நான் அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு EPW கட்டுரை (“Deepening Divides” – Suraj Jacob and Balmurli Natrajan) ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பதிலை இக்கேள்விக்கு அளிக்கிறது: குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என கடந்த இரு பத்தாண்டுகளில் எங்கெல்லாம் இந்துத்துவா எழுச்சி பெற்றுள்ளதோ அங்கெல்லாம் சைவப் பழக்கம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. வழக்கம் போல தெற்கத்தி மாநிலங்களில் சைவப் பழக்கம் குறைவாக உள்ளது என அவர்கள் சொல்கிறார்கள் (பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாய் சைவ உணவை விரும்புகிறார்கள் என்றும் இது சொல்கிறது). ஆனால் ஒரு அரசியல் சித்தாந்த எழுச்சியையும் மக்களின் உணவுப் பழக்கங்களின் மாற்றங்களையும் நேரடியாக தொடர்புபடுத்தி விட முடியாது என்பதையும் ஏற்கிறேன். அதே நேரம் இந்த இந்துத்துவ-சைவ உணவு லிப்-லாக்கையும் மறுத்திட முடியாது.

எனக்கு இதைப் படித்ததும் முதலில் நான் சென்னைக்கு 2000இல் வந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி நினைவுக்கு வந்தது – மெஸ்ஸில், உணவகங்களில் எங்கும் பார்த்தாலும் மக்கள் பொரியல், சாம்பார், ரசம் என வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; இந்த முழுநேர சைவ உணவை ஜனங்கள் எப்படி குமட்டாமல் சாப்பிடுகிறார்கள் என எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. எங்கள் ஊரில் (தக்கலை-நாகர்கோவில்) சைவ உணவுக்கென கௌரிசங்கர் என நெய் மணக்கும் ஒரு உணவகம் தான் இருக்கும். மற்றபடி எங்கு போனாலும் மதிய உணவுக்கு மீன்குழம்பு இல்லாமல் ஆகாது. எங்கள் குடும்பம் வறுமையில் இருந்த (அப்பாவின் ஊதியம் கணிசமாக வங்கிக்கடனைக் கழிப்பதற்கு சென்று விடும்) சில வருடங்களில் கூட அம்மா தினமும் முப்பது ரூபாய்க்கு மீன் வாங்கி குழம்பு வைக்காமல் சோறு போட மாட்டார். கடும் வறுமையில் இருப்பவர்களுக்குக் கூட மீன் வாசனை இல்லாமல் சோறு இறங்காது. எங்களுக்கு மீன் உணவு என்பது சொகுசு அல்ல; மீன் வாசனை எஙகளுக்கு சுவாசக் காற்று போல. இதனால் சென்னைக்கு வந்த புதிதில் இந்த ஊர் மக்களெல்லாம் ஐயமாருங்களோ என எனக்கு சந்தேகம் ஏற்பட்டதுண்டு; ஆனால் நான் கண்ட சைவ உணவாளர்கள் பெரும்பாலும் மத்திய சாதியை சேர்ந்தவர்களே. ஒருவேளை மீன் விலை இங்கு அதிகமோ என யோசித்தேன். ஆனால் நான் பிற்பாடு கண்டுபிடித்த தட்டுக்கடைகளில் மீன்குழம்பு கிடைத்தது. மீன் குழம்புடன் தோசை சாப்பிடுவதற்காக ஒரு சிறிய உணவகத்தைத் தேடி நான் வார இறுதிகளில் அப்போது ஈஸ்ட் தாம்பரம் வரை செல்வதுண்டு. அந்த கடையையும் சில நாட்களில் மூடி விட நான் மனம் உடைந்து போனேன்.

சென்னையில் நான் கண்ட மற்றொரு விநோதம்: இடைநிலை உணவகங்கள் என்றால் 99% சைவம் தான். ஆனால் 2005க்குப் பிறகு நிறைய உயர்த்தட்டு அசைவ உணவகங்கள் தோன்ற ஆரம்பித்தன. சிக்கன் உணவு ஒரு வார இறுதிக் கொண்டாட்டமாகியது. சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன் எல்லாம் அங்கு தான் கண்டு (உண்டு) மயங்கினேன். நான் படிக்க சென்ற காலத்தில் சிக்கன் பிரியாணி ஒரு அரிய உணவு; எங்கள் கல்லூரிக்கு எதிரே இருந்த ஒரு பிரியாணிக் கடையில் 11:30க்கு முன்னால் சென்றால் 15 ரூபாய்க்கு குஷ்கா கிடைக்கும். அதற்காக நாங்கள் காலை உணவை சாப்பிடாமல் சீக்கிரமே அங்கு சென்று காத்திருந்து உண்போம். (50 ரூ அன்று பெரிய தொகை.) ரெண்டாயிரத்தின் இறுதியில் நான் மக்கள் அதிகமாய் வெளீயே சென்று அசைவ உணவுகள் உண்பதைக் கண்டேன். கடந்த ஒரு பத்தாண்டில் சிக்கன் பிரியாணி என்பது பரவலாக மக்கள் உண்ணும் உணவாகியது. சொல்லப் போனால் ஒரு இடைநிலை சைவ ஓட்டலில் மதிய சாப்பாட்டை விட பிரியாணி சாப்பிடுவது குறைவாகவே கையைக் கடித்தது. மக்களின் சராசரி வருமானம் வளர்ந்ததும் இதற்கு மற்றொரு காரணம் (ஆனால் அப்போதும் சைவ சாப்பாட்டின் விலை உயர்ந்தது ஒரு வினோதம்).

