சுதந்திரத்துக்குப் பிறகு 67 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் இந்திரா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவினுடைய காங்கிரஸ் எனும் ஒற்றைக்கட்சி ஆட்சி செய்த இந்தியாவில் 2014ல் இந்து தேசியவாத பாஜகவின் நரேந்திரமோடி பிரதமராக தேர்வுசெய்யப்பட்டார். குஜராத்தில் தொடர்ந்து 13 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக முனைப்போடும் கொள்கைத் தீவிரத்தோடும் 2014ல் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்தனர் பாஜகவினர்.

தங்கள் விதியை அடுத்த ஐந்தாண்டுகள் நிர்ணயிக்கப்போவது யாரென்று தீர்மானிக்க இந்தியா தேர்தலை சந்திக்கிறது. ஐந்தரை வாரங்கள் 7 கட்டங்களாக உலகின் மாபெரும் தேர்தலாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்கின்றனர். இந்த மகத்தான ஜனநாயக உரிமையின் வெளிப்பாட்டிற்குப் பின்னுள்ளது  ஆழமான அரசியல் தூண்டுதல் மட்டுமல்ல; அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கலாச்சாரப் பிளவுகளும் கூட. இந்தக் கதையின் முதல் அத்தியாயத்திலிருந்து அலசிப்பார்த்தால்தான் மோடியின் இந்த வந்தமை ஏன் தவிர்க்கமுடியாததாகவும் இந்தியாவிற்கே பேரிடராகவும் இருந்தன என்றும் விளங்கிக்கொள்ள முடியும். நம்நாட்டில் பெரும்பான்மைவாத ஈர்ப்பு என்பதன் மாயைப் பற்றியும் செல்லுபடி பற்றியும் ஒரு தனித்துவமானப் பார்வை இருக்கிறது. இது இந்தியா தனக்கு வெகு தொலைவிலுள்ள துருக்கி மற்றும் பிரேசில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க சமூகங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளதென்பதைக் கணக்கிட உந்துகிறது. இந்தப் பெரும்பான்மைக் கவர்ச்சி என்பது புறக்கணிக்கப்பட முடியாத அளவிற்குப் பரவலாக உள்ள பெரும்பான்மை மக்களுக்கு அவர்களது மனக்குறைப் பற்றி குரல் கொடுத்து அதனை ஊதிப்பெரிதாக்கி உள்ளது.

இக்கதை விடுதலைபெற்ற காலத்திலிருந்து தொடங்குகிறது. 1947ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா இரண்டாகப் பிளவுபட்டது. இந்திய இஸ்லாமியர்களின் தாயகமாக பாகிஸ்தான் உருவானது. ஆனால் இந்தியாவின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஆழக்கற்ற மேதை நேரு இந்தியாவை இந்து நாடாக அமைத்திட விரும்பவில்லை. கணிசமான அளவு இஸ்லாமியர்களைக் கொண்டிருந்த இந்தியாவிற்கு நேரு வழங்கிய சித்தாந்தம் ‘மதசார்பின்மை’. அன்று 3.5 கோடி இஸ்லாமியர்கள் இருந்தனர்; இன்று 17.2 கோடி இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர். இந்தியாவின் மதசார்பின்மை என்பது சற்று தனித்துவமானது. அது நாடு எந்த மதத்தையும் ஆதரிக்காது என்ற மதசார்பின்மையைக் கொள்ளவில்லை. மாறாக எல்லா மதங்களையும் சமமாக மதிக்கும் ஓர் புதுவித மதசார்பின்மைக் கொள்கையைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இது ஆர்வெல்லின் “சிலர் மற்றவர்களைவிட அதிக சமத்துவத்தோடு நடத்தப்படுதல்” கோட்பாட்டை பிரதிபலிப்பதாக விமர்சனம் உண்டு. இந்தியாவின் இஸ்லாமியர்கள் ஷரியாவை அடிப்படையாகக்கொண்ட குடும்பச் சட்டங்களைப் பின்பற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்கள், அரசு விதித்துள்ள சட்டங்களைப் பின்பற்றவே உரிமை உண்டு. இஸ்லாமியர்கள் மிகவும் பிற்போக்கான பழமையான முத்தலாக் முறையை பின்பற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்கள் சீர்திருத்தப்பட்ட சமூக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்; மேலும் அவர்கள் வழிபாட்டுத்தளங்கள் எப்போது வேண்டுமானாலும் அரசுடைமை ஆக்கப்படலாம். (2018ல் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றமென அரசு உத்தரவுமூலம் அறிவித்தது மோடி அரசு).

