லை.

காலம் சூறைக்காற்றைப் போல் வீசுவதில்லை. வந்து சென்றதே தெரியாத தென்றலைப் போல் வருடியபடியே பல விலாசங்களை மாற்றி வைக்கிறது.வாழ்வென்பதே யாரோ செய்கிற சித்துவேலை தானே..?

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
  2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
  3. அன்பென்ற பொருளாதல்
  4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
  5. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
  6. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
  7. சினிமா பித்து- ஆத்மார்த்தி
  8. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
  9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
  10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
  11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி