தங்கம், மஞ்சள் கலந்த சிவப்பை நிறத்தை உமிழக்கூடிய ஒரு சாதாரணம் உலோகமாகத்தான் இருந்துவந்தது. நாகரீக வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மனிதன் இன்று பண்டமாற்று முறையின் அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறான். பல நாடுகளில் இன்று தங்கம் ஒரு முக்கிய உலோகமாக உருவெடுத்துள்ளது. அதன் பயன் அறியாதிருந்த நாடுகள் கூட இன்று பல கோடிகளை கொட்டி உற்பத்திமுறையில் சாதனைப் படைத்துவருகிறது.

பொதுவாக தங்கத்தை காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்க உலோகம் கண்டுபிடித்த ஆரம்ப முதலே இந்தியர்கள் அதில் பல ஆபரணங்கள் செய்து பயன்படுத்திவந்தனர். தங்கத்தின் மதிப்பு என்பதை தாண்டி தங்கத்தால் இத்தனைவிதமான ஆபரணங்கள் செய்ய முடியும் என்பதை உலத்திற்கு சொல்லிக்கொடுத்த நாடாக இந்தியா இருந்துவந்துள்ளது. நாளடைவில் தங்கத்தின் இருப்பை பொறுத்து ஒரு நாட்டின் பணமதிப்பை கணக்கிடும் அளவிற்கு தங்கத்தின் வளர்ச்சி உலகமெங்கும் பரவிவிட்டது.

ஆமாம்! ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி)யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்திய ரூபாய் மதிப்பின் இயக்கம் தங்கத்தின் விலைகளில் மாற்றத்தைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய காரணியாகும். எப்போதுமே அமெரிக்க டாலர்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதே போல ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது தங்கத்தின் விலை குறையும்.

அதாவது தங்கத்தின் இருப்பும் நாட்டின் பணமதிப்பும் எப்போது இறங்கும் ஏறும் என சொல்லமுடியாது. உலக வர்த்தகத்தில் அந்ததந்த நாட்டின் பணமதிப்பு குறையும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கிறது.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக சீனா விளங்குகிறது. சீனா 520 டன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும், உருசியாவும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன.

2014 ஆம் ஆண்டில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க உற்பத்தியில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.

உலக முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினை காரணமாக பல நாடுகள் தங்களின் வளத்தை பதுக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக எண்ணெய் வளமிக்க நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைத்துக்கொண்டுள்ளது, தங்க வளமிக்க நாடுகள் தங்க உற்பத்தியை குறைத்துக்கொண்டுள்ளது. பல நாடுகள் தங்களின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் குறிப்பிட்ட அளவு கவன செலுத்தாமல் அதாவது உலக வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருக்கும்போது உலக பங்கு சந்தையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்த வகையில்தான் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் தங்கத்தின்மீது திரும்புகிறது. தங்கத்தின் இருப்பு என்பது ஏற்கனவே பார்த்ததுபோல் நாட்டின் பணமதிப்பை வலுபடுத்தக்கூடியது. இதன் காரணமாக சீனா, ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் மீது முதலீடு இருமடங்கு அதிகம் செய்துள்ளது.

சீனா, ரஷியா நாடுகளில் பொதுவான கரன்சியான டாலரை விற்று தங்கமாக மாற்றிக் கொள்கின்றனர். சீனா-அமெரிக்க இடையே வர்த்தகப் போர் நடைபெறுகிறது. இந்த நாடுகள் தங்கள் கரன்சிகளின் மதிப்பைக் குறைத்துக் கொள்கின்றன.  இதனால் பொருளாதார மந்தம் ஏற்படுமோ என்ற  நிலை உள்ளது. மேலும், உலகப் பொருளாதார மொத்த வளர்ச்சி விகிதம் 3.6 விகிதத்திலிருந்து 3.5 ஆகக் குறையும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. இதுபோன்ற நிலையற்ற தன்மையால், தங்கத்தின் முதலீடு அதிகரித்து, விலையும் உயர்கிறது.

இதுமட்டுமில்லாமல் 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவித்தார். 10 சதவிகிதமாக இருந்த வரியைச் 4 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என பட்ஜெட்டுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கைக்கு சரியாக செயல்படுத்தாமல் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2 சதவிகிதம் அதிகரித்து 12 சதவிகிதம் ஆக்கப்பட்டது. தற்போது உயர்ந்துகொண்டிருக்கும் தங்க விலைக்கு இதுவும் ஒரு காரணியாகும்.

சமீப நாள்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இது தங்கத்தின் விலை உயர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் போக்கில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற கலாச்சார பண்பாடுகள் நிறைந்த நாடுகளில் தங்கம் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கெடுப்பதை விட பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிதும் பயன்பட்டுவருகிறது. பிறப்பு முதல் இறப்புவரை மக்களின் அனைத்து செயல்களிலும் தங்கம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தங்கத்தின் விலை உயரும்போது, “மக்கள் தங்கத்தின் விலை குறையட்டும் பிறகு ஆபரணங்கள் வாங்கிக்கொள்ளலாம்” என்று கூறுவதெல்லாம் வெறும் கணிப்பு மட்டுமே அன்றி அவர்களுக்கு உலக பொருளாதார சந்தை வர்த்தக முறையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஒரு பவுன் தங்கத்தின் விலை கடகடவென உயர்ந்து வருகிறது. ஒரு சமமான உயர்வுதான் என்றாலும் தங்கத்தின் மதிப்பு உலக பொருளாதாரத்தில் பெரும் பங்கை தற்போது நிவர்த்தி செய்துள்ளது.

2011ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்துகொண்டே போனது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 18, 2011ல் முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை எட்டியது. அடுத்த இரண்டே நாட்களில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 21 ஆயிரத்தையும் தாண்டியது. 2017ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 22,000 ரூபாயாக அதிகரித்தது. அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்துவந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்டில் 27 ஆயிரத்தைக் தாண்டி, 28 ஆயிரத்தையும் மிஞ்சிவிட்டது.  இந்திய சுதந்திரமடைந்த இந்த 70 ஆண்டுகளில் தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது அதேபோல் அதன் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இந்திய மக்கள் தங்கத்தின்மீது கொண்டுள்ள அளவுகடந்த மோகம்தான். தங்கத்தின் மீதான தேவை அதிகமாக இருப்பதால், அதன் நுகர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அன்றாட உணவு பழக்கவழக்கங்களின் தேவையும் தற்போது இந்தியாவில் நடுத்தர குடும்பத்தில் புழங்கும் தங்கத்தின் தேவையும் ஒன்றாகியுள்ளது. இனிவரும் காலங்களில் தங்கத்தின்மீதான உலக பொருளாதார சந்தை மதிப்பும் அதில் தங்கத்தின் முதலீடும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு சாமானியனின் தங்கத்தின்மீதான தன்னுடைய பார்வையை மாற்றிக்கொள்கிற அது ஒரு எட்டாக் கனியாக நினைக்ககூடிய காலமும் வெகு தொலைவில் இல்லை.