2008 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சாத்வீ ப்ரக்யா தக்கூர் கடந்த வெள்ளியன்று மும்பை தீவிரவாதிகளின்  தாக்குதலில் இறந்த தீவிரவாத தடுப்பு படையின் முன்னாள் தலைவரான ஹேமந்த் கர்கரேவைப் பற்றி, என்னை அவர் மிக மோசமாக நடத்தினார் அதன் கர்ம பலனே அவர் இறந்துபோனதற்குக் காரணம்.

“ஹேமந்த் கர்கரே என் மீது பொய்யான குற்றம்சாட்டி மிக மோசமாக நடத்தினார். அவரிடம் உங்கள் மொத்த வம்சமும் அழியும் என்று நான் சபித்தேன். அந்த கர்மாவின்படி அவர் இறந்தார்.”  என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 29, 2008 இல் மாலேகான் குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் 100 கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். மாலேகான் குண்டுவெடிப்புகளை ஆய்வு செய்த ஹேமந்த் கர்கரே, தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளரைக் கண்டுபிடித்தார். அந்த மோட்டார் சைக்கிள் சாத்வீ ப்ரக்யாவுக்கு சொந்தமானது!

மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புக் குழு (ஏ.டி.எஸ்) இந்த வழக்கில் சாத்வி பிராக்யா தாக்கூர் மற்றும் மற்றவர்களை கைது செய்தது. அவர்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்து தீவிரவாத குழுவில் ஒரு பகுதியாக இருந்ததாகக் குற்றம் சாட்டினர். ஆனால் 2016 ஆம் ஆண்டு மே மாதம், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சாத்வி பிராக்யாவை குற்றமற்றவர் என்று சொன்னது.

ஜாமீனில் வெளிவந்த சாத்வி பிராக்யாவை பாரதிய ஜனதா கட்சி போபால் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார்.

கடந்த வியாழனன்று போபாலில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், “ காங்கிரஸ் ஹிந்துக்களை தீவிரவாதிகளோடு ஒப்பிட்டு அவர்களை இழிவுபடுத்துகிறது. அதற்காக எனக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள் நான் சித்ரவதை செய்யப்பட்ட விதம் இவையெல்லாம் இன்னொரு பெண்ணுக்கு நடக்காது என்று என்ன உத்தரவாதம்” என்று கேட்டார்.

மேலும் அவர் சிறையில் தான் நடத்தப்பட்ட விதம் பற்றிக் கூறும்போது கண்ணீர் விட்டு அழுதார். “நான் இரவு முழுக்க அடித்து துன்புறுத்தப்பட்டேன், எனக்குப் பல நாட்கள் உணவு கூட கொடுக்கப்படவில்லை. வெறும் தண்ணீர் மட்டும் குடித்து நான் உயிர் வாழ்ந்தேன்.” என்றார்.

அந்த கொடுமைகளை அனுபவிக்கும்போது அவருக்கு நான் மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் பலித்துள்ளன. இது அவருடைய கர்ம பலன் என்று  கூறினார்.

கடமையைச் செய்த ஹேமந்த் கர்கரேவை, நாட்டை காக்க உயிரையும் கொடுத்த ஒரு காவல்துறை அதிகாரியை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையிலிருந்த சாத்வி பிராக்யா, அதுவும் மக்களவைக்கு போட்டியிடும் ஒருவர் இப்படி பொதுவெளியில் கூறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.