உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது 238 கோடியாக உள்ளது. இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு. இதே வேகத்தில் ஃபேஸ்புக் வளர்ந்தால் ஃபேஸ்புக்கில் இறந்துபோன பயனாளர்களின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டுக்குள் 490 கோடியாக இருக்கும். அப்போது ஃபேஸ்புக்தான்  உலகின் மிகப்பெரிய மயானமாக இருக்கும் என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு கணித்திருக்கிறது.

இறந்துபோனவர்கள் உயிரோடிருப்பவர்களை இன்னும் 50 வருடங்களில் மிஞ்சிவிடுவார்கள். இது நாம் இந்த டிஜிட்டல் நாகரீகத்தில் வாழ்வதால் ஏற்படும் தாக்கங்கள் என ஆக்ஸ்ஃபோர்ட் இன்டெர்நெட் இன்ஸ்ட்டிடியூட் Oxford Internet Institute (OII) ஐச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு, 2018 இல் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையின்படி 2100 இல் 140 கோடி பேர் இறந்துவிடுவார்கள். இந்த சூழலில் 2070 இல் இறந்துபோனவர்களே உயிரோடு இருப்பவர்களை விட அதிகமாக இருப்பர் என்றும் கூறுகிறது.

“இந்த புள்ளிவிவரம் புதிய மற்றும் சிக்கலான கேள்விகளை எழுப்புகிறது. அப்படி இறந்துபோனவர்களின் தகவல்களின் மீது யாருக்கு உரிமை உள்ளது? அவர்களுடைய நண்பர்கள், குடும்ப நலனை முன்னிட்டு எப்படி அதைக் கையாளுவது? அவரைப்பற்றிய தகவலைப் பிற்காலத்தில் மற்றவர்கள் அறிந்துகொள்வது எப்படி?” என (OII) ஐச் சேர்ந்த ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் கார்ல் ஓஹ்மேன் கேள்வி எழுப்புகிறார்.

இரண்டு சூழ்நிலைகள்

இந்த ஆய்வு இரண்டு சாத்தியமான சூழ்நிலைகளை நமக்குக் கொடுக்கிறது. எதிர்காலத்தின் போக்கு இந்த இரண்டு சூழ்நிலைகளுக்கு நடுவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

முதல் சூழ்நிலையின் கணிப்புப்படி, 2018 இல் இருந்து எந்த ஒரு புதிய பயனாளரும் (யூசர்) ஃபேஸ்புக்கில் இணையவில்லை என வைத்துக்கொள்வோம். அப்படி இருக்கும்பட்சத்தில் ஆசியாவில் இருக்கும் பயனாளர்களின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் மொத்த பயனாளர்களில் இறந்தவர்களின் விகிதம் 44% ஆக இருக்கும். இதில் பாதி ப்ரோஃபைல்கள் இந்தியாவிலிருந்தும் இந்தோனேசியாவிலிருந்தும் வருகிறது. 2100 இல் இந்த இரு நாடுகளின் இறந்த பயனாளர்களின் எண்ணிக்கை மட்டுமே 27.9 கோடியாக இருக்கும் என ஆய்வு கூறுகிறது.

இரண்டாவது சூழ்நிலை, ஃபேஸ்புக் தற்போதிருக்கும் வேகத்தின்படி வருடத்திற்கு 13% உலகளவில் வளர்ச்சியடையும். இது ஒவ்வொரு நாட்டிலும் அதன் சந்தை அளவு பூர்த்தி அடையும்வரை நிகழும்.

இந்த நிலைமைகளின் கீழ் ஆப்ரிக்காவில் இறந்த பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

“நமது டிஜிட்டல் மிச்சங்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்பது வருங்காலத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதிக்கும். ஏனெனில் நாம் அனைவரும் ஒருநாள் மரித்துப்போய் நமது தகவல்களை விட்டுச் செல்வோம்.” என ஓஹ்மேன் கூறுகிறார்.

இந்த கணிப்புகள் அனைத்தும் ஐ.நா சபை கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்த மக்கள் தொகையில் இறப்பு விகிதம் அவர்கள் வயதின் அடிப்படையில் அமைந்தது. ஃபேஸ்புக்கின் தகவல் அந்த நிறுவனத்தின் பயனீட்டாளர்களின் அடிப்படையில் அமைந்தது.

தொடர்ந்து குவியும் இறந்துபோன பயனாளர்களின் மலையளவு தகவல்களைச் சீர்படுத்த ஃபேஸ்புக்,  வரலாற்று ஆய்வாளர்கள், ஆவணங்களைப் பாதுகாப்பவர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் நெறிமுறையாளர்களை அழைக்க வேண்டும். இது அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிலையான தீர்வு இல்லை மாறாக ஒரு நூறாண்டுக்கான தீர்வு என டேவிட் வாட்சன் எனும் (OII) ஐச் சேர்ந்த மற்றொரு ஆய்வாளர் கூறுகிறார்.

இந்த சூழ்நிலை நமக்கு ஒரு திடுக்கிடலைத் தந்தாலும், நிச்சயம் இதற்கான கவனத்தையும் தீர்வையும் எதிர்பார்த்து தற்போது அது காத்திருக்கிறது. அதை நாம் அலட்சியம் செய்யமுடியாது.