நேருவுக்குப் பிறகு இந்தியாவை மிக நீண்டகாலம் ஆட்சிசெய்த அவரது அரசியல் வாரிசுகள் ஜனநாயகத்தின் மாண்புகளையும் கொள்கைகளையும் பிரகடனம் செய்துகொண்டிருந்த அதே வேளையில் ஒரு பரம்பரை வாரிசு அரசியலை நிறுவியது. 2014 மே மாதம் தேர்தல் முடிவில் 543ல் 282 இடங்களை வென்றது பாஜக. நாட்டில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் முதன்முறையாக எதிர்கட்சியாகும் உரிமையைக்கூட இழந்து வெறும் 44 இடங்களையே பெற்றது.

பெரும்பான்மைவாதிகள் இருவகையில் முளைக்கிறார்கள்; மக்களில் ஒருவராக அல்லது அவர்களில் ஒருவராக அல்லாமல். அம்மக்களின் உணர்வுகளைச் சுரண்டுபவர்களாக (புதுயுக பாசிஸ்டுகள் – பிரெக்ஸிட்காரர்கள், டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தானின் இம்ரான்கான்). நரேந்திர மோடி இதில் சந்தேகமின்றி முதல் ரகத்தைச் சேர்ந்தவர்தான். ஏழை தேநீர் வியாபாரியின் மகன். வாக்குப்பெட்டிகளில் அவர் நிகழ்த்தியது ஒரு தரமான புரட்சி. முன்பு அரசியல் வேறுபாடுகள் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் மோடியின் தேர்தல் ஏற்படுத்தியிருப்பது ஒரு கலாச்சாரப் பிளவு! “தீர்க்க முடியாத முரண்களைத் தமக்குள் கொண்டுள்ளதை முன்பு அறிந்திடாதோர், அதனை அறிந்திடும்போது” என்று அமெரிக்க வரலாற்றறிஞர் அனி ஆப்பிள்பம்விவரிப்பதை வெளிப்படுத்துகிறது. முன்புபோல இது இடதுசாரி வலதுசாரி பிரிவினை அல்ல. மிகவும் மோசமானதொரு அடிப்படைவாதப் பிரிவினை.

