ஜூலியன் அசாங்கேவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல மறுத்த செல்சியா மானிங்கை சிறையில் அடிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, மானிங் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் அவருக்குத் தினமும் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

அதற்கு மானிங் “நான் இந்த விஷயத்தில் எனது கருத்தை மாற்றுவதற்கு நான் பட்டினி கிடந்து இறப்பேன். இதை நான் பேச்சுக்குச் சொல்லவில்லை நான் சொன்னபடியே செய்வேன்” என்றார்.

அமெரிக்க இராணுவ புலனாய்வு நிபுணரான மானிங் 2010 இல் ராணுவ ரகசியங்களை வீக்கிலீக்ஸூக்கு ஒப்படைத்த குற்றத்திற்காக ஏற்கனவே எழு வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். மற்றொரு வழக்கில் சாட்சி சொல்ல மறுத்த குற்றத்திற்காகக் கடந்த வாரம் வரை 62 நாட்கள் சிறையிலிருந்தார்.

இந்த முறை அவர் சாட்சி சொல்ல மறுத்தால் அவருக்கு 30 நாட்கள் சிறைத் தண்டனையும் தினமும் 500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் அபராத தொகை தினமும் 1000 அமெரிக்க டாலராக அதிகரிக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

சாட்சி சொல்பவரை இவ்வளவு நாள் சிறையில் அடைத்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை என முன்னாள் எஃப்.பி.ஐ ஏஜெண்டும் அநீதிகளை வெளிக்கொண்டு வருபவருமான காலின் ரௌலி கூறினார். இந்த தீர்ப்பு 18 மாதங்களுக்கு நீடித்தால் அபராத தொகை மட்டுமே அரை மில்லியனைத் தொடும். இது மிகக் கடுமையானது என்றார்.

மேலும் காலின் ரௌலி “மானிங்கை சிறையில் அடைப்பது டிரம்ப் அரசின் சட்ட விரோதமான செயல். இப்போது அவர்களுக்கு அசாங்கேவை சிறையில் அடைக்க போதுமான சாதியங்கள் இல்லை. அதனால்தான் மானிங்கை அடிபணிய வைக்க முயலுகிறார்கள்.” என்றார்.

மானிங் 2013 ஆம் ஆண்டு உளவு பார்த்த குற்றத்தின் கீழ் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், ஆனால் அவரது தண்டனை ஜனாதிபதி பாரக் ஒபாமாவால் மன்னிக்கப்பட்டு மே 2017 ல் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேவை அமெரிக்காவிற்கு ஒப்படைக்க இந்த புதிய வழக்கைத்  தொடங்கி இருப்பதாகச் சந்தேகங்கள் எழுகின்றன. தற்போது அசாங்கே இங்கிலாந்தில் விசாரணைக்காக காத்திருக்கிறார். அசாங்கே அமெரிக்காவின் பெண்டகன் ராணுவ மையத்திலுள்ள கம்பியூடர்களில் உள்ள தகவலைத் திருடியதற்காக அதற்கு  மானிங் உதவியதாகவும் குற்றம்சாட்டபட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மானிங்க் “ நான் அந்தக் குற்றப்பத்திரிகையைப் படித்தேன் அதில் ஒரு ஆதாரமும் இல்லை. முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது என்றார்.

“அசாங்கே மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருக்கும்போது, இன்னொரு வழக்கின் நோக்கம் என்ன?” என்று பத்திரிகையாளர்களிடம் மானிங்க் கேட்டார். இந்த வழக்கு தற்போது உலகம் முழுவதும் கவனிக்கும் ஒரு வழக்காக மாறியுள்ளது. ஆனால் மானிங்க் எதற்கும் அஞ்சாமல் துணிந்து எதிர்கொள்வதாக அறிவித்தார்.