தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து பாஜக வேட்பாளராக அங்குப் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்குமாறு எம்.பி. கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் களம் கண்டனர். இதில், கனிமொழி வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் தமிழிசை.

கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகவும், அவை தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட போது தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார் தமிழிசை. மேலும், தனது கணவரும், மகனும் சிங்கப்பூர் குடிமகன்கள் என்பதால் அவர்களது வருமான வரி தொடர்பான விவரங்கள் பொருந்தாது என்று வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கணவர் மற்றும் மகனின் குடிமக்கள் பதிவுச் சான்றையும் கனிமொழி இணைக்காததால் அவரது வேட்புமனு குறைபாடானது என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்குக் கனிமொழி 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பதிலளிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையைச் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.