இந்தத் தேசத்தின் தன்மை, இதன் மூதாதையர்கள் விதைத்தவை, சிறுபான்மையினரின் உரிமைக்குரிய இடங்கள் மற்றும் அதன் அமைப்புகளாகவுள்ள பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கி நாட்டின் நான்காம் தூணாக உள்ள ஊடகம்வரை இத்தேசத்தின் அனைத்து அடிப்படைக் கட்டுமானங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. ஒற்றைக் கடவுள் கொள்கைகொண்ட இஸ்லாமும் கிறுஸ்தவமும் இந்துக்கள் பெரும்பான்மையுள்ள இந்தியாவின்மீது ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணம்கொண்ட இந்து உயரடுக்கினர், இத்தேசத்தின் போற்றுதலுக்குரிய சாதனைகளான மதசார்பின்மையையும் பரந்த மனப்பான்மையையும் பெரும் சதிச்செயலாக எண்ணும் மனநிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மோடியின் வெற்றி என்பது இந்த அவநம்பிக்கையின்மீது கட்டமைக்கப்பட்டது. அவர் நேரு போன்ற தேசத்துக்கு அடித்தளமிட்ட அசைக்கமுடியாத ஜாம்பவான்களாக விளங்கியோரைத் தாக்க ஆரம்பித்தார். அடுத்ததாக இத்தேசத்தின் புனித தத்துவங்களான நேருவின் மதசார்பின்மை மற்றும் பொதுவுடமைக் கொள்கைகளைத் தாக்கியதோடல்லாமல் “காங்கிரஸ் இல்லா இந்தியா” என்று முழங்கத் தொடங்கினார். இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் எவ்வித சமிஞ்ஞைகளையும் அவர் வெளிப்படுத்தவில்லை. இது நாம் நம்பிக்கொண்டிருப்பதுபோல தாராளவாத ஒத்திசைவுக் கலாச்சாரம் கொண்ட நாடல்ல. இந்தியா உண்மையில் மத தேசியவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு, தீவிர சாதியாதிக்க எண்ணங்களும் மண்டிக்கிடக்கும் நாடு. மோடியின் எழுச்சி இந்தியாவின் இந்த உண்மை முகத்தை வெளிக்கொணர்கிறது. அரசியலால் தூண்டிவிடப்பட்ட பிரிவினைவாதக் கலவரங்கள் இந்நாட்டின் வரலாறெங்கும் இறைந்துகிடக்கின்றன. மிகக்குறிப்பாக 1984ல் சீக்கியர்களான தனது காவலர்களாலேயே இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது டெல்லி வீதிகளில் 2773க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமை குறைகூறத்தக்கது; ஆனாலும் கட்டுக்கடங்காத கும்பல்களின் செயல்களிலிருந்து தம்மை சில மதசார்பற்ற கொள்கைகளால் வேறுபடுத்தி செயல்படும் அரசாக இருந்தது. ஆனால் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2002ல்தான் முதல்வராக இருந்தபோது உண்டாக்கப்பட்ட கலவரத்தில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது செவிகளையும் காதுகளையும் இறுக மூடிக்கொண்டார். கலகக் கும்பல்களுக்குத்தான் உற்ற தோழனென்று அவரது மௌனம் உரக்கச்சொல்கிறது. குறைந்தபட்சம், “அரசியல் வேடதாரிகள் கூட உடனடி தேசிய அல்லது உடனடி பொருளாதார அல்லது கட்சி நலனைவிட உயர்ந்த மதிப்புகள் இருப்பதை ஒப்புக்கொள்வர்” என்றார்  அல்டஸ் ஹக்ஸ்லி. மோடி ஒரு தார்மீகப் பரிவினைக்கூட வெளிப்படுத்தவில்லை. மாறாக இந்தியாவின் மதிப்பினைக் கொச்சைப்படுத்திவகுப்புவாத மற்றும் கலாச்சார யுத்தமொன்றினை உருவாக்கினார். சூழ்ந்துள்ள அதிகார மையத்தின் வெளிப்பாடுகளைத்தவிர அவரது ஆட்சி மக்கள்சார் கொள்கைகளை ஒன்றையும் வெளிப்படுத்திடவில்லை. 2019ல் மோடி ஒரு ட்வீட் செய்கிறார்; “நான் ஏழைத்தாயின் மகனாகப் பிறந்ததுதான் அந்த சுல்தான்களுக்குப் பெரும் குற்றம். அதுதான் அவர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது” என்று. 2014லிருந்த எழுச்சியை மீட்டுருவாக்க முனைகிறார். சுல்தான்கள் என்று இங்கு இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து வெளிநாட்டவரின் ஆட்சியையும் குறிப்பிடுகிறார். 1858வரை நடைபெற்ற இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி மற்றும் அதற்குப் பிறகான பிரித்தானியர்களின் ஆட்சி; இவை இரண்டும் இந்தியா இந்து நாடாக பரிணமிக்காதவகையில் அமைந்தன. அவர்கள் வரிசையிலே காங்கிரஸையும் வைத்துக் குறிப்பிடுகிறார் மோடி.

மோடி 2014ல் மக்களின் கலாச்சார கோபத்தை பொருளாதார வாக்குறுதிகளாக மாற்றினார். வேலை வாய்ப்புகள் பற்றியும் வளர்ச்சி பற்றியும் பேசினார். பொதுவுடமைக் கொள்கையை சின்னாபின்னமாக்கும் வகையிலே, “வியாபாரம் செய்வது அரசின் கடமை அல்ல” என்று வசனங்களை முழங்கினார். இன்று நம்ப முடியாவிட்டாலும் 2014ல் நடந்த தேர்தல் என்பது “நம்பிக்கையின் தேர்தலாகவே” இருந்தது. டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் மோடி ஆதரவாளர் ஒருவரிடம் “ராமர் கோவில்” பற்றி பேட்டி கேட்டபோது அவர் சொன்னார் “ அதை ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள்? நாங்கள் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மோடிக்கு வாக்களிக்கிறோம்” என்றார். “சப்கா சாத், சப்கா விகாஸ்” – “எல்லாரும் சேர்ந்து, எல்லோருக்குமான வளர்ச்சி” என்பதுதான் மோடியின் 2014இன் முழக்கமாக இருந்தது.

