கரையாத நிழல்கள் – 3

“உடல் தானம் பண்ணலாம்னு இருக்கேன்” என ராமநாதன் சொன்னது அவர்களுக்குத் தெளிவானதாகவே கேட்டது. ஆனால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் இரைச்சலில் அப்படித்தான் அவர் சொன்னாரா என்பது நிச்சயமாக யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் ஒரு கடும் அமைதி அவர்கள் அனைவருக்கும் வந்திருந்தது. தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளையும் சத்தம் வராமல் கொஞ்சம் நெருக்கமாய் போட்டு அமர்ந்தார்கள். ராமநாதனின் கடைசி மகன்தான் அமைதியை கலைத்துக்கொண்டு கேட்டான்

“வாட் டாட், வாட் யூ செட்?”

“அதாம்பா பாடி டொனேஷன்னு இருக்காமே, நம்ம இறந்ததுக்குப் பிறகு நமது உடலதானமா கொடுத்துட்டா அத டாக்டருக்கு படிக்கிற மாணவர்களுக்கு உபயோகமா இருக்குமாமே, அதுபோல நானும் என்னோட உடல தானமா கொடுத்தர்லாம்னு இருக்கேன்” என்றார். சொல்லிவிட்டு தனது மகன்களின் முகவோட்டத்தை கவனித்தார்.

மடியில் அமர்ந்த சிறுபிள்ளைகளையெல்லாம் கீழே இறக்கிவிட்டுவிட்டு எல்லோரும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். யாருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. யார் முதலில் இதற்கு எதிர்வினை செய்வதென்றும் தெரியவில்லை. ராமநாதனின் மகள் மணிமேகலை மட்டும் எழுந்து கொண்டு கொஞ்சமாய் தள்ளி நின்று தனது அண்ணண்களைக் கவனித்தாள்.

எப்போதும்போல இளையவனே அந்த அமைதியை கலைத்து “வாவ். ஃபெண்டாஸ்டிக் டாட், அய் ஃபீல் பிரவுட் ஆஃப் யூ” என சொல்லிவிட்டு அவரை வந்து இறுக்கமாய் கட்டிக்கொண்டான். மீதியுள்ள இரண்டு மகன்களும்கூட வேறு எதுவும் யோசிப்பது நல்லதில்லை என முடிவு செய்துகொண்டு இளையவனுடன் இணைந்து கொண்டு “என்னப்பா சொல்ற? யூ, ஆர் ரியலி க்ரேட்ப்பா” என்றார்கள். மூவரும் சேர்ந்து ராமநாதனுக்கு கைகொடுத்துவிட்டு வந்து தங்களது இருக்கைகளில் அமர்ந்தார்கள். தள்ளி நின்று நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மணிமேகலை அப்பாவின் முகத்தைப் பார்த்தாள் அதில் தெரிந்த துளி ஏமாற்றதையும்கூட அவர் மிகுந்த சிரத்தையோட மறைக்க முயல்வது தெரிந்தது.

“எப்போ… இந்த முடிவ எடுத்தப்பா? என்னால நம்ப முடியல, யூ.எஸ்.ல எல்லாம் பாடி டொனேஷன் ரொம்ப அபூர்வம்” என்றான் நடுவன்

“தே ஆர் மோர் கன்சர்வேட்டிவ்”

“அப்பா மட்டும் என்னவாம், பக்தி பழம் இல்லையா? சடங்கு, சம்பிரதாயம் இதிலெல்லாம் அப்பாவ அடிச்சிக்க முடியுமா? அப்படி ஒரு ஆள் இந்த முடிவ எடுத்தருக்கிறதுதான் ஆச்சர்யமா இருக்கு” என்றான் மூத்தவன்.

