2. மதுரை – எல்லாமே எப்போதுமே

ஒரு காலத்தின் அதிசயம் அடுத்த காலத்தின் அதி அவசியமாக மாறுகிறது. அதற்கடுத்த காலத்தில் மலிந்து போவது தொடரும் காலத்தில் வேண்டாததாகவும் ஆகிறது. அடுத்து வரும் பின்னொரு காலத்தில் வினோதமாகவும் அடுத்த காலத்தில் அரிதாகவும் மாறுவது காலம் தனக்கென்று கையில் வைத்திருக்கிற விந்தை.

கடிகாரத்தின் வரலாறு நெடியதல்லவா சென்ற நூற்றாண்டில் இடுப்பில் சரமாய்ச் சங்கிலி தொங்க அதன் முடிவில் கடிகாரம் இருந்ததெல்லாம் இன்றைய யுவர்களுக்குத் தெரியுமா? கைக்கடிகாரம் சென்ற காலத்தின் மதிப்புக்குரிய ஆடவ செல்வந்தம். மாப்பிள்ளைக்கு கோல்ட் ஸ்ட்ராப் உடன் வாட்ச் என்பது திருமணங்களைச் சுற்றியிருந்த முக்கியமான பண்டமாற்றுக்களில் ஒன்று. யார் கையிலாவது பளீரென்று கடிகாரம் டாலடித்தால் ‘என்ன மிஸ்டர் கல்யாணமாயிடுச்சா…’ என்று கேட்கும் போது பெரும்பாலும் ‘ஆமாம்…’ என்று அசடுவழிவதெல்லாம் ஆயில் பெயிண்டிங் சித்திரம் போல டாலடிக்கிற காட்சி.

படித்துத் தேறியவர்களுக்குப் பரீட்சைப் பரிசாக சவாலில் வெல்பவர்களுக்கான கிஞ்சித் செல்வந்தமாக இருபது வருடம் ஒரே குடையின் கீழ் உழைத்தவர்களுக்கான காலாதீத சன்மானமாக எல்லாம் கடிகாரங்கள் வழங்கப்பட்டன. தொண்ணூறுகளின் மத்தியிலெல்லாம் திருமணப் பரிசுகளாகப் பலரும் சுவர்க்கடிகாரங்களைப் பொட்டலமிட்டுத் தருவது வழக்கமாயிற்று.

ஒரு சில வீடுகளில் மொத்தம் நூற்றி எழுபது சுவர்க்கடிகாரங்கள் பரிசாய்த் தரப்பட்டதை சல்லிசான விலைக்குக் கடிகாரக் கடைக்காரரை அழைத்து விற்பனை செய்துகொண்டதெல்லாம் நடந்தது. செல்ஃபோன் வந்த பிறகு அதிலும் டி.வி. சேனல்களில் எப்போதும் நேரத்தை ஒரு ஓரத்தில் காட்டத் தொடங்கியதிலிருந்து அதிலும் மணி பார்த்துக் கொள்கிறான் இந்த நூற்றாண்டுக் காரன். மணி பார்க்குமிடம் கடிகாரமாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன?

