மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

கிளின் பார்லோ

மதராஸ் – மண்ணும் , கதைகளும் -4   

பிரிட்டிஷ் ஆட்சியில் எண்ணூர் ஒரு முக்கியமான சந்திப்பாக இருந்துள்ளது. மதராஸ் வடக்கிலிருந்து வரும்  நெல், தானியங்கள், விறகு, வரட்டி, கருவாடு போன்ற பொருட்களை பழவேற்காட்டில் உள்ள புலிக்காட்டு ஏரி வழியாக எண்ணூருக்கு கொண்டுவந்து அங்கிருந்து மாட்டுவண்டிகள், குதிரைவண்டிகள் மூலமாக மதராஸ்க்குள்  எடுத்துச் சென்றுள்ளார்கள். அதுபோல தெற்கே மரக்காணத்திலிருந்து காய்கறிகள் மற்றும் வைக்கோல் எடுத்துவந்து வடக்கே சென்றுள்ளார்கள். ஐஸ்ஹவுஸிலிருந்து ஐஸ்கட்டிகளை படகுகள் மூலமாக அடையாற்றின் கரையோரமாக இருக்கும் வெள்ளையர்களின் வீடுகளுக்கு எடுத்துச்சென்றுள்ளார்கள். அப்போது மதராஸின் இரண்டு பெரிய ஆறுகள் அடையாறு மற்றும் கூவம். இதில் கூவம் வடக்கிலும்அடையாறு தெற்கிலும் கடலை நோக்கி ஓடும் ஆறுகள்.  1782இல் ஸ்டீபன் பாப் ஹாம் என்பவர், இரண்டு ஆறுகளையும் இணைத்தால் வணிகப்பொருட்களை  படகில் எளிதில் குறைந்த செலவில் எடுத்துச்செல்ல முடியும் என நினைத்து அரசுக்கு கடிதம் எழுதினார். அரசு அதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

1800ம் ஆண்டு, உப்பு வியாபாரம் செய்த ஆங்கிலேய வணிகர்கள் சிலர் இந்த கால்வாய் முக்கியத்துவம் குறித்து, அப்போதைய கவர்னர், ராபட் கிளைவிடம் தெரிவித்தனர். 1801ம் ஆண்டு சிறியளவில் ஒரு  சர்வே எடுக்கப்பட்டு கால்வாய் அமைக்க முடிவானது. 1801ம் ஆண்டு டிசம்பர், 1ம் தேதி, பக்கிங்ஹாம் கால்வாய் வெட்ட ஒப்பந்தம் விடப்பட்டது. 1802ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் திறக்கப்பட்டு, ஹெப்க் என்பவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது.  1803ம் ஆண்டில், ‘பேசில் கோக்ரேன்என்ற ஒரு வணிகரால், முன்னர் எழுமூர் நதி ஒடிய வழியில் ஓர் உப்புநீர் வழித்தடம், 11 மைல் துாரத்திற்கு அமைக்கப்பட்டது. பேசில் கோக்ரன் ஸ்காட்லாண்டு வணிகர். காளிகாட்டிலும் ,மெட்ராசிலும் அவருக்கு சொந்தமாக சில மாவு மில்களும், கேக் தயாரிக்கும் பேக்கரிகளும்  இருந்தன. தவிர பிரிட்டிஷ் கடற்படைக்கு பொருட்கள் அனுப்பும் ஒப்பந்த வேலைகளையும் எடுத்திருந்தார். ஒரு கால்வாய் இருந்தால் குறைந்த செலவில் சிறுசிறு படகுகள் மூலம் பொருட்களை எளிதாக எடுத்துச்செல்லலாம் என்று தோன்றியுள்ளது. அவரது பொருளுதவியால்  சிறியளவில் வெட்டப்பட்ட கால்வாய் பின்னர் வந்தவர்களால் விரிவாக்கப்பட்டுக்கொண்டே போனது. 

