எல்லாமே எப்போதுமே -5

Inventing enemies

When Fortuna wishes to smile upon a Prince she manufactures enemies so the prince may gain in glory by overcoming them.
So a shrewd prince should at times encourage some disaffection so she or he can demonstrative how effective they are in  resolving the problem.

Power- Get it Use it Keep it
–Machiavelli

பூமா ஈஸ்வரமூர்த்தியின் இந்தக் கவிதை மனதை லேசாய் அசைத்துப் பார்க்கிறது

செடியோடு
*************
செடியோடு
கிடக்கும் பூக்கள்
என்னதான் செய்துவிடப் போகிறது

கண்ணில் படுவதைத் தவிர

(பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்- உயிர்மை வெளியீடு, டிசம்பர் 2006)

ஒரு நகரத்தை சற்றுக் கிட்டச் சென்று தரிசித்தால் அது வேறு முகம் காட்டும். ஒப்பனையைத் தாண்டி என்னவெல்லாம் என்னவாக இருக்கிறது என்பது தெரியவருகையில் மனம் ஹா என்று விகசிக்கும். எந்த ஊராக இருந்தாலும் அங்கேயே பிறந்து வளர்ந்து பலகாலம் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அது அச்சமற்ற கருணையாகவே மனதில் தங்கிவிடும். அதுவே வந்து செல்கிறவர்களுக்கு நிச்சயம் வேறு தான்.அதுவும் எப்போதோ ஒரு முறை இரு முறை வருபவர்களுக்கும் எங்கோ கிளம்பி எதிலோ பிறழ்ந்து ஒரு நகரத்தினுள் தொலைபவர்களுக்கும் அது எப்போதும் சமமாவது இல்லை.

மதுரையின் இரயில்வே ஸ்டேஷன் எப்போதும் விழித்திருக்கும். பரந்த அதன் முன் முற்றத்தில் ஒரே இரவின் மாபெரிய வானத்தை அதன் இருளை தூறலை அல்லது குளிரை என பலவற்றையும் பகிர்ந்து கொள்வதற்காகவே அங்கே வந்து சேரும் சஞ்சாரிகள் அப்படியான போர்வையில் தங்களைக் கலந்து கொள்ளும் வீடற்றவர்கள் புதிய குற்றத்தின் குறுகுறுப்பும் வழியற்ற நிலைமையின் நிர்ப்பந்தமும் ஒருங்கே அதிர்ந்தபடி எப்போதும் பதற்றத்தில் இருக்கும் கோடு கடந்தவர்கள் மன சமாதானம் அற்றவர்கள் என வேறெங்கேயும் அத்தனை மொத்தமாய்க் காண வாய்க்காத பலரும் அங்கே இருப்பார்கள்.

இரயில்வே ஸ்டேஷனைச் சுற்றிலும் பல விடுதிகள் மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி முழுவதும் லாட்ஜூகள் ததும்பும். மனிதர்களின் மனோபாவம் விதவிதமாய்த் தோன்றுவது. இரயில் நிலையம் விமான நிலையம் ஆகியவற்றின் மிக மிக அருகே இருக்கும் விடுதிகளில் தங்குவது ஹோம் சிக் எனப்படுகிற வீட்டுத் தேட்டத்தின் இன்னொரு வகைதான். எப்போதும் வில்லிலிருந்து கிளம்பத் தயாராய் விறைத்துப் பூட்டிய நாணின் துடிப்பென அவர்களது மனம் அலைபாயும். அடிக்கடி செய்திகளை உற்றுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எதாவது நடக்கப் போகிறது என்கிற நிரந்தர அச்சத்தைத் தத்தமது எல்லா பிரயானங்களின் மீதும் தடவி இருப்பார்கள். அப்படி நடந்தே விட்டாலும் தான் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று அடிக்கடி நிழல் ஒத்திகையை மனத்திரையில் ஓடவிட்டபடி காத்திருப்பார்கள். எதுவுமே நடக்காத வேறொரு நாளில் மீண்டும் தங்கள் ஊருக்குச் சென்று மண்ணின் மைந்தனாக மாறிய பிறகே அமைதியுறுவார்கள்.

