சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி முடிவுகளை நேச்சர் எனும் விஞ்ஞான பத்திரிக்கையில் சமர்ப்பித்தனர். அதில் ஸ்டராய்ட் சொட்டு மருந்து மூலம் கண்புரையைச் சுருக்கவும் கலைக்கவும் செய்யலாம் எனப் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

உலகெங்கிலும் பார்வையின்மைக்கு தற்போது கண்புரைதான் முக்கிய காரணமாக உள்ளது. இதுவரை கண்புரையை அறுவை சிகிச்சைமூலம் மட்டுமே நீக்க முடியும் என்ற நிலைமை உள்ளது. அறுவை சிகிச்சைமுறை எளிமையாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தாலும் நோயாளிகளுக்கு அது அசௌகரியமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கிறது.

உலகம் முழுவதும் 3.24 கோடி மக்கள் பார்வையில்லாமல் இருக்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டோர் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள். என  ஃப்ரெட் ஹாலோஸ் ஃபவுண்டேஷன் (Fred Hollows foundation) தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 40 வயதைத் தாண்டிய 22 இலட்சம் பேருக்குக் கண்புரை உள்ளது என அமெரிக்க அகாடெமி ஆஃப் ஆப்தமாலஜி  கூறுகிறது.

இதில் கவலை தரக்கூடிய செய்தி என்னவென்றால் 90 சதவீதம் நோயாளிகள் வளரும் நாடுகளில் இருப்பதுதான். ஏழ்மை நாடுகளா இவை இருப்பதால் அங்கு மருத்துவ வசதிகள் இருப்பதில்லை. கண்புரையைக்  குணப்படுத்துவது என்பது அங்கு சாத்தியப்படாத நிலை உள்ளது. இதனால் பலர் பார்வையை இழந்துள்ளனர்.

இந்த ஆய்வு அறிக்கை கடந்த பத்தாண்டுகளில் நான் பார்த்த விரிவான நம்பிக்கை தரக்கூடிய அறிக்கை என எம்‌ஐடிி ஐ சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் ஜானதன் கிங் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை இதுவரை மனிதர்கள் மேல் நடத்தப்படவில்லை. ஆனால் அதற்குமுன் முயல்களுக்கும் நாய்களுக்கு நடத்தி மிக வெற்றிகரமாகக் கண்புரையை நீக்கியுள்ளனர். அடுத்து மனிதர்களுக்கும் இதைச் செயல்படுத்த முன்னேற்பாடுகள் நடக்கின்றன.

சொட்டு மருந்து மூலம் கண்புரையை நீக்கலாம் எனும் வாய்ப்பு மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும். இந்தக் கண்டுபிடிப்பு மனிதக் குலத்திற்கு நம்பிக்கை  ஒளி தரும் செயலாக இருக்கும்.