ஒரு நெருக்கடியான காலத்தில் எல்லோருமே சோஷலிஸ்டுகளாகிறார்கள் என்று சொல்வார்கள். சுதந்திர சந்தை பின்னே சென்று உழைக்கும் மக்களுக்கு பலனளிக்கும். சான்றாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில்  அனைவருக்கும் ரேஷன் வழங்கப்பட்டது. இதனால் ஒரு சராசரித் தொழிலாளி முன்னெப்போதையும்  விட ஊட்டம் பெற்றார். தனியார் நிறுவனங்கள் போருக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்று ஆணையிடப் பட்டது. இது திட்டமிட்ட பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு ஒப்பாகும்.

உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்தில் இன்று உலகம் இருக்கும் நேரத்தில், அது போன்ற மாற்றங்கள் நடக்கின்றன.  ஒவ்வொரு நாடாக  முதலாளித்துவப் பொருளாதார விதிகளிலிருந்து தெளிவாக விலகிச் சென்று பொது மருத்துவ சேவையையும் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியையும் சமூகமயமாக்கி வருகிறது.   கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலிக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கும் ஸ்பெயின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தனியார் மருத்துவ மனைகளை நாட்டுடைமையாக்கி இருக்கிறது. அவையனைத்தும் தற்போது அரசின் கட்டுப் பாட்டில் இருக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட நோய்ப் பேரிடர் காலத்திற்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். பொருளுற்பத்தியின் மீது அரசின் கட்டுப்பாட்டை இறுக்குவது இப்போது சீனத்தில் மட்டும் நடக்கவில்லை; அது அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கொள்கையாகவே ஆகியிருக்கிறது.

உலகளாவிய நோய்ப் பேரிடரின் தாக்கத்திலிருக்கும் உலகம் சோஷலிசத்தை நோக்கித் திரும்புவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கட்டாயமாக மக்கள் அனைவருக்கும் அறிவியல் உணர்வு தேவை என்கிற நிலைதான் அது. அறிவியல் உணர்வு என்பது சோஷலிசத்தை நோக்கி எடுத்து வைக்கப் படும் முக்கிய அடியாகும். இந்த மாதிரி நேரத்தில் கொரொன வைரசின் வீரியத்தை முறிக்கும் மருந்துகளாக பசுவின் சாணத்தையும் மூத்திரத்தையும் பரிந்துரைக்கும் இந்துத்வ வெற்றுக் ’கோட்பாடுகளை’ மக்கள் வெறுப்புடன் பார்க்கிறார்கள். இந்த ‘கோட்பாடுகளை’ விற்பவர்கள் இருமியவுடன் மருத்துவ மனைகளுக்கு ஓடுகிறார்கள்; அல்லது அவர்களின் உறவினர்களால் மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். இத்தகைய தருணங்களில் மூட நம்பிக்கைக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனால்  அணுகுமுறைகளில் கட்டாய மாற்றம் ஏற்படுகிறது; இதனால் சோஷலிசம் என்கிற கருத்துக்கு ஆதரவான சூழல் உருவாகிறது.

அறிவியல் உணர்வைக் கட்டாயமாக்குவதிலும், பொது மருத்துவ சேவையை சமூக மயமாக்குவதிலும் இந்தியா பல நாடுகளுக்கிடையே பின் தங்கியிருக்கிறது என்பது உண்மைதான். நெருக்கடி காலத்தில் கூட பகட்டுகள் மீதிருக்கும் பற்று கைவிடப் படவில்லை என்பதும் உண்மைதான். மார்ச் 22 அன்று ‘மக்கள் ஊரடங்கை அறிவித்த மோடி, பொது மருத்துவ ஊழியர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் வகையில் ஐந்து நிமிடங்களுக்கு மணியொலி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். உற்சாகமடைந்த மோடி பக்தர்கள் ஐந்து நிமிடங்களை அரை மணி நேரம் வரை இழுத்தது மட்டுமின்றி, கூட்டமாகக் கூடி, கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து, சங்குகளை ஊதி ஊர்வலமாகவும் சென்றனர். இச்செயல்கள் அனைத்தும் நோய் தொற்றாமல் இருப்பதற்காக தனி மனிதர்கள் சமூகத்திலிருந்து தள்ளி நிற்பதை நடைமுறைப் படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட ’ஊரடங்கின்’ நோக்கத்தையே சிதைப்பவையாக இருந்தன.

