நாம் பலரும் பேச்சிலும், வழக்கிலும் “வரலாறு காணாத” என்றொரு சொற்சேர்க்கையை பயன்படுத்துவோம். அந்த வார்த்தைகளின் முழுப் பொருளையும் எதிர்கொள்ளும் ஒரு சூழலை மானுடம் சந்தித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த சூழல் அனைவரையுமே திகைப்பிலும், குழப்பத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது எனலாம். அதனால் நம்மால் தர்க்க ரீதியாக சிந்திக்க முடியுமா என்பதே சவாலாக உள்ளது. இந்த சிறு கட்டுரையின் நோக்கம் தர்க்க ரீதியாக சில கேள்விகளை உரத்துக் கேட்பது. இதற்கான பதில்களை ஆட்சியாளர்கள்தான், குறிப்பாக இந்தியாவின் மத்திய அரசுதான் இக்கேள்விகளுக்கான முழுமையான பதில்களை அளிக்க முடியும். அவ்விதம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும், பொதுக்களத்தில் இந்த கேள்விகள் எழுப்பப் படுவதும் உரத்து சிந்திக்கப்படுவதும் அவசியம், அவசரம் என்பதால் இந்த சிறு கட்டுரை.

கேள்வி ஒன்று: லாக் டவுன் எதுவரை? எதற்காக?

இன்று ஏப்ரல் 14 தேதி இந்திய அளவில் நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9272 என்று இந்திய அரசின் இணைய தளம் கூறுகிறது. பத்தொன்பது நாட்கள் கழித்து மே 3 ஆம் தேதி இந்த எண்ணிக்கை இருபதாயிரம் பேர், அல்லது முப்பதாயிரம் பேர் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானல் லாக் டவுன் மேலும் மே இறுதி வரை நீடிக்கப்படுமா என்பதே முக்கிய கேள்வி. இதை விரிவாக பரிசீலிப்போம்.

கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மக்கள் வழக்கம்போல கூடி பணிகளில் ஈடுபடுவது, அதற்காக பயணிப்பது போன்றவை தொற்று ஏராளமானவர்களுக்குப் பரவ வகை செய்துவிடும் என்பதால் ஒரு அசாதாரண நடவடிக்கையாக மொத்த சமூக இயக்கத்தையும் நிறுத்தி வைத்து அனைவரும் வீட்டிற்குள் வசிக்க வேண்டும் என்ற நடைமுறையை உலகின் பல்வேறு நாடுகள் கடைபிடிக்கின்றன. இந்த நடைமுறையை தாமதமாக கடைபிடித்ததால் இத்தாலி போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கனவர்கள் நோய்க்கு பலியாகிவிட்டனர். இத்தாலியில் நோய்க்கிருமி தொற்றியவர்களில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகிவிட்டனர்.

எனவே, அநாவசியமாக காலம் தாழ்த்தாமல் மார்ச் மாத மத்தியிலேயே கேரள மாநிலம் லாக் டவுனை தொடங்கி விட்டது. மத்திய அரசு மார்ச் 22 ஒரு நாள் காலை முதல் இரவு வரை லாக் டவுன் பரீட்சார்த்தமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு பத்து நாள் லாக் டவுன் அறிவிக்க, மத்திய அரசு மார்ச் 24 நள்ளிரவிலிருந்து 21 நாள் தேசிய அளவிலான லாக் டவுனை அறிவித்தது. இதனால் நோய் பரவுதலின் வேகம் மட்டுப்படும் என்பதே காரணம். லாக் டவுனால் அன்றாடம் வருவாய் ஈட்டும் எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பரிபோகும் என்றாலும் கூட, அனைவரது ஆரோக்கியத்தையும் முன்னிட்டு இதை செய்வதாகவும், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதாகவும் மத்திய மாநில அரசுகள் கூறின.