மதுரையின் இன்னொரு பெருமை எப்போதும் அணையாத அடுப்புடைய அதன் விருந்தோம்பல் குறித்த பிம்பம். அனேகமாக எல்லா ஊர்களைப் போலவும் மதுரையும் இரவின் பிற்பகுதியில் அடங்கி மீண்டும் அதிகாலையில் விழிக்கிறது என்பது ஒரு உண்மை அல்லது எல்லா ஊர்களுமே இப்போது ஒன்றுபோலத் தான் இருக்கின்றன என்பது அதன் இன்னொரு பகுதி. தூங்கா நகரம் என்பது முந்தைய பெருமிதம். எல்லா நகரங்களும் தூங்குவதில்லை என்பது இன்றைய காலத்தின் பிரச்சினை.லாட்ஜூகளில் தங்குவதற்குத் தேவை எல்லாருக்கும் ஏற்படுவதில்லை அல்லவா சிறிய தூரங்களிலிருந்து வந்து மீள்பவர்கள் தங்களது பேருந்து அல்லது இரயிலுக்கு இன்னும் எஞ்சி இருக்கக் கூடிய சொற்ப மணி நேரங்களை எங்கேயாவது பொழுதைக் கழித்துவிட்டுப் புறப்பட்டுப் போகலாம் என்று முடிவுசெய்வது இயல்பான நிகழ்வு. அப்படியானவர்களுக்கு சென்று மீள்வதற்கென்றே மதுரையில் பற்பல இடங்களிருப்பது அதன் செழிப்பு.

இரயில் நிலையத்திலிருந்து ஐந்தாறு விலாசங்களுக்குள் ரீகல் என்றொரு தியேட்டர். தற்போது அதன் பேர் தங்கரீகல். முன்பு வெறும் ரீகலாக இருந்தது.தற்போதைய 2000கிட்ஸூக்கு தங்கரீகல் மதுரையின் முதல் தர தியேட்டர். முன்பிருந்த ரீகலின் ஞாபக நெடி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ரீகல் தியேட்டர் என்றாலே பெரும்பாலும் அங்கே இங்கிலீசு படம் தான் ஓடும். அதுவும் பெருவாரி அடல்ட்ஸ் ஒன்லி படம் அல்லது சண்டைப்படம் பேய்ப்படம் என மாபெரும் பேனர் அந்த வழியில் நகர்பவர்கள் யாரும் அதன் சித்திரத் தூண்டிலிலிருந்து தப்பமுடியாது.தியேட்டர் வாசலில் பழைய புத்தகக் கடைகள் பிரசித்தம் கையேந்தி பவன்களும் பரபரப்புக் காட்டும். அத்தனை பஜாரில் அப்படி ஒரு தியேட்டர் உள்ளூர்க் காரர்களுக்கு மட்டுமல்ல இரயில் நிலையத்தில் சும்மா உட்கார்ந்து மோட்டுவளையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதை விட அப்படியே வந்து நுழைந்தால் மணக்க மணக்க இங்கிலீசுப் படம் பார்த்துவிட்டுச் சென்றால் பயணம் கமகமக்காதா என்ன..?

