திராவிடர் கழக  செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி அவர்கள்  நுழைவு தேர்வுகளில் உள்ள எதிர்மறை மதிப்பெண் முறைக்கு தொடர்ந்த வழக்கில்  தமிழ்நாடு உயர்நீதிமன்றம் அவர் வாதத்தை ஏற்று கொண்டு எதிர்மறை  மதிப்பெண்கள் தேர்வுக்கு அவசியமற்ற ஒன்று என்று தீர்ப்பளித்துள்ளது.

 

வரவேற்கப்படவேண்டிய இந்த தீர்ப்புக்கு எதிராக கிளம்பும் வாதங்கள் விசித்திரமாக இருக்கின்றன.இந்த தீர்ப்பு  கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் தூக்கி எறியப்படும் என்று  இதன் எதிர்ப்பாளர்கள் கொக்கரிப்பது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் தருகிறது.

 

எதிர்மறை மதிப்பெண்கள் என்பதே குரூரமான ஒரு வழிமுறை தான்.இதனால் என்ன பயன் என்பதற்கு எந்தவித பதிலும் கிடையாது .ஒரே பதிலை அனைத்து வினாக்களுக்கும் எழுதினாலும் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று விடுவர் என்ற விசித்திர வாதம் தான் முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு விடையும் 25 சதவீதத்துக்கு மேலே கீழே இருக்கும் வகையில் தான் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன என்றால் ஐம்பது,அறுவது  சதவீதத்துக்கு மேல் ஒரே விடையை சுழித்த விடைத்தாள்களை நிராகரித்தால் ,பெரும் குற்றமாக முன் நிறுத்தப்படும் இந்த குறைபாட்டை தவிர்த்து விடலாம்.

 

இந்த தீர்ப்பினை எதிர்க்கும் கூட்டத்தின் நோக்கம் மாணவர் நலன் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.நுழைவு தேர்வு,குறிப்பாக எதிர்மறை மதிப்பெண்கள் உள்ள நுழைவு தேர்வில் மாணவிகள் மற்றும் இட ஒதுக்கீடு பெரும் பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவிகள்   வெற்றி பெறுவது மிகவும் குறைவாக இருப்பதால் கல்வியை குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே வைத்து கொண்டிருக்கும் கூட்டம் இது போன்ற சாடிஸ வழிமுறைகளை கட்டாயமாக முன் நிறுத்துகிறது.

 

எதிர்மறை மதிப்பெண்கள் தொடர் பயிற்சி இல்லாத,கோச்சிங் பாக்டரிகளுக்கு செல்லாத மாணவ மாணவிகளுக்கு தேர்வின் மீது மிகுந்த பயத்தை தருகிறது.சிறிது சந்தேகம் இருந்தாலும் விடையை தரலாமா ,விட்டு விடலாமா என்று தயங்க வைத்து அதன் மீது நேரம் அதிகமாக செலவிடும் சூழல் உருவாக தான் இந்த சாடிஸ வழிமுறை பயன்படுகிறது

 

நூறு முறை கோச்சிங் பாக்டரிகளில் எதிர்மறை மதிப்பெண்கள் கொண்ட தேர்வை எழுதி பயிற்சி பெற்றவர்கள் அப்படி செய்ய இயலாத மாணவ மாணவிகளை விட மிக எளிதாக இந்த தேர்வுகளில் தேர்ச்சியும்,அதிக மதிப்பெண்களும் பெற்று விடுகிறார்கள்.நீட்,IITJEE போன்ற தேர்வுகளில் மாணவிகளும் ,இடஒதுக்கீடு பெரும் வகுப்புகளை சார்ந்தவர்களும் மிக குறைவான மதிப்பெண்களை பெற இதுவே முக்கிய காரணம்.

 

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்களை விட முழு  மதிப்பெண்களை அதிக எண்ணிக்கையில் பெரும் மாணவிகள் iitjee போன்ற தேர்வுகளில் பத்து சதவீத இடம் கூட பிடிக்க இயலாத சூழலின் காரணம் இது தான்.

 

நுழைவு தேர்வே அவசியமற்ற தேவையற்ற ஒன்று எனும் நிலையில் அதில் எதிர்மறை மதிப்பெண்களை பள்ளி மாணவ மாணவியர் எழுதும் தேர்வுகளில் கட்டாயமாக்க முயற்சிப்பவர்களை சாடிஸ்ட்கள் என்று அழைத்தால் தவறா ?