அப்பா எம்.ஜி.ஆர் பக்தர். வெளிப்படையாகத் தன் இரண்டு கைகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா இருவரையும் பச்சை குத்தியிருந்தார். எங்கள் வீட்டில் ஒரு பெரிய கடிகாரம் நுழைந்ததும் எதிர்ப்படுகிற சுவரில் உயரே தொங்கியது. எப்போதும் பத்து நிமிடங்கள் அதிகமாக்கி ஓடவைத்திருப்பார் அம்மா. தினப்படி சீக்கிரமே தயாராகி புதூர் பஸ் நிலையம் வரை விரைந்து சென்று தனக்கான பேருந்தைக் கைப்பற்றிட வேண்டியதால் பத்து நிமிடம் ஃபாஸ்டாக ஓடுகிற கடிகாரம் எந்த வகையிலோ அவரது விரைதலுக்கு உதவியாயிருந்தது. ஒரு கட்டத்தில் அந்தக் கடிகாரம் பத்து நிமிடத்துக்குப் பதிலாக இருபத்தைந்து நிமிடங்கள் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தபோது நாங்கள் திருநகர் வீட்டுக்கு மாறி இருந்தோம். அந்தக் கடிகாரத்தை அது ஃபாஸ்டாக ஓடுவதை நானும் சித்தப்பா மகன் பாலாஜியும் கிண்டல் செய்து கொள்வோம். அந்தக் கடிகாரத்தில் வெண்பஞ்சுத் தொப்பியும் கருப்பு கூலிங்கிளாஸூம் மாறாத புன்னகையுமாக எம்.ஜி.ஆரின் ஜிலுஜிலு ஸ்டிக்கர் ஒன்றை அப்பா ஒட்டியிருந்தார்.

அதன் ரிஃப்ளெக்சன் எந்த வெளிச்சம் அதன்மீது பட்டாலும் மினுங்கும். பல வருடங்களுக்குப் பிறகு அதிலேயே கையால் வரையப்பட்ட ரஜினி ஓவிய உருவத்தை ஸ்டிக்கராக்கியது விலைக்கு வாங்கி ஒட்டினேன். என் அப்பாவிடம் உனக்கு எம்.ஜி.ஆர்னா எனக்கு ரஜினி என்றேன். அந்த ரஜினி கையில் ஸ்டைலாக துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பார். இப்போதும் அரிதாக எதாவதொரு கனவில் அப்பா அந்தக் கடிகாரத்தில் ரஜினி கையில் இருக்கும் துப்பாக்கியோடு மணி பார்க்கிறாற்போலக் குழப்பமான கனவின் சித்திரத்தைக் கடக்கிறேன்.

மேலை நாடுகளில் FIRST EVER முதன்முதலில் என்று பல க்ளப்புகள் இருக்கின்றன. நம் ஊரில் பேட்டி கொடுப்பது, பிரபலம் என்கிற ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு மாத்திரமான சமாச்சாரமாகக் கருதப்படுகிறது, அல்லவா? அங்கே அப்படியெல்லாம் இல்லை. எல்லாரும் எப்போதும் தங்களுக்கிடையில் இருக்கக்கூடிய பொது மற்றும் வேறுபாட்டு சமாச்சாரங்களை எல்லாம் பரஸ்பரம் அறிந்தும் அறிவித்தும் மகிழ்வார்கள். இந்த First Ever நபர்களின் கொண்டாட்டம் நட்பு, காதல் தொடங்கி, பயணம், அன்பு, கடன், சாதனை என சொல்லித் தீராத ஒரு தினுசான திருப்திக்கு வழி வகுக்கும். நமக்கும் தான் எத்தனை First Everகள்…? நம் முதல் ஞாபகம் என்பதில் தொடங்கி, முதல் ஆதர்சம், முதல் புத்தகம், முதல் மழை என எத்தனை இருக்கிறது..? மனித வாழ்வென்பதே முதலும் கடைசியுமாகத் தொகுக்கப்படுகிற மாபெரும் புத்தகத்தின் எதோ ஒரு வால்யூம், அதனுள் ஒரு பக்கம், அதிலொரு பத்தி, வாக்கியம், வரி, குறைந்தபட்சம் ஒரு வார்த்தை.

