தமிழ்ஸ்டுடியோ அருண் சினிமாவில் வேலை செய்யும் எழுத்தாளர்களை சாடி ஒரு (பேஸ்புக்) பதிவை எழுதியிருக்கிறார். எனக்கு அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் மீது கூடுதலாக சொல்ல சில விசயங்கள் உள்ளன:

எழுத்தாளர்கள் ஏன் புதிதாக வரும் படங்களைப் பற்றி இவ்வளவு ஆர்வமாக ஆவேசமாக விமர்சனம் எழுதுகிறார்கள், அதே நேரம் இலக்கிய நூல்கள் வெளியாகும் போது அவர்கள் கருத்து தெரிவிப்பதில்லையே என அருண் கேட்கிறார். நல்ல கேள்வி. நான் இதில் எழுத்தாளர்கள் மீது பெரிய குற்றம் இல்லை, மாறாக இந்த குற்றச்சாட்டில் நிறைய மிகை உண்டு என நினைக்கிறேன். ஏன்?

இங்கு இலக்கிய விமர்சகர்கள் என ஒரு கூட்டமே இல்லை. இன்னும் சொல்லப் போனால் விரல் விட்டு எண்ணத்தக்க சிலரைத் தவிர இங்கு தனியான பதிப்பாளர்களும் இல்லை. இங்கு எழுத்தாளனே விமர்சகன், அவனே பதிப்பாளன். இங்கு இலக்கிய, நடுநிலை, சிறுபத்திரிகை இதழ்களைக் கொண்டு வரவும் தனியான நபர்கள் குறைவு. எழுத்தாளனே தான் எழுதுவதற்கான பெரும்பாலான பத்திரிகைகளை நடத்தவும் செய்கிறான். அட, இது மட்டுமில்லை, தமிழ் வெகுஜன இதழ்களில் நல்ல பத்தியாளர்கள் இல்லை; வெகுஜன தொடர்கதையாளர்கள் பெருமளவில் புதிதாக அதே தளத்தில் இருந்து தோன்றவில்லை. இந்த பணிகளையும் கடந்த இரு பத்தாண்டுகளுக்கு மேலாக இலக்கிய எழுத்தாளனே செய்து வருகிறான். இன்னும் சொல்வதானால் இதே காலத்தில் தான் வெகுஜன இதழ்களின் எடிட்டிங் பணிகளிலும் அதிகமாக இலக்கிய எழுத்தாளர்கள் போய் சேர்ந்தார்கள். எனக்கு நன்றாக நினைவுள்ளது: ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் நிறைய செய்தி சேனல்களில் விவாதங்களுக்கு எழுத்தாளர்களை அழைக்கும் வழக்கம் தோன்றியது. “நீயா நானா” இன்னொரு பக்கம் இத்தகைய எழுத்தாளர்களை பிரசித்தமான ஆளுமைகளாக்கியது. நான் அப்போது வாரத்தில் மூன்று நாட்களாவது ஏதாவது டிவி ஒன்றின் செய்தி விவாதத்தில் கலந்து கொள்வேன். ஒரு பயனும் இல்லை – சும்மா ஒரு த்ரில்லுக்காக. கடந்த ஐந்தாண்டுகளில் தான் இதிலும் ஒரு நுட்பமான மாற்றம் வந்துள்ளது: அரசியல் விவாதம் செய்வதற்கு திமுக, பாஜக சார்பில் பத்திரிகையாளர்கள், டிவிட்டர், சமூகவலைதள செயல்பாட்டாளர்கள் அந்த ‘பொதுவான தரப்பு’ இடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (அதிமுக எங்கேயுமே இல்லை.). ஆனால் அவ்வை சண்முகியில் கமல் போல காலையில் ஆணாக வேலையிடத்தில் நடன இயக்கம், மதியத்துக்கு மேல் சடாமுடி, பிளவுஸ், சேலை கட்டி, முகத்தில் புரோஸ்தெடிக் மேக்கப் அணிந்து மாமியாக மாறுவேடத்தில் குழந்தைக்கு சோறூட்டுவது, ரவுடிகளை உதைப்பது என மற்றொரு வேடத்தில் நடிப்பது போல இன்னும் எழுத்தாளர்களே பல பணிகளை எடுத்து செய்து வருகிறார்கள். பேஸ்புக்கிலும் இன்று சினிமா குறித்து எழுதுகிறவர்கள் “சினிமா விமர்சகர்கள்” அல்ல – அவர்கள் ஒன்று அமெச்சூரான (வளர்ந்து வரும்) சமூகவலைதள எழுத்தாளர்கள் அல்லது இலக்கிய, செமி-இலக்கிய, எதிர்-இலக்கிய எழுத்தாளர்கள். (எழுத்தாளர்கள் இன்னும் செய்யாத ஒரே பணி அணுகுண்டு கண்டுபிடிக்காதது மட்டும் தான்.) உண்மையான சிக்கல் தமிழ் சமூகத்தில் பல முக்கிய அறிவார்ந்த பணிகளுக்கு ஆள் இல்லை; ஒரு பெரிய வெற்றிடம் நிலவுகிறது. அங்கு குறைந்த கூலிக்கு அல்லது கூலியே இல்லாமல் பணியாற்ற எழுத்தாளர்கள் புலம்பெயர் தொழிலாளிகளைப் போல சென்று வருகிறார்கள்.