ஆனால் அப்படி எதுவும் இங்கு நிகழ்ந்திடவில்லை. மோடியின் பொருளாதார அதியற்புதங்கள் தோல்வியடைந்தன. மிகவும் அபாயகரமானதொரு மதவாத தேசியவாதம் பல்கிப் பெருகிடும் வகையிலான சூழலை இங்கு தோற்றுவித்திருக்கிறார். பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவர் தனது பேச்சில் “நீங்கள் மோடியை ஆதரித்தால் இந்தியாவை ஆதரிக்கிறீர்கள். ஆனால் மோடியை எதிர்த்தால் தேச விரோதிகளுக்குத் துணை நிற்கிறீர்கள்” என்றார். இந்திய மக்கள் தொகையில் 14% உள்ள இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து இந்துக் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். பசுவைக் காக்கிறோம் எனும் பேரால் இந்துக் காவலர்கள் எனும் பேரால் இந்த அக்கிரம அரசின் துணையோடு இந்தக் கும்பல்கள் கட்டுக்கடங்காத வன்மத்தோடு தொடர்ந்து இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்திக்கொண்டே உள்ளன. இந்நிகழ்வுகள் இல்லாத மாதமே இல்லை எனும் அளவிற்கு உள்நாட்டு பெரும்பான்மைவாத பயங்கரவாதம் அரங்கேறிக்கொண்டுள்ளன. 2017ல் உடலெங்கும் இரத்தம் சொட்ட அந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகம்மது நயீம் இந்துக் கும்பல் ஒன்றிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிக் கதறும்போதும் அடித்துக் கொல்லப்பட்ட அந்த நிகழ்வு இன்னும் பலரது கண்களைவிட்டு அகன்றிடவில்லை. ஆனால் ஒவ்வொரு நிகழ்வின் போதும் நாட்டின் பிரதான மந்திரியின் பதில் ஒன்றே ஒன்றுதான் – கள்ள மௌனம்! வன்முறையின் போக்கு மோடியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிட்டன. அடிப்படைகளும் குறைந்தபட்ச மரியாதையும் கூட சமூகத்தில் செயலற்றும் போய்விட்டன. வெறுப்பை விதைத்துவிட்டால் பிறகு அதனைக் களையெடுப்பதென்பது மிகவும் கடினமானது. இஸ்லாமியர்களைத் தாக்குபவர்கள் எந்நேரமும் அதிக ஆவேசத்தோடு ஒடுக்கப்பட்ட சமூக மக்களை தாக்கவும் தயாராக உள்ளனர். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாக்குகளை இழப்பதை அக்கட்சி விரும்பவுமில்லை. அப்படியிருக்கும்போது மோடியின் மாநிலமான குஜராத்தில் 2016 ஜூலையில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோல் பதனிடும் தொழிலாளர்கள் மாட்டின் தோலைப் பதனிட்டார்கள் என்பதற்காக நான்குபேரை அம்மணமாக்கி இரும்புத்தடிகளால் அடித்துத் தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர் ஆதிக்கச் சாதி இந்துக் கும்பல்.

