இந்திய செய்தி ஊடகங்கள் ஒருகட்சி சார்பாகவும் பாசிசத்தின் குரலாகவும் ஒலிக்கின்றன என்ற குற்றச்சாட்டு பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக அர்னாப் கோஸ்வாமி போன்ற அறமற்றுச் செயல்படும் ஊடகவியலாளர்கள், மக்கள் செய்தி ஊடகங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினை தகர்த்துக்கொண்டுள்ளனர். ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி சர்ச்சைகளைக் கிளப்புவதையே நோக்கமாகக்கொண்டு செயல்படும் அவரது பாணியை தற்போது பலரும் பின்பற்றத் துவங்கியுள்ளனர்.

பொதுவாக, விவாதங்களின்போது உரக்கக் கூச்சலிடுவது, அபத்தமாகப் பிதற்றுவது என்று நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மற்றும் பார்வையாளர்களை எரிச்சலூட்டும்வகையில் நடந்துகொள்கிறார்கள் இவரை போன்றவர்கள். மேலும் பாஜகவின் கொடி தாங்கிகளாகவும் இந்துத்துவாவின் கையாளாகவும் செயல்பட்டுவருகின்றனர்.

தமிழ்த்திரையுலகில் முன்பு நடிகர் மோகனை ஏழைகளின் கமல் என்பார்கள்; அதுபோல தற்போது முகேஷ் அம்பானி நடத்தும் நியூஸ்18 ஊடகத்தின் அமிஷ் தேவ்கான் ஏழைகளின் அர்னாபாக உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பாக ஜீ நியூஸ் ஊடகத்தில் அவர் பணியாற்றியபோது, அவரது வெளிப்படையான பாஜக ஆதரவு நிலைப்பாட்டால் பல நேரங்களில் விமர்சனங்களைச் சந்தித்தார்.

தற்போது மீண்டும் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிரார். சமீபத்தில் அமிஷ் தேவ்கா நடத்திய 50 ஊடகவிவாதங்களின் தலைப்புகளை பிரபல நகைச்சுவையாளர், குணால் காம்ரா ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அவற்றுள் பாகிஸ்தானைத் தாக்குவதாக 17 தலைப்புகள், எதிர்கட்சிகளைத் தாக்குவதாக 24 தலைப்புகள், மோடி மற்றும் அமித்ஷாவைக் குளிர்விப்பதாக 6 தலைப்புகள் மற்றும் ராமர் கோவில் பற்றி 3 தலைப்புகள் அமைந்துள்ளன. இந்த எல்லா விவாதங்களையும் அவர் கையாண்ட விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனைப் பகிரும்போது அதன் தலைப்பாக “எனதருமை நண்பரே, உங்களை நான் தரகர் என்று அழைக்கிறேன்” என்று பொருள்தரும் இந்தி வாக்கியமான “மேன் துமேஹ்ன் ப*வா ஔர் டலால் க்ஹேடா ஹூன்” என்று குறிப்பிட்டிருந்தார். ஒருமுறை தேவ்கானுடனான விவாதத்தில் காங்கிரஸ் செய்திதொடர்பாளரான ராஜீவ் த்யாகி இவ்வாறு குறிப்பிட்டார். அதனை சுட்டிக்காட்டி நினைவூட்டும் விதமாகவே தற்போது குணால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவு ட்விட்டரில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்களால் நியூஸ்18-ஐ புறக்கணிப்போம் (#boycottnews18) என்று ட்ரெண்ட் கலைகட்டிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்னரே “Godi Media” என்று ஊடகங்கள் பலராலும் விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில் “Godi Media-வின் மலிவு வடிவம்” என்றும் “ஏழைகளின் அர்னாப்” என்றும் அமிஷ் தேவ்கான் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.