மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

– கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்

மதராஸ் – மண்ணும் , கதைகளும் -14

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடையாறு மட்டும் அன்றைய மெட்ராஸின் மற்றப்பகுதிகள்போல இல்லாமல் தனித்த அடையாளத்தை கொண்டிருந்தது.காரணம் அங்கிருந்த பிரம்மஞான சபை என்ற அமைப்பு. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட  இந்த அமைப்பிலிருந்து சிலர் பிரிந்துவந்து அடையாறில் இன்னோரு அமைப்பை ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ஹென்றி ஸ்டீல் ஆல்காட். பிரம்மஞான சபையை தாண்டி  தலித்  இயக்க முன்னோடிகளில் ஒருவராகவும் வரலாற்றில் இடம்பிடித்தவர்.

ஆல்காட் அமெரிக்க இராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர். பத்திரிகையாளர், வழக்கறிஞர் என்று பல்வேறு முகங்கள் அவருக்குண்டு. 1865-ல் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டபோது அந்தக் கொலைவழக்கின்  புலன்விசாரணைகளில்  பங்கேற்றவர் ஆல்காட். ஒருக்கட்டத்தில் ஆல்காட்டுக்கு கிழக்கில் உள்ள ஆன்மீக சிந்தனைகள்மேல் நாட்டம் வந்தது. மரணத்துக்குப்பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளது. மனிதவாழ்க்கை மரணத்தோடு முடிவடைதில்லை. உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவுக்கு இல்லை. உடல் அழிந்தாலும் உயிர் இந்த பிரபஞ்சத்தில்தான் அலையும்.      ஆவியாகவோ, மறுபிறப்பாகவோ மாறும். அண்டமும், பிண்டமும் வேறில்லை போன்ற மறுஜென்மம் குறித்த சிந்தனைகள் அவரை தீவிரமாக ஈர்க்கிறது . இடையில் பெளத்தம்பற்றி  கேள்விப்பட்டு அதையும் தெரிந்துக்கொள்கிறார். பெளத்தம் தவிர சூபியிசம் பற்றி தெரிந்துக்கொள்கிறார். கிழக்கின் ஆன்மீக சிந்தனைகளைத் தேடி தேடி படித்துக்கொண்டிருந்தவர் ஒருக்கட்டத்தில் நேரிலேயே கிளம்பி இந்தியாவுக்கு வந்துவிட்டார்.

மெட்ராஸ் வந்தபிறகு பிரம்மஞான சபையை நிறுவுகிறார். கூடவே வழக்கறிஞர் பணிகளையும் செய்கிறார்.  அதைத்தாண்டி ஆவிகள்பற்றிய அவரது தேடலும் தொடர்கிறது. ஆனால் ஆல்காட்டின் இந்த தேடல்கள் எல்லாமே அவரது ஆன்மீக ஆராய்ச்சி என்ற குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே நின்றுப்போயிருந்தது.

இந்த ஆன்மீகஆராய்ச்சிகளும் உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் துளியளவுகூட தொடர்பில்லாமல் இருந்தது. இதைப்பற்றி அசோகமித்திரன் ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்ற நூலில் அந்நாட்களில் மக்கள் அடையாற்றை எப்படி பார்த்தார்கள் என்று துல்லியமாகச் சொல்லியுள்ளார். அடையாற்றின்  தெற்கே  பிரம்மஞான சபை தவிர மற்ற எல்லாமே பெரும் செல்வந்தர்களின் வசிப்பிடமாக இருந்துள்ளது. சபையில் வெள்ளை ஆடை அணிந்த உயர்குடி இந்தியர்களும் சில வெள்ளைக்காரர்களும் வசித்துள்ளார்கள்.  அடையாற்றின் வடக்கே உழைக்கும் மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் அடிப்பட்டு இறந்துக்கொண்டிருந்தார்கள். குறைந்த ஊதியம் பெற்று சுகாதாரமற்ற சூழலில் அவர்கள் வசித்தார்கள். அவர்கள் இவர்களை வெள்ளைச்சாமியார்கள் என்று அழைப்பார்களாம். பாவம். கைநிறைய காசிருக்கு. மனநிம்மதியில்லாமல் வெளிநாட்டிலிருந்து வந்து இங்குள்ள இமயமலை சாமியார்களை சந்தித்து இப்படி இவங்களும் சாமியாரா அலையுறாங்களே என்றுதான் நினைத்திருப்பார்கள். இப்படித்தான் உழைக்கும் வடசென்னை மக்களுக்கும், அடையாறுக்கும் தொடர்பு இருந்தது. ஆனால் இதெல்லாம் மாறியது எப்போதென்றால் ஆல்காட் புத்தமதம் பற்றிய தீவிரமான தேடலில் இறங்கியபிறகுதான். அது மெல்ல மெல்ல அவரை அடையாறு உயர்குடி மக்களிலிருந்து இழுத்து தலித்மக்களை நோக்கி நகர்த்தியது. சமூகப்பணிகள்பக்கம் ஆல்காட்டின் கவனம் திரும்பியது. இதுதான் வரலாற்றின் பக்கங்களில் ஆல்காட்டின் பெயர் இடம்பெற வைத்தது. இந்தப்பக்கம் திரும்பியிருக்காவிட்டால் ஆல்காட்டை வரலாறு பத்தோடு பதினோராவது சாமியாராக பதிவுசெய்திருக்கும்.

