ற்றவர்களுக்கு இன்று உங்கள் வாழ்வில் விலை மதிக்க முடியாதது என்ன தெரியுமா ? அது உங்கள் சொத்தோ, உங்கள் உடைமைகளோ, உங்கள் அறிவோ அல்ல. அவர்களுக்கு உங்களை பற்றிய தகவல்கள் தான் இன்று விலை மதிக்க முடியாதது.  உங்களுக்கு அப்படி தோன்றவில்லையென்றாலும் இன்றைய தகவல் யுகத்தில் ஆட்சியாளர்களுக்கு, வணிக அரக்கர்களுக்கு, ஏன் ஒரு தனி நபருக்கே கூட அது முக்கியமானது.

இன்று நாம் என்பது நம் அனுபவங்களும் நம்முடைய நினைவுகளும் தான். யோசித்துப் பாருங்கள் இன்று ஒருவர் உங்களிடம் “நீங்கள் யார் “? என்ற கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று. இன்று அதை ஒருவர் அறிந்துகொண்டு தவறாகப் பயன்படுத்தினாலோ அல்லது அதை அழித்துவிட்டாலோ  நமது அடையாளம் சிதைக்கப்படுகிறது.

2019 இல் இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனாக இருக்கும் இதுவே 2022 இல் 800 மில்லியனைத் தொடும் என்று சிஸ்கோ அறிக்கை கூறுகிறது. அதே போல புள்ளிவிவரப்படி இன்று இந்தியா தான் உலகிலேயே ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடாக இருக்கிறது.

நம்மைப் பற்றிய தகவல்களை மற்றவர்கள் அறிந்துகொள்ள இதற்கு முன்னர் இது போன்ற ஒரு தளம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று ஒருவருக்கு இரண்டு மொபைல் வைத்திருக்கும் காலத்தில், ஒரு நாளுக்கு அளவில்லா தகவல் சேவை இருக்கும் நிலையில் இணையம் , சமூக வலைத்தளங்கள் மூலம் நாமே நம்மைப் பற்றிய தகவல்களை மனமுவந்து கொடுக்கிறோம். அதுவும் எவ்வளவு என்று பாருங்கள்!  நமது பழக்கவழக்கங்கள், நமது நம்பிக்கைகள், நமது கொள்கைகள், நாம் வாழும் இடம், நமது தொழில், நாம் சென்ற இடங்கள், நாம் பயன்படுத்தும் பொருட்கள், நமக்குப் பிடித்த மனிதர்கள், சினிமா, புத்தகம், நமது மதம், இறை நம்பிக்கைகள், நமது உடல்நிலை, நமது தனிப்பட்ட அந்தரங்கமான தகவல்கள்  என்று நம்முடைய மொத்த அடையாளத்தையே தருகிறோம்.  முன்னர் எல்லாம் இவற்றை ஒருவர் அறிந்து கொள்ள, அவர் நமது வாழ்வில் ஏதோ ஒரு உறவாகப் பல காலம் பயணப்பட்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று உங்கள் பெயரைக் கூகிள் மற்றும் ஃபேஸ்புக்கில் தட்டினால் போதும் உங்களை வாழ்வில் ஒரு முறை கூட சந்தித்திராத, உங்களிடம்  ஒரு சொல் கூட பேசாத நபருக்குக் கூட உங்களைப் பற்றி சகலமும் தெரிந்துவிடும்.

மைக்கேல் கோசின்ஸ்கி எனும் பேராசிரியர்,  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இருக்கும்போது  தன் சக மாணவனுடன் இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார். அவர் MyPersonality எனும் ஆப்பை உருவாக்கி அதன் மூலம் மனிதர்களை அளவிட OCEAN ( OCEAN: openness, conscientiousness, extraversion (sociability), agreeableness and neuroticism (degrees of sensitivity). எனும் உளவியல் ரீதியான கேள்வித்தாளை உருவாக்கினார். அது 5 சாராம்சங்களைக் கொண்டதாக அமைந்தது. அவை

  1.  புதிய அனுபவங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறார்களா ?
  2.  திட்டங்களைத் தீட்டி அதில் ஒழுங்கை பின்பற்றுகின்றார்களா ?
  3.  மற்றவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா ?
  4.  தன்னுடைய விருப்பங்களை விட மற்றவர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை தருகிறார்களா ?
  5.  அதிகம் கவலைப்படுகிறவர்களா ? என்பதாகும்.