1837ல் பழவேற்காடு ஏரி வரை, 25 மைல் துாரத்திற்கு இருந்த கால்வாய் சரக்கு படகுகளின் எண்ணிக்கை காரணமாக தேவை கருதி 1857ம் ஆண்டில், அங்கிருந்து வடக்கில் இருந்த துர்க்கராயபட்டினம் வரை, 69 மைல் துாரத்திற்கு வெட்டப்பட்டது. ‘கோக்ரேன் கால்வாய்என்ற பெயர் நீக்கப்பட்டு, கிழக்குக் கடற்கரைக் கால்வாய் என்றழைக்கப்பட்டது. 1876ம் ஆண்டு கிருஷ்ணபட்டினம் வரை வெட்டப்பட்டது

1876ல் மதராஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின் கொடுமை தாங்கமுடியாமல் மக்கள் மதராஸ் என்ற நகரத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். அதில் பலர் கால்நடையாக நடந்தே வரும்போது வழியிலேயே பஞ்சத்திலும், கொள்ளைநோயிலும் செத்துமடிந்தார்கள். சிலர் ஆங்காங்கு வழியில் இருந்த ஊர்களில் தங்கி பிழைப்பை தொடங்கினார்கள். எஞ்சியவர்களை மதராஸ்  என்ற நகரம் வரவேற்றது. அப்போது பக்கிங்ஹாம் என்ற பிரிட்டிஷ் கவர்னர் அந்த மக்களை பயன்படுத்தி கூவம் முதல் அடையாறு வரை முழுமையான கால்வாய் அமைக்க நினைத்தார். அவர்களுக்கு உணவு அளித்து கால்வாய் கட்டும் பணியில் அமைத்தார். ஆங்காங்கு கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. பஞ்சத்தில் செத்துக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த கால்வாய் சோறுபோட்டுள்ளது. 1877ல் கூவம் முதல், அடையாறு வரை 8 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கி 1878ல் பணிகள் முடிவடைந்தன. பிறகு அந்த கால்வாய்க்கு பக்கிங்ஹாம் பெயரையே சூட்டினார்கள். இந்த கால்வாய் பற்றி 1898ம் ஆண்டு ஏ.எஸ்.ரஸ்ஸல் என்ற பிரிட்டிஷ் பொறியியலார் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். புத்தகத்தின் பெயர்  History of the Buckingham Canal Project.

பக்கிங்ஹாம் கால்வாய் நீளம் என்று பார்த்தால் அது இன்றைய ஆந்திராவின்  காக்கிநாடா துவங்கி, தமிழ்நாட்டிலுள்ள  மரக்காணம் வரை நீண்டு இருந்துள்ளது. கிட்டத்தட்ட ஐநூறு மைல். எண்ணூறு கிலோமீட்டர். இந்தியாவிலேயே மிகவும் நீளமான உப்புநீர்க் கால்வாய் இதுதான். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த கால்வாய் இதன் வழியில் இருந்த எண்ணற்ற கடலோர ஊர்களை இணைத்துள்ளது. அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் பொருட்கள் பரிமாற்றம், கலாச்சார பரிமாற்றம் ஏற்பட காரணமாக இருந்துள்ளது

பிரிட்டிஷ் காலத்தில் பரபரப்பாக இயங்கிய பின்னிமில்லையும் இந்த கால்வாய் இணைந்திருக்கிறது. கப்பலிலிருந்து வரும் இங்கிலாந்து பருத்தியை படகுகள் மூலம் மில்லுக்குள் கொண்டுவந்து இறக்கிவிட்டு இங்குதயாரிக்கும் துணிமூட்டைகளை ஏற்றிச்சென்றுள்ளார்கள். புலிக்காடு ஸ்ரீஹரிகோட்டா காடுகளில் இருந்து விறகு மற்றும் அடுப்புகரிகள்  படகுகள் மூலம்  கொண்டு வரப்பட்டன. மெட்றாஸ் மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய இந்த கால்வாய் போக்குவரத்துதான் காரணமாக இருந்துள்ளது. சரக்குப்பொருட்களுக்கு மட்டுமில்லாமல் பயணிகள் செல்லும் வழித்தடமாகவும் இந்த கால்வாய் இருந்துள்ளது.   இந்த கால்வாய் எந்தளவு பரபரப்பாக இருந்துள்ளது என்பதை இந்த தகவல் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 1890ல் பிரிட்டிஷ்  அரசு ‘பெரிஸ்’ சட்டம் கொண்டுவந்தார்கள். நாளொன்றுக்கு கால்வாயில் ஆயிரக்கணக்கான படகுகள் வடக்கும் தெற்குமாக பயணித்ததால் கடும் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது. படகு போக்குவரத்தை நெறிப்படுத்த படகின் நடுவில் வெள்ளை நிற விளக்கு வைக்க வேண்டும். படகின் இடது புறம் சிவப்பு நிற விளக்கும், வலது புறம் பச்சை நிற விளக்கும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இப்போதிருக்கும் நவீன வாகன இண்டிகேட்டர்கள்போல.  படகு போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் வசூல் செய்துள்ளார்கள். நூற்றுக்கணக்கான சிறுசிறு மிதவைப்படகுகளில் ஏறி மக்கள் நகரத்தின் உள்ளே வளைந்தோடிய இரண்டு நதிகளிலும் அதை இணைக்கும் கால்வாயிலும் பயணித்துள்ளார்கள்.  

