முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு…

இப்போது நிலவுவது அசாதாரண சூழ்நிலை. இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத ஒரு வைரஸ், வளர்ந்த உலக நாடுகளையே அச்சுறுத்தும் கிருமி நம் மாநிலத்துக்குள் நுழைந்து அதன் ஆக்டோபஸ் கால்களை விரித்து பரவும்போது அதை முதல் கட்டத்திலேயே கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகள். ஆனால் தொடக்கம் முதலே பல்வேறு குழப்பங்கள். இந்த குழப்பங்கள் அனைத்தும் நிர்வாக ரீதியாக தங்கள் அரசு அடைந்த, அடைந்துகொண்டிருக்கும் தோல்விகள் என்பதால் தான் இந்த கடிதம்.

முதல் குழப்பம் எங்கே தொடங்கியது நினைவிருக்கிறதா? மழலையர் பள்ளிகள் அதாவது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்தபோது உண்டான குழப்பம். முதல் நாள் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவிக்கிறார்கள். அடுத்த நாள் விடுமுறை இல்லை என்று தாங்கள் சொல்லிவிட்டு அதற்கும் அடுத்த நாள் தாங்களே விடுமுறை என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக சொல்கிறீர்கள். இது பிச்சைக்காரன் மாமியார் மருமகள் காமெடியை தான் நினைவுபடுத்தியது. அப்போது தொடங்கிய குழப்பம் இப்போது வரை நீடிக்கிறது.

144 தடை உத்தரவு அறிவிப்பதற்கு முன்பு முதல் நாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கிறார். அடுத்த நாளே 24 மணி நேரத்துக்குள்ளாகவே மோசமான நிலையில் இருப்பதாக பதிவிடுகிறார். சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அணிய வேண்டிய மாஸ்க் அமைச்சர் முகத்தில். மிக சாதாரண மாஸ்க்குகள் உயிர் காக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் முகத்தில். அவர்களுக்கு ஏதாவது ஒன்று ஆனால் யார் பொறுப்பு? உலகம் முழுக்கவே கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்னும்போது அதை தங்கள் அமைச்சர் உணர்ந்தால் போல் தெரியவில்லையே…

மருத்துவர்களுக்கே நிலவும் மாஸ்க் தட்டுப்பாடு குறித்து தகவல் சொன்னால் அந்த மருத்துவருக்கு சஸ்பெண்ட் பரிசு. எதிர்ப்புகள் வந்ததும் சஸ்பெண்டை இடமாற்றமாக்கி இருக்கிறீர்கள்… இதை எல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அடுத்து மக்களை குழப்பும் அறிவிப்புகளும் நடைமுறைகளும்… சாலைகளை அடைத்துவிட்டு டோல்கேட் கட்டணம் ரத்து என்பதை ஏதோ மக்களுக்காக அறிவிப்பது போல அறிவிக்கிறீர்கள். ஓட்டல்களில் பார்சல் வாங்கலாம் என்று அறிவித்துவிட்டு வெளியில் வந்தால் அடி வெளுக்கிறீர்கள்…

மளிகை, காய்கறி கடைகளுக்கு நேர கட்டுப்பாடு என்று கலெக்டர்கள் அறிவிக்கிறார்கள். எப்போது துறை ரீதியான மீட்டிங் முடிந்த பின்பு. அது பெரிய செய்தியாவதை பார்த்துவிட்டு இல்லை இல்லை நேர கட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அறிவிக்கிறீர்கள்.அடுத்த நாளே நேர கட்டுப்பாட்டை தாங்களே அறிவிக்கிறீர்கள்.

பிளஸ்2 தேர்வு விஷயத்திலும் எத்தனை குழப்பங்கள்… எழுதாதவர்களுக்கு இப்போது மறுதேர்வு அறிவிப்பதற்கு பதிலாக தேர்வை தள்ளி வைக்கலாம் என்று எழுந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து இருக்கலாமே? மன அழுத்தத்துடன் தேர்வு எழுதியவர்கள் கதி?

யாரையும் அடிக்க கூடாது 144 தடை பற்றிவிளக்கி புரிய வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் காவலர்கள் இன்னமும்  லத்தி,கம்புகளை வைத்து கண்ணில் படுவோரை எல்லாம் வெறிகொண்டு தாக்குகிறார்கள்.

இதுவரை 9  நாட்களை தான் கடந்திருக்கிறோம்.இன்னும் 12 நாட்கள் இருக்கின்றன.ஒருவேளை நீடிக்க கூட வாய்ப்புண்டு. ஆனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நீங்கள் அறிவித்துள்ள ஆயிரமும் இரண்டாயிரமும் போதும் என்று நினைக்கிறீர்களா? அடுத்து வரும் நாட்கள் மிக கடுமையானவை. விலைவாசி ஏற்றம், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போவது என்று பஞ்சகாலத்துக்கே செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதை எப்படி சமாளிக்கபோகிறீர்கள்? அதற்கான எந்த தொலைநோக்கு திட்டமும் தங்கள் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. உங்களுக்கும் உங்கள் அமைச்சருக்கும் நடக்கும் ஈகோ யுத்தம் தான் உச்சத்துக்கு செல்லும். அதனால் பொதுமக்களுக்கு எத நன்மையும் ஏற்படபோவது இல்லை. பதிலாக குழப்பங்களும் பல்வேறு துன்பங்களும் தான் அதிகரிக்க போகின்றன.

தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வார்கள். பட்டினி சாவுகள் நிகழுமோ என்ற பயம் ஏற்படுகிறது. வாழ்வாதாரம் இழந்த வடமாநில தொழிலாளர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

ஒருவேளை சாப்பாட்டுக்காக ஒருநாள் முழுக்க உழைக்க வேண்டி இருக்கும் அடித்தட்டு மக்கள் ஆதரவு தங்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டீர்களா?மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். காரணம் பெரும்பான்மை அவர்கள் தான். அடுத்த 10 நாட்களுக்கு பின்னர் என்ன நடக்கும்,அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்று சிந்தித்து செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கடிதத்தை முடிக்கிறேன்.

இப்படிக்கு

புத்தன்