அசைவறுமதி 13

கடந்தப் பதிவில் குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள ஆசைப்படும் மூன்று குணங்களைக் கேட்டிருந்தேன். சில நண்பர்கள் தனித்தனியாகப் பதிந்திருந்தனர்.  உரையாடலின் போது சில நண்பர்கள் இதுபற்றிக் கூறினார்கள். ஒரே மாதிரியான குணங்களை மறுபடியும் மறுபடியும் நிறைய நண்பர்கள் பரிந்துரைத்தனர். அத்தகையக் குணங்களைக்கண்டு அவர்கள்  பிரமித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படியானவைகளில் சில…

  1. குழந்தைகள் எப்பொழுதும் (பெரும்பாலானச் சமயங்களில்) மகிழ்ச்சியாகவே இருக்கின்றன.
  2. குழந்தைகள் வேகமாகவே மன்னித்து விடும் பழக்கத்தையும், மறந்துவிடும் பழக்கத்தையும் வைத்திருக்கின்றனர்.
  3. CURIOSITY அதாவது குழந்தைகளின் ஆர்வம் வியப்பைத்தருகிறது.
  4. குழந்தைகள் தங்களைச் சூழலுக்கேற்றபடி வேகமாகத் தக்கவைத்துக்கொள்கின்றனர்.
  5. ஒரு விசயம் வேண்டுமென்றால் அதை எப்படியாவது கிடைத்துவிட மெனக்கெடுகிறார்கள் சில குழந்தைகள்.

நிறைய குணாதியங்களுடன் குழந்தைகள் தனித்தனி இயல்புகளுடன் தான் இருக்கின்றன. ஆனால் ஒரு சில குணங்கள் பெரும்பாலானக் குழந்தைகளிடம் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. அந்தக் குணங்களை நாம் வளர்கையில் மீட்டெடுத்திருக்கிறோமா?

மகிழ்ச்சி:

நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறோமா, ஆனால் குழந்தையாக இருக்கும்பொழுது நாம் மகிழ்ச்சியாகத்தானே இருந்திருக்கிறோம். வழங்கப்பட்ட அத்தனை உடைமைகளிலும் நம் மகிழ்ச்சி இருப்பதை ஒரு குழந்தை கண்டுகொள்வதைப் போல பெரியவர்களாக நாம் மாறிய பிறகு நம்மால் ஏன் கண்டுகொள்ளமுடியவில்லை. உண்மை சொல்லப்போனால் மகிழ்ச்சி என்பது எது என்பதை யார் தீர்மானிக்க வேண்டும். குழந்தைக்கு இதில் தான் உனக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று யாராவது சொல்கிறார்களா? இல்லையே. மகிழ்ச்சி எங்கு இருக்கிறது. கொரோனோவிற்கு கணவன் வீட்டில் இருப்பது மனைவிக்கு மகிழ்ச்சி என்றால், அதை ஒருமுறை கணவன் பக்கமும் கேட்டுவிட வேண்டும். மகிழ்ச்சி மனங்களுக்கேற்றபடி மாறுகிறது. மகிழ்ச்சி மனம் சம்பந்தப்பட்டதாகிறது. எப்பொழுதும மகிழ்ச்சியாய் குழந்தையாய் இருந்தபோது இருந்த நாம் தாம், இப்பொழுதும் அதே பெயரில் இருக்கிறோம். ஆனால் அப்படியான மனநிலையை மாற்றிக்கொள்ளமுடியாதது ஏன்?

மன்னிப்பும் மறப்பும்:

குழந்தைகளிடம் காணக்கிடைக்கும் இன்னோர் அற்புதம் அவர்கள் எளிதாக மன்னித்துவிடுகிறார்கள் அதன் சார் நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். பெரியவர்களாக மாறியப்பிறகு நம்மால் அப்படி பின்பற்ற இயலவில்லை.

