ந்தியாவில் வாழும் பல கோடி மக்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை எடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. உலகிலே அதிக லாபத்தில் இயங்கும் ஒரு இந்திய நிறுவனம் எல்ஐசி மட்டும்தான். இப்படிப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை தனியார்மயப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு என்ன சாதிக்கும் என்று தெரியவில்லை.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்காக என்ன என்ன முயற்சியெல்லாம் எடுக்கமுடியுமோ அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவாய் வரக்கூடிய அனைத்து வழிகளையும் முடக்கும் விதமாக ஒரு மட்டமான பட்ஜெட் தாக்குதலை மத்திய அரசு எடுத்திருக்கிறது என பல பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருந்தும் எதற்கும் மசியாமல் தன் போக்குக்கு  ‘பொருளாதார நெருக்கடி’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு லாபம் தரும் அனைத்து நிறுவனங்களையும் திவால் ஆக்கும் முயற்சியையும் தனியார்மயபடுத்தும் முயற்சியையும்தான் இந்த பாஜக அரசு எடுத்துவருகிறது.

எல்ஐசியின் பங்குகளை விற்க முடிவு செய்த அரசை எதிர்த்துப் பல போராட்டங்கள் நாடு முழுக்க வெடிக்கத் தொடங்கியுள்ளது. இருந்தும் எந்தவித பாதிப்பு உருவாகப் போவதில்லை என்பதுபோன்றே மெத்தனப் போக்கையே மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே எடுத்த (ஜிஎஸ்டி, பணமதிப்பிழக்கம், வங்கிகளுக்கான நெருக்கடிகள்) நடவடிக்கைகளால் ஒட்டுமொத்தமாக சரிந்துள்ள இந்தியப் பங்குகளை எந்தவிதத்தில் சரிசெய்ய போகிறதோ என்ற அச்சத்தில் இருந்த அனைவருக்கும் மேலும் ஒரு பலத்த அடியைத்தான் இந்த அரசு அளித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, எல்ஐசியில் உள்ள அரசு பங்குகளில் ஒரு சிறிதளவுதான் விற்பனை செய்யப்படும். அதனால் எல்ஐசி தன்னாட்சி உரிமை பாதிக்கப்படாது. தனியார் வசம் போகாது என்ற உறுதி கூறியுள்ளார்.

மற்ற நிறுவனங்கள் போல எல்ஐசி பங்குகளை விற்பது என்பது எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பது இந்த அரசுக்குத் தெரியவில்லை மேலும் அரசின் தனியார்மயமாக்கும் கொள்கை மென்மேலும் விரிந்துவருகிறது. இப்படியே போனால் நாட்டின் ஒட்டுமொத்த துறைகளும் தனியாருக்கு ஒப்படைத்துவிட்டு அரசு என்ற அமைப்பையே தனியார் தாரைவார்த்துக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று பொருளாதார வல்லுநர் போர்க்கொடி எந்தியுள்ளனர்.

எல்ஐசி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்குத் தந்த தொகை ரூ.2,611 கோடி. 12ஆவது ஐந்தாண்டு (2012-17) திட்டத்திற்கு எல்.ஐ.சியின் பங்களிப்பு ரூ.14.23 லட்சம் கோடி. சராசரியாக ஆண்டிற்கு ரூ.2,84,000 கோடி. 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே (2017-19) அரசுக்குத் தந்திருப்பது ரூ.7,01,483 கோடி. ஆண்டுக்கு சராசரி பங்களிப்பு ரூ.3,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி. ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ள தொகை ரூ.28,84,331 கோடி.

அரசின் பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் பொய்த்துபோகிற சூழலில் கூட எல்.ஐ.சி மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பு மட்டும் பொய்த்ததே இல்லை.

1956இல் எல்ஐசி துவங்கியபோது அதன் மொத்த முதலீடு 5 கோடி ரூபாய் இப்போது 2 லட்சம் கோடி என்று உயர்ந்திருக்கிறது. நிர்வாகத் திறமைக்கு இதைவிட சான்று என்னவாக இருக்க முடியும்? நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் தற்போதைய நிலையில் எல்.ஐ.சி வழங்கும்போது, அதன் பங்குகளைத் தனியார்க்கு விற்பதன்மூலம் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய முடியுமா? இல்லை சீர்குலைக்க முடியுமா? என்பதுதான் கேள்வி.