சென்னையில் கடந்த மாதம் அதிமுக பேனரால் ஏற்பட்ட விபத்தில் தண்ணீர் லாரி மோதி சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். அது போல, மற்றுமொரு சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் நிலைதடுமாறி விழுந்தபோது பின்னால் வந்த சரக்குந்தில் மோதி விபத்து நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வழக்கம்போல காலை பணிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கோல்ட்வின்ஸ் பகுதி அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் ஒன்று சரிந்து விழுவதைப் பார்த்தவர், தன் வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னே வந்த சரக்குந்து அவர் மீது ஏறி அவரது இரண்டு கால்களும் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசார் கூறுகையில், சரக்குந்து ஓட்டுநர் வேகமாக வாகனத்தை இயக்கியதும் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அனுராதாவின் உறவினர் சிவன் என்டிடிவியிடம் கூறும்போது, திங்கட்கிழமையன்று கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, அவிநாசி நெடுஞ்சாலை முழுவதும் அதிமுக கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. எனினும், போலீசார் இதனை மூடி மறைக்க முயற்சி செய்கிறனர் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விபத்து தொடர்பாக மூத்த போலீசார் ஒருவர் கூறும்போது, சரக்குந்து ஒட்டுநரை வேகமாக வரும்படி அவரது உரிமையாளர் அழைத்ததன்பேரில் அவர் வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கொடிக்கம்பங்கள் சாலையின் மணல் பகுதியிலே வைக்கப்பட்டிருந்ததாகவும் விபத்து நடந்தது சாலையின் வலது பக்கம் என்பதாலும் லாரி ஓட்டுநர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில், கோவையில் அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது எனக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து என் கவனத்துக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் போலீஸ் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவினரின் விளம்பர பதாகையாலும் கொடிக்கம்பங்களாலும் தொடர்ந்து விபத்து நேர்ந்துவருகிறது. ஆனால் அரசு இதற்கு எவ்வித கள நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. மேலும் பதாகை வைத்து ஒரு இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஜெயபால் நேற்று உயர்நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைகளுக்கு 50,000 ரூபாய் நன்கொடை அளிக்க வேண்டும் என்ற உத்தரவுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எந்தவிதமான தண்டனையும் அவருக்கு வழங்கப்படவில்லை. இப்போது கோவை வழக்கில் ஒருபடி மேலே சென்று அதிமுக கொடிக்கம்பத்திற்கும் விபத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்று வழக்கையே மடைமாற்றியுள்ளனர்.