சுதந்திரத்துக்கு பிறகு சிலகாலங்கள் வரைகூட இந்த படகுப்பயணம் உயிர்ப்போடு இருந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் ஆயிரக்கணக்கான மக்கள் , இரண்டு லட்சம் டன் சரக்குகளுடன் போக்குவரத்து நடந்ததாக அரசு பதிவேட்டில் உள்ளது.  ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டபின்னர் கொஞ்ச கொஞ்சமாக போக்குவரத்து குறைந்து கால்வாய் முற்றிலும் கைவிடப்பட்டது. மாநகரம் விரிவடைய, விரிவடைய ஆறுகள் சுருக்கப்பட்டு, கால்வாய்கள் மண்மேடாகி வேறு போக்குவரத்து வழிகள் வளர்ந்து இந்த கால்வாய் கொஞ்சகொஞ்சமாக அழிந்துள்ளது.         இந்த படகுப்பயணம் பற்றி பெரும்பாலானோர் தங்கள் எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். கவிஞர் பாரதிதாசன் 1934ல் அவரது நண்பர்களுடன் மயிலாப்பூரில் இருந்து மாமல்லபுரத்திற்கு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக படகில் பயணம் செய்த அனுபவத்தை ‘ஓடப்பாட்டு’ என்ற கவிதையில் ரசனையாக குறிப்பிட்டிருப்பார். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த காலத்தில் பாரதிதாசன் பயணித்த காட்சியை நினைத்துப்பார்க்கும்போது  ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் தெரியக்கூடும். கடல்வழியாக செல்லாமல் ஊருக்கு நடுவே ஒரு நதியில் படகில் அமர்ந்தபடி இருபுறமும் இருக்கும் கட்டிடங்களை, மனிதர்களை பார்த்தபடி பயணிப்பதுதான் எவ்வளவு சுகமானது. வெனிஸ்நகரம்போல மதராஸ் இருந்துள்ளது என்று சொன்னால் சற்று மிகையாக தெரியும். ஆனால் அன்றைய நிலவமைப்பையும், நகரின் வரைபடத்தையும், மக்கள்தொகையையும் மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் அதில் பெரிய ஆச்சர்யம் இருக்காது.   

இக்கால்வாய் கட்டும்போது ஆங்கிலேயர்கள் ஒரு சிறந்த தொழில்நுட்ப உத்தியை பயன்படுத்தியுள்ளார்கள். லாக் கேட்  என்னும்  மரத்தாலான பெரிய தானியங்கிக் கதவுகளை இங்கு வைத்துள்ளார்கள். கடலலைகள் உயர்ந்து கடல்நீர் கால்வாய்க்குள் புகும்போது கதவுகள் தானாக திறந்து நீரை கால்வாய்க்குள் விடும். அலை  குறையும்போது கால்வாயின் அதிக நீர்மட்ட அழுத்தத்தால் தானாக மூடிக்கொள்ளும். இதன்மூலம் கால்வாயின் நீர்மட்டம் நிலையாக இருக்கும். அதாவது கிட்டத்தட்ட இயற்கையாக கடலுக்கு பின்னால் இருக்கும் பிச்சாவரம்,முட்டுக்காடு, ஆலப்புழா போன்ற  உப்பங்கழி (Backwater)  அமைப்பை செயற்கையாக வடிவமைத்துள்ளார்கள்கால்வாயில்  லாக் கேட் இருந்த பகுதிகள் எல்லாம் லாக் தெரு (Lock Street) என்று அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் கோட்டூர்புரத்தில் அப்படியொரு  தெருவை பார்க்கலாம். ஜப்பானில் நவீன யுகத்தில் இதுபோன்ற கதவமைப்பை சுனாமியை தடுக்க பயன்படுத்துகிறார்கள்.  