பெண்கள் விவகாரத்தில் மோடியின் நடத்தை மிகவும் கீழ்த்தரமானது; தேர்தல் பரப்புரைகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பைப் பற்றிய தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கும் அதேவேளையில் அவரும் அவரது கட்சிக்காரர்களும் மிகவும் பிற்போக்குத்தனமான ஆணாதிக்க அணுகுமுறைகளையும் எண்ணங்களையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். 2018ல் வெளியான ஒரு அறிக்கை பெண்கள் வாழ்வதற்கு மிகவும் மோசமான (வாழத் தகுதியற்ற) நாடாக இந்தியாவைச் சொல்கிறது. 2015 மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பற்றி “ஒரு பெண்ணாக இருந்தும்” தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று பேசி சர்ச்சையைக் கிளப்பினார். மோடியின் துணைப்பிரதிநிதி அமித் ஷா பெண்களைத் தெய்வநிலை கொண்டோர் என்று பேசுகிறார். எப்போதும் பெண்களை மதப்பேரினவாத அடையாளங்களுக்குள் முடக்கி அவர்களை வாயற்றவர்களாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆனால் ஒரு பெண்ணை தங்கள் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகக் கொண்டுள்ளார்கள்.

இம்முரண்பாடுகளை இந்த சமமற்ற சமூகத்தின் பிரதிபலிப்பாகக் கொண்டாலும், இங்கு வாழும் யாவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதை ஒருபோதும் மறுக்க முடியாது! சுதந்திர உணர்வாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தொடங்கி இஸ்லாமியர்கள், கிறுஸ்தவர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். வளர்ச்சிக்காக தான், சொன்ன எதையும் செயல்படுத்தாத மோடி இச்சமூகத்தை தமக்குள்ளான உள்முரண்களைப் பற்றி மட்டுமே கவலைகொண்டுள்ள இனமாக பரிணமிக்க வைத்துள்ளார். 2014ல் மாற்றத்திற்கான நம்பிக்கை என்ற மாயையை விதைத்த மோடி இம்முறை மக்கள் சாதி, மதம், மொழி, இனம் போன்ற தமக்குள்ளான உள்முரண்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து வாக்களிக்கும் ஒரு சூழலைக் உருவாக்குகிறார். இவர்கள் மீண்டும் வெல்லலாம்; நேருவின் வழித்தோன்றலான ராகுல் எதிர்கட்சித் தலைவராக ஆகலாம். ஆனால் மோடி 2014லிருந்ததுபோல ஒருபோதும் வளர்ச்சியைப்பற்றியோ இந்நாட்டின் எண்ணற்ற கனவுகளைப்பற்றியோ பேசப்போவது கிடையாது. ஒருபுறம் இந்து மறுமலர்ச்சி – மற்றொருபுறம் தென்கொரியாபோல ஒரு திட்டம் என்று ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இச்சமூகத்தை இட்டுச்செல்லப்போகும் ரட்சகரைப்போல தன்னைப் பிரதிபலித்துக் கொண்டவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் எதனையும் சரியாக பயன்படுத்தாமல் இப்போது இன்னொரு வாய்ப்பு வேண்டுமென கையேந்துகிறார். தேர்தலுக்காகக்கூட அவர் எதைப் பேசினாலும் அதில் வருங்காலம் பற்றிய நம்பிக்கை வழங்கும் திட்டமிடல் என்பது ஒரு பகுதியாக இருக்கப்போவதில்லை.

இஸ்லாமியர்களுக்கு ஒரு மெக்கா போல! கிறுஸ்தவர்களுக்கு ரோம் போல! எருசலேம் போல! இந்துக்கள் தங்களுக்கான புனித நகரமாக எண்ணும் வாரணாசி (காசி) தொகுதியில் தனது இந்துச் செல்வாக்கை நிரூபித்து எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்க எண்ணி போட்டியிட்டார் மோடி. மோடி உருவாக்கத் துடிக்கும் ஒரு நாட்டில் என்னைப் போன்றவர்களுக்கு இடம் இருக்காது என்பதை அறிவேன். எனது தந்தை ஒரு பாகிஸ்தானி முஸ்லிம். இந்திய ஆட்சியதிகாரம் பற்றிய மோடியின் கலாச்சார ஆய்வு என்னை அனுதாபப்படவைத்தது. மேற்கத்திய நாடுகளில் ஆட்சியில் அமர்ந்து மேல்தட்டினரோடு பொருந்திப்போகிற தாராளமயவாதிகளோ இடதுசாரிகளோ, அவர்கள் கொண்டுள்ள கருத்துகள் சற்றேனும் புதிதாகவோ போட்டிக்கானதாகவோ இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பல பத்தாண்டுகளாக இடது சிந்தனையாளர்களோ தாராளமயவாதிகளோ அவர்கள் மிகவும் அதிகாரம் படைந்த அந்த குறிப்பிட்ட சிறுபான்மைச் சாதியினராகவே இருக்கிறார்கள்.