“அப்பா, ரியலி ஆர் யூ சீரியஸ்?, காண்ட் பிலிவ் இட்ப்பா”

“நம்மூர்ல இதோட மதிப்பு தெரிஞ்சிருப்பாங்களானு தெரியல, நம்ம கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்குப் பதிலா ஏதாவது ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்க்கு டொனேட் பண்ணுவோம், அங்க கொஞ்சம் டிக்னிஃபைடா பார்த்துப்பாங்கனு நினைக்கிறேன்” என அதன்பிறகு அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள தொடங்க, ராமநாதன் அங்கேயிருந்து மெதுவாக எழுந்து சென்றார். அப்போது தான் மணிமேகலை அங்கேயிருந்து அனைத்தையும் கவனித்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளைப் பார்த்தவுடன் சட்டென உடம்பை இலகுவாக்கிக்கொண்டு “என்னம்மா தனியா நின்னுட்டு இருக்க?” என்றார்

அவள் அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு “என்னப்பா ஆச்சி உங்களுக்கு?” என்றாள்.

“ஒண்ணும் இல்லமா, மண்ணுக்கு போற வுடம்புதானே, படிக்கிற பிள்ளைகளுக்காவது உபயோகமா இருக்குமேண்ட்டுதான் நீ ஏம்மா கவல படற அதுக்காக நாளைக்கே நான் என்ன செத்தா போக போறேன்?”

“இல்லப்பா, நீங்க எதையோ மறைக்கிறீங்க, நீங்க இப்படிலாம் பண்ண கூடியவர் இல்லப்பா, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகுகாலம், பஞ்சாங்கம்னு பாத்து பாத்து எல்லாத்தையும் செய்யக்கூடியவர்ப்பா நீங்க, நீங்க இந்த முடிவ எடுத்ததுதான் ஆச்சர்யமா இருக்கு. அம்மா இறந்ததுக்கு அப்புறம் நீ ஏதோ மாறிட்டு வரதா எனக்கு நிறைய நாளா தோணிட்டு வருது, ஒருவேளை என்கூட இருக்கறத கவுரவ கொறச்சலா நினைக்கிறீயானு தெரில, இத பல முறை உங்ககிட்டயே கேட்டுருக்கேன், அப்பல்லாம் இல்ல இல்லனு சொல்லிட்டு இப்ப ஏம்பா இப்படி ஒரு முடிவ எடுத்த?”

“ஏம்மா உனக்கு இந்த முடிவுல விருப்பம் இல்லையா?”

“உடல்தானம் கொடுக்கிறதுல எனக்குப் பிரச்சின இல்லப்பா, அதுக்குப் பின்னாடி என்ன காரணம் இருக்குனுதான் வருத்தமா இருக்கு” என சொல்லும்போது அவளது கண்கள் கலங்கியது. அவரின் அருகே வந்து அவரது கரங்களை இறுக்கமாய் பற்றிக்கொண்டு, அவரின் கண்களை பார்த்து கேட்டாள்

“அப்பா உண்மைய சொல்லு நீ நிஜமா சந்தோசமாதான் இருக்கியா?”

ராமநாதன் அவளை நிதானமாக பார்த்தார், அவளது கரங்களை மெதுவாக விடுவித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார், மணிமேகலை அவர் முகத்தையே பார்த்தாள் அது சலனங்களற்று இருந்தது. அவர் எதுவும் சொல்லமாட்டார் என அவளுக்குத் தெரியும். தான் தெரிந்துகொண்ட பின் அதையே ஏன் அவரும் ஒருமுறை சொல்ல வேண்டும் என தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

அம்மா இறந்த பிறகு கடந்த இரண்டு வருடங்களாக ராமநாதன் அவளுடன்தான் இருக்கிறார். அதற்கு முன்பு வரை அம்மாவும், அவரும் தனியாக இருந்தார்கள். மூன்று மகன்களும் அமெரிக்காவிலே நிரந்தர குடியுரிமையைப் பெற்றுவிட்டார்கள், இங்கே வருவதும் கிடையாது. எப்போதாவது சில வீடியோ கால் அதில்கூட ராமனாதன் அவ்வளவாகப் பேச மாட்டார். இன்று ராமநாதன் இப்படி ஒரு முடிவிற்கு வந்ததற்கு பின்னால் உள்ள காரணத்தை மணிமேகலையால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

