ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நான்கு முறை அவருக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத் துறை கைது செய்யாமலிருக்க உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது உச்ச நீதிமன்றம். முன் ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததால் அடுத்ததாக அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனினும், அமலாக்கத் துறை வழக்கு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு பெற சிதம்பரம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, சிதம்பரத்தை இன்றே காவலில் எடுக்க அமலாக்கத் துறை, ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.