நம் கடந்த காலத்தை “மன்னித்தல் என்ற குணம்”  ஒருபோதும் மாற்றப்போவதில்லை. ஆனால் நிகழ்காலத்தையும் வருங்காலத் தருணங்களையும் மாற்றிவிடும் ஆற்றல் அதற்கு உண்டு.வருங்காலத்தில் பெரும் நிம்மதியைத் தரும் வல்லமை மன்னித்தலுக்கு உண்டு.  எனக்கு மேலாளராக இருந்த பாலு சார் THANKS AND SORRY COST NOTHING BUT IT BUYS EVERYTHING  என்று அடிக்கடி சொல்வார். அது ஒரு வகையில் உண்மை. பெரிய பெரிய தொழில்களில் சிறந்துவிளங்குவோர், பெரிய ஆளுமைகளாக இருப்பவர்களிடம் இந்த மன்னிப்பும் அது சார் கசப்பான அனுபவங்களை மறக்கும் தன்மையும் இருந்துகொண்டே இருக்கும்.

CURIOSITY:

குழந்தைகளை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டே இருப்பது அவர்களது ஆர்வம் தான். எதையும் கற்றுக்கொள்ள இருக்கும் ஆர்வம் எதையும் செய்து பார்க்கும் ஆர்வம், எதையும் பேசிவிடும் ஆர்வம். இப்படியான ஆர்வப்படுவதை யார் யாரெல்லாம் பெரியவர்களாக வளர்ந்த பின்னும் தக்கவைக்கிறார்களோ அவர்களைக் கவனித்தால் அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். அவர்களது ஆர்வம் அவர்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை நிகழ்த்துபவர்களாகவும் அப்படியான நிகழ்வுகளின் மீதான ஆர்வத்தைக் கொண்டவர்களாகவும் மாற்றியிருக்கும்.  யோசித்துப்பாருங்கள், ஒரு சினிமா பார்க்கிறீர்கள், சுவாரஸ்யம் தானே உங்களை இருக்கையில் இருக்க வைக்கிறது. ஒரு புத்தகம் படிக்கிறீர்கள், சுவாரஸ்யம் தானே பக்கங்களைப் புரட்டவைக்கிறது. அப்படித்தானே சுவாரஸ்யம்  ஒருவரது வாழ்க்கையையும் நகர்த்தும். சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு நாம் ஏன் ஆர்வப்படுவதில்லை?

தகவமைத்தல்:

எனக்குத் தெரிந்த நண்பர் வேலை பார்ப்பது குழந்தைகளுக்கானப் பள்ளிக்கூடம். PRE KG, LKG, UKG இப்படி கிண்டர் கார்டன் பள்ளி. அந்த நண்பரிடம் , விடுமுறை முடிந்து முதல் நாள் வரும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பீர்கள், அழ மாட்டாரகளா என்று கேட்டேன். பெரும்பாலானக் குழந்தைகள் அழுவதாகவும் பள்ளிக்கு முதன் முதல் வரும் PRE KG  குழந்தைகளின் அழுகை தான் உணர்வுப்பூர்வமானது  என்றார். அவர்கள் வீட்டிலேயே அம்மாவின் கைப்பிடிக்குள் இருந்திருப்பார்கள். அந்நியரைப் பார்த்துப் பழகியிருக்கமாட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரை அந்நியரான ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் வகுப்பறை அவர்களை மிரட்டும் என்றார்.