நான் குழந்தையாக இருந்து மெல்ல வளர்ந்த காலத்தில் புதூரில் எம்.ஜி.ஆர் நகரில் வாடகை வீட்டுக்குப் பெயர்ந்தோம். அந்தத் தெருவின் மனிதர்கள் அற்புதமான நினைவுகளைத் தந்தவர்கள். ராமசாமி என்பவருக்குச் சொந்தமான எதிர்வீட்டில் கீழ் போர்ஷனில் அவரது குடும்பம் இருந்தது. ராமசாமிக்கு கலா ரமணி என இரு மகள்கள். கலாக்காவுக்கு ஒரு பையன் பிறந்தான். அவன் பெயர் ப்ரவீன். நானும் என் அக்காவும் பெரும்பான்மை நேரங்கள் எதிர் வீட்டில் கலாக்காவின் அருகேதான் இருப்போம். அதுவும் ப்ரவீன் முதற்சொல்லைப் பேசியது முதல் நடை நடந்தது
குப்புற விழுந்தது என எல்லாவற்றையும் அருகே இருந்து பார்க்க முடிந்தது. குழந்தை என்பது பால்யத்தில் கிட்டுகிற மிகச்சிறந்த பொம்மை. குளிக்கவைத்து ப்ரவீனுடைய பிஞ்சு மேனியில் கலாக்கா ஜான்ஸன்’ஸ் பேபி பவுடரைக் கொட்டி ஆடைகள் அணிவித்து என் அக்காவின் மடியில் அவனை இருத்துவார். எங்கிட்ட எங்கிட்ட என்று நானும் கெஞ்சி அவனை என் மடியில் கிடத்திக் கொள்வேன். முதன் முதலில் ஒரு குழந்தையின் வாசனை புன்னகை இவற்றையெல்லாம் மனதுக்குள் நிரப்பிக்கொண்டது அங்கேதான்.

பன்னிரண்டாவது வயதில் புதூரிலிருந்து திருநகருக்கு வீடுமாற்றிச் சென்றபிறகு, பின்வீட்டு ஆச்சி அப்போது எழுபதை நெருங்கிக்கொண்டிருந்தவர், கடைத்தெருவுக்கு சிலமுறை என்னையும் அழைத்துச் சென்றிருக்கிறார், அப்படித்தான் அந்தமுறையும் அவருடன் சென்றேன். குழந்தைகளை பதின்வயது பாதிவரைக்குமாவது அயலாரின் துஷ்டிகளுக்கு அனுப்பமாட்டார்கள். திருநகரின் புகழ்பெற்ற பலோட்டி தேவாலயத்தில் கன்வெர்ட்டட் கிறித்துவரான கோபால் என்பவர், அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைய, அவர் சவத்துக்கான முதலிறுதி மரியாதை நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் நகர்ந்து செல்லும் வரிசை என்ன என்று நான் உணர்வதற்குள் ஆச்சி என்னையும் நகர்த்திக்கொண்டு, கண்ணாடிப் பெட்டியைச் சமீபிக்கிறார். நான் காணவாய்த்த முதல் உயிரற்ற உடல் என் நினைவில் கல்வெட்டுச் சித்திரமாய்…

அதனைக் கடந்து பல தினங்கள் ஒரு முகமாய், மூடிய விழிகளாய், அசையாத உடலாய், அது மாதிரியான தினத்துக்கென்றே தனித்து வாய்க்கிற வாசனையாய், எனக்குள் தன்னிஷ்ட ஆட்டம் ஆடிற்று. அதற்கு அடுத்த தினங்கள் அதனாலோ, வேறு எதனாலோ என்னுடல் காய்ச்சல் கண்டது. செவித்திறனற்ற எனது பாட்டியும், பாதி செவித்திறனை இழந்தது வெளியே தெரியாமல் இருந்த அந்தப் பின்வீட்டு ஆச்சியும் என் நிமித்தம் முக்கால் மணிநேரம் விடாமல் சண்டையிட்டுக்கொண்டார்கள். அது இன்று யோசித்தாலும் தமிழ்க் கவிதையை ஆங்கிலத்திலிருந்து மீண்டும் தமிழில் மொழிபெயர்த்தாற்போல் வேறு எதோடும் பொருந்தாத ஜிவ் ஜிலீர் விஷயம் அது. நானும் பின்வீட்டு ஆச்சியும் எனது பாட்டியின் கறார்த்தன்மையால் அதற்குப் பிறகு ஒருவருக்கொருவர் BESTIE ஆகத் தொடர்ந்து பயணிக்கிற வாய்ப்பை இழந்தோம்.