தேசிய அளவில் லாக் டவுன் தொடங்கிய மார்ச் 24 ஆம் தேதி நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 519. இருபத்தோரு நாள் லாக் டவுன் முடிந்த இன்றைய தினம் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 10815. இதில் குணமடைந்தவர்கள், 1189, இறந்தவர்கள் 353 கழித்துவிட்டால் கூட 9272 பேர் நோய் தொற்றில் உள்ளார்கள். அதாவது இருபது நாட்களில் கிட்டத்தட்ட இருபது மடங்கு அதிகரித்துள்ளதாகவே அரசு தரும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நேற்றைய தினம் மட்டும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

லாக் டவுன் செய்யாவிட்டால் தொற்று இதைவிட பன்மடங்கு அதிகரிகரித்திற்கும் என்ற வாதம் உண்மையானாலும், லாக் டவுன் காலத்தில் கணிசமாக அதிகரித்திருப்பது தெரிகிறது. இப்போது வேறு வழியில்லாமல் மேலும் 19 நாட்கள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையான 21 நாள் காலகட்டத்தில் அதிகரித்தது போல, அடுத்த பத்தொன்பது நாட்களில் அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மற்றொரு புறம், இந்தியாவில் நோய் தொற்று இருந்தாலும், நோய் முற்றுவதில்லை, மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. இது குறித்த தகவல்களை அரசு பரிசீலித்து முடிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உருவாகியுள்ளது. இந்த கோணத்தில் சிந்தப்பவர்கள் கோரானா பாதிப்பை விட, லாக் டவுன் பாதிப்புகள் அதிகமாகிவிடும் என எச்சரிக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் இரண்டு. ஒன்று, லாக் டவுன் என்று கூறினாலும் அத்தியாவசிய தேவைகளுக்கான அதாவது வீட்டிலேயே இருக்கும் மக்கள் அனைவரும் உணவு உட்கொள்வதற்கான பொருட்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். எனவே, மளிகைப் பொருட்கள், காய்கறி, பால், இறைச்சி, முட்டை போன்ற அனைத்தும் உற்பத்தியாகும் இடத்திலிருந்து நுகர்வோரிடம் சென்று சேரும் விநியோக வலைப்பின்னல், supply chain, இயங்கியாக வேண்டும். விவசாயம் தொடர்ந்து நடைபெற வேண்டும். விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். மின்சாரம், குடிநீர், தொலைபேசி போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள், காவல்துறை ஆகியோர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். எனவே 130 கோடி பேரும் வீட்டிற்குள் முடங்குவது என்பது சாத்தியமேயில்லை.

இரண்டு சர்வதேச அளவில் நோய் தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பதில் இந்தியா மிக, மிக பின் தங்கியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் கூட டெஸ்ட் செய்யப்படவில்லை. எனவே இப்போதுள்ள நோய் தொற்று எண்ணிக்கை என்பது மிக,மிக குறைவான டெஸ்ட்டிங் அடிப்படையில் கூறப்படுவது. இனி வரும் நாட்கள் டெஸ்ட் செய்வது அதிகரித்தால் நிச்சயம் நோய் தொற்றியவர் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கும் எனலாம். அப்படியானால் எத்தனை நாட்கள் லாக் டவுனை நீடிக்க வேண்டியிருக்கும், எந்த அடிப்படையில் அதை தளர்த்தவோ, முடிவுக்கோ கொண்டுவருவது எனப்தைக் குறித்து தெளிவான, திட்டவட்டமான தொலைநோக்குப் பார்வை எதையும் மத்திய அரசு வெளியிட்டதாகத் தெரியவில்லை. கொரோனாவுடன் போர், கொரோனாவை வெல்வோம் என்று வாய்ப்பந்தல் போடுவதுதான் பிரதமரின் உரைகளில் இருக்கிறது; ஆளும் கட்சியினரின் பேச்சில் இருக்கிறது. ஆனால் எப்படி வெல்வார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்னும் செயல் திட்டம் எதுவும் இல்லை.

கேள்வி 2: கொரோனா தடுப்பு என்பது என்பது மாநில அரசுகளின் பணியா? மத்திய அரசின் பணியா?

மாநில அரசு பத்து நாள் ஊரடங்கை அறிவித்தால், மறுநாள் மத்திய அரசு 21 தேசிய லாக் டவுன் அறிவிக்கிறது. மாநில அரசு ஏப்ரல் 30 வரை லாக் டவுன் என்றால் மத்திய அரசு மறுநாளே மே 3ஆம் தேதிவரை தேசிய லாக் டவுனை நீடிக்கிறது. ஏன் இப்படி மத்திய மாநில அரசுகள் முரண்பட்டு நடந்துகொள்கின்றன? மாநில அரசின் பொறுப்பு என்ன, மத்திய அரசின் பொறுப்பு என்ன? எதற்காக தேசிய அளவிலான லாக் டவுன்?

மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கையில் இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே விமானங்கள், இரயில்கள், பேருந்துகள் ஆகியவை இயங்கலாமா கூடாதா என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில் பொருள் இருக்கிறது. மற்றபடி சுகாரத்துறையும், சட்டம் ஒழுங்கு துறையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

உதாரணமாக கேரள மாநிலம் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு கொரோனா தொற்றை வெகுவாக கட்டுப்படுத்திவிட்டது. புதிதாக நோய் தொற்றுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அந்த மாநிலம் அதன் போக்கிலேயே செயல்பட்டால் புதிய தொற்றுகளே ஏற்படவில்லை என்ற நிலையை விரைவில் அடையலாம். அது மட்டுமல்லாமல் நிவாரப்பணிகள், டெஸ்ட்டிங் போன்றவற்றிலும் அது இந்தியாவின் பிற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏற்கனவே நிபா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு வென்ற அனுபவத்தால் அதனால் சரியான அணுகுமுறையை விரைவில் கடைபிடித்து, “பரிசோதனை, தனிமைப்படுத்து, குணப்படுத்து” என்ற மும்முனை செயல்பாட்டை சிறப்பாக கையாள முடிந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிக்கு இடையில் நிலமை கணிசமாக வேறுபடுகிறது. நோய் தொற்று எண்ணிக்கையும் சரி, பரவலின் வேகமும் சரி மாறுபடுகிறது. இந்த நிலையில் எந்த விதமாக ஊரடங்கை அமல்படுத்தவேண்டும், எத்தனை நாட்கள் அமல் படுத்தவேண்டும் என்பன போன்ற முடிவுகளை மாநில நிர்வாகத்திடமும், இன்னம் சொன்னால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமும் விட்டுவிட்டு, மத்திய அரசு தேவையான நிதியுதவியை அனைத்து மாநிலங்களுக்கும் செய்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

ஆனால் எந்த காரணத்தாலோ மத்திய அரசு தேசம் முழுவதிலும் அதுவே லாக் டவுனை அறிவிக்க வேண்டும் என நினைக்கிறது. மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை பகிர்ந்தளிக்க தாமதிக்கிறது. ஜிஎஸ்டி வரியில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கையே தராமல் வைத்திருக்கிறது. இதன் விளைவாக கேரள அரசு 9 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி செலவு செய்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு தன்னிடம் அதிகாரங்களை குவித்துக்கொள்ளும் சர்வாதிகார நோக்குடன் செயல்படுகிறதோ என்ற அச்சம் அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படாமல் இருக்க முடியாது. நன்றாக கவனித்தால் பிரதமர் சில தினங்களுக்கு முன் மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்தார். அப்போது லாக் டவுன்  அல்லது ஊரடங்கை அறிவிப்பதை மாநிலங்களின் தீர்மானத்திற்கு விட்டுவிட்டு, தேசிய அளவிலான போக்குவரத்து தொடர்பான விதிகளை மட்டும் மத்திய அரசு அறிவிப்பதாகத் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? கூட்டம் முடிந்ததும் பல மாநிலங்களின் முதல்வர்கள் ஏப்ரல் 30 வரை லாக் டவுன் அவரவர் மாநிலத்தில் அறிவித்தார்கள். கடைசியாக தமிழக முதல்வரும் திங்கட்கிழமை அறிவித்தார். ஆனால் நேற்று. செவ்வாய்கிழமை காலை தேசிய அளவில் லாக்டவுனை பிரதமர் மே 3 ஆம் தேதி வரை அறிவித்து அனைத்து முதலமைச்சர்களையும் சிறுமைப்படுத்தியுள்ளார். எழுபதாண்டுக்கால முதிர்ச்சியுள்ள இந்திய கூட்டாட்சி அமைப்பை வேண்டுமென்றே அவமதிக்கும் செயலில் பிரதமர் இறங்கியுள்ளார். ஏப்ரல் 30 என்பதற்கும், மே 3 என்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு என்ற கேள்வி ஒருபுறமிருக்க, எந்த அடிப்படையில், எதற்காக பிரதமர் தேசிய அளவில் லாக் டவுனை அறிவிக்கிறார் என்பதே புரியவில்லை. அவர் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நிர்வாகத் துறைகள், போக்குவரத்து ஆகியவற்றிற்குத்தான் அவர் அறிவிக்க வேண்டுமே தவிர மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது மிக மோசமான முன்மாதிரியை உருவாக்கும். கொரோனா சாக்கில், இந்திய கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் செயல் கண்டிக்கத் தக்கது மட்டுமன்றி, இதற்கான காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