சென்னை கடலோர நகரம் என்பதால் சென்னைக்கு வரும் பேரிடர்கள் பெரும்பாலும் நீர்வழியாகவே இருக்கும். கடலிலிருந்து சுனாமி வந்து தாக்கும் அல்லது சூறாவளி பெருமழை நகரத்தை முழ்க வைக்கும். கடந்த காலங்களைப் பார்த்தால் அதை நன்றாகவே உணரமுடியும். 2004- ஆம் வருடம் சென்னையில் சுனாமி வந்தபோது ஆழிப்பேரலைகள்  ஊருக்குள் வராமல் தடுக்கும் ஓர் அரணாகவும் பக்கிங்ஹாம் கால்வாய் இருந்துள்ளது. கால்வாய் இல்லாமல் போயிருந்தால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்திருக்கும். அதுபோல சென்னையில் ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான ஏரி,குளங்கள் இருந்தன. அவை எல்லாம் இன்று மறைந்துவிட்டன. அதனால் பெருமழையொன்று வரும்போது மழைநீரை தேக்கிவைக்கும் ஆற்றலை மாநகரம் இழந்துவிட்டது.   2015-ல் சென்னையில் பெருமழையால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளத்தில் எண்ணற்ற பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது ஆற்றோரக்கரைகளில் நடந்த ஆக்கிரமிப்பு. ஆற்றை தூர்வாராமல் அலட்சியமாக இருந்தது குறிப்பாக பக்கிங்ஹாம் கால்வாய் அழிந்தது. பக்கிங்ஹாம் கால்வாய் அழிய காரணம் தொழிற்சாலைக்கழிவுகளை ஆற்றில்விட்டது. லாக்கேட்டுகளை பராமரிக்க ஆன செலவு, 1965 – 66ம் ஆண்டுகளில் வீசிய பெரும் புயலில் கால்வாய் முழுக்க குப்பைகள் சேர்ந்து மாசுகேடானது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  இந்த கால்வாய் இருந்திருந்தால் அடையாற்று வெள்ளத்தை உள்வாங்கி கூவத்துக்கு அனுப்பி சேதத்தை குறைத்திருக்கும்.

வரலாற்றையும், இந்தக் கால்வாய் உருவான கதையையும் பார்க்கும்போது பிரிட்டிஷ்காரர்கள் வெறுமனே சரக்குப்போக்குவரத்தை மட்டும் வைத்து இந்தக் கால்வாயை கட்டினார்கள் என்று நாம் சொல்லிவிடமுடியாது. மதராஸின் நிலவமைப்பை, மழைக்காலங்களில் நீர் பெருக்கெடுத்தோடும் ஆறுகளை, கடலலைகளைகளின் போக்கையும் நன்றாகப் புரிந்துவைத்து ஒருவித தீர்க்கதரிசனப் பார்வையோடுதான் நகரைப் பாதுகாப்பாகக் கட்டியுள்ளார்கள் என்று உறுதியாக சொல்லமுடியும். காலப்போக்கில் அழிந்துப்போன கால்வாய்களின் மீது இன்று பெரிய பெரிய வணிகவளாகங்கள் வீற்றுள்ளன. பல இடங்களில் கால்வாய் சுருக்கப்பட்டுச் சாக்கடையாக ஓடுகிறது. நூற்றாண்டுகள் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கால்வாய் இன்று தனது பெருமைகளை இழந்து ஒரு நோயுற்ற முதிய யானைபோல விழுந்துகிடக்கிறது.                  

(கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்)

முந்தைய தொடர்கள்:

3.தேசத்தை அளந்த கால்களின் கதை – https://bit.ly/2IZXNBK
2.ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை – https://bit.ly/3db1vWN
1.தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் – https://bit.ly/2J0okyC

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
  2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
  3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
  4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
  5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
  6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
  7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
  8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
  9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
  10. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
  11. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
  12. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
  13. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
  14. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
  15. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
  16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
  17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
  18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்