2014ல் மோடி ஒரு கலாச்சாரப் பிரிவினையை மேற்கொண்டார். இந்திய உயரடுக்கு அரசியல் என்பது ஒரு வெளிநாட்டுச் சதி என்றும் உண்மை இந்தியாவை மீட்க வேண்டுமென்றும் பேசினார். மோடி என்னும் அரசியல் கபடவேடதாரியின் அரசியல் உத்தி தான் இது. உண்மையான இந்தியா தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகப் பேசினார். நேரு மிகவும் தீர்க்கமாக இருந்தார். இந்தியா நவீன இந்தியாவாக மாறிட மேற்கத்திய போக்கு வேண்டும்; அறிவியல் தொழில்நுட்பம் வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக அறிவியல் தூண்டலை ஏற்படுத்திடவும் பாரம்பரியம் எனும் பேரால் இங்கு புதைந்து கிடக்கும் பழமை வாதத்தை வேரறுக்கவும் வேண்டும் என்று செயல்பட்டார். ஆனால் மோடி கவனக்குறைவாக அல்லாமல் மிக நன்கறிந்தே இந்தியாவை அறிவற்ற அழிவுப்பதை நோக்கி நகர்த்துகிறார். குழப்பமான மனநிலையை உருவாக்கி வளர்ச்சிக்கான ஒரே வழி பழமைவாதம் என்று மக்கள் அறிவை இருட்டடிப்புச் செய்கிறார். 2014ல் மும்பையில் நடந்த மருத்துவர்கள் மாநாட்டில் “நாம் வணங்கும் இறைவன் விநாயகரின் மனித உடலில் யானைத்தலையைப் பொருத்த ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தனர்” என்று பேசினார்.

இந்தியாவின் எல்லாத்துறைகளிலும் திறமை வாய்ந்தோரைவிட தமக்குச் சாதகமானோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நாடு மோசமான அறிவின்மை நோக்கி இட்டுச்செல்லப்படுகிறது. புகழ்பெற்ற கொலம்பிய பொருளாதார நிபுணர் ஜக்தீஸ் பகவதி, “இவர் பொருளாதார அறிஞர் என்றால் நான் பரதநாட்டியம் ஆடுபவன்” என்று சொல்லப்பட்ட இந்து பேரினவாத சித்தாந்தம் கொண்ட குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமிக்கிறார்கள். 2016ல் ஒரே இரவில் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றுபுழக்கத்திலிருந்த 86% ரூபாய் தாள்களைபணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செல்லாது என்று அறிவித்ததன் சூத்திரதாரி இந்த மேதாவி தான் என்று சொல்லப்படுகிறது. அந்த பொருளாதாரப் பேரிடரிலிருந்து நாடு இன்னும் மீண்டபாடில்லை. இந்த தேசியவாதக் காய்ச்சலடிக்கும் காலநிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த பார்வையை விட இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையினால் ஏற்படும் தேசிய உணர்வையும் நாட்டின் பாதுகாப்பு பற்றிய அச்ச உணர்வையும் தமக்குச் சாதகமாக அறுவடை செய்திடும் முனைப்போடு செயல்படுகிறார். இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்டது உத்தரபிரதேசம். அதிகமான இஸ்லாமியர்கள் வசிப்பதும் அங்கு தான். ஆனால் 2017ல் அங்கு வெற்றி பெற்ற அரசு வெறுப்பைத் தூண்டும் ஒரு காவிச்சாமியாரை முதல்வராக நியமித்தார்கள். பிரச்சாரத்தின் போது அவரது முகம் முன்னிறுத்தப்படவில்லை. இறக்கின்ற ஒவ்வொரு இந்துவுக்கும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொல்லவேண்டும் என்று வெறுப்புணர்வை விதைத்துக்கொண்டுள்ளனர்; இஸ்லாமியப் பெண்களின் பிணங்களைக்கூட தோண்டி எடுத்துக் கற்பழிக்க வேண்டுமென்று கூறியவர்களோடு மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கல்விச்சலைகளை எல்லாம் சீரழிக்கும் நடவடிக்கைகளை தலமைதாங்கி நடத்திக்கொண்டுள்ளார். தகுதியற்ற குறையறிவாளர்கள் அங்கு கூடாரமிட்டுள்ளார்கள். இந்தியக் கல்வித்துறை இடதுசாரித்துவ சித்தாந்தம் கொண்டது. அதன் அரசியலை அல்லாமல் அடிப்படை தகுதிக்கான தேர்ச்சியையே மாற்றினார். பெரும் அறிவாளிகளையும் அரசியல் ஜாம்பவான்களையும் உருவாக்கிய அமைப்புகளான இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்திலிருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை அனைத்து கல்விச்சாலைகளிலும் தமது அரசியல் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் நிர்வாகத்தையும் பேராசிரியர்களையும் பணியமர்த்தினார். அடிப்படை தேர்ச்சிகூட இல்லாதவர்கள் அங்கு நுழைக்கப்பட்டார்கள்.