கேள்வி 3: கொரோனாவால் சாகக் கூடாது என்றால் பசியால் சாகலாமா? ஏற்கனவே கடும் மந்த நிலையில் இருந்த பொருளாதாரம் நாற்பது நாள் லாக் டவுனால் எந்த வகையான இழப்பை சந்திக்கும்? அதை எப்படி ஈடு செய்வது?

ஊரடங்கு, வீட்டிலேயே தனித்திருப்பது என்பதெல்லாம் மாதச் சம்பளம் பெறும் மத்திய தர வர்க்கத்திற்கு சாத்தியம். ஏழை உழைக்கும் மக்கள், அன்றாடக் கூலிகள், அன்றாட வருவாயில் பிழைப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்வாதாரமே லாக்டவுனில் பறிபோகிறது. இவர்களுக்கு பணம் வழங்குவதாகவும், உணவுப் பொருட்கள் வழங்குவதாகவும் கூறப்பட்டாலும், ஏராளமானவர்களுக்கு அவை சென்றடவையில்லை என்பதே களப்பணியாளர்களின் கூற்றாக இருக்கிறது.

மேலும் இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது மேலிருந்து கசியும் நீர் போன்றது. டிரிக்கிள் டவுன் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது மத்திய தர வர்க்கத்தினர் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போதுதான் மெக்கானிக்குகளுக்கு வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு சிறு நகரிலும் நூற்றுக்கணக்கனக்கான் மெக்கானிக்குகள் வண்டிகளை செப்பனிட்டுக் கொடுத்தும், பராமரித்துக் கொடுத்தும் தங்கள் தினசரி வருவாயை ஈட்டுகிறார்கள். நாற்பது நாட்கள் வண்டிகளே ஓடவில்லையென்றால் அவர்கள் அனைவருக்கும் ஒரு வருமானமும் இல்லை என்ற நிலையே உருவாகும். ஒவ்வொரு சிறு நகரிலும் நூற்றுக்கணக்கான சிறு விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள் உள்ளன. அவையனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அடைக்கப்பட்ட நிலையில் எத்தனை பேர் வருவாய் இழப்பார்கள் என்பதை யோசிப்பதே கடினமாக இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் பணக்கார, உயர் மத்திய தர, மத்திய தர வர்க்கத்தின் நுகர்விலிருந்து கசிந்து செல்லும் நீர் மொத்தமாக நின்றுவிடுகிறது எனலாம். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் சக்தி எளியவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் பலரால் சோறாக்கி சாப்பிட முடியவில்லை என்பதே யதார்த்தம். அதை இட்லி, தோசை செய்ய பயன்படுத்துவதே சகஜம். சாப்பாட்டிற்கான அரிசியை விலைகொடுத்துதான் வாங்குகிறார்கள். சமீபத்தில் மதுரையிலிருந்து ஒருவர் வாட்ஸ அப்பில் ரேஷன் அரிசையைக் காட்டி நாங்கள் எப்படி இந்த அரிசையை உண்டு உயிர்பிழைத்திருப்பது என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார். நண்பர்கள் பலரும் அவர்கள் வீட்டு வாசலில் வந்து உணவிற்காக உதவி கேட்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தனர். இவை புள்ளி விவரங்களால் புறக்கணிக்கத்தக்க அனுபவங்கள் இல்லை.