நியாயமாக இங்கு இலக்கிய விமர்சகன் என ஒருவன் இருந்திருக்க வேண்டும். அவனுக்கு சமூகத்தில் தனி மரியாதை பெறுகிற, வெகுஜன பத்திரிகைகளில் / நாளிதழ்களில் இலக்கிய பத்தி எழுதுகிற, விமர்சன புத்தகங்களை விற்கிற சாத்தியங்கள் இருந்திருக்க வேண்டும். இதெல்லாம் கேரளத்தில் உள்ளது. அங்கு மக்களால் கொண்டாடப்படுகிற, விமர்சனத்தை மட்டும் வாழ்க்கையாக எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு விமர்சகனுக்கு ஒரு விருது கூட கொடுக்கப்படுவதில்லை. அதனாலே அவன் ஒரு நாவலாவது எழுதி விட மாட்டோமா என ஏங்குகிறான். அது போகட்டும், அவனது விமர்சனங்களை யாரும் படிப்பதில்லை. அவனுடைய விமர்சனங்களை இன்றைய இடைநிலை இதழ்களில் பொருட்படுத்தி பதிப்பிப்பதில்லை. அவன் என்ன பைத்தியமா தொடர்ந்து மாரடிக்க? ஆகையால் அப்படி ஒரு இனமே தமிழில் மறைந்து விட்டது. சினிமா விமர்சகனின் கதையும் அது தான். மேற்கில் அது ஒரு தனியான துறை. அவர்களுடைய முழுநேர வேலையே சினிமா பார்ப்பது, சினிமா பற்றி படிப்பது, சினிமா பற்றி எழுதுவது. அவர்கள் அங்கு செலிபிரிட்டிகள். ஆகையால் அவர்கள் சினிமாவின் மொழி, தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள, உலக சினிமாவை மேற்கோள் காட்ட மெனக்கெடுகிறார்கள். இங்குள்ள நிலைமை என்ன? இங்கு நிருபர்களும், சப்-எடிட்டர்களும் தமது பல வேலைகளுக்கு மத்தியில் (அவ்வை சண்முகி போல) சினிமா விமர்சனமும் எழுதுகிறார்கள். ஒரு படத்துக்கு குறைவாக மதிப்பெண் இட்டால் உடனே இயக்குநர் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து திட்டுவது இங்கு பலமுறை நடந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் விமர்சகர்களின் கருத்துக்களை மதிக்கிறார்கள்; தம்மை கடவுளாக அங்குள்ள இயக்குநர்கள் நினைப்பதில்லை. இங்கு என்ன நடக்கிறது? இதை அறிந்து கொள்ள நீங்கள் பரத்வாஜ் ரங்கன் நம் இயக்குநர்கள், நடிகர்களை வைத்து அவருடைய யுடியூப் சேனலில் எடுக்கும் பேட்டிகளில் அவர்கள் ரங்கனை எப்படி நடத்துகிறார் என கவனியுங்கள் – ஒரு சிறிய நடிகர் கூட கெத்தாக பேச ரங்கன் கைகட்டிக் கொண்டு அவர்களுக்கு இணக்கமாக போகவும், நைஸ் பண்ணவுமே முயல்கிறார். இல்லையென்றால் பேட்டி அளிக்க மாட்டார்கள் (பரத்வாஜ் ரங்கனின் அரசியல் எரிச்சல்படுத்தும் என்பது வேறு பிரச்சனை; அதற்குள் நான் இப்போது வரப்போவதில்லை.) தமிழ் சினிமா விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தால் நடிகர் / இயக்குநரிடம் “சார்” போடாமல் ஒரு கேள்வியை ஆரம்பிக்க முடியுமா?