மேற்கத்தியமயமாகலும் நவீனமயமாகலும் ஒன்றெனப் பொருள்கொண்டுள்ள இந்தியாவை விமர்சிக்க மோடிக்கு உரிமை உண்டு. இதுவொரு வல்லரசு நாடாக வேண்டும் என்று சொல்ல உரிமை உண்டு. ஆனால் இது மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து மதகுருக்களால் ஆளப்படும் நாடாக வேண்டும் என்று சொல்ல உரிமை இல்லை. “இந்தியா ஒரு ஐரோப்பா” என்ற இலங்கையைச் சேர்ந்த வரலாற்றாளர் ஆ.குமாரசாமி “நாம் பண்டைய நாகரிகத்திலிருந்து சுமந்து வந்திருக்கும் தேவையற்றவைகளைத் துறந்திட வேண்டும். கடந்த காலத்திலிருந்து தான் வந்திருக்கிறோம்; ஆனால் வருங்காலத்தைத் தான் நாம் திட்டமிட வேண்டும்” என்கிறார். கடந்தகாலத்தைப் பற்றித் தொங்கிக்கொண்டிருக்கும் நவீன உலகத்துக்குத் தேவையான அறிவற்ற முட்டாள் மக்கள் மோடியின் இந்தியாவில் இருக்கிறார்கள்.

இந்தியாவின் கவலை யாதென்றால் இங்குள்ளவற்றில் எது தனது? எது தனக்கு அந்நியமானது என்பது தான். காந்தியின் மொழியில் சொல்வதென்றால் இந்திய மேல்தட்டினரை சொந்த மண்ணிலேயே அந்நியராக்கிய அதே போக்கு இப்போது மீண்டும் உருவாகியிருக்கிறது. சீரற்றதாக இருந்தாலும் அது நாடு முழுவதும் இதற்கு முன்பு மேற்கத்திய பாணியை அறிந்திருக்காத மக்களின் மத்தியிலே பரவலாக இருக்கிறது. “இந்தியாவின் கலாச்சாரம் அழிப்பட்டுவருகிறது” என்று ஏ.பி.வி.பி என்ற இந்துத்துவா இளைஞரமைப்பின் இளம் உறுப்பினர் ஒருவர் வாரணாசியில் சொன்னார். இந்த இளம் இந்துத்துவவாதி காலணியாதிக்கத்தின் கொடுமைகளை அனுபவித்திடாதவர். அனால் உலகமயமாக்கத்தை அறிந்தவர். அவர்கள் ஒரு முட்டாள்தனமான உணர்வோடு வாழ்கிறார்கள். அங்கள் மதமும் கலாச்சாரமும் கேவலப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். அவர்கள் இந்துபோபியா எனப்படும் இந்துத்துவக் கற்பனைகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். விடுதலையுணர்வை விரும்பாதவர்கள், மதசார்பின்மையை வெறுப்பவர்கள். இப்படி ஆக்கத்திற்கும் அழிவிற்கும் வேறுபாடு அறியாத சிலர் நம்மிடையே இருந்துகொண்டு நமக்கெதிராகவே செயல்பட்டு நம்மையே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கலாச்சார இழப்புணர்வையே அவர்கள் அரசியல் சித்தாந்தமாகக் கொண்டுள்ளதாக எண்ணுகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் மீது, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது மேற்கத்தியமயமாதலுக்குப் பழகியவர்கள் என நம்மிடையே இருக்கும் நம் மக்கள் மீதே ஆத்திரங்கொண்டுள்ளனர். கடந்த மாதம் அமித்ஷா நம் நாட்டில் குடியேறிய இஸ்லாமியர்களை கரையான்கள் என்று குறிப்பிட்டார். பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு நாய் விசிலடிப்பதையே தன் முழுநேர வேலையாகச் செய்கிறது. “இந்து, புத்த, சீக்கியர்களைத் தவிர மற்ற எந்த ஊடுருவலையும் அகற்றிடுவோம்” என்று பகிரங்கமாக தெரிவிக்கிறார்கள். இது போதாதென்று போபாலைச் சேர்ந்த பாஜகவின் வேட்பாளர் தேர்வு அதனினும் கொடுமையானது. 25 % இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட அங்கு மசூதியின் அருகில் நடந்த குண்டு வெடித்து 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டு சமீபத்தில் பெயிலில் வெளிவந்துள்ள இந்துத்துவ பெண் சாமியார் – சாத்வி ப்ராக்யா தாகூர் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தீவிர தேசியவாதமும் பயங்கரவாதக் குற்றங்களும் ஒன்றோடொன்று பிணைந்தவை என்பதை இது உணர்த்துகிறது.

