டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் 2019 ம் ஆண்டின் காலாண்டு லாபம் மற்றும் இழப்பு அறிக்கையின் படி, ரூ. 220 கோடி ரூபாயைப் பெயரிடப்படாத பயனாளருக்கு அந்நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு மிக அதிக நிதி கொடுத்த நிறுவனமாக விளங்குகிறது.

ப்ருடெண்ட் எலக்டோரல் அறக்கட்டளை 167.30 கோடி ரூபாயை அரசியல் கட்சிகளுக்கு 2017-18 ஆம் ஆண்டுகளில் வழங்கியது – BJP க்கு 154.30 கோடி ரூபாய் மற்றும் காங்கிரசுக்கு 10 கோடி ரூபாய் வழங்கியது. தற்போது அதை டாடா கன்சல்டன்சி சர்வீஸ் விஞ்சியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு ரூ.20,000 க்கும் மேற்பட்ட நன்கொடையைக் கொடுக்கும் நன்கொடையாளர்களின் விவரங்களைக் கட்டாயமாகத் தெரிவிக்கச் சொல்லித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த நன்கொடைகள் தனிநபரா அல்லது அங்கீகரிப்பட்ட அறக்கட்டளைகளா என்பதையும் தெரிவிக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட குழு வருடம் தோறும் இதுபோன்ற பங்களிப்புகளை கண்காணிக்கிறது.

நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையே எந்த விதமாக ஆபத்தான தொடர்புகளும் இல்லை என்பதற்கு இது போன்ற வெளிப்படையான கணக்குவழக்கு அறிக்கைகள் இன்றியமையாததாகின்றன.

சரி எதற்காக இந்த நிறுவனங்கள் இவ்வளவு கோடிகளை அரசியல் கட்சிகளுக்கு அள்ளி இறைக்கின்றன? எந்த தொழிலில் இது சாத்தியம் இதன் மூலம் அவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்?

கட்டுமான தொழில் – அரசியல்வாதி கூட்டணி

“ஜனநாயகத்தின் விலை” எனும் புத்தகத்தை எழுதிய கார்னேகி சர்வதேச அமைதிக்கான அறக்கட்டளையின் இயக்குநர் மிலன் வைஷ்ணவ், கட்டுமான தொழில் செய்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள பிணைப்பை அந்த புத்தகத்தில் விவரிக்கிறார். அதில்

“கட்டுமானத் துறைக்கு போதுமான அளவு நிலம் தேவைப்படுகிறது, இது   அரசியல் ரீதியாகவும் அதிகாரத்துவமாகவும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதன் விளைவாக, அரசியல்வாதிகள் நிலம் தேவைப்படுகிற நிறுவனங்களைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்துள்ளனர்.” என்று வைஷ்ணவ் பேட்டியில் குறிப்பிடுகிறார்.

ஒருவருக்கொருவர் ரகசிய உதவி செய்துகொள்ளும் இது போல நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டபோது அதில் ஆச்சரியப்படுகிற ஒரு ஒற்றுமையைக் கண்டனர். அது பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், 1900 களின் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல்களுக்கு முன் கட்டுமானத்திற்கு அவசியமான சிமெண்ட் உற்பத்தியில் ஒரு வீழ்ச்சியை அவர்கள் கண்டனர்.

தேர்தல் நெருங்கும் காலத்தில் கட்டுமானார்கள், அரசியல்வாதிகளின் பிரச்சார செலவினங்களுக்கு நிதி அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களால் குறைவான அளவு சிமெண்ட் மட்டுமே வாங்க முடிந்தது.

மத மற்றும் வகுப்புவாத குழுக்கள் அல்லாமல் பாஜகவின் பெரும்பான்மையான நன்கொடையாளர்கள் கட்டுமானார்கள். அல்லது எங்கெல்லாம் அரசு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளதோ அந்த துறைகளான நிதி சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு தொழில் செய்பவர்களாக உள்ளனர்.

நிறுவனங்கள் தேர்தலுக்குப் பணம் செலுத்த ஊக்கமளிக்கப்படுகின்றன,   அரசியல்வாதிகள் இந்த நிதியளிப்பிற்காக நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை விதிகளை மாற்றியமைக்கிறார்கள்.

இது கட்டுமானார்களுக்கு ஒரு குறுகிய கால செலவினமாக இருந்தாலும், அது எதிர்கால நல்லெண்ண அடிப்படையில் நீண்ட கால நன்மைகளைத் தருகிறது.

ஒரு பொருளாளராக அருண் ஜெய்ட்லி சிறிய தொழில்களுக்கான வரிவிதிப்பில் பாதகமாகச் செயல்பட்டார். ஆனால் பெரிய தொழில்களுக்கு நன்றிக்கடனாக 2016-17 இல் அதிக வரிக் குறைப்புகளைப் பரிசாகத் தந்தார்.

தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளின் துணையோடு செயல்படுவது தொழிலில் மற்ற போட்டியாளர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமல் அவர்களைத்

தொழிலிருந்து துண்டிக்கச் செய்கிறது. இதன் மூலம் அவர்கள் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறார்கள். ஜாக்கிரதையாக இந்த தொழிலுக்கு வாருங்கள் என்று. இதன்மூலம் தொழில் போட்டியில்லாத ஒரு சூழலை அவர்கள் உருவாக்குவதைச் சொல்கிறார் வைஷ்ணவ்.

அரசியல்வாதிகள் தாங்களே இதுபோன்ற தொழில்களில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் மறைமுகமாக முதலீடு செய்கிறார்கள். இதன்மூலம் கட்சிகளுக்கு வரி கட்டாத மற்றும் கருப்புப் பணத்தை நன்கொடையாக கொடுக்கிறார்கள்.

“இதன் மூலம் அவர்கள் ஒரு சிறந்த கூட்டாளியாகிறார்கள். ஒருவர் கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர் மற்றொருவர் முறையாக செலவு செய்ய வழி வகுப்பவர்.”  என இந்தியன் எக்ஸ்பிரஸ் க்கு அளித்த பேட்டியில் வைஷ்ணவ் குறிப்பிடுகிறார்.

இருண்ட ஈவுத்தொகை

பெருநிறுவனங்களின் நன்கொடைகளை லஞ்சத்திலிருந்து பிரிக்கமுடியாது. அவை எதிர்காலத்திற்காகக் கொடுக்கப்படும் ஒரு பாதுகாப்பு திட்டம். தேர்தல்களுக்கு முன்னரே ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படுவதால், இரு தரப்பினருக்கும் இது சாதகமாகவே இருக்கின்றன.

நன்கொடையாளர்களின் பங்குகளை “இப்போது வாங்கலாம்” எனப் பங்குச் சந்தை ஆய்வாளர்கள் சைகை காட்டுவார்கள் ஏனெனில் அந்த  பிற்காலத்தில் அவர்களுக்குச் சாதகமான சூழல் வரும்போது அந்தப் பங்குகளின் விலை உயரும். இதன் மூலம் அவர்கள் அரசியல் ரீதியாக நட்புள்ள நிறுவனங்களுடன் கூட்டு வைக்கிறார்கள். அதற்கு பதிலுதவியாக அவர்களது தற்போதைய நிதி நெருக்கடிகள் தீர்க்கப்படுகின்றன.

மிகப்பெரிய தொழிலதிபரான லக்ஷ்மி மித்தாலை இயக்குநர் குழுவில் வைத்திருக்கும் இந்தியா புல்ஸ் நிதி நிறுவனம் 2014-2015 தேர்தலில் 40 கோடி ரூபாயை சத்யா தேர்தல் அறக்கட்டளை வழியாக நன்கொடையாகக் கொடுத்தது.

இதற்குப் பிரதிபலனாகச் சமீபத்தில் இந்தியா புல்ஸ் நிறுவனத்திற்குப் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இன்சூரன்ஸ் சந்தைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இந்தியா புல்ஸ் நிறுவனம் லக்ஷ்மி விலாஸ் வங்கியை வாங்குவதற்கு முயல்கிறது அதற்கு மறைமுக ஆதரவு கொடுக்கப்படுகிறது. மேலும் மற்றொரு பெரிய சந்தையான இந்தியாவின் வீட்டுச் சந்தையிலும் அந்நிறுவனம் போட்டியிடுகிறது.

இதே போல டி‌எல்‌எஃப் நிறுவனம் 2014-2015 தேர்தலில் 45 கோடி ரூபாயை நன்கொடையாக சத்யா தேர்தல் அறக்கட்டளைக்குக் கொடுத்தது. மீண்டும் 2015-2016 இல் 52 கோடியும், 2017-2018 இல் மீண்டும் 52 கோடியும் கொடுத்தது. தனிநபர் நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் 2016-2017 இல் பாஜகவுக்கு டி‌எல்‌எஃப் நிறுவனம் மூலமாகக் கொடுக்கப்பட்டது தேர்தல் ஆணையம் வெளியிட்ட நன்கொடையாளர்களின் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

டி‌எல்‌எஃப் நிறுவனம் தற்போது அமெரிக்க முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து குர்கானில் ஒரு வணிக ரியல் எஸ்டேட் திட்டத்தை உருவாக்குகிறது. இது மோடியின் ஆதரவு பெற்ற திட்டம். 11.76 ஏக்கரில் இந்த சைபர்சிட்டி கட்டப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 2016-2017 இல் 22 கோடியும் 2017-2018 இல் 23 கோடியும் நிதி கொடுத்துள்ளது. இதற்காக ஏர்டெல்லுக்கு ஆகாய மற்றும் கடல்வழி இணையச் சேவைக்கு 10 வருட உரிமம் கொடுக்கப்பட்டது. இது அந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவிடம் மொபைல் போன் சந்தையில் தனது முதலிடத்தை இழந்தபின்னர் நடந்தது.

இதே போல ஆதித்யா பிர்லா, ஹால்டியா எனர்ஜி போன்ற நிறுவனங்களும் நிதி கொடுத்து பின்னர் ஆதாயம் அடைந்துள்ளன.

ஆனால், மிகவும் சர்ச்சைக்குரிய விதமாக, பத்ராம் ஜனஹித் ஷாலிகா என்றழைக்கப்பட்ட நிறுவனம், வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, தேர்தல் நிதியாக 38 கோடி ரூபாயைக் கொடுத்துள்ளது.

13 பேர் உயிர் பறிபோகக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து அதற்குப் பிறகு எந்த கட்சிகளும் நன்கொடை பெறவில்லை எனத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் அதற்கு முன்பு வரை பெற்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் வேதாந்தா நிறுவனத்தின் சர்வதேச முதலீட்டாளர்களின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

நிறுவனங்கள் மறைமுகமாகக் கொடுக்கப்படும் தேர்தல் நிதிகளைக் கண்காணிக்க இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI ) உள்ளது. இந்த அமைப்பு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் நன்கொடைகளை அவர்களது ஆண்டு அறிக்கையில் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்கிறது.

ஆனால் வைஷ்ணவ் இதை விமர்சிக்கிறார். “தேர்தல் நிதி என்பது குதிரையின் மீது பணம் காட்டுவது போல. எந்த குதிரை ஜெயிக்குமோ அந்த குதிரையின் மீது நிறையப் பணம் கட்டப்படும் ஆனால் சிலர் இரண்டாம் இடம் வரும் குதிரையின் மீதும் பணம் கட்டுவார்கள். அதுவும் ஒரு முன் ஜாக்கிரதைக்காக. ஒருவேளை இரண்டாம் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டாலோ அல்லது அவர்களின் பழைய நட்பு காரணமாக இருக்கக் கூடும். இது சூதாட்டத்தைப்போல அனைத்திலும் முதலீடு செய்வது. அவர்கள் இன்று வேண்டுமானால் குறைவாக முதலீடு செய்யலாம் ஆனால் எதிர்காலத்தில் நிறையப் பலன்களைப் பெறுவார்கள். நாம் யோசித்துப் பார்த்தால் இது ஒரே ஒரு குதிரை ஓடும் பந்தயம் போலத்தான் இருக்கிறது.”

சிறிய தொழில்களுக்கு இந்தியாவில் சிக்கலா ?

அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதிகளை நிறுவனங்கள் கொடுப்பது 1967 இல் இருந்து வழக்கமாக உள்ளது. காங்கிரஸ் தான் இதுவரை அதிக நிதி பெற்ற கட்சியாக உள்ளது.

“இந்தியாவில் பலகாலமாகவே அதிகாரத்திலிருப்போருடன் ரகசிய பரிமாற்றம்  நடந்துவருகிறது ஆனால் அது அங்கீகரிக்கப்பட்ட துறையாகவோ அல்லது  எந்தவிதமான  கண்டிப்பான விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவோ இல்லாமல் இருந்து வருகிறது.” என்கிறார் வைஷ்ணவ்.

இப்படிப்பட்ட நன்கொடை விவகாரங்களே நடைபெறவில்லை என்று மூடி மறைப்பதை விட இதை வெளிக்கொண்டுவருவதை ஆதரிக்கிறார்.

“ஏனெனில் இதை அங்கீகரிப்பதின் மூலம் விதிமுறைகள் கொண்டுவரப்படும். எனது பார்வையில் இதை அங்கீகரிப்பதின் மூலம் விதிமுறைகள் கொண்டுவரப்படும். அதன் மூலமே இதைக் கட்டுப்படுத்தவும்  வெளிப்படையாக்கவும் முடியுமே தவிர இதை ஒழிக்க முடியாது.” என்கிறார் வைஷ்ணவ்.

நிதி கொடுப்பதும் அதற்குச் சாதகமான தொழில் சார்ந்த உதவிகளும் இதுவரை மறைமுகமாக நடந்து வருகிறது. இந்த பெரும் குற்றத்தை இதுவரை மறைப்பதின் மூலம் இது பெருகவே செய்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சியால் பெரிய மாற்றம் எதுவும் உடனடியாக நிகழாவிட்டாலும் இது ஒரு நல்ல ஆரம்பம்.