அந்தப் பள்ளியில் முதல் மூன்று நாட்கள் குழந்தைகளுடன் அம்மாக்களும் வகுப்பறையில் இருப்பார்களாம். அடுத்த மூன்று நாட்கள் அம்மாக்கள் பள்ளிக்கு வெளியில் இருப்பார்களாம். அதிகம் அழுதால் அழைப்பார்களாம். முதல் பத்து நாட்களுக்கு இரண்டு மணி நேரம் வகுப்பாம். பிறகு மூன்று மணி நேரம் என மாற்றுவார்களாம். குழந்தைகளுக்கு அப்படியானது ஒரு கடினமானச் சூழல். ஆனால் மூன்று மாதங்களில் வீட்டில் குழந்தை தனக்குப் பிடித்த ஆசிரியையின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கிறது. சில குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்குச் செல்ல வேண்டும் என அடம்பிடிப்பதாக அடுத்த நாள் பெற்றோர்கள் சொல்வதாக அவர் கூறினார். குழந்தைகள் கடினச் சூழல் என்றாலும் தங்களைச் சூழலுக்கேற்றபடித் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறார்கள்.  இப்பொழுது அப்படி நம்மால் மாறமுடிகிறதா. பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறோம். புத்தகங்கள் படிக்காமல் இருப்பது என் பழக்கம் என்றார் ஒரு நண்பர். கொரோனா ஊரடங்கில் என்ன செய்யலாம், பொழுது போகவில்லை என்று கேட்டவருக்கு புத்தகங்கள் வாசியுங்கள் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் அது. சூழலுக்கேற்றபடி தன்னைத் தகவமைத்தலை ஆங்கிலத்தில் ஒரு நிறுவனத்தில் நான் பேச அழைக்கப்பட்ட போது UPDATE என்று பேசினேன். சிகரெட் மட்டுமே தயாரித்துக்கொண்டிருந்த ITC கம்பெனி , புகைபிடிப்பதால் ஆகும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் பரவ , புகை பிடிப்பது குறைய ஆரம்பிக்கும் என்பதைக் கணித்து ITC தன் வியாபாரத்தை வேறு வேறு தயாரிப்புகளில் நகர்த்தியது. நிறைய உணவுப்பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. அதனால்தான் அந்த நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடிகிறது. உங்கள் ஊரிலும் ஒருவர் இருப்பார். அவர் கூட சூழ்லுக்கேற்றபடி தன்னைத்தானே தகவமைத்து மாறியிருப்பார். கடந்த வார க்ருத்திகாதரண் அவர்களது ‘அருகாமையில் ஆளுமைகள்’ நிகழ்வில் நான் கலந்துகொண்ட போது புதிதாக வியாபாரம் செய்ய வருபவர்களுக்கான பேச்சு வந்தது. அப்பொழுது எங்கள் பகுதியில் இருந்தவர் பற்றிக் கூறினேன். அவர் மொபைல் ரீசார்ச் கடை வைத்திருந்தார். கொரோனா ஊரடங்கின் போது அந்தக் கடை சாத்தப்படவேண்டும் என்று காவல்துறை கூறியபோது, அவர் கடையைச் சாத்திவிட்டு வெளியே போர்வையை விரித்து கொஞ்சம் காய்கறிகளையும் பருப்பு வகைகளையும் வாங்கி விற்றுக்கொண்டிருந்தார். ஊரடங்கு ஆரம்பித்த இரண்டாம் நாளிலேயே ஆரம்பித்திருந்தார். ரோட்டோரக் கடைகளில் காய்கறி சரி, பருப்பு எப்படி என்று கேட்டேன். அவர் கடை மூடப்படவேண்டும் என்றதும் வருமானத்திற்கு காய்கறி கடை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார். அதிகாலையில் காய்கறி வாங்கச்சென்றவர் அங்கு ஒருவர் மூடை மூடையாக பருப்பு வாங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். என்ன விலை எனக் கேட்டு ஒரு மூடையை வாங்கிவிட்டார். அதில் வீட்டில் வைத்து பாக்கெட் போட்டு விட்டார். எங்கள் பகுதியில் இருக்கும் மளிகைக்கடைகளில் எல்லாம் பருப்பு சரியாய் கிடைக்கவில்லை என்பதால் மக்கள் அவரிடம் வாங்க ஆரம்பித்தனர். இது தான் சூழலுக்கேற்றபடி தகவமைத்தல். ரீ சார்ச் கடை தான் வைப்பேன் . அதை அடைக்கவேண்டும் என்று அடைத்துவிட்டு வீட்டில் படுத்துவிட்டால் என்ன செய்வது. வாழ்க்கை ஓட வேண்டும் தானே. இதே நீங்கள் ஒரு பெண். திருமணம் ஆகிறது. உங்களுக்கு ஒரு மாமியார் மாமனார், ஒரு நாத்தனார் இப்படி குடும்பம். சூழல் கடினமாகவே இருக்கிறது. இது எல்லாமே பெண்கள் அனுபவிக்கும் விசயம் தான். பெண்கள் என்று இல்லை. புதிய சூழலுக்கேற்றபடி நாம் மாறாவிட்டாலும் சரி , சூழலை நமக்கு ஏற்றபடி மாற்றாவிட்டாலும் சரி நம்மால் வெற்றி பெற முடியாது.

