நடிகையும், #மீடூ செயல்பாட்டாளருமான அலிஸ்ஸா மிலானோ, ஜார்ஜியா மாநிலத்தில் இயற்றப்பட்ட கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராகப் போராடும்படி பெண்களுக்கு அழைப்புவிடுத்தார்.

பெண்களுக்கு அவர்கள் உடல் மீது சட்டரீதியான உரிமை கிடைக்காதவரை நாம் கருவுறக்கூடாது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

கருக்கலைப்பைத் தடைசெய்யும் சட்டமுள்ள மாநிலங்களில் ஜார்ஜியா தற்போது இணைந்துள்ளது.

அலிஸ்ஸா மிலானோவின் இந்த அறிவிப்பு இணையத்தில் இரு கருத்துகளுடன் வலம் வருகிறது. #sexstrike எனும் ஹாஷ்டேக் அமெரிக்காவில் பரபரப்பாகிவருகிறது.
“ஹார்ட்பீட்” எனும் இந்த சட்டத்தை ஆளுநர் பிரைன் கேம்ப் கடந்த வியாழனன்று கையெழுத்திட்டார். இது வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
என்ன சொல்கிறது இந்த சட்டம்?

கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு கண்டுபிடிக்கப்பட்டபின் அதைக் கலைப்பது குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. அது கரு உண்டாகி ஆறு வாரங்கள் ஆனதும் நடக்கிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்குத் தாங்கள் கருவுற்றிருப்பதை ஆறு வாரங்களில் அறிய மாட்டார்கள். அவர்களுக்குத் தலைச் சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒன்பது வாரங்கள் ஆன பிறகே தெரியவரும்.

ஆனால் இந்த சட்டத்தைப் பலர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே கென்டக்கி மாநிலத்தில் இந்த சட்டத்தை இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உடனடியாக தடை செய்தார் அம்மாநில நீதிபதி. மிசிசிப்பி மாநிலத்திலும் இந்த சட்டம் அமல்படுத்தபட்டுளது ஆனால் அதுவும் வழக்கைச் சந்திக்கிறது.

பாலியல் போராட்டம்

அலிஸ்ஸா மிலானோ கடந்த சனியன்று இதை எதிர்த்து,

“பெண்களுக்கு அவர்கள் உடல் மீது சட்டரீதியான உரிமை கிடைக்காதவரை நாம் கருவுறக்கூடாது. அதனால் நமக்கான உரிமை கிடைக்கும் வரை நாம் ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட் பெரும் பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. 45,000 பேர் அதற்கு லைக் செய்தும் 15,000 பேர் அதை ரீட்வீட் செய்தும் உள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்த்தும் உடனடியாக எதிர்வினைகள் வர ஆரம்பித்துள்ளன. இந்த நோக்கத்தை ஆதரிக்கிறோம் ஆனால் பாலியல் உறவே கூடாது என்பது மோசமான கருத்து என்று தெரிவித்தனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து பிரபல ஹாலிவுட் நடிகர்கள் பலர் குரலெழுப்பி உள்ளனர். நடிகர்கள் மட்டுமல்லாது பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கருவை வைத்துக்கொள்வதும் கலைப்பதும் தனது உடல் சார்ந்த உரிமை என்று பல வருடங்களாகப் பெண்கள் போராடி வருகின்றனர். அதைச் சட்டத்தின் மூலம் மறுக்கப்படும் போது பெரும் உரிமை மீறலாக வெடித்துள்ளது.