பிரச்சனை இங்கு பத்திரிகையாள விமர்சகனிடமோ எழுத்தாள விமர்சகனிடமோ இல்லை – பிரச்சனை வெகுஜன ஊடகத்திலும் சினிமாவிலுமே இருக்கிறது: அவர்கள் ஒரு தொழில்சார் விமர்சகனை மதிப்பதோ அவனுக்கு சரியான கூலி கொடுப்பதில் இல்லை. அதை யார் செய்தாலும் போதும் எனும் அளவுக்குத் தான் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய இந்த திமிர்த்தனமும் அறியாமையுமே இப்போதுள்ள வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது; அதை நிரப்ப நிறைய பேரை பயன்படுத்துகிறார்கள். நீங்கள் உங்கள் காரை ரிப்பேர் செய்யும் பொறுப்பை தள்ளுவண்டிக்கடை வைத்திருக்கிறவரிடம் கொடுப்பீர்களா? நீங்கள் உங்களுக்கு நெஞ்சு வலி வந்தால் ஒரு காய்கறி விற்கும் அம்மாவிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து எனக்கு “சிகிச்சை பண்ணுங்க, அவசரம், கையில் காசில்ல” என்று சொல்லுவீர்களா? ஆனால் விமர்சனம் எனும் விசயத்தில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

அருண், ஏன் இலக்கியவாதி சினிமா விமர்சனம் பண்ணுகிறான் எனும் கேள்வியை நீங்கள் “ஏன் சினிமாவுக்குள் உங்களால் ஒரு விமர்சகனை உருவாக்க முடியவில்லை?” என்று கேள்வியாகவே எழுப்பியிருக்க வேண்டும். தமிழ் சினிமாவின் எழுபது, எண்பதாண்டு வரலாற்றில் எத்தனையோ தொழில்நுட்ப, திரைக்கதை அறிவு படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சினிமா கலை குறித்து படித்தறிந்து கொண்டு, மொழியறிவையும் வளர்த்துக் கொண்டு ஏன் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்து, வெகுஜன இதழ்களில் வாரந்தோறும் எழுதி, டிவியில், சமூக ஊடகங்களில் பேசி இத்தனை ஆண்டுகளாய் மக்களுக்கு சினிமாக் கல்வியை ஊட்டவில்லை? நீங்கள் உலக சினிமாவின் தரத்திலும், அரசியல் கூர்மையுடனும் தமிழ் சினிமா தோன்ற வேண்டும் எனும் விருப்பத்தில் “படச்சுருள்” எனும் இதழை கொண்டு வருகிறீர்கள். ஆனால் அதற்கு நமது வணிக சினிமாக்கார்கள் அளிக்கிற ஆதரவு என்ன? அதற்கு நமது பிரதான ஊடகங்கள் தரும் இடம் தான் என்ன? ஒன்றுமில்லை. மாறாக சிறுபத்திரிகை தளத்தில் இருந்து வந்த உங்களைப் போன்ற ஒருவரே சினிமாவை உயர்த்த வேண்டும் எனும் நோக்கில் அதே சிறுபத்திரிகை மனநிலை கொண்ட எழுத்தாளர்கள், வாசகர்கள், சினிமா ஆர்வலர்களுடன் சேர்ந்து தமிழ் ஸ்டுடியோவை நடத்தி இதழும் கொண்டு வருகிறீர்கள். நியாயமாக இந்த பணியை சினிமாவில் பணமும் புகழும் சம்பாதித்த, புத்தக வாசிப்பும் கொண்ட வெற்றிமாறன், ராம், மிஷ்கின் போன்றவர்கள் தானே செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்? தொண்ணூறுகளில் இருந்தே உலக சினிமா குறித்த அறிமுகங்களை மிக அதிகமாக செய்து எழுதி வருபவர்கள் சிறுபத்திகையாளர்களே, பாலுமகேந்திரா கூட அல்ல. முதலில் மிக விரிவான உலக சினிமா தொகுப்பைக் கொண்டு வந்தவர் எஸ்.ரா தானே? ஏன் அப்பணியை சினிமாக்காரர்கள் செய்யவில்லை? இங்கே எஸ்.ரா போன்றோர் செய்த பணி பக்கத்து வீட்டு தாய் தன் பிள்ளைகளைப் பட்டினி போட்டு ஊர் சுற்றப் போகும் போது அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து சோறு போட்டதே. சமூகத்துக்கு அறிவைப் புகட்டும் பாத்திரத்தை இதுவரை ஒரு சினிமா இயக்குநரோ, நடிகரோ, நிபுணரோ செய்ததுண்டா? ரஞ்சித் இப்போது “நீலம்” எனும் ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறார். தமிழ் சினிமா இத்தனை வருட வரலாற்றில் ஏன் மற்றொருவர் கூட அப்படி ஒரு பணியை செய்ததில்லை?

