சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போனதையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்.பிக்கள் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

யார் இந்த முகிலன்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். கூடங்குளம் அணு உலை போராட்டம், நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிரான நடவடிக்கை, காவிரி நதிநீர் பாதுகாப்பு, ஆற்று மணல் கொள்ளைத் தடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன்.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நிலத்தடி நீர் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட முகிலனை கூடங்குளம் காவல்துறையினர் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்க்காக குரல் கொடுத்து வந்தார்.

கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ”கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?” என்ற தலைப்பில்  ஆவணப்படம் ஒன்றை கடந்த 15ஆம் தேதியன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பொதுமக்களுக்கு எவ்வித தொடர்புமும் இல்லை எனக்கூறிய முகிலன், காவல் துறை உயர் அதிகாரிகளும், வேதாந்தா நிறுவனத்தின் ஆட்களும்தான் இந்த வன்முறைக்கு காரணம் என ஆதாரங்களை வெளியிட்டார் முகிலன். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அத்தனை ஆதாரங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப் போவதாகவும் முகிலன் தெரிவித்திருந்தார்.

காணாமல் போன முகிலன்

 

கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு செல்வதாக திட்டமிட்டிருந்த முகிலனைக்  காணவில்லை என்று கடந்த சனிக்கிழமை தகவல் வெளியானது. கடந்த 15ஆம் தேதி இரவு 1.45 மணியில் இருந்து முகிலனின் செல்போன் உபயோகத்தில் இல்லை. அதன் பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. முகிலனின் மனைவிக்கும் இதுகுறித்து, எந்த தகவலும் தெரியவில்லை.

முகிலன் காணாமல் போய் மூன்று நாள்கள் ஆன நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்ற எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. இதைதொடர்ந்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

 விளக்கமளிக்க உத்தரவு

முகிலனை ஆஜர்படுத்தக்கோரி இன்று (பிப்ரவரி 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்.பிக்கள் இதுகுறித்து விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி, பிப்ரவரி 22ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் காவல்துறையால் கடத்தப்பட்டு மூன்று நாட்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.