ராஜஸ்தான் சுரு பகுதியைச் சேர்ந்த சர்தார்சாஹர் காவல்நிலையத்தில் ஜூலை 3 தேதி தன்னை விசாரணை என்று அழைத்துச் சென்று பலநாட்கள் சிறையில் வைத்து 9 காவலர்கள் தன்னை வன்புணர்வு செய்ததாக தலித் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது வயது 35. இவ்விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

6 மாதங்கள் பழைய திருட்டு வழக்கு ஒன்றை காரணம் காட்டி ஜூன்30ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 22 வயதான தன் சகோதரர் கடந்த ஜூலை 6ம் தேதி கஸ்டடியிலேயே இறந்ததாகவும் இதனிடையே ஜூலை 3 அன்று அந்தப் பெண்ணையும் கைது செய்து சென்றதாக அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் பொய்யான வழக்கினை ஜோடித்து அப்பெண்ணைக் கைதுசெய்து பலநாட்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக அப்பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

தன் கணவரின் சகோதரரை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்ததை தான் கண்ணால் பார்த்ததாகவும் தன் குடுப்பத்தினரை மிரட்டிப் பணியவைத்து கையெழுத்திடவைத்ததாகவும் ராஜஸ்தான் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ள அப்பெண் தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கும் தன் கணவரின் சகோதரர் கொல்லப்பட்டதற்கும் காவல்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். காவல்நிலைய அதிகாரி ரன்வீர் சிங் உட்பட தன்மீது பாலியல் வன்கொடுமை செய்த எட்டு காவல்துறையினரின் பெயரையும் அப்பெண் வெளியிட்டுள்ளார்.

சிகிச்சைக்காக ஜூலை 11ஆம் தேதி அப்பெண்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இக்கடிதத்தை அப்பெண்ணின் குடும்பத்தார் முதலமைச்சரிடம் வழங்கி நீதி வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து காவலில் இருந்தபோதே மரணமடைந்தது பற்றி நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு காவல்துறை இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அரசு அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளரை நீக்கியுள்ளது.

அப்பெண் அளித்த பாலியல் குற்றச்சாட்டையடுத்து அந்த காவல் துறை அதிகாரிகள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர்த்து அவ்வட்டாரத்தைச் சேர்ந்த மேலும் 26 காவல்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். இவ்வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் குமார் ஷர்மா தெரிவித்ததாவது “இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 376 D, வன்கொடுமைத் தடுப்புச்சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

ஆனால் ‘இந்த பாலியல் வழக்கு போலியானது’ என்று அத்தொகுதி காங். எம்பி குற்றம் சாட்டினார். காங். கட்சியைச் சேர்ந்த அம்மாநில எதிர்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா ‘அரசு இவ்விவகாரத்தில் மெத்தனம் காட்டுகிறது’ என்று குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த அம்மாநில சட்டத்துறை அமைச்சர் தரிவால், காவல்துறைத் தலைவரிடம் அப்பெண் நேரில் புகார் செய்துள்ளதாகவும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் வழக்கினை பெண் காவல்துறை கண்காணிப்பாளர்தான் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ராஜஸ்தான் காவல்துறையினர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுவது குறிப்பிடத்தக்கது.