6.அசைவறு மதி

கடந்த பதிவில் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்வின் மூலமாக நமக்குள் ஏற்படும் எண்ண நிகழ்தகவுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
ஒரு சிறு ஃப்ளாஷ்பேக்காக நினைவூட்டுகிறேன்.

ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த நான்கு மாணவர்களில் ஒருவனது ஏடிஎம்மிலிருந்து 45000 பணம் திருடு போகிறது. ‘பின் நம்பர்’ தெரியும் என்றவாக்கில் உடனிருக்கும் மூன்று நண்பர்கள் மீது பணத்தை இழந்தவன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதை அடிப்படையாக வைத்து கல்லூரியில் இடை நீக்கம் செய்கிறார்கள். அதில் ஒரு மாணவனின் பெற்றோர் குற்றமற்ற மகனுக்காகப் போராடுகிறார்கள். செமஸ்டர் எழுத வைக்க முயற்சி செய்கிறார்கள்.

ஒரு கல்லூரியின் முதல்வராக இந்த நிகழ்வை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், கல்லூரியில் நடக்கும் விசயம் கல்லூரிக்குள்ளேயே முடிக்கப்படவேண்டும். அது வளாகத்தைத் தாண்டி காவல் நிலையம் வரை சென்றால் அவருக்கு அது அழுத்தம். பிரஸ், மீடியா என செய்தி வெளிவந்தால் கல்லூரின் நிர்வாகத்திற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். ஆதலால், தன்னை மீறி மாணவர்கள் காவல் நிலையம் சென்றதால் அதை முடித்துக்கொண்டு வா பிறகு கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறென் என்பது அவரது நிலைப்பாடு.

எந்தக் குற்றமும் செய்யாத ஒரு மாணவனின் பெற்றோராகப் பார்த்தால், யாரோ ஒருவன் செய்த குற்றத்திற்கு எப்படி தன் வீட்டுப்பிள்ளை பாதிக்கப்படலாம். விசாரனை ஒருபக்கம் நடக்கட்டும். பருவத்தேர்வு எழுத அனுமதிக்கலாமே. எப்படியும் அவர்கள் விசாரித்து இவன் குற்றமற்றவன் எனத் தெரியவரும்பொழுது குற்றமற்றவனும் குற்றவாளியும் ஒருசேர தண்டனை அதுவரை அனுபவிப்பது எப்படி நியாயமாகும். செமஸ்டர் எழுத அனுமதி கிடைக்குமா என்பது அவர்களின் தவிப்பாகவே இருந்தது.

கடந்த வார இந்தப் பதிவை எழுதி முடித்து உயிர்மையில் வெளிவந்தப் பிறகு நிறைய நண்பர்கள் இது பற்றிய உரையாடலை என்னுடன் மேற்கொண்டனர். முடிவை இப்பொழுதே சொல் என்றார்கள். சிலர் உயிர்மை இணையதளத்திலேயே தங்கள் கருத்துகளையும் எண்ணோட்டங்களையும் பதிவுசெய்தார்கள். செய்யவேண்டிய கடமைகளில் அவையும் அடங்கும். அவர்களுக்கு என் ப்ரியங்கள்.

எப்பொழுதும் ஒரு பிரச்சினை தீவிரம் அடையும்போது நாம் அதில் குதித்து அதனுடன் கலந்துபோகும்போது அதன் போக்கிலேயே நாமும் அடித்துச் செல்லப்படுவோம்.

என்னைத் தேர்வு எழுத விடு என்று அவர்கள் மோதுவதும், குற்றவாளியாரெனச் சொல் என முதல்வர் நிராகரிப்பதும் பத்து நாட்களாக நடக்கிறது.

ஒரு கட்டத்தில் பெற்றோர் மனச்சோர்வு அடைந்து மகனால் செமஸ்டர் எழுத முடியவில்லை என்பதாலும் இடை நீக்கம் ஒரு மாத கால அவகாசம் இழுத்தபடியாலும் என்ன செய்வதென்று தெரியாத ஒரு புலம்பல் நாளில் கல்லூரியின் துறைத்தலைவர், ஏன் இப்படி புலம்புகிறீர்கள் பேசாமல் டி.சி. வாங்கிக்கொண்டு வேறு கல்லூரிக்குப் போய்விடுங்கள் என்கிறார்.