சினிமா பற்றி எழுத்தாளன் எழுதுவதை விடுங்கள். நான் இன்னொரு தீவிர எதிர்நிலை உதாரணத்தைத் தருகிறேன்: தத்துவம் பற்றி எழுதுவது. தமிழில் நான் கடந்த பத்தாண்டுகளாக சாக்ரடீஸ், நாகார்ஜுனர், நீட்சே, ஹைடெக்கர் என தத்துவவாதிகள் பற்றி நிறைய எழுதி வருகிறேன். இப்போது ஹபீப் ஹாதியும் எழுதி வருகிறார். நாங்கள் இருவருமே தத்துவ நிபுணர்கள் அல்ல. நாங்கள் தொழில்முறையாக தத்துவத்தைக் கற்கவில்லை. ஆனால் தமிழில் தத்துவத்துக்கு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. ஹைடெக்கரை விடுங்கள், இங்கே சாக்ரடீஸின் தத்துவத்தை விளக்கும் ஒரு தமிழ் நூல் கூட இல்லை. பிரான்ஸில் பள்ளிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தில் தத்துவம் உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு கல்லூரிகளில் கூட தத்துவப் பாடத்தை இளங்கலை, முதுகலையில் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால் அது ஒரு மிக முக்கியமான அறிவுத்துறை. நான் உயிர்விடும் முன் ஒரு சில நூல்களையாவது எழுதி, தமிழில் இன்னும் சிலரை தத்துவத்தை நோக்கி ஈர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். சில நாட்களுக்கு முன் ஒரு மூத்த எழுத்தாளர் என்னை அழைத்து “ஏன் இப்படி ஹைடெக்கரை கட்டிக்கொண்டு உன் நேரத்தை வீணடிக்கிறாய்?” என கடிந்தார்.” நீ உன் நேரத்தை நாவல், கதைகள் என எழுதுவதற்கு செலவிடு” என்றார். சரி தான், ஆனால் ஒன்று எனக்கு தத்துவம் பிடித்திருக்கிறது, அடுத்து, இத்துறை சார்ந்து எழுத இங்கு யாருமே இல்லையே. தமிழில் யாராவது நாளை தத்துவம் குறித்து வாசிக்க முனைந்தால் அவர்களுக்கு தெளிவான அறிமுகங்களை, ஆர்வமூட்டும் விவாதங்களை விட்டுச்செல்ல வேண்டும் என நினைக்கிறேன். நான் நாகார்ஜுனர் பற்றி லைவில் பேசிய போது  அவரது தத்துவ நோக்கிற்கு ஒரு சிறிய கவனம் ஏற்பட்டதை கவனித்தேன். ஹைடெக்கர் சார்ந்தும் அது ஒருநாள் நிகழும் என நம்புகிறேன். இப்படி எழுத்தாளன் திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுப்பதில் (தத்துவம்) இருந்து கருமாதிக்கு தீச்சட்டி தூக்குவது வரை (சினிமா) பல வேடங்களை புனைய நேர்கிறது.