ஆல்காட்டின் பெளத்த ஈடுபாட்டால்  அவருக்கு அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், லட்சுமிநரசு போன்றோரின் நட்புகள் கிடைத்தன. ஆல்காட்டின் பெளத்த ஈடுபாட்டால்  அவருக்கு அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், லட்சுமிநரசு போன்றோரின் நட்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் ஆல்காட் பெளத்தமதத்துக்கு  மாறியது  அயோத்திதாசரை மிகவும் அலைக்கழித்தது. தமிழகத்தில் உள்ள பறையர்கள் அனைவரும் ஆதியில் பௌத்தமதத்தினர்  என்பதிலும் , பின்னாட்களில் ஆரியர்கள் அவர்களது நிலங்களையும், கோவில்களையும் கைப்பற்றினார்கள் என்பதிலும் ஆல்காட்டுக்கும், அயோத்திதாசருக்கும் ஒரே கருத்துதான் இருந்தது. அதுவே ஆல்காட்டை சமூகப்பணிகளில் இறங்கவைத்தது. கல்வியின் மூலமே ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீட்கமுடியும் என்பதில் இருவருக்கும் நம்பிக்கை இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்களை நிறுவவேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள். ஆல்காட் பஞ்சம இலவசப் பள்ளியை உருவாக்குகிறார்கள். தனது அமெரிக்க நண்பர்களிடம் பொருளுதவிப்பெற்று  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவச்சேவை, சமூக மேம்பாட்டுக்கு செலவழித்தார்.

ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியளித்து அவர்களை உயர்கல்விக்கு தகுதியானவர்களாக கொண்டுச்செல்லும் ஒரு கனவுத்திட்டதோடு ஆல்காட் இந்த பள்ளியை தொடங்கினார்.  தொடக்கத்தில் ஐம்பத்தைந்து மாணவர்களுடன் ஆரம்பிக்கப்படும் பள்ளியில்  அடுத்த இரண்டு வருடங்களில் நூற்று இருபத்தைந்து மாணவர்கள் சேர்க்கிறார்கள். தொடக்கத்தில் ஆல்காட் தொடங்கிய இந்த பள்ளிக்கூடத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க எந்த ஆசிரியரும் முனிவரவில்லை. ஆல்காட்டின் தொடர்முயற்சிக்கு பிறகு  அமெரிக்காவிலிருந்து வந்த பால்மோர் என்ற பெண்மணி பள்ளி ஆசிரியையாக  பணியாற்ற முன்வருகிறார். சிகாகோவிலிருந்து வந்த கோர்ட்ரைட் பள்ளியின் கண்காணிப்பாளராகப் பணிபுரிய முன்வருகிறார். மாணவர்களுக்கு வெறும் ஆங்கிலப்படிப்பு என்பதை தாண்டி உடற்பயிற்சி, பொதுஅறிவு, தொழிற்கல்வி , வேளாண்மை, நெசவு , களிமண் பொருட்கள் செய்வது, பனவோலைப்பொருட்கள் செய்வது, சிற்பம் , ஓவியம் என்று பன்முகத்திறன் கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து, ஐரோப்பாவிலிருந்து வந்த மேலும் பல ஆங்கிலேயர்கள் இந்த கற்பிக்கும் பணிகளில் ஆர்வமாக ஈடுபட முன்வருகிறார்கள். ஆல்காட் போட்ட விதை ஆலமரமாக வளர்கிறது. இலவசக்கல்வியோடு இலவச மதிய உணவும், உடைகளும், பாடப்புத்தகங்களும் தரப்படுகிறது. மெல்ல மெல்ல இந்த பள்ளியின் புகழ் மெட்ராஸை தாண்டி பரவுகிறது. த மெட்ராஸ் மெயில் போன்ற பத்திரிக்கைகள் இந்த பள்ளியை பற்றி குறிப்பிட பரவலாக அனைவரின் கவனத்தை பெறுகிறது. பள்ளியை விரிவுப்படுத்தவும் மற்றப்பகுதிகளிலும்  இதுபோன்ற பள்ளிகளை உருவாக்கவும் வேண்டிய தேவை எழுகிறது. மேலும் ஐந்து இடங்களில் பள்ளிகளை திறக்கிறார். அப்போது கோடம்பாக்கம் தோல் பதனிடும் தொழிற்சாலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கணிசமாக இருந்தார்கள். அவர்களது குழந்தைகள் படிக்க ஒரு பள்ளிக்கூடத்தையும், மற்றப்பள்ளிகளை தேனாம்பேட்டை , மைலாப்பூர் , கிருஷ்ணாம்பேட்டை என்று நிறுவுகிறார்கள்.