அந்த மாணவனோ செய்யாதக் குற்றமாக இருந்தாலும் ஒட்டுமொத்தக் கல்லூரியும் தன்னை ஒரு குற்றவாளியாகப் பார்ப்பதால் மனச்சிதைவடைகிறான்.

மாணவனின் தந்தையோ கோபப்பட்டு குதிக்கிறார் .

அம்மாவோ அழுகிறார்.

இப்பொழுது கல்லூரியை விட்டு வெளியேறுவது தான் தீர்வாய் அமைகிறது.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்பது அறிவியல் விதியாயிருக்கலாம். உளவியல் விதிப்படி நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும்.

ஆங்கிலத்தில் சொல்வதென்றால் நடக்கும் நிகழ்வுகளுக்கு react செய்யவேண்டுமா respond செய்யவேண்டுமா என்பதில்தான் அந்த நிகழ்வை எப்படிக் கொண்டுபோகிறோம் என்று இருக்கிறது.

மனச்சிதைவுக்குள்ளாவதும், அழுவதும், கோபப்படுவதும் பிரச்சினைக்கான எதிர்வினை.

reaction, ஆனால் அது நமக்கு பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை, பிரச்சினைக்கானத் தீர்வு வேண்டுமானால் நாம் வினைகளுக்குப் பதில் புரியவேண்டும் respond வகையறா.

மறுநாள் கல்லூரிக்குச் சென்று இறுதியாக ஒரு சந்திப்பு. ஒரு குடும்ப நண்பரிடம் விசயத்தைச் சொல்லி அவரையும் உடன் அழைத்துச்செல்கிறார்கள்.

டிசிபிளின் கமிட்டி கூடுகிறது.

மாணவனையும், பெற்றோரையும் உடன் வந்த நபரையும் அழைக்கிறார்கள்.

மூன்று ஆசிரியர்கள் அடங்கிய குழுவிற்குத் தலைமை-ஒரு ஆசிரியை.

“நீ திருடன் யார்னு சொல்லு இல்லாவிட்டால் டிசிய வாங்கு” டிசிபிளீன் கமிட்டியின் ஆசிரியைக் கூறினார்

இதைக் கேட்டதும் மாணவனின் தந்தை குதிக்க ஆரம்பித்தார்.

முதலில் நடந்த வினை கூட மறந்துபோகும். அதற்கு நாம் புரிந்த எதிர்வினைதான் பேசப்படும். தந்தையின் கோபத்தையும் அவர் உயர்த்தியக் குரலையும் பற்றிப் பேசியது ஒழுங்கு குழு.

வந்த வேலை அது அல்ல.

‘PURPOSE ‘ என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை இருக்கிறது. பெரும் தொழில் முனைவர்களிடம் நாம் சந்திக்க அனுமதி கேட்டால், PURPOSE என்ன என்று கேட்டுத்தான் அனுமதி தருவார்கள்.

உடன் வந்த குடும்ப நண்பர் அந்த ‘PURPOSE’ தெரிந்தவராயிருந்தார்.
மெதுவாக குடும்ப நண்பர் பேச ஆரம்பித்தார். அந்த ஆசிரியை போலவே அந்த மாணவனைப் பார்த்து, தம்பி, பணத்தை யார் எடுத்தது சொல் என்றார்.

அவன் ‘தெரியல…’ என்றான்

பிறகு, மேடம் இவன் எடுக்கவில்லை என்றால் வேறு யார் எடுத்திருப்பார் என்று நீங்கள் எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்று கேட்டார்.
போலிஸ் வேலை நாங்க பாக்கனுமா என்றது கமிட்டி.

கரெக்ட் மேடம்… நீங்க போலிஸ் வேலை பாக்கமுடியாது. பசங்க போலிஸ்ட்ட போனதே தப்பு. பிரச்சினைனு தெரிஞ்சதும் ஒண்ணு எங்கட்ட சொல்லிருக்கனும் இல்லாட்டி உங்கட்ட வந்திருக்கனும். போலிஸ்ட்ட போயிருக்கக்கூடாது என்றார் அந்த நபர்.

டிசிபிளீன் கமிட்டி ஒத்துக்கொண்டது, அதுதான் பிரச்சினை. எங்கள் கையில் எதும் இல்லை சார் என்றது.