அது போலவே, அரசாங்கம் நோய்ப் பரிசோதனையில் தனியார் மருத்துவ மனைகளையும் இணைத்து  அமைப்பை விரிவு படுத்தியிருந்த போதிலும் பரிசோதனையையும், நோய்த் தொற்று இருப்பவர்களுக்குத் தேவையான சிகிச்சையையும் இந்த மருத்துவ மனைகளில் இலவசமாக்கவில்லை.

ஆனால் அறிவியல் உணர்வுக்கு எதிரான இந்துத்வப் பகட்டுகள் தொடர்வதற்கும், தனியார் மருத்துவமனைகளின் லாப நோக்கினை அரசு தொடர்ந்து அனுமதிப்பதற்கும் காரணம் இந்தியாவில் இந்த நோய் நெருக்கடி இன்னும் அதிக தீவிரமாகவில்லை என்பதால்தான். நெருக்கடி முற்றக் கூடாது என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தாலும், அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியாவும் தன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பிற நாடுகளைப் போல் சமூகமயாமாக்கும் பாதைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில், சமூகமயமாக்கலுக்கு மாற்றான, எதிரான ஒரு போக்கையும் காண முடிகிறது.  பிற நாடுகள் பாதிக்கப்பட்டாலும் கூட தன் நாடு நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக கொள்கை முடிவுகள் எடுக்கும் போக்குதான் இது. ஜெர்மானிய நிறுவனமான க்யூர்வாக் உருவாக்கியிருக்கும் தடுப்பூசி மருந்தின் மீதான முழு உரிமையையும் வாங்க முன் வந்திருக்கும் டிரம்பின் கொள்கை இந்தப் போக்கினையே காட்டுகிறது. அதாவது அந்த மருந்து அமெரிக்காவிற்கு மட்டும் கிடைக்க வேண்டுமென்பதே டிரம்பின் நோக்கம். ஆனால் ஜெர்மானிய அரசாங்கம் அந்த உரிமையை வழங்க மறுத்து விட்டது. ஒரு மக்கள் பிரிவினரை மட்டும் பாதுகாத்து, முதியவர்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் போன்ற பிரிவினர் பிரச்சினையை அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என விட்டு விட நினைப்பதுதான் இந்தப் போக்கு. கொரொனா வைரசினால் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை டிரம்ப் தொடர்வதும் இந்தப் போக்கின் இன்னொரு வெளிப்பாடுதான்.

 

இவையெல்லாமே, ஏழைகளையும் பிற அடித்தட்டு மக்களையும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாக்கி விட்டு, செல்வந்தர்களும், பிற வசதி படைத்தவர்களும், வலு மிக்கவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் இந்த சிந்தனை முதலாளித்துவத்திற்கே உரித்தானதாகும். அமெரிக்க அதிபர் தேர்தலின் ஆரம்ப சுற்றுகளில், சோஷலிசத்தையும், அனைவருக்கும் மருத்துவ சேவை என்கிற கோஷத்தையும் முன் வைத்து பிரச்சாரம் செய்து வரும் பெர்னி சாண்டர்சுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, இந்தப் போக்கினை வலுவடையச் செய்யும்.

ஆனால் இந்தப் போக்கிற்கு ஒரு இயற்கையான எல்லை இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய நோய்த் தொற்றினை ஒரு நாட்டிற்குள்ளோ, உலகின் ஒரு பிரிவினருக்குள்ளோ, ஒரு நாட்டின் மக்கள் தொகையின் ஒரு பிரிவினருக்குள்ளோ அடக்கி வைப்பது இயலாது. டிரம்ப் மேற்கொண்டிருக்கும் பாமரத் தனமான இந்த முயற்சி நிச்சயம் தோற்கும்

இப்படிச் சொல்வதினால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க மனித குலம் எப்படியாவது முதலாளித்துவத்தை எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய தேவையைக் குறித்த புரிதலுக்கு வந்து விடும் என்று நாம் உணர்த்த வில்லை. உலகளாவிய நோய்த் தொற்றைத் தடுக்கப் படும் ஏராளமான முயற்சிகளுக்கிடையே, முதலாளித்துவத்தைக் கடந்து செல்லும் முயற்சி ஒரு பிரதான இடத்தை அடையும் என்றுதான் சொல்கிறோம். நீண்ட காலம் இது நீடித்தால், இது உண்மையாக வாய்ப்புகள் அதிகம் என்றுதான் சொல்கிறோம்.

தற்போது உலகமயமாக்கல் முதலாளித்துவத்தின் தலைமையில் நடந்து கொண்டிருந்தாலும், இந்த உலகளாவிய நோய்ப் பேரிடரின் விளைவுகளை எதிர் கொள்வதற்கான வழிமுறைகள் முதலாளித்துவத்திடம் இல்லை என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. பொருட்கள் மற்றும் மூலதனத்தின் நகர்வுகள் உலகமயமாக்கப் பட்டிருக்கும் சூழலை முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ளது. அந்த நகர்வுகளுக்குள் மட்டுமே அனைத்தையும் அடக்கி விடலாம் என்று அது நம்பியது.  ஆனால் அது சாத்தியமே இல்லை. உலகமயமாக்கல் என்பது வைரஸும் உலக அளவில் வேகமாகப் பரவி, அதனால் ஏற்படும் நோயும் உலகளாவிய ஒன்றாக எழும் நிலையையும் உருவாக்கியுள்ளது.

மிக அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுத்திய ஒரு உலகளாவிய பேரிடர் முன்பு ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஜூரம்தான் அது.  ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் பல ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து சென்று பதுங்கு குழிகளிலிருந்து யுத்தம் செய்து, வீடு திரும்பும் போது வைரஸையும் சுமந்து சென்ற முதல் உலகப் போர்ச் சூழலினால் அது உலகம் முழுவதிலும் பரவியது.  சுருஙகச் சொன்னால், உக்கிரமாக நடந்த போர் தேசப் பிரிவினைகளை உடைத்தெறிந்து, உலகளாவிய நோய்ப் பேரிடருக்கு இட்டுச் சென்றது. 2003ஆம் ஆண்டில் வெடித்த சார்ஸ் தொற்று நோய் 23 நாடுகளை பாதித்தது; 800 பேர் இறந்தனர். ஆனால் கொரோனா தொற்று அதை விடப் பத்து மடங்கு அதிக உயிர்களை ஏற்கெனவே பலிவாங்கி விட்டது.

தற்போது தேசப் பிரிவினைகளின் உடைப்பு முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நாம் இப்போது காணும் உலகளாவிய வைரஸ் பரவல் போன்ற நிகழ்வுகள் முதலாளித்துவத்தின் தற்போதைய கட்டத்தின் பொது நிகழ்வுகளாக இருக்கப் போகின்றன. இதனால்தான், இந்த நெருக்கடியை சில மக்கள் பிரிவினருக்குள் கட்டி வைத்து பிறரைப் பாதுகாக்க டிரம்ப் போன்றோர் எடுக்கும் முயற்சிகள் கட்டாயமாகத் தோல்வியுறும். சுருங்கச் சொன்னால், முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளை அதன் குறிப்பான நிறுவனங்களே எதிர் கொள்ளும் திறனில்லாத ஒரு கட்டத்தை முதலாளித்துவம் அடைந்து விட்டது.