முதன் முதலில் INDECENT PROPOSAL என்கிற படத்தைப் பார்க்க ஏழெட்டுப் பேர் கும்பலாக சென்றோம். டிக்கட் தருவதே 2.20 மணிக்குத் தான் என்று சொல்லப்பட்டதில் தொடங்கியது ஆச்சரியம். அந்தப் படம் 2 மணி நேரம் ஓடியது என்றாலும் அத்தனை பெரிய ஸ்க்ரீனில் முதன் முதலில் இங்கிலீசுப் படம் என்பது என்னவோ வெளிநாட்டுப் பயணத்துக்காக விமானத்தில் அமர்ந்தாற் போல் ஜிவ்வென்று லேசாய்க் காதெல்லாம் சூடாக படம் போட்டதிலிருந்தே சின்னதொரு காய்ச்சல் நிகர் அனுபவமாகவே திகழ்ந்தது.எங்களோடு வந்திருந்த சுதாகரின் தாய்மாமா அவர் இன்னொரு நண்பரோடு அதே படத்துக்கு வந்துவிட இவன் இண்டர்வல்லுக்கு அப்புறம் லேசான ரீங்காரத்தோடு அழவே ஆரம்பித்து விட்டான். அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்க்கிறது ஆகப் பெரிய குற்றம் என்று கருதப்பட்ட 1993 ஆமாண்டு இதெல்லாம் நடந்தது.

ஆனாலும் ஆங்கிலப் படம் பார்ப்பது ஒரு தகுதியான செயலாகத் தான் எங்கள் பிராயத்தினர் மத்தியில் கருதப்பட்டது.எல்லோரும் சிரிக்கும் போது நாமும் சிரிக்க வேண்டும். கைதட்டினால் நாமும் தட்டலாம். பாட்டு என்கிற வஸ்து அறவே கிடையாது. சண்டை என்பது யார் வேண்டுமானாலும் இன்புறத் தக்க திறந்த வஸ்துவாகத் தான் தோன்றும்.மற்ற படிக்கு வசனம் என்பது தான் ஜல்லியான விஷயம். வெள்ளைக் காரன் பேசுவதை புரிந்தாற் போலவே தொடர்ந்து செல்வது எளிதல்ல. ஆனாலும் நாலைந்து படங்கள் பார்த்த பிறகு எனக்குப் புரியுதே உனக்குப் புரியலை என்று ஆளுக்கு ஒரு கதைத் திருப்பப் புரிதல் விளக்கம் எல்லாம் கொடுத்து உன்னை விட எனக்கு அறிவு அதிகம் எனக்கு இங்கிலீசு படம் புரிகிறது என்று காட்டிக் கொள்வதில் பெருமை அந்தஸ்து இத்யாதிகள் எல்லாம் கலந்திருந்தன.

கணேஷ் ரெயில்வே ஸ்கூலில் படித்தவன். ஆங்கிலம் சரளமாகப் பேசவே செய்வான். அவனிடம் சென்று ஆங்கிலப் படங்களின் வருகை அவற்றில் ஜேனேய்ர் எனப்படுகிற வகைமைகள் எந்தப் படம் சுமார்சூப்பர் என்றெல்லாம் பேசி என் அறிவை விருத்தி செய்துகொள்ளத் தொடங்கினேன். ஒரு இடத்தில் பெறுவதை இன்னொரு இடத்தில் பகிர்வது எளிதல்லவா..? அடுத்தவர் குரலில் பாடுவது போல் பாவனை செய்கிற டி.ஆர் ராமச்சந்திரன் போல மாறினேன். கணேஷிடம் சிலபல ஆங்கிலப் படங்களின் கதைகளை விலாவாரியாக அறிந்து கொண்டு என் ஸ்கூல் வட்டாரத்தில் அதை நானே புரிந்து கொண்டாற் போல் எடுத்து விடுவேன்.அந்தக் காலத்தில் கூகுள் செர்ச் எல்லாம் இல்லை என்பதைத் தாண்டி கணேஷ் என்னை ரீகல் தியேட்டர் வஸ்தாது ஆக்கினான்.ரீகல் தியேட்டர் வாசலில் ரிக்சா ஓட்டுகிறவர் கூட ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருகிற வசனத்தை சரளமாக ஒப்பிப்பார் என்று ஒரு கூற்று இருந்தது.நான் ஆகக் கூடாதா என்ன.?