அந்த நண்பர் கேட்டார், சரிங்க மேடம், நீங்கள் பெரிய கல்லூரி. மிகப் பெரும் பேராசிரியர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்தால் திடமாகத்தான் இருப்பீர்கள். எங்கள் வீட்டுப் பையனுக்கு இரண்டு வாய்ப்புகள் தந்துள்ளீர்கள்,

ஒன்று திருடன் யாரெனச் சொல்லவேண்டும். இன்னொன்று டி.சி. வாங்கவேண்டும்.

ஒத்துக்கொள்கிறோம்.

ஆனால் இரண்டிற்குமே எங்களால் முடியாது.

திருடன் யாரென்று எங்களுக்குத் தெரியாது.

போலிஸ் வேலையை நீங்கள் பார்க்கமுடியாது.

நாங்கள் பார்க்கவேண்டும்.

இவ்வளவு பெரிய கல்லூரியில் ஒரு இடை நீக்கம் செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு குற்றத்திற்கான எழுத்துப்பூர்வமான கடிதம் இருந்திருக்கும். உங்களிடம் வெகு திடமான ஆதாரம் இருந்திருக்கும். அதன் அடிப்படையில் தான் இடை நீக்கம் செய்திருப்பீர்கள். அந்த ஆதாரத்தைத் தாருங்கள்.
நாங்கள் போலிஸ் வேலையைச் செய்கிறோம் என்று சொன்னார்.

கேட்கவேண்டிய கேள்வி இதுதான்.

ஆனால் அந்தக் கேள்விக்கு கல்லூரி நிர்வாகத்திடம் பதில் இல்லை. டிசிபிளின் கமிட்டி மேடம், எங்கள் கையில் ஆதாரம் இல்லை சார் என்றார்.

எப்படி மேடம், இவ்வளவு பெரிய கல்லூரி. எல்லாம் பெரிய படிப்பு படித்த பேராசிரியர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி மூன்று மாணவர்களை இடை நீக்கம் செய்தீர்கள். ஒரு பையன் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்காமல் ஒரு குற்றத்தைச் சொன்னால் அதை ஒத்துக்கொண்டு தண்டனை வழங்கிவிடுவீர்களா. இந்தமாதிரி குற்றத்தை உங்கள் மீது சுமத்தினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா என்றார்.

இப்பொழுது டிசிபிளின் கமிட்டியின் ஈகோ உச்சம் சென்றது.

காவல் நிலையம் வரை சென்றதால் எங்களுக்கு அந்தப் பையன்கள் தேவையில்லை சார் என்றது கமிட்டி.

பெரும் பிரச்சினைகளை வெகு சாதாரணமாகக் குழப்பி அதற்குத் தீர்வைத்தராமல் திசைமாற்றுவது சாதாரண விசயங்கள்தான்.

எப்படி மேடம். காவல்நிலையம் சென்றால் கல்லூரியின் பெயருக்குக் குந்தகம் விளையும் என்று பயந்தால் சரி. காவlதுறையே மாணவர்களின் படிப்பு முக்கியம்’னு வழக்கு போடாம பண்ணிருக்காங்க. நீங்க பேராசிரியர்கள் காவல் நிலையம் போயிட்டானு டிஸ்மிஸ் பண்றீங்க. பசங்க மேல போலிஸ்க்கு இருக்குற அக்கறை ஏன் காலேஜ் க்கு இல்ல மேடம்.

அப்படியே இருக்கட்டும். உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வாய்க்கால் தகராறு காரணமா உங்க மேல ஒரு வழக்குக் கொடுக்குறார். உடனே உங்களை கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் பண்ணா நீங்க அமைதியா இருப்பீங்க தானே மேடம் . கல்லூரிக்கு வெளியில் நடப்பது வேறு. கல்லூரியின் பெயருக்குக் குந்தகம் விளைவிப்பது என்பது வேறு.
எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி இவனைக் குற்றவாளி என்பீர்கள் என்றார்.

எந்தப் பையன் மூவர் மீது குற்றம் சுமத்தினானோ, அவனே காவல்நிலையத்தில் கடிதம் தருகிறான். இவன் பணம் கொடுத்துட்டான். குற்றம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் பணத்தை மறுபடியும் தந்துவிடுகிறேனென்று. மேலும் அவனே இவனிடத்தில் இதற்குச் சம்பந்தமில்லை என்பான்.