திருப்பரங்குன்றம் முருக ஸ்தலம். முன்னும் பின்னும் பாலம் கட்டப்பட்டு, அதன் பழைய முகம் முற்றிலுமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுவிட்டது. நாங்கள் பால்யத்தில் பார்த்த குன்றம் நுழைய வெளியேற இரண்டு ரயில்வே கேட்டுகள், மத்தியம் செல்லும்வரை மாநிலம் காத்திருக்க வேண்டும். அதில் பாருங்கள் வீராச்சாமி, காலையும் மாலையும் உள்ளேயும் வெளியேயும் எனப் பலவிதமான காத்திருப்புகளாக அவை தோன்றும். இறங்கி இங்கேயும் அங்கேயும் தமிழ் சினிமாவில் ஆப்பரேஷன் சீனில் வெளியே காத்திருக்கும் கணவனைப் போல நடப்பவர்கள் சிலர்.
நிஜமாகவே டீக்கடையில் டீ குடித்துவிட்டுத் திரும்ப வந்து ஏறுவதெல்லாம் நடக்கும். சிம்மக்கல் வழியாகச் செல்லும் பேருந்துகள் பைபாஸில் பறக்கும்போது என் ஸ்கூலுக்குப் போகும் பய்னாலு B, முப்பத்தொண்ணு A போன்ற இரக்கமற்ற பேருந்துகள் மட்டும் கேட்டுப் போட்டாலென்ன, பூட்டுப் போட்டாலென்ன என்று குன்றத்தின் உள்ளே தான் செல்லும்.

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் நுழைகிற இடத்தில் அப்போதெல்லாம் த.மு.எ.ச. கேன்வாஸில் கைப்பட வரைந்த பதாகைகளை ஊன்றி வைப்பார்கள். அடிக்கடி மாற்றப்படும் அவற்றில் ஓவியங்களும் சின்னஞ்சிறு கவிதைகளுமாக, அதைப் பார்ப்பதற்கென்றே குன்றத்தின் உள்ளே பேருந்து செல்லும் தாமதம், காத்திருப்பு, என அனைத்தையும் பொறுத்துக்கொள்வேன். நானும் பரணியும் அருகருகே அமர்ந்து மிகப் பரவசமாக ஒரு வீடு திரும்பலின்போது, அந்தப் பதாகை லேசாக மழையில் நனைந்து ஓவியம் மற்றும் எழுத்துருக்களின் வண்ணங்கள் லேசாய்க் கரைந்து ஒழுக்கியிருந்த கோடுகள் மேலதிக அழகென வசீகரித்ததைச் சுட்டிக்காட்டினேன். அமைதியாக, அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பரணி, “ரெண்டு மூணு மாசமா மழையே பெய்யல, இது ஓவியம் வரையப்பட்ட ஸ்டைல்” என்றான் அமைதியாக.

ஒரு கவிதை

புதன் கிழமையைப்
பூனைகள் கொண்டாடுகின்றன
அவற்றின் நாட்காட்டியில்
அச்சடிக்கப்பட்டிருக்கிறது
மீன் கிழமை என.

கல்யாண்ஜி
பூனை எழுதிய அறை
சந்தியா பதிப்பக வெளியீடு

முந்தைய தொடர்கள்:

1. வயலட் விழியாள் – https://bit.ly/2xREA2L

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
  2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
  3. அன்பென்ற பொருளாதல்
  4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
  5. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
  6. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
  7. சினிமா பித்து- ஆத்மார்த்தி
  8. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
  9. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
  10. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
  11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி