மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் முன்வராத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆளுநரின் பரிந்துரைக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டாததால் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. அங்கு பாஜக மற்றும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாஜக – 105, சிவசேனா – 56, தேசியவாத காங்கிரஸ் – 54, காங்கிரஸ் – 44 ஆகிய இடங்களைக் கைப்பற்றின. ஆட்சியமைக்கத் தேவையான 145 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பாஜக- சிவசேனா கூட்டணி பெற்றிருந்தபோதும், யாருக்கு முதல்வர் பதவி என்று ஏற்பட்ட சிக்கலால் அக்கூட்டணியில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்க திங்கள் (11 நவம்பர்) மாலை 7:30 மணிவரை கெடுவிதித்தார் ஆளுநர். பாஜக சிவசேனா இடையே எவ்விதமான முடிவும் எட்டப்படாத நிலையில் சிவசேனா ஆட்சியமைப்பதற்கு, தேசியவாத காங்கிரஸின் ஆதரவைக் கோரியது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் நேற்று (11-நவம்பர்) மாலை, ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டது. அவர்களது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டாத நிலையில் யார் தான் ஆட்சியமைக்கப்போகிறார்கள் என்று பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

ஆனால் தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அளித்த கெடு இன்னும் முடிவடையாத நிலையில் இன்று காலை முதலே ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்துள்ளார் என்று தகவல்கள் வந்தபடி இருந்தன. பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி இன்று மதியம் அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது பற்றி முடிவெடுக்கத்தான் அக்கூட்டம் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதன்படியே ஆளுநர் அளித்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.