அப்படியானக் கடிதம் பெற்றோர் கையில் இருக்கிறது. இரண்டு பசங்க கையில் இருக்கிறது. காவல் நிலையத்திடம் இருக்கிறது. ஆனால் கல்லூரிக்கு அப்படியானக் கடிதம் இருப்பதே தெரியவில்லை.
ஒரு பிரச்சினை நமக்கு ஏற்பட்டதும் நாம் எதிர்கொள்வது பிரச்சினை மட்டுமல்ல, பிரச்சினை ஏற்படுத்தும் தாக்கத்தையும்தான். ஆனால் செய்யவேண்டியது பிரச்சினை கலைய என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான்.

நண்பர்களே, ஒரு கல்லூரியின் முதல்வராக ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அவர் பிறழ்வாயிருக்கிறார். அன்றைய தினத்தில் மட்டும் எட்டு மாணவர்களுக்கான இடைநீக்கம் சம்பந்தமான விசாரனைகள். கையில் அதிகாரம் இருக்கிறது என்பதால் அதைப் பயன்படுத்திவிடுகிறார்.

அந்த குடும்ப நண்பர் கேட்ட கேள்விகளுக்குப் பின் விசாரனை ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு புகார் வந்ததும் அதை வெறும் புகாராவே கருதி அதை விசாரிப்பது முதல்வரின் கடமை. ஆனால் என்னிடம் வராமல் காவல்நிலையம் சென்றது ஏன். உன்னை இடைநீக்கம் செய்கிறேன் எனச் செய்திருக்கிறார். MASS INTELLIGENCE என்று ஒன்று இருக்கிறது. அது பெரும்பாலும் தனித்துச் செயல்படுவதில்லை. ஒரு குழுவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது முடிவுகளால் தனக்குக் கீழிருப்பவர்களின் மனநிலையிலும் ஆதிக்கம் செலுத்துவார். முழுக்க முழுக்க தனது அதிகாரத்தின் அடிப்படையில் அதைச் செய்வார். அதைத்தான் அந்தக் கல்லூரியின் முதல்வர் செய்திருக்கிறார். ஒழுங்கு கமிட்டி சொல்வதும் கிட்டத்தட்ட முதல்வரின் வார்த்தைகளைத்தான்.

எந்தப் பையன் குற்றம் சொன்னானோ அவனே ஒன்றுக்கு மாற்றான பதிலைச் சொல்கிறான். மனப் பிறழ்வான மாணவனாக இருந்திருக்கிறான்.

ஒரு சிசிடிவி கேமரா காட்சிகளைப் பெறுவதற்குக் கூட யோசிக்காமல் மூன்று மாணவர்களின் பருவத்தேர்வுகளை எழுதவிடாமல் செய்திருக்கிறார்.

மூன்று மாணவர்களில் இருவர் குற்றமற்றவர்கள். மீதி ஒருவரும் பணத்தை இழந்தவராய் நடித்தவரும் குற்றம் புரிந்தவர்கள். இதைக் கண்டுபிடிக்க 40 நாட்கள். பத்து நாட்கள் வகுப்பு, ஒரு பருவத் தேர்வு இரு மாணவர்கள் இழந்துள்ளனர்.

ஒரு போலிஸ்காரன் சொல்லி நான் கேட்கனுமா என்று முதல்வர் கூறியது எதனின் குறியீடு என்று கடந்தப் பதிவில் சொல்லியிருந்தேன்.

அசைவறு மதி இல்லாதோர்தான் அழிவதோடு தன் சார்ந்த மற்றவர்களின் வெற்றியையும் சேர்த்து அழிப்பார்கள். அதற்கு அந்தக் கல்லூரியின் முதல்வரே உதாரணம்.

ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த ஒரு சொலவடை இருக்கிறது.

‘POWER CORRUPTING PEOPLE CORRUPT POWER PERFECTLY’

முந்தைய தொடர்:

5.உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? – https://bit.ly/3a3Ta5k

4.ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது – https://bit.ly/2xQQp9r

3.‘எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன’ – https://bit.ly/2Quz6RQ

2.இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது – https://bit.ly/3dbEeUR

1. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் உயிர்ப்பு இருக்கிறது – https://bit.ly/393NmHE

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  10. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  11. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  12. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்