இதற்கு அடுத்த நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள். இவை மாதா மாதம் ஈட்டும் வருவாயிலிருந்து பணியில் அமர்த்தியுள்ள ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவார்கள். இவர்களது இலாபம் என்பது பெரும் சேமிப்புகளை உருவாக்குவது அல்ல. மிகக் குறைந்த அளவிலேயே, முதலாளியும் தொழிலாளிகளில் ஒருவராக கொஞ்சம் அதிகம் வருவாய் ஈட்டுபவராக இருப்பார்; அவ்வளவுதான். இவர்கள் பலர் மார்ச் மாத சம்பளத்தை எப்படியோ கொடுத்துவிட்டார்கள். ஆனால் ஏப்ரல் மாத சம்பளத்தை கொடுக்க முடியுமா என்பது ஐயம்தான். பிரதமர் யாரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகிறார். அது எப்படி சாத்தியம் என யோசிக்க வேண்டாமா? ஒரு நெடுஞ்சாலை பரோட்டா கடையில் கூட ஐந்து பேர் முதலாளியுடன் வேலை செய்வார்கள். கடையே நடக்கவில்லை என்றால் அவர் எப்படி சம்பளம் கொடுப்பார். எந்த நம்பிக்கையில் அவர்களை வேலைக்கு வைத்திருப்பார் என்பதே கேள்வி.

விவாசாயிகள் இழப்புகளோ மிகக் கடுமையாக இருக்கின்றன. மூர்க்கத்தனமான போலீஸ் கெடுபிடிகளால் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் அழுகிப்போன காய்கறிகளினால் ஏற்பட்ட இழப்புகள் தலைசுற்றச் செய்கின்றன. அரசின் அலட்சியமும், மெத்தனமும் கேட்பவர்களின் வயிறையே எரியச் செய்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயிற்றெரிச்சல் எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது கடினம். மேலும், சாதாரணமாகவே மாமூலில் கொழிக்கும் காவல்துறை இந்த நெருக்கடி நிலையிலும் அடாத பணப்பறிப்புகளை செய்துவருவதாக பலரும் கூறுகின்றனர். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும், அரசுதான் இந்த சூழ்நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். அரசும், ஊடகங்களும் உருவாக்கிய கொரோனா பீதியில் கண்மூடித்தனமான ஊரடுங்கு கொள்கையால் காவல்துறை அத்துமீறல் தலைவிரித்தாடுகிறது.

 அது மட்டுமின்றி எல்லா தொழில்களும், விமான கம்பெனிகள் கூட கடுமையான வருவாய் இழப்பை சந்திக்கப் போகின்றன. அதானால் ஏற்படக்கூடிய பொருளாதார சிக்கல்கள் என்ன, அரசு அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் குறித்து மத்திய அரசு எதையுமே கூறவதில்லை என்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார ஊக்கத்திற்கான பெரும் நிதி ஆதாரங்களை அறிவித்துள்ளன. அதனால் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் இந்திய அரசு மிகவும் மர்மமான முறையில் மெளனம் சாதிக்கிறது.  நிதியமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக் முதல் முறை பேசியபோது பிரதமர் கூறினார். குழு அமைக்கப்பட்டதா,  அது என்ன பரிந்துரைகள் செய்துள்ளது என்பது குறித்து கடந்த இருபத்தோரு நாட்களில் எந்த செய்தியுமில்லை. அத்துடன் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் பகிர்ந்தளிப்பும் சரி, நிறுவனங்களுக்கு திருப்பித் தரவேண்டிய ஈட்டுத் தொகையும் சரி, எதுவுமே வழங்கப்படவில்லை என்பது மத்திய அரசின் நிதி நிலையைக் குறித்த பல்வேறு வதந்திகளை, கவலைகளை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. பல்வேறு பொருளாதார வல்லுனர்கள், அமர்த்யா சென், அபிஜித் பானர்ஜி. ரகுராம் ராஜன் முதல் தமிழகத்தில் ஜெயரஞ்சன் வரை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அரசிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை.

பொருளாதார நிலை குறித்தும், வறியவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் ஆதரவளிப்பது குறித்தும் அரசு வெளிப்படையாக பேசாமல் இருப்பது ஆபத்தானது. இது மன்னராட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ அல்ல. மக்களுக்கு அரசின் பார்வையை, தொலைநோக்குத் திட்டத்தை அறிந்துகொள்ள உரிமை இருக்கிறது. இது போன்ற நெருக்கடி நிலையில் அது இன்றியமையாதது.

இந்த கேள்விகளையும், இதையொட்டிய கேள்விகளையும் அனைவரும் சேர்ந்து எழுப்பி அரசிடம் விளக்கம் பெறுவதே மக்களாட்சி.