கே.எப்.ஸி போன்ற அமெரிக்க பிராண்டுகள் இங்கே கடை விரித்ததும் பொரித்த சிக்கன் பகோடா, வாழைக்காய் பஜ்ஜி போல ஆகியது. வார இறுதிகளில் மக்கள் மக்கள் ஸ்நாக்ஸ் போல பொரித்த சிக்கனை உள்ளே தள்ளும் விநோதம் நிகழ்ந்தது. இந்த சமயத்தில் தான் அசைவ உணவு சைவ சாதிகளுக்கு சற்று நெருக்கமானது; சிக்கன் சற்றே மசாலா போட்டு பொரித்த உருளைக்கிழங்கு, காலி பிளவர் போன்ற ஒரு சங்கதி தானே என அவர்கள் நினைக்க கே.எப்.ஸி போன்ற பிராண்டுகள் காரணமாகின. சிக்கன் பீப், மட்டன் அளவுக்கு அசைவம் அல்ல என சைவர்கள் நம்பத் தொடங்கினர். வீட்டில் சைவமும் வெளியே அசைவமுமாய் மாறின பிராமண நண்பர்களை அறிவேன்.

இந்த சிக்கன் புரட்சியைப் பற்றி யோசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது – நான் ஊரில் இருக்கும் போது சிறுவயதில் வருடத்திற்கு இருமுறை சிக்கன் என்பதே வழக்கம். அது பின்னர் மாதத்திற்கு ஒருமுறை என மாறியது. கடந்த பத்தாண்டில் நிச்சயமாய் கிட்டத்தட்ட தினமும் அசைவம் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு இதில் ஒரு பங்கிருக்கிறது. ஆனால் அது மட்டுமல்ல, இடைநிலைச் சாதிகளின் எழுச்சிக்கும் இதில் மிகப்பெரிய பங்குண்டு. ஒரு சமூகத்தில் எந்தெந்த சாதிகளின் தொகை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன் உணவுப்பழக்கம் அங்கு பரவலாகும். கேரள ஜனங்களுக்கு மாட்டுக்கறி ருசி அதிகம். இங்கே பெங்களூரில் கிறைஸ்ட் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மலையாளிகள் அதிகமாய் வசிக்கிறார்கள் என்பதால் கணிசமான உணவகங்கள் அவர்களுடையதே. அதனாலே இங்கு மீனும் மாட்டுக்கறியும் கடைகளில் அதிகமாய் கிடைக்கிறது. அவர்கள் இல்லாவிட்டால் சைவமே இப்பகுதியில் தலைதூக்கியிருக்கும். உணவு ஆதிக்கம் என்பது நுட்பமாக ஒரு சமூகக் கூட்டுமனத்தில் செயல்படும் விழைவு. இதை எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை வைத்து புரிந்து கொள்ளலாகாது. மேற்சொன்ன கட்டுரையில் அவர்கள் குறிப்பிடும் வட மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் சில சைவ சமூகங்கள் எழுச்சி பெற்றது தான் சைவ உணவு மற்றும் இந்துத்துவா அதிகரித்துள்ளதன் காரணமாக இருக்குமோ என தலைகீழாக எனக்குத் தோன்றியது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கறிக்கடைகளை அரசு தடை பண்ணுகிறது, ஆனால் காய்கனிகளின் விற்பனையை அனுமதிக்கிறது, இதன் அரசியல் என்ன, இஸ்லாமியர்களை ஒடுக்கும்பொருட்டு இதை செய்கிறார்களா என மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் எழுதிய பதிவொன்றில் கேட்டிருந்தார். அரசுக்கு அப்படி ஒரு நோக்கம் இருந்தால் அது வெற்றி பெறாது. மக்களின் உணவுப்பழக்கங்களை அப்படி எந்த அரசும் சுலபத்தில் மேலிருந்து கீழாக கட்டுப்படுத்த முடியாது!