இந்தநிலையில்தான் பாணந்துறை விவாதம் குறித்த நூலை படித்த ஆல்காட் இலங்கை செல்ல தீர்மானிக்கிறார். அவரது பயணம் பற்றி கேள்விப்படும் அயோத்திதாசர் தானும் இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கிறார். தவிர தனது நெடுநாள்  ஆசையான புத்தமத்துக்கு மாறும் விருப்பத்தையும் தெரிவிக்கிறார்.

காலியில் கப்பலில் ஏறி இலக்கையின் காலி துறைமுகத்துக்கு செல்ல அங்கு அவர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது.  அங்கு சுமங்கல தேரரின் மூலம் பஞ்சசீல தீட்சையளித்து (1890) இல் பௌத்தராக்கினார். அதுபோல தனது சிஷ்யனான அநகாரிக தர்மபாலவையும் சென்னைக்கு அழைத்துச்சென்று பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தினார். தலித்மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட எத்தனையோ பேர் இருந்தாலும் இந்த மண்ணுக்கு சற்றும் தொடர்பே இல்லாமல் எங்கிருந்தோ வந்து இங்கு தங்கி பாடுபட்ட  ஆல்காட் போன்றோரை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். ஆல்காட் நினைத்திருந்தால் அடையாறிலே தங்கி பிரம்மஞானசபை பணிகளை மட்டும் கவனித்திருக்கலாம். ஆல்காட்டை தவிர குறிப்பிடத்தக்க வேறு எவரும் அங்கிருந்து வந்து தலித்மக்களிடையே தங்கி சமுதாயப்பணிகள் செய்யவில்லை.

இதே பிரம்மஞானசபையில்தான் கலாஷேத்ரா பள்ளியும் தொடங்கப்பட்டது. அங்கு பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுத்தரப்பட்டது. கலாஷேத்ரா பள்ளியை நிறுவியவர் பிரபல பரதநாட்டிய கலைஞர் ருக்மிணி. அவரது தந்தை  நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ஆல்காட் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு பிரம்மஞான சபையில் சேர்ந்தார். தனது கணவர் அருண்டேல் ஆதரவுடன் பிரம்மஞானசபை வளாகத்திலேயே நாட்டியப்பள்ளியை நிறுவி பெண்களுக்கு பரதக்கலையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். பின்னாட்களில் அந்த பள்ளி அங்கிருந்து திருவான்மியூருக்கு பள்ளியை இடம்மாற்றினார்கள். ருக்மணிதேவி திரு ராஜாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முறை பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.  ருக்மணிதேவியின் கலைச்சேவையைப் பாராட்டி பத்மபூஷண் போன்ற விருதுகள் எல்லாம் கிடைத்தன.

கலாஷேத்ராவும், ஆல்காட் பள்ளியும் இரண்டு வேறு வேறு துருவங்கள். இரண்டையும் ஒப்பிடுவது பொருத்தமற்றதுக்கூட. சமுதாயப்பணிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு பாடுபட்டவர்கள் என்று சொல்லும்போது ஆல்காட் அளவுக்கு வேறுயாரும் இறங்கி பணியாற்றவில்லை என்பதையும் இன்று கலாஷேத்ரா உலகளவில் பெற்றுள்ள செல்வாக்கையும், ஆல்காட்பள்ளியோ ஆல்காட்டின் மகத்தான பணிகளை பற்றியோ பதிவுகளோ குறைவு என்பதையும்     இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. ஆனால் வரலாற்றில் எப்போதும் தியாகங்களின் கதைகள் சற்று தாமதமாகவே வெளிவரும். அப்படி தாமதமாக வெளிவந்தாலும் பலநூற்றாண்டுகள் அது நிலைத்து பேசப்படும்

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
  2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
  3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
  4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
  5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
  6. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
  7. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
  8. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
  9. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
  10. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
  11. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
  12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
  13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
  14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
  15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
  16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
  17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
  18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்