கோடிக்கணக்கானோர் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர். அதன் முடிவுகளை அவர் மற்ற தகவல்களுடனும், ஃபேஸ்புக்கில் அவர்கள் என்ன பதிவுகளை இடுகிறார்கள் எந்தெந்த பதிவுகளுக்கு லைக் போடுகிறார்கள், என அவர்களின் நடவடிக்கைகளை ஒப்பிட்டதின் மூலம் ஒவ்வொருவரின் பாலியல் நோக்கு, மத நம்பிக்கைகள், அரசியல் சார்புநிலை போன்றவற்றை மிகத் துல்லியமாகக் கணிக்கமுடிவதை அறிந்தார். கோசின்ஸ்கி சொன்னார் “ஒருவரைப் பற்றி அவர்களின்  நண்பர்கள், பெற்றோர் ஏன் அவர்களின் இணையை விட என்னால் சரியாக மதிப்பிட முடியும் என்று. இதன் மூலம் நாம் குறிப்பிட்ட ஒருவரையோ, ஒரு குழுவையோ அல்லது  ஒரு குறிப்பிட்ட மனநிலையைக் கொண்டவரையோ தேட முடியும் என்று சொன்னார். உதாரணமாக, யாருக்கு ஓட்டுப் போடுவது என்று இன்னும் முடிவெடுக்காமல் இருப்பவர்கள், கோபமான மனிதர்கள், பிரிந்து வாழும் பெண்கள், கவிதை எழுதுபவர்கள் என எந்த வகையான மனிதர்களையும் தேட முடியும். சுருங்கச் சொன்னால் இது மனிதர்களைத் தேடும் இயந்திரம்” என்று சொன்னார்.

இன்று தகவல் ஒரு மிக மிக வலிமையான ஆயுதம். இன்று அதைக் கொண்டு ஒரு தனி நபரையோ,  நிறுவனத்தையே, மத அமைப்பையோ, அரசாங்கத்தையோ வீழ்த்த முடியும். ஆட்சியையும் கைப்பற்ற முடியும். மனிதர்களின் முடிவெடுக்கும் முறைகளையும் அவர்களின் நம்பிக்கைகளைக் கூட மாற்ற முடியும். இதன் மூலம் எது வேண்டுமானாலும் சாத்தியம் தான் என்ற நிலை நிலவுகிறது. அப்படி நாம் பதட்டப்படும் அளவிற்கு  என்ன நடந்துவிட்டது என்று கேட்கிறீர்களா ? ஒவ்வொரு பாதிப்பையும் காண்போம்,

முதலில் தனி நபர் மீதான தாக்குதல்.  சில உதாரணங்களைப் பார்ப்போம்

2015 இல் ஆஷ்லி மாடிஸன் எனும் இணைய டேட்டிங் மற்றும் சமூக வலைத்தளத்தில் இருக்கும்  37 மில்லியன் பயனீட்டாளர்களின் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த பெயர்கள், இமெயில் ஐடி, அவர்களின் வீட்டு விலாசம், கிரெடிட் கார்டு விவரங்கள், அவர்களின் ரகசிய பாலியல் விருப்பங்கள் போன்றவற்றை ஹேக்கர்கள் திருடி அதை வெளியிட்டார்கள். இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் தங்கள் மதிப்பு நிலைகுலைந்ததாகவும் பலர் தற்கொலை எண்ணங்கள் மற்றும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்கள்.

அதே போல 2014 இல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட் சேவைக்குள் ஹேக்கர்கள்  நுழைந்து உலகின் மிகப் பிரபலமான ஹாலிவுட் நடிகர் நடிகைகளின் மிக அந்தரங்கமான படங்களைத் திருடி அதை இணையம் முழுக்க வெளியிட்டார்கள்.

அடுத்து நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்

2014 ஆம் ஆண்டு சோனி நிறுவனத்தின் சர்வர்களை தென் கொரிய ஹேக்கர்கள் ஹேக் செய்து அதிலுள்ள சோனி நிறுவனத்தின் ஒப்பந்தங்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தகவல்கள், இமெயில் பரிமாற்றங்கள், இன்னும் வெளியிடாத புதிய திரைப்படங்களின் பிரதிகள், உயர் அதிகாரிகளின் சம்பள விவரங்கள் போன்றவற்றைக் களவாடி வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்கள். இதை அவர்கள் செய்யக் காரணம், சோனி நிறுவனம் தென் கொரிய அதிபரைப் பற்றி கேலியாக ஒரு திரைப்படத்தை எடுத்தது தான். அதை வெளியிட்டால் இந்த தகவல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இன்னும் வெளிவராத திரைப்படங்களை இணையம் முழுக்க வெளியிடுவதாக மிரட்டினார்கள். சோனி நிறுவனம் அவர்களுக்கு அடி பணிந்தது. அந்த படத்தை வெளியிடவில்லை. மேலும் 8 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடாகத் தனது ஊழியர்களுக்கும் 15 மில்லியன் டாலர் மேற்கொண்டு இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும் செலவு செய்தது.

அடுத்தது ஒரு நாட்டின் மீதான தாக்குதல்கள்

இன்று ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் முப்படைகளை எதிரி நாட்டுக்கு அனுப்பத் தேவையில்லை. மாறாக ஒரு லேப்டாப்பும் திறமையான ஹாக்கரும் இருந்தால் போதும். உங்கள் பொருளாதார மையங்கள், வங்கிகள் , விமான நிலையங்கள். அணு உலைகள், பவர் ஸ்டேஷன்கள் போன்றவற்றைச் செயலிழக்கச் செய்துவிட முடியும். இது போரை விட ஆபத்து குறைந்த ஆனால் அதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்.

