தேசிய புள்ளியியல் துறையில் இன்றைக்கு ( 31/5/21) பிஜேபியினர் மற்றும் பிஜேபியின் ஆதரவாளர்களுக்குப் புத்தியில் உரைக்கும்படியான அறிக்கை ஒன்றை தந்திருக்கிறார்கள். அது இந்திய நாட்டின் கடந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அளவைச் சொல்லியிருக்கிறார்கள். சுருக்கமாக GDP .  கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் -7.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அந்த 7.3 சதவீதத்திற்குமுன் இருப்பது வெறும் கோடு அல்ல. அது மைனஸ் அதாவது எதிர்மறையான குறியீடு. இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் கடந்த வருடத்தில் நம் தேசத்தின் பொருளாதார வீழ்ச்சி மைனஸ் எதிர்மறை 7.3 சதவீதமாக விழுந்துள்ளது. அதாவது அதலபாதாளம்.

இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்லக்கூடும். ஏனென்றால் கடைசி நிதியாண்டின் கடைசி காலாண்டில் ( ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து மார்ச் வரை கணக்கிடப்படும்)  ஜனவரி 21ல் நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சியில் ஜனவரி பிப்ரவரி மார்ச்சில் கூடும் ஆனால் ஒட்டுமொத்தமாகக் குறைந்திருக்கும். காரணம் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் 20 முதல் ஜூன் 20 வரை கொரொனாவின் முதல் அலை தாக்கியிருந்ததால் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்ததால் குறையலாம் என்று சாக்கு போக்கு சொல்லியிருந்தார்கள்.

இப்பொழுது அதைத்தான் தேசிய புள்ளியியல் துறையின் தரவு சொல்கிறது. மைனஸ் 7.3 சதவீதம் என்பது கடந்த 2020-21 நிதியாண்டிற்கான பொருளாதார வீழ்ச்சி. இதற்கு பிஜேபியினர் சொல்வது ஒட்டு மொத்த உலகமே கொரோனா கிருமியால் ஸ்தம்பிக்கும்பொழுது பாவம் மோடி மட்டும் என்ன செய்வார் என்பது தான் அவர்களது கருத்து.

ஆனால், மத்திய அரசாக இருக்கும் பிஜேபியினர் கொடுத்திருக்கும் ஆவணப்படியே பார்த்தாலும் 2016-17 ஆண்டிற்கான ஜிடிபி 8.3 சதவீதமாக இருந்தது அடுத்து அடுத்து வந்த ஆண்டுகளில் 2017-18 ல் 7 சதவீதமாகவும், 2018-19ல் 6.1 ஆகவும், 2019-20 ல் 4.2 ஆகவும் குறைந்துள்ளது.

அதாவது உலகத்தில் கொரோனா என்ற கிருமி உலகப் பொருளாதாரத்தைச் சூறையாடுவதற்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரத்தை பிஜேபி என்ற கிருமி சூறையாட ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் கொடுத்த தரவுகளே அதற்கு சாட்சி. இன்று வந்திருக்கும் தரவின் அடிப்படையில் பார்த்தாலும் பொருளாதாரச் சரிவு இருக்கலாம். ஆனால் ஒரே ஆண்டில் ஒரு தேசத்தின் பொருளாதார நிலையை 40 ஆண்டுகளுக்குப் பின் கொண்டு போகமுடியாது.

ஒட்டு மொத்தத் தரவுகளின் படி பார்த்தாலும் பிஜேபியின் முகமாய் மோடி யின் தலைமையில் இந்தியா படு பாதாளத்திற்கு வீழ்ந்துள்ளது என்பது உண்மை. அதை அவர்கள் சொன்னது போல் , கொரோனாவிற்குப் பின் அல்ல. எப்பொழுது பிஜேபி அரியணையில் ஏறியதோ, அன்றிலிருந்தே தேசத்தின் பொருளாதாரத்தின் ஸ்திரம் அடி வாங்க ஆரம்பித்துவிட்டது.

அப்படி அவர்கள் கருத்துப்படி பார்த்தாலும் இதே கொரோனா காலத்திலும் அமெரிக்காவும் , பிஜேபியினர் ஜென்ம விரோதியாய் கட்டமைக்கும் சீனாவும் தங்களது பொருளாதாரத்தைத் தக்கவைத்துள்ளனர். சரி, அவர்களையும் விடுங்கள். அவர்கள் பெரிய இடம்.

இதே காலகட்டத்தில், அதாவது பிஜேபியினர் உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கிறது அதனால் தான் அவர்களது மேதைமை தலைவரால் நல்ல நிலையை எட்ட முடியவில்லை என்னும் இதே காலகட்டத்தில் ஜெர்மனி என்ற நாடு நான்கு டிரில்லியன் டாலர் உற்பத்தி குறியீட்டை முதன் முதலாக எட்டியுள்ளது.

நெதர் லாந்து என்ற சிறிய நாடு ஒரு டிரில்லியன் டாலர் உற்பத்திக்குள் இதே காலகட்டத்தில் முதன் முதலாக நுழைந்துள்ளது.

ஆனால், தேசத்தையே கட்டியாளும் திறமை வாய்ந்தவர் என்று பிஜேபியினரால் கட்டமைக்கப்படும் மோடியால் இந்தியாவை கீழே தள்ளிவிடத்தான் முடிந்துள்ளது.

