கடந்த புதனன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் 62 நிறுவனங்களின் பட்டியலை வெளியீட்டு அமெரிக்காவின் பாதுகாப்பு காரணங்கங்களுக்காக இந்த நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி கூகிள் நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய அலைபேசி தயாரிக்கும் நிறுவனமான ஹுவாவே உடனான ஆண்ட்ராய்ட் உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

அதன்படி ஆண்ட்ராய்ட் அப்டேட்களை  ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. அதனுடன் பிளே ஸ்டோர், ஜிமெயில், யூடீயூப், கூகிள் மேப்ஸ், போன்ற சேவைகளும் செயல்படாது.

உலகின் இரண்டாவது பெரிய அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு இந்த செய்தி ஒரு பெரும் இடியாக இருக்கும்.

கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து முதலில் செய்தி வெளியிட்ட ராயடர்ஸ் நிறுவனம், “கூகுளின் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் அப்டேட்டுகளை இனி ஹுவாவே பெறமுடியாது என்றும், மேலும் புதிய அலைப்பேசிகளில் யூடியூப் மற்றும் மேப்ஸ் போன்ற வசதிகள் இருக்காது.” என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் அந்நாட்டு நிறுவனங்களுடன் வரத்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹூவேயின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகுள் வெளியிட்ட அறிக்கையில், “அரசின் ஆணையை மதித்து செயல்படுவதாகவும், விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

இதுகுறித்து ஹுவாவே நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இனி ஆண்ட்ராய்டின் ஓபன் சோர்ஸ் எனப்படும் செயலியை மட்டுமே  ஹுவாவே பயன்படுத்திக் கொள்ளலாம் என கூகிள் அறிவித்துள்ளது.

கூகிளின் இந்த முடிவு ஹுவாவே வாடிக்கையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சிசிஎஸ் இன்சைட் கன்சல்டன்ஸியை சேர்ந்த பென் வுட் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக 5ஜி மொபைல் நெட்வொர்க்குகளில் ஹுவாவேயின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா வலியுறித்தி வருகிறது.

ஹுவாவே நிறுவனமும் இந்த முடிவை எதிர்பாத்தே இருந்தது. அது கடந்த ஆறு வருடங்களாக தனக்கு சொந்தமான செயலிகளை உருவாக்க முயன்று வருகிறது.

இந்த நடவடிக்கை மேற்கத்திய நாடுகளில் ஹுவாவேவின் வர்த்தகத்தை பாதிக்கலாம் என பிபிசியின் தொழில்நுட்ப ஆசிரியர் லியோ கெலியான் தெரிவிக்கிறார். “ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத அலைப்பேசிகளை வாங்க மக்கள் தயங்குவார்கள்” என்றார். “ஆனால் கூகுள் ஆப்ரேடிங் சிஸ்டம் அல்லாத ஒரு ஆப்ரேடிங் சிஸ்டத்தின் தேவை குறித்து அலைப்பேசி விற்பனையாளர்கள் தீவிரமாக யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமையும்.” என்றும் அவர் கூறுகிறார்.