2010 இல் ஈரானின் அணு உலை கட்டுப்பாடு நிலையத்தில் வெறும் 1 MBஅளவில் உள்ள ஒரு வைரசை ஹேக்கர்கள் உள்ளிருத்தி அதன் கட்டுப்பாட்டை நிலைகுலையைச் செய்தார்கள். இது ஒரு நாள் இரு நாள் அல்ல கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு இந்த நிலை தொடர்ந்தது.  இதை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசுகள் ஈரானின் அணுத் திட்டங்களை அழிக்க ஒரு வீரரைக் கூட ஈரானுக்கு அனுப்பாமல் நடத்திய தாக்குதல்.

இறுதியாக மக்களின் மீதே அரசும் அரசியல் கட்சிகளும் நடத்தும் தாக்குதல்கள்

2014 இல் மோடி ஆட்சியமைக்க இந்த தகவல்கள்  பெரிதும் உதவின. பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் அரவிந்த் குப்தா இந்தியாவிலுள்ள 543 தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்களின் தகவல்களும் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இந்த தகவல்களை அவர்கள் சேகரித்தார்கள். “இத்தொகுதிகளில் உள்ளவர்களில் எத்தனை பேர் மொபைல் மற்றும் இன்டர்நெட் வசதி கொண்டவர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இந்த தகவல்களைத் தீவிரமாக அலசி நாங்கள் பல முடிவுகளைக் கண்டறிந்தோம். கடந்த தேர்தலில் எந்த மையங்களில் அதிக வாக்கு பா.ஜ.க-க்கு  கிடைத்தது, ஒவ்வொரு தொகுதிகளில் யாரெல்லாம் எங்களுக்கு ஆதரவு, எதிர்ப்பு மற்றும் இன்னும் முடிவெடுக்காதவர்கள் என்று கண்டறிந்தோம். மேலும் டீப் அனாலிசிஸ் எனும் ஆய்வு முறை கொண்டு யாரெல்லாம் குழுவாக இருக்கிறார்கள்  என்பதை அறிந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டோம்” என்றார்.

இன்று இந்தியாவில் இருக்கும் எல்லா தேசிய மற்றும் மாநில கட்சிகளிடமும் இதே போன்ற வாக்காளர்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன. அவர்கள் இனிவரும் எல்லா தேர்தல்களிலும் அதை இன்னும் தீவிரமாகவும் நுட்பமாகவும் செயல்படுத்துவார்கள்.

வழக்கமான விளம்பரங்கள் பலதரப்பட்ட மனிதர்களுக்கு பொதுவாக ஒரே விளம்பரமாக இருக்கும். ஆனால் இந்த தகவல்கள் மூலம் ஒவ்வொரு தனி மனிதர்களின் விருப்பங்களுக்குத் தகுந்த முறையில் அவர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்படுகின்றன. இது அவர்களுக்கு ஒரு நெருங்கிய நண்பர் , உறவினர் சொல்வதைப் போலச் சென்றடைகிறது. இதன் மூலம் அவர்களை எளிதில் நம்பவைக்க முடிகிறது.

இதே முறைகளைப் பின்பற்றி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் ஆட்சியைக் கைப்பற்ற மக்களைப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குக் காரணமில்லாமல் இல்லை. கேம்பிரிட்ஜ் அனால்டிக்கா எனும் நிறுவனம் கிட்டத்தட்ட 60 மில்லியன்  ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின் தகவல்களை அபகரித்து  கோசின்ஸ்கி உருவாக்கிய மனிதர்களைத் தேடும் சர்ச் என்ஜினை போல ஒன்றை உருவாக்கி அதை ட்ரம்பிற்கு கொடுத்துதவியதாக நிரூபிக்கப்பட்டது.

இப்படி நம்மைச் சுற்றி எல்லா விதங்களிலும் நமது எல்லைகளுக்குள் பிரவேசிப்பவர்களை என்ன செய்வது இதைத் தடுக்க முடியாதா?

இதற்குப் பழங்காலத்திலிருந்தே ஒரு தீர்வு இருக்கிறது. அது, கதவைச் சாத்தி வையுங்கள்! நமது ரகசியங்களையும் அந்தரங்கங்களையும் பாதுகாப்பதற்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட கருவி அது. உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் அதிகம் பகிராமல், முடிந்தால் எதுவும் பகிராமல் இருக்கவும். உங்களைப் பற்றிய தெரியாத தகவலைக் கொண்டு யாரும் உங்களை வீழ்த்திவிட முடியாது. கடினமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துங்கள். ஒரே பாஸ்வேர்டை எல்லா அக்கவுண்டுகளுக்கும் பயன்படுத்தாதீர்கள். இருமுறை பரிசோதிக்கும் முறையை உபயோகப்படுத்துங்கள் அதாவது ஒரு முறை அக்கவுண்ட் பாஸ்வர்ட் மற்றும் உங்கள் மொபைலுக்கு வரும் OTP முறை. இறுதியாக உங்கள் அடையாளங்களை முற்றிலும் மறைக்கும் VPN முறை.

இதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், உங்களை இங்குப் பலர் மௌனமாக இருளிலிருந்து கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்களுக்கு நீங்களாகவே தீனி கொடுக்காதீர்கள்.