தேசத்தின் நலனும் தேசத்தின் பாதுகாப்பும் தான் பிரதானம் என்றே மூளை சலவை செய்யப்படும் பிஜேபி ஆதரவாளர்கள் , இப்படி  நமது தேசம் பொருளாதாரத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து கீழே விழுவதை எப்படி பார்த்து பொறுமையாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி தான் ஒரு வல்லரசின் நாயகன் என்று காட்டிக்கொண்ட ஒரு எதேச்சதிகாரியின் கால்மாட்டில் அவரது சொந்த மக்களுக்குத் தடுப்பூசியைத் தட்டுப்பாடின்றி வழங்க ஆளுமை இல்லை என வெளிநாட்டு பத்ரிகைகள் ஏளனம் செய்கின்றன.

ஒரு எதேச்சதிகாரி தன் அடையாளத்தை நிறுவும்வண்ணம் ஒரு புதிய கட்டிடத்தை மக்களின் இரத்தத்தால் கட்டியெழுப்பும் அதே தருணத்தில் அவரது கால்மாட்டில் தலைநகரத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் சாவதை வெளி நாட்டினர் அவர்களது பத்ரிகைகளில் எழுதி நம் தரத்தின் முகத்திரையைக் காண்பிக்கிறார்கள்.

பிஜேபி ஆளும் மாநிலத்தில் சடலங்கள் , ஓடும் வண்டியிலிருந்து விழுவதையும் காத்திருப்பதையும் காண்பித்து இந்தியா ஒரு மோசமான தலைமையின் கீழ் இருக்கிறது என உலகத்திற்குக் காண்பித்து உலகெங்கிலுமிருந்து நிவாரணப்பொருட்கள் வந்து குவிந்தன. அதைப் பிரித்துகொடுப்பதிலும் பிஜேபியின் மத்திய ஆட்சி சுணக்கம் காட்ட ஒரு அமெரிக்க பத்ரிகையாளர், எங்கள் மக்களின் வரிப்பணத்தில் அனுப்பப்பட்ட நிவாரண மற்றும் ஆக்ஸிஜன் உபகரணங்களை யார் யாருக்கு-க் கொடுத்தீர்கள் எனக் கோபமாகக் கேள்விகேட்டார். எல்லாம் வேடிக்கையாகவே இருக்கிறது .

நாட்டை ஆளும் இந்தியாவின் அரசர் கேமராவின் முன் பேசுவார். யாருமற்ற அறையில் இருக்கும் மைக் முன்பு பேசுவார். மக்களுடனோ, செய்தியாளர்களுடனோ பேசமாட்டார். அதற்கானத் திராணி அவருக்கு இல்லை.

அகன்ற மார்பினன் என்ற கட்டமைக்கப்பட்ட ஒருவரின் பொய் தோற்றம் உடைந்துகொண்டிருக்கிறது என்பதை அவரது ஆதரவாளர்கள் பார்க்கவேண்டும்.

ஏன் ஒருமுறை கூட செய்தியாளர்களையோ மக்களையோ பார்ப்பதில்லை என்பதை அவர்கள் தான் அவர்களது மேட்டிமை குறையாத அரசரிடம் கேட்கவேண்டும்.

ஜி எஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்திற்கான மான்யத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் தமிழ் நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு பழனிவேல்ராஜன் தியாகராஜன், இப்பொழுது பிஜேபியினரால் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்.

மக்கள் செத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கொரோனா மருந்துகளுக்கும் ஆக்ஸிஜனுக்கும் ஆக்ஸிஜன் உபகரணத்திற்கும் ஜி எஸ் டி வரி தேவையா என்று மக்களுக்கான ஒருவனாகக் குரல்கொடுத்தால், மக்களை பொய் சொல்லி ஏமாற்றும் , மக்களின் விரோத ஆட்சியாளர்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்.

இக்கட்டான நிலையிலும், மக்கள் மீது வரி சுமத்தி அவர்களை அல்லலுக்கு உள்ளாக்கும் குரூர மனப்பான்மை உள்ள , எதேச்சதிகார ஃபாசிச ஒன்றிய அரசிடமிருந்து மக்களுக்கானச் சலுகைகளைக் கேட்டால் அப்படித்தான் தாக்கப்படுவார்கள்.

எதிர் கேள்வி கேட்பவர்களை முடக்குவதும், தாக்குவதும் தான் ஃபாசிச ஆட்சியாளர்களின் வழக்கம்.

இந்த நிலையிலும் ஏழு ஆண்டுகள் ஆட்சி நிறைவுபெறும் நாளில், தன்னுடைய ஆட்சியில் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று ஒருவரால் சொல்லமுடிகிறது என்றால், நம்மை ஆளும் அரசு நம்மிடம் பொய் சொல்லத் தயங்காத அரசு என்பது நிரூபணம் ஆகிறது.

ஒருவன் தெரியாமல் பொய் சொல்லுவதற்கும் தெரிந்தே பொய் சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மக்கள் செத்துவிட்டார்கள். மீதி மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் பிழைப்போமா என்று பயந்துகொண்டிருக்கிறார்கள். பொருளாதாரமும் கீழே பாதாளத்தில் கடக்கிறது.

எல்லாவற்றிற்கும் பிரதமரும் அவரை ஆட்டுவிக்கும் பிஜேபி போன்ற மதவாதிகளும் அவரது ஆதரவாளர்களுமே பொறுப்பு.

வாட்சப் களில், டீ கடைகளில் பொது விவாதங்களில் பிஜேபி ஆதரவு ஜனங்கள் என்று ஓர் இனம் உண்டு. எப்பொழுதும் தேசத்தின் பாதுகாப்பை நம்மிடம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் அந்த இனம். அவர்கள் , இந்த த் தேசத்தின் பொருளாதாரம் பிஜேபியாலும் மோடியாலும் அடகு வைக்கப்படுவதற்கு எப்படி பதில் சொல்லப்போகிறார்கள். அவர்களது மனச்சாட்சியை யார் தட்டுவது.

அவர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறது என்பதே கட்டமைக்கப்பட்ட பொய் தானே.