வனப்பகுதிக்குள் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளநிலையில், பழங்குடியின மக்களின் உரிமையை காக்க மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

பழங்குடியின மக்கள் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி, வாழும் வாழ்க்கை முறை என எல்லாமே பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டுதான் இருக்கின்றன. உலக மக்கள்தொகையில் 5 சதவிகிதத்தினர் பழங்குடியினர். ஆனால், மொத்த ஏழைகளில் இவர்கள் 15 சதவிகிதம் அளவில் உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இந்த மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இவர்கள் வாழும் பகுதிகள், வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நகரத்திற்குள் வசிப்பவர்களை விட, சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், வன விலங்குகளைப் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிப்பது பழங்குடியினர்தான். ஆனால், அவர்களில் பலரைக் கொத்தடிமைகளாகவும், சொற்பப் பணத்துக்கு உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் பணியாட்களாகவும் பயன்படுத்தி வருகிறது இந்தச் சமூகம்.

மலைப் பகுதிகளில் வன நிலங்களை ஆக்கிரமித்து கனிம நிறுவனங்கள், சொகுசு விடுதிகள் அமைப்பது, அம்மக்கள் மீது வன்முறைகள் பாய்வது, தீவிரவாதிகள் என்று சொல்லி அவர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்வது என்று பழங்குடியின மக்கள் மீது திணிக்கப்படும் வன்முறைகள் ஏராளம்.

நான்காவது இடத்தில் தமிழகம்

நாடு முழுவதும் தலித்துகள்,  பழங்குடியினர், சிறுபான்மையினர் போன்றவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதில், சில தாக்குதல்கள் அவர்களைக் கடுமையாக அவமதிக்கும் வகையிலும், கீழ்த்தரமாக நடத்தும் வகையிலும் இருக்கிறது. இதை வெறுக்கத்தக்கத் தாக்குதல் என்று அழைக்கிறார்கள். இந்த வகை தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாகச் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சாதி, மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் மீது நடத்தப்படும் குற்றங்களின் எண்ணிக்கையை ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் அமைப்பு, கடந்த ஆண்டின் முதல் மாதத்திலிருந்து ஜூன் வரை பதிவு செய்திருந்தது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 13ஆம் தேதி அறிக்கை ஒன்றை இந்த அமைப்பு வெளியிட்டிருந்தது. அதில் முதல் 6 மாதத்தில் மட்டும்  100க்கும் மேற்பட்ட வெறுப்புணர்வு குற்றங்கள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் 18 வெறுப்பு குற்றங்களோடு உத்தரப் பிரதேச  மாநிலம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அடுத்து இரண்டாவது இடத்தில் 13 குற்றங்களோடு குஜராத் மாநிலமும், ராஜஸ்தானில் 8 குற்றங்களும், தமிழ்நாடு, பீகாரில் தலா 7 குற்றங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பழங்குடியின மக்களை வெளியேற்ற உத்தரவு

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் தங்களது சொந்த சட்டத்தை பயன்படுத்தி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் பழங்குடியினர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காடுகள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசின் வன உரிமை சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் இன்று (பிப்ரவரி 22) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் தாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வனப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக அவசரச் சட்டம் ஒன்றை இயற்றுமாறு மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன உரிமைகள் சட்டம்

வன உரிமைகள் சட்டம் 2006இன் படி பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டப்பூர்வமாக விண்ணப்பித்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியா முழுவதும் சுமார் 43 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 19 லட்சம் பேர் மட்டுமே வனப்பகுதியில் குடியிருக்க உரிமையுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 24 லட்சம் பழங்குடியினர் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த தமது வனப்பகுதிகளைவிட்டு விரட்டப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினரை வனப்பகுதிகளிலிருந்து விரட்ட வேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்ட வேண்டும் என திட்டமிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் சதிசெய்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதற்கு உதவுவதாக அமைந்திருப்பது வேதனை அளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சட்டம் இயற்ற வேண்டும்

மேலும் அந்த அறிக்கையில், பழங்குடியினர் யார் என்பதை உறுதிசெய்ய வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் கிராம சபைகள் நிறைவேற்றும் தீர்மானத்தையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என வன உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கூறியுள்ளது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை புறக்கணித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர் சுமார் 10 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே, பழங்குடியினரின் பாரம்பரிய உரிமையைக் காக்க மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும், அதற்கு தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டிருந்த்து.

தனி கலாச்சராம் காக்கபட வேண்டும்

சுதந்திரம் என்பதையே வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த மூத்த குடிகளின் வாழ்க்கைக்கு உரிய உத்தரவாதம் கிடைக்க வேண்டும். அவர்களின் தனித்த கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். மேலும் அவர்களின் தனித்தன்மையைத் தொலைத்துவிடாமல், நவீன உலகின் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள், சுதந்திரம், உரிமைகள் ஆகியவை அச்சமூக மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கையும் எழுந்துள்ளது.