பெப்சிகோ நிறுவனம் அதன் உருளைக் கிழங்கு காப்புரிமை மீறல்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட பல விவசாயிகளுக்கு எதிராக வழக்குகளைத் திரும்பப் பெறும் என்று இன்று தெரிவித்துள்ளது.

லேய்ஸ் சிப்ஸுகள் தயாரிக்க உபயோகிக்கப்படும் FC5 வகை உருளைக்கிழங்குகளை வளர்த்ததற்காக நான்கு விவசாயிகள் மீது வழக்குத் தொடுத்த பெப்ஸிகோ இந்த பிரச்சினையை “இணக்கமாக தீர்த்துக்கொள்ள” விரும்புவதாகக் கூறியது.

“அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப்பெறுவதாக முடிவு செய்துள்ளோம்,” என பெப்சிகோ இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறினார்.

லேய்ஸ் சிப்ஸ் தயாரிக்கப் பயன்படும் குறைந்த ஈரப்பதம் கொண்ட உருளைக்கிழங்கு வகையான FC5 மீதான தனது உரிமையா பெப்ஸிகோ நிறுவனம் கோரியது. இதற்கான காப்புரிமையை அது 2016 இல் பதிவு செய்தது.

ஏப்ரல் மாதம் அலகாபாத் நீதிமன்றத்தில் FC5 வகை உருளைக்கிழங்குகளை வளர்த்ததற்காக நான்கு விவசாயிகள் மீது வழக்குத் தொடுத்த பெப்ஸிகோ அவர்கள் மீது 10 இலட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

விவசாயிகளுக்கு உதவுவதாகக் குஜராத் மாநில முதல்வர் நிதின் படேல் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெப்ஸிகோ நிறுவனத்தின் செயலை விமர்சித்தது.

1989 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆலை ஒன்றை அமைத்த பெப்சிகோ, FC5 உருளைக்கிழங்கு வகையை விவசாயிகளுக்குக் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்கள் அதைப் பயிரிட்டு ஒரு குறிப்பிட்ட விலைக்கு நிறுவனத்திடமே விற்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டிருந்தது.

“எங்கள் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நல்லுறவில் உள்ளது. அதைத் தொடரவே நாங்கள் விரும்புகிறோம்”. என பெப்ஸிகோவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்கள். பொதுமக்களின் கோபம், பத்திரிக்கைகளின் விமர்சனங்கள், அரசியல் நெருக்கடி ஆகியவற்றாலேயே இன்று பெப்ஸிகோ நிறுவனம் இந்த சமாதானத்திற்கு வந்துள்ளது. இதை முன்னரே செய்திருந்தால் பலவற்றை தவிர்த்திருக்கலாம். மக்களின் அதிருப்திக்கு அஞ்சாதவர்கள் யாவரும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.