இந்தச் சூழலின் ஒரு வெளிப்பாடுதான் நாம் இன்று எதிர்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பேரிடர். நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு பல வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், நான் இங்கு மூன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். இதில் முதலில் வருவது உலகளாவிய பொருளாதார நெருக்கடி; முதலாளித்துவத்தின் தற்போதைய நிறுவனங்களால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தீர்வு காண்பதற்கு குறைந்த பட்சமாக உலகிலிருக்கும் பல அரசுகளும் ஒருங்கிணைந்து நிதியாதரங்களின் வாயிலாக தேவையை (டிமாண்ட்) தூண்டி விட வேண்டும். முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா அதன் பொருளாதாரத்தை மட்டும் பாதுகாப்பதன் மூலம் இந்த நெருக்கடியைச் சமாளிக்க நினைப்பதைக் காணும் போது, நாடுகளின் உலகளாவிய ஒருங்கிணைப்புக்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருக்கும் எனப் புரிகிறது. கொரோனா பிரச்சினையையும் அமெரிக்கா இப்படித்தான் அணுகுகிறது.

இரண்டாவதாக நாம் சுட்டிக் காட்டும் பிரச்சினை பருவநிலை மாற்றம். முதலாளித்துவம் உருவாக்கிய இந்த நெருக்கடியை அதன் அளவுகோல்களின் வாயிலாகத் தீர்க்க முடியாது. மூன்றாவது பிரச்சினை அகதிகள் நெருக்கடி என்று அழைக்கப் படுவது. அதாவது, முதலாளித்துவத்தின் போர்களாலும், அதன் அமைதியினாலும் நிலைகுலைந்து போன மக்களின் உலகளாவிய புலம் பெயர்வு.

இந்த நெருக்கடிகள் முதலாளித்துவத்தின் இறுதி ஆட்டம் தொடங்கி விட்டதென்பதையே காட்டுகின்றன. இவை வெறும் நிகழ்வுகளல்ல. பொருளாதார நெருக்கடி சுழற்சி முறையில் வரும் கீழிறக்கம் மட்டுமல்ல; அது நீண்டகாலமாக இருக்கும் அமைப்புரீதியான நெருக்கடியின் வெளிப்பாடுதான். அதே போல், புவி வெப்பமைடதலினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஒரு தற்காலிக நிகழ்வல்ல; அது தானாக மறைந்தும் விடாது. இப்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய கொரோனா பேரிடர் முதலாளித்துவ உலகமயமாக்கலின் யுகத்தில் இன்னும் வரப்போகும் இடர்கள் எப்படியிருக்கும் என்பதையே காட்டுகிறது; வரவிருக்கும் காலங்களில் விரைவாகப் பரவும் வைரஸ்கள் லட்சக் கணக்கான மக்களை நூற்றாண்டில் ஒரு முறை மட்டுமல்லாது, அடிக்கடி பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்தச் சவால்களை மனிதகுலம் எதிர்கொண்டு பிழைத்திருக்க வேண்டுமெனில், முதலாளித்துவ நிறுவனங்கள் போதுமானவை அல்ல. சோஷலிசத்தை நோக்கி நகர்வதே தீர்வு. கொரொனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு ”சுதந்திர சந்தையையும்” லாப நோக்கத்தையும் புறந்தள்ளி எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் (அவை தற்காலிகமனவை, அவசரத் தேவைக்கானவை என்ற போதிலும்) அவற்றை முன்னெடுப்பவர்களும் அறியாமல் இந்தப் பாதையைத்தான் காட்டுகின்றன.

(நியூஸ்கிளிக் இணைய ஊடகத்தில் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் எழுதியிருக்கும் கட்டுரை. தமிழில்: ஆர். விஜயசங்கர்)