மாப்பிள்ளை விநாயகர் மாணிக்க விநாயகர் காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களிலும் ஆங்கிலப் படம் மட்டும் ஓடும்.அங்கே சொல்லிக் கொள்ளும் படி ஒரு அனுபவசம்பவம் நடந்தது.நானும் செபஸ்டினும் வரிசையில் நின்றுகொண்டிருந்தோம், எங்களுக்கு முன்னால் ஒரே ஒருத்தர் நின்றுகொண்டிருந்தார். எங்களுக்கு அப்பால் ஆறேழு பேர் இருந்தார்கள். முன்னால் நின்றவர் மகா பருமன். இருண்ட டிக்கட் கவுண்ட்டர் உள்ளே நேரமாக நேரமாக காற்றோட்டம் இல்லாமல் புழுக்கமாக இருந்தது.செபஸ்டின் உலகத்தின் ஆகச்சிறந்த சுயநலவாதி.நாங்கள் பார்க்க வந்த படம் ரிலீசாகி அன்றைக்குத் தான் நாலாவது நாள். டிக்கட் கிடைக்க வேண்டுமே என்று சீக்கிரமே புகுந்தாயிற்று. ஆனாலும் கவுண்ட்டர் வாசம் சிறைவாசத்துக்கு ஒப்பானதல்லவா..?

இவன் முன்னால் நின்ற குண்டர் காதுகளில் விழுகிற தொனியில் நாங்கள் பார்க்கக் காத்திருந்த அந்தப் படத்தின் கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அதாவது நாங்களும் அன்று தான் பார்க்க இருக்கிறோம். ஆனாலும் ஏற்கனவே பார்த்து விட்டாற் போல் கித்தாய்ப்பாக வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே அறுவெறுப்பாகவும் ஆத்திரமாகவும் வரும் அளவுக்கு பேய் பிசாசு கொலை ரத்தம் என என்னென்னவோ அளந்தான். கொஞ்ச நேரத்திலேயே மிஸ்டர் பருமருக்கு ஒவ்வாமையின் உச்ச தரிசனம் கிட்டிற்று போலும் அய்யய்யோ கேவலமான படத்துக்கு வந்து மாட்டிக்கிட்டம் போல இருக்கு என்று வாய்விட்டு சொன்னபடியே எங்களிடம் வழி விடுமாறு கேட்டுக் கொண்டு கிளம்பிச் சென்றே விட்டார். இவன் முதலிடம் பெற்ற முத்துராஜாகவே தன்னைப் புகழ்ந்து கொண்டான்.

அப்படி அவரை விரட்டிய அந்தப் படம் THE MASK வினோதமான ஜிம் கேரியின் போஸ்டர்கள் தந்திருந்த குழப்பத்தின் பலனைத் தனக்கு சாதகமாக்கி செபஸ்டின் சொன்ன அந்தக் கதையைக் கேட்டு விட்டு கிளம்பிச் சென்ற அந்த மனிதரிடம் படம் முடிந்து திரும்பும் போது மனசுக்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டென். செபாஸ்டின் சொன்ன கதை அத்தனை கொடூரமாயிருந்தது.மன்னன் படத்தில் சங்கிலிக்கும் மோதிரத்துக்கும் ஆசைப்பட்டு எல்லார் தலையிலும் ஏறி கண்ணாடி உடைந்து சட்டை பட்டனெல்லாம் அறுந்து போட்டியில் ஜெயிப்பார்களே ரஜினி கவுண்டமணி இருவரும். அந்தக் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு செபாஸ்டின் நினைவுக்கு வருவான். கிளம்பிச் சென்ற அந்த மனிதரும்.

தொடரலாம்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
  2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
  3. அன்பென்ற பொருளாதல்
  4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
  5. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
  6. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
  7. சினிமா பித்து- ஆத்மார்த்தி
  8. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
  9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
  10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
  11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி