விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகாவான கல்வராயன் மலை ஆகிய 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் 568 கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.
சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளும் இடம் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் போலீஸ் சூப்பிரண்டாக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.
புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்குக் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி அருகே உள்ள சாமியார் மடம் மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.
விழாவுக்குத் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சி.வி. சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்-அமைச்சரை வரவேற்று விழா நடைபெறும் மைதானம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்தன. முக்கியமான இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஜ.ஜி சந்தோஷ்குமார் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 6 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள், 130 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், ஊர்க்காவல் படையினர் உள்பட 2 ஆயிரம் காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.