பரபரப்பான ஒரு நிகழ்வு இந்திய வைர சந்தையில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த இரு தினங்களாக +11 அளவு வைரங்களின் விலை உலகில் மிக அதிக வைரங்களை வெட்டி பாலிஷ் செய்யுமிடமான சூரத்தில் கிட்டத்தட்ட 30% வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்குக் காரணம் மும்பை சந்தையில் தமிழகத்தைச் சேர்ந்த வைர தரகர்கள் அதிக அளவில் இந்த வகை வைரங்களை விற்பது தான்.

சந்தையில் இதெல்லாம் தினமும் சகஜமாக நடைபெறும் நிகழ்வு தானே இதிலென்ன சிறப்பு என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் இதோ அந்த செய்தி. இது மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆளும் மோடி அரசு 2016 இல் அறிவித்தபோது அவசர அவசரமாக மும்பையில் இருக்கும் சில குறிப்பிட்ட வைர வியாபாரிகள் மூலம் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட கேரட் வைரங்களை வாங்கியதாக நம்பப்படுகிறது. அப்படி அவர் வாங்கிய வைரங்களை இன்று அவர் மறைந்த பிறகு அவருக்கு நெருங்கியவர்கள் சந்தையில் ஒரு இலட்சம் கேரட்டுக்கு மேற்பட்ட வைரங்களைக் கடந்த சில நாட்களாகக் குறைந்த விலைக்கு விற்பதாகச் சொல்கிறார்கள். இதனால் +11 வைரங்களின் மதிப்பு 30% சரிந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த வைர தரகர் ரகசியமான இந்த நிலவரத்தைப் பற்றிச் சொல்லும்போது, பிரெக்ஸிட் ஒப்பந்தத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகும் சைனா மற்றும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சூழலைக் கண்டும் வைர சந்தை மிகவும் கவனமாக இருக்கிறது. அப்படி எச்சரிக்கையாக இருந்தும் பாலிஷ் வைரங்களின் விலை குறைந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அளவுக்கு அதிகமான 11+ வைரங்கள் சந்தையில் விற்பது இன்னும் நிலைமையை மோசமாக்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்.

அவர் மேலும், 2016 இல் இந்த வைரங்களை அவர்கள் வாங்கிய விலையை விடக் குறைவாகவும் அவசரமாகவும் விற்கிறார்கள். இதனால் வைர உற்பத்தியாளர்கள் அடுத்துவரும் நாட்களில் எங்கே இது ஒரு விலை யுத்தத்திற்குக் கொண்டு செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள்.

மேஹ்ஜி பலாலா எனும் சூரத்தைச் சேர்ந்த வைர தரகர் கூறும்போது +11 வகை வைரங்கள் தான் சந்தையில் மிகப் பிரபலமான வைரம். சூரத்தில் இந்த வகையான வைரங்களே நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்யப்படுகின்றன. இதுவே ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன்படுகிறது. அப்படி இருக்கும்போது 1 இலட்சம் கேரட்டிற்கு மேலான வைரங்கள் இப்படி அதிரடியாக விற்கப்படுவது வைர நகை விலையைப் பெருமளவு பாதிக்கும் என்கிறார்.

சூரத் வைர அமைப்பின் சங்கத் தலைவர் பாபு குஜராத்தி கூறும்போது நாட்டின் பெரும் பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தைப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஒரு நீண்ட கால திட்டமாக வைரங்களில் முதலீடு செய்தார்கள். அந்த நேரத்தில் சில வைர தரகர்கள் மிக உயர்ந்த தரத்திலான வைரங்களைத் தேசத்திலிருக்கும் பல அரசியல் தலைவர்களுக்கு விற்கப்பட்டதாகச் சந்தேகங்கள் இருந்தன. ஆனால் இப்போது தமிழகத்தின் உயர்ந்த தலைவர் ஒருவருக்கு விற்கப்பட்ட வைரங்கள் இன்று சந்தையைக் குலைக்கும் அளவுக்கு விற்கப்படுவதிலிருந்து அவை உண்மை என நம்பத் தோன்றுகிறது என்றார்.

தேர்தல் காலத்தில் தமிழகத்திலிருந்து சந்தையில் குவியும் இந்த வைரங்கள் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. தேர்தலில் இந்தப் பணம் இறைக்கப்படலாம் என்ற ஐயங்கள் நிலவுகின்றன