உலகிலேயே காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் குர்கான் நகரம்தான் முதலிடத்தில் உள்ளது. அத்துடன், உலகில் மிக மோசமான காற்று மாசு கொண்ட 10 இடங்களில் 7 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்று மாசு

வளர்ந்து வரும் நவீன உலகில் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுவருகிறது. அதிலும் குறிப்பாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு  காற்று  மாசுபாடு குறித்து ஒரு ஆய்வு நடத்தி, அதில் மிகவும்  மாசுபட்ட நகரம் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதல் 20 நகரத்தில் இந்தியாவின் 3 நகரங்கள் இடம்பெற்றிருந்தன. அவை, குவாலியர், டெல்லி மற்றும் அலஹாபாத்.

PM2.5 காற்று மாசு துகள்

காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப் பொறுத்து  காற்று  மாசுபாட்டை விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர்.  இந்தக் காற்று மாசுபாட்டை PM2.5 மற்றும் PM10  என்ற இரு வகை மாசு துகள்களினால் அளவிடலாம்.

முதலாவதாக மனிதனின் தலைமுடியில் 30இல் ஒரு பங்கு அளவுவில் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கக்கூடிய PM2.5 என்ற மாசு துகள்களில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் இவ்வகை துகள்கள் நுரையீரல்கள் மற்றும் இரத்தக் குழாய்களுக்குள் நுழைந்து மனிதர்களுக்கு அதிகளவு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. மேலும் இந்த PM2.5 துகள்களினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களுக்கும் நுரையீரல் புற்று நோய், பக்கவாதம், மாரடைப்பு, சுவாசக்கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு

உலகில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது ஒரு தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் நகரில் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் குர்கான் நகரம் தான், உலகிலேயே காற்று மாசு அதிகம் கொண்ட நகரம் என்ற பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் 10 நகரங்களில் 7 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றுள் 64 சதவீத நகரங்கள் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்று மாசு அளவை குறிப்பிடும் PM2.5 துகளுக்கு மேலாக உள்ளது.

இந்த பட்டியலில் குர்கானை தவிர, காசியாபாத், பாட்னா, பிவாடி, லக்னோ உள்ளிட்ட இந்திய நகரங்களும் இடம்பிடித்துள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு நகரங்களும், சீனாவை சேர்ந்த ஒரு நகரமும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் அடங்கும். டெல்லி, இந்த பட்டியலில் 11ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வியக்கும் படியாக உள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் இந்தப்பட்டியலில் 2013இல் முதன்மையாக இருந்த நிலையில் தற்போது, பெய்ஜிங்கில் காற்று மாசு 40 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.