21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது அதிமுக. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி எந்தக் காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் என கடந்த 2014ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து விட்டு இன்று அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளது பாமக. ராமதாஸுக்கு வெட்கமே இல்லையா என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சூடுபிடிக்கும் அரசியல் களம்

2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கவுள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. எதிர் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணியை பலபடுத்திவரும் நிலையில், ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

அதிமுகபாஜக கூட்டணி?

தமிழகத்தில் அதிமுக, பாஜக., பாமக கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவந்த நிலையில், அதற்க்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்தக் கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்க்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (பிப்ரவரி 19) சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடைசி நேரத்தில் அமித் ஷா-வின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்ட நிலையில், பியூஷ் கோயல் இன்று மதியம் சென்னை வந்துள்ளார்.

அதிமுகபாமக கூட்டணி உறுதி

இதற்கிடையில், அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சி தலைவர்கள் இன்று சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்துள்ளனர். இதைதொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் அங்கு வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களுடன் கூட்டணி குறித்து பாமக பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு கூட்டணி உறுதிசெய்யப்பட்டது.

பாமகவுக்கு 7 தொகுதிகள்

கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபின் செய்தியாளர்களை சந்தித்தார் ஒ.பி.எஸ். அப்போது, ”2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணியாக இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்களவையில் ஒரு இடமும் பாமகவுக்கு ஒதுக்கப்படும். 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும். இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சியினரும் இன்று கையெழுத்திட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார் ஒ.பி.எஸ்.

மேற்கே உதித்த சூரியன்

”தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை ஒழிக்க வேண்டும். அதற்கான மாற்றுத் திட்டங்களை, நாங்கள் வைத்துள்ளோம். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி எந்தக் காலத்திலும் திராவிட கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி சேரமாட்டோம்” என்று கடந்த 2014ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார் ராமதாஸ்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி , கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது 24 ஊழல்கள் பட்டியல் அடங்கிய ஒரு மனுவை அளித்தார்.

தமிழ் நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,  தனியார் மின்சார கொள்முதல் ஊழல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழல் உள்ளிட்ட 24 ஊழல்கள் பட்டியல் அடங்கிய 15 பக்கங்களை கொண்ட மனுவை ஆளுனரிடம் அளித்திருந்தார்.

ராமதாஸுக்கு வெக்கமில்லை

”2009ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி. தற்போது, அமைந்திருக்கும் அதிமுக-பாமக கூட்டணிக்கும் அதே நிலைதான் ஏற்படும்” என்று விமர்சனம் செய்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்து, அதிமுகவின் கதை என்ற  புத்தகத்தை அண்மையில் வெளியிட்டவர் ராமதாஸ்.  வெட்கமே இல்லாமல் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். நாட்டு நலனை பற்றி ராமதாஸுக்கு கவலை இல்லை. பணத்தை பற்றிதான் கவலை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.