கொரோனா covid-19 வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரிழப்பு மற்றும் நோயின் பரவும் தன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில் கர்ப்பிணி பெண்களிடம் இருந்து குழந்தைகளுக்கு இந்நோய் பரவுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சினாவின் வூகான் மகாணத்தில் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமலுடன் பல கர்ப்பிணி பெண்கள் இந்நோய் எங்கள் குழந்தைகளுக்கும் பரவுமா என்ற அச்சத்தில் இருந்தார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஹவுசாங் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்ப பிரிவினர் கடந்தமாதம் இந்த ஆய்வு முயற்சியில் இறங்கினார்கள்.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி இந்நோய் தாயிடமிருந்து குழந்தைகளுக்குப் பரவாது என தெரியவந்துள்ளது. மேலும் அப்பல்கலைக்கழக மருத்துவர் யாலன் லியூ கூறும்போது, “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு கர்ப்பிணி பெண்களை வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு பெண்களுக்குமே நல்ல முறையில் குழந்தைகள் பிறந்தது. அதில் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் சிறு சுவாச கோளாறு இருந்தது. இந்த சுவாச கோளாறும் கொரோனாவால் உருவானதாக உறுதியாக சொல்லமுடியாது. மற்றப்படி குழந்தைகள் இப்போது நலமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

“இதற்கு பிறகு 9 கர்ப்பிணி பெண்களுக்கு நாங்கள் நல்ல முறையில் பிரசவம் செய்தோம். அதில் 8 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமும் ஒருவருக்கும் மட்டும் சுக பிரசவமும் நடந்தது. அனைத்து குழந்தைகளுமே தற்போது நலமாக உள்ளனர். மேலும் மற்ற நோய்களைப் போல உதாரணத்திற்கு சார்ஸ், மெர்ஸ் (SARS,MERS) இந்த நோய் தாயிடமிருந்து குழந்தைகளுக்குப் பரவுவதில்லை. அந்த நோய்களில் கருச்சிதைவு, பிரசவத்தின்போது உயிரிழப்பு போன்றவை நடந்தது ஆனால் கொரோனா தொற்று அப்படிப்பட்டதல்ல” என்றும் கூறினார்.