மோடி வென்றார் – இனியும் வெற்றி பெறலாம்! ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு வென்றுகொண்டே இருக்கப்போகிறார். இங்கு காங்கிரஸைக் காட்டிலும் சிறப்பான அடையாளம் இருந்திட முடியாது என்றிருந்த போது மோடியின் பெரும்பான்மை ஜனரஞ்சகத்தன்மை உருவெடுத்தது. நேரு குடும்பத்திலிருந்த வாரிசு அரசியலைத் தவிர வேறெந்த புத்தாக்க முயற்சியையும் அவர் வழங்கிடவில்லை. ஆனால் இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் அதன் தலைவர் ராகுலுக்குத் துணையாக அவரது சகோதரி பிரியங்காவை அனுப்புவதைத் தவிர வேறு அரசியல் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி 2020ல் மீண்டும் ஹிலாரி க்ளிண்டனையும் கூடுதல் வசீகரிப்பாக துணை அதிபருக்கு செல்சா க்ளிண்டனையும் நிறுத்துவதற்கு ஒப்பானது.

மோடியை வீழ்த்துவதைத் தவிர வேறெந்த திட்டமும் இல்லாமல் சின்னச் சின்னக் கட்சிகளின் மொத்தக் கூட்டணியோடு சற்று வலிமை குறைவாகக் களம் காணுகிறது காங்கிரஸ். இது மோடிக்கு ஒருவகையில் அதிர்ஷ்டமாக அமையலாம். ஆனால் அவர் 2014 வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றிடவில்லை. அதனால்தான் மோடி மீண்டும் மீண்டும் வெறுப்புணர்வுப் பிரச்சாரத்தையே மேற்கொண்டுள்ளார். மற்ற பெரும்பான்மைவாத ஜனரஞ்சகர்களைப்போல அவரும் தனது வெள்ளை மாளிகைக்குள்ளே அமர்ந்துகொண்டு தனது எதிரிகளுக்கு எதிரான சீற்றத்தை ட்விட்டரில் கொட்டிக்கொண்டிருக்கிறார். இந்திய மக்கள் இந்நிலத்தை ஆளும் அதிகாரத்தை இரண்டாம் முறையும் அவருக்குத் தரத் தயாராகிவிட்டால் அதுவே அவர்களது பெருந்தோல்வி; அதற்கான தண்டனைகளுக்காக அவர்கள் நடுங்கிக்கொண்டு காத்திருப்பதைவிட வேறெதுவும் செய்திட முடியாது.

நன்றி: TIME magazine’s
தமிழில்: இந்திர குமார்.