வேறு ஏதோ ஒரு பிரச்சினைக்காக மணிமேகலை என்னைப் பார்க்க வந்தபோது அவளது அப்பாவைப் பற்றிச் சொன்னாள். வேறு எதற்காகவும் அல்ல, சொல்வது அவளுக்குச் சற்று ஆசுவாசம் கிடைக்கும் என நினைத்து சொன்னாள் “அப்பா சிறு வயதில் இருந்தே ஒரு நேர்க்கோட்டைக் கிழித்து அதில் துளியும் பிசகாமல் வாழ்ந்து வந்தவர். இந்த வாழ்க்கையில் அவருக்கென்று சில ஒழுங்குகள் இருந்தன, சில நம்பிக்கைகள் இருந்தன. அதை மீறி அதிலிருந்து விலகி அவர் வாழ்வது என்பது அவருக்கு அத்தனை சுலபமானதல்ல. அந்த வகையில் அப்பா கறாரான மனிதர். ஒவ்வொரு நாள் துவங்குவதில் இருந்து முடியும் வரை என்னென்ன செய்ய வேண்டும் என அப்பாவிடம் தெளிவான அட்டவணை இருக்கும். ஆனால் அம்மா இறந்தபிறகு அவர் தனியாக இருப்பது நல்லதல்ல என்று நான்தான் அழைத்து வந்தேன். அதற்குப்பிறகு அவரால் பழையபடி இருக்க முடியவில்லை, அவரது இயல்புகள், வழக்கங்கள் எல்லாம் மாறிப்போய் எனக்காகவும் எனது பிள்ளைகளின் தினசரிகளுக்காகவும் ஏற்றதுபோல அவரது இயல்பு மாறிவிட்டது, அதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாகச் சொன்னபோதுதான் எனக்கு அந்த உண்மையில் அவர் சந்தோசமாகதான் இருக்கிறாரா என்ற சந்தேகம் வந்திருக்கிறது” என்றாள்

ராமநாதனை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இது அவருடைய பிரச்சினை மட்டுமல்ல இன்றைய காலத்தில் நிறைய ராமநாதன்களை நம்மால் பார்க்க முடியும். முதுமையும் அது சார்ந்த இழப்புகளும் ராமநாதன்களின் மனதில் ஒரு ஆழ்ந்த காயங்களாய் உலர்ந்து கிடக்கின்றன. அவர்களது சுயங்களை, விருப்பங்களை விட்டுத்தரக்கூடிய நிலையில் அவர்களை எப்போதும் நாம் நிறுத்தியிருக்கிறோம். சமய, சம்பிராதய மரபுகளில் தீவிர நம்பிக்கையுடைய ஒருவர் தனது உடலை தானம் செய்யும் நிலைக்கு செல்வதை அத்தனை சாதாரணமானதாக நாம் கடந்துவிட முடியாது. அதை தனது மகன்களுக்கு கொடுக்கும் தண்டனையாகவே நான் அனுமானிக்கிறேன். தனது மரணத்திற்கான ஈமக்கிரியை செய்யக்கூடிய உரிமையை தனது மகன்களுக்கு மறுப்பது அவரை பொறுத்தவரையில், அவரது நிலையில் தனது மகன்களுக்குக் கொடுக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையாக கருதுவார். அவரால் அப்படி செய்து மட்டுமே தன்னைத் திருப்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அது தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பதைகூட உணராத ஒரு தலைமுறையைதான் ராமநாதன்கள் இங்கு பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் இவை அத்தனையிலும் துரதிஷ்டவசமானது.

முந்தைய தொடர்கள்:

2.அந்தியின் இருளில் நடப்பவர்கள்- https://bit.ly/3952h4q
1.மனித விசித்திரங்களினூடே ஒரு பயணம் – https://bit.ly/3952418

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. உள்ளதை உள்ளபடி ஏற்க முடியுமா? - சிவபாலன் இளங்கோவன்
  2. ‘ஒற்றை சொல்’: உறவுகள் முறியும் தருணம் - சிவபாலன் இளங்கோவன்
  3. அந்தியின் இருளில் நடப்பவர்கள்- டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
  4. மனித விசித்திரங்களினூடே ஒரு பயணம் - சிவபாலன் இளங்கோவன்