மெனக்கெடுதல்:

குழந்தை ஒரு பொருள் தேவை என்றால் எப்படியெல்லாம் கேட்டு வாங்கிக்கொள்ளும் என்று தெரியும் நமக்கு. பொத்தம்பொதுவாய் அடம் பிடிக்கும் என்பார்கள். அடம் பிடித்தல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வேறு வார்த்தை என்ன என்று யோசித்தேன். அதை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று பார்த்தேன். ஆங்கிலத்தில் அந்த வார்த்தைக்கு இன்னொரு வார்த்தை இருக்கிறதா என்று பார்த்தேன். NAUGHTY என்று அகராதியில் தருகிறார்கள். தமிழில் சுட்டித்தனம் என்று வருகிறது. நீங்கள் ஓர் இலக்கை வைத்துக்கொள்கிறீர்கள். உதாரணத்திற்கு இந்த முப்பது நாளில் 5 கிலோ எடை குறைய வேண்டும் என்று. ஏன் உங்கள் மனது அந்த இலக்கை நோக்கி அடம் பிடிப்பது இல்லை. ஏன் உங்கள் இலக்கை நீங்கள் அடைய உங்கள் மனதை சுட்டித்தனம் பிடிக்க வைப்பது இல்லை.

நம் மனம் எப்பொழுதும் அடம்பிடிக்கும் குரங்கு தான். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர். மாதம் ஒரு முறை மது அருந்துவாராம். கொடைக்காணல் சென்றவர் தங்கிய மூன்று நாட்களும் மது அருந்தியதாகக் கூறினார். குளிர் பிரதேசத்தைக் கண்டதும் மனசு கேட்கல என்றார். அதாவது மனதை தம்முடைய விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள முடியும் நமக்கு, நாமே ஒரு இலக்கை வடிவமைத்தப்பின் மனதை மாற்றமுடியாமல் இருப்பது வேடிக்கை. அப்படியான மெனக்கெடுதல் குழந்தைகளாய் இருந்தபோது நமக்குள் இருந்த ஒன்று தான். கேட்டுப் பெறுவதும், அதற்கானச் சாத்தியங்களை உருவாக்குவதும் குழந்தைகளிடம் காணப்படுவது தான். என் மகள் மூன்று வயதில் , வெளியில் மழை பெய்த போது வீட்டு வாசலில் நின்று வேடிக்கைப் பார்க்க ஆசைப்பட்டாள். நனைந்து விடுதலைக் காரணம் காட்டி வேண்டாம் என மறுத்தேன். பந்தை வெளியில்  தூக்கிப்போட்டு அதை எடுக்கப்போகவேண்டும் என்றாள். வெறுமனே அடம் பிடித்தல் என்று பொத்தம்பொதுவான வார்த்தையில் நாம் அடைபட முடியாது. தேவையான இலக்கைப் பெற நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பது முக்கியம்.

இந்த ஐந்து குணங்களைத்தான் சில நண்பர்கள் பரிந்துரைத்தார்கள். இப்படியானக் குணங்கள் தாம் பெரியவர்கள் ஆனப் பின்னும் தமக்குள் இருந்துகொண்டு ஆளுமைகளாய் நம்மை செதுக்குகிறது.

இப்பொழுது வளர்ந்த பின் நமக்கு நோக்கம் இலக்கு எல்லாம் மாறலாம். ஆனால் அதற்கான முக்கியமான வார்ப்புகள் நமக்கு மனித குலத்திற்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது. வளரும் சூழல், வாழ்வியல் சூழல் காரணமாக அத்தைகையக் குணாதியசங்களை நாம் மட்டுப்படுத்திவிடுகிறோம். ஆனால் அவை மீண்டும் பிரவாகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒவ்வொரு தருணத்திலும் புரிந்து செயல்படும்படியான மனநிலையை வார்த்தெடுப்பது மட்டுமே.

குழந்தைமைக்குச் சென்று நாம் கைவிட்ட பல நல்ல குணங்களை மீட்டெடுப்போம்.

ஏனெனில் குழந்தைகளாய் பிறந்த போது வாழ்க்கை நமக்கு எந்த வித நோக்கத்தையும் இலக்கையும் தரவில்லை.

வளர, வளர நாம் தான் வாழ்க்கைக்கு இலக்கையும் நோக்கத்தையும் காண்பித்துக்கொடுக்கிறோம்.

ஒரு நல்ல இலக்கு ஒரு நல்ல வெற்றியைத்தரும். ஆனால் ஆளுமை என்பது வெறும் வெற்றி பெறுவது மட்டும் அல்ல…

 

தொடர்வோம்…..

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  8. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  9. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  10. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  11. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்