இன்னொரு விசயம்: சினிமா ஒன்று வந்ததும் நாம் ஏன் இவ்வளவு கவனத்தை அதற்குக் கொடுக்கிறோம்? ஏனென்றால் வெளிவருவது Bresson, Wong Kar-Wai,  பெலினி, கொடார்ட், கீஸ்லாவஸ்கியின் படங்கள் அல்ல. நாம் எதிர்வினையாற்றுவது வணிகப் படங்களுக்கே. அவற்றைப் பார்ப்பது மிகவும் சுலபம். இரண்டு மணிநேரத்தில் சோலி முடிந்து விடும். “சார்பட்டா” கூட நேர்த்தியாக கவனமாக எடுக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்குப் படம் தான். ரஞ்சித் இதே படத்தை Bresson போல எடுத்திருந்தால் இதில் நூறில் ஒரு மடங்கு ஆட்கள் கூட பார்க்கவோ பேசவோ மாட்டார்கள்.

 அடுத்து, இலக்கிய நூல்களுக்கு வருவோம். எழுத்தாளர்களுக்கு விமர்சனம் எழுதும் பொறுப்பு கூட இல்லை என்கிறீர்கள். இது நியாயமற்ற குற்றச்சாட்டு.

Jaya mohan,writer in his home at Nagarkovil,Tamilnadu

 இன்றும் தமிழில் முக்கியமான இலக்கிய நூல்களுக்கு விமர்சனங்கள் வருகின்றன. இலக்கியவாதிகள் தாம் இதையும் எழுதுகிறார்கள். நானே நிறைய எழுதி இருக்கிறேன். இவற்றை வாங்கி வணிக இதழ்களில் பிரசுரிக்க முடியுமா எனப் பார்ப்பதே கூட இலக்கியவாதிகள் தாம். இதை ஒரு குழு அரசியல் நடவடிக்கை என நீங்கள் மட்டையடிக்க அடிக்கக் கூடாது அருண். நான் இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

ஒரு இலக்கிய விமர்சனம் எழுத நிறைய மெனக்கெட வேண்டும். நான்கைந்து நாட்களை அந்த நூலுடன் செலவிட வேண்டும். அது எழுப்பும் சிந்தனைகளை தொகுத்து மொழியில் விமர்சனமாக, அறிமுகமாக செலவிட மூளையைக் கசக்க வேண்டும். நான் ஒருநாள் எங்கோ பக்தினைப் பற்றி குறிப்பிட்டேன் என்பதற்காக கோகுல் என்னிடம் தொடர்ந்து பக்தின் பற்றி கட்டுரை கேட்கிறார். நான் அதை இதுவரை தவிர்த்து வந்திருக்கிறேன் – ஏனென்றால், பக்தினை நான் ஏற்கனவே படித்திருந்தாலும், கட்டுரையாக எழுத நான் மெனக்கெட்டு நிறைய வாசித்து, பொறுமையாக எழுதி திருத்தி ஒழுங்காக்கி அளிக்க வேண்டும். இதுவே அவர் என்னிடம் ஒரு படத்தைப் பற்றி எழுதக் கேட்டால் அடுத்த நிமிடமே எழுத உட்கார முடியும். ஏனென்றால் அதற்கான நேரமும் மெனக்கெடலும் மிகவும் குறைவு. நான் சினிமா விமர்சகன் அல்ல, ஒரு space filler தான் என அறிந்தே செய்கிறேன். என்னிடத்தில் இப்பணியை இன்னும் சிறப்பாக செய்யும் தொழில்முறை விமர்சகன் வந்ததும் நான் விலகி விடுவேன். அரசியல், கிரிக்கெட் போன்ற விசயங்களிலும் என்னைப் போன்ற எழுத்தாளர்கள் செயல்படுவது அங்கு எங்களைப் போன்றோருக்கு ஒரு தேவையும் இடமும் உள்ளது, அங்கு நிபுணர்கள் இல்லை என்பதாலே. இது எழுத்தாளனின் பிரச்சனை அல்ல, இது நம் கலாச்சார சூழலின் பிரச்சனை.

அடுத்து, ஏன் நிறைய சீனியர் எழுத்தாளர்கள் எல்லா புது எழுத்தாளர்களையும் பொருட்படுத்தி கருத்து சொல்வதில்லை என்றால் இந்த சூழல் முழுக்க விஷமாக இருக்கிறது என அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பாதுகாப்புக்கு தம்மைப் பொருட்படுத்துவோரை மட்டும் பாராட்டி ஒரு அணியாக தம்முடன் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள் – இவ்விசயத்தில் நீங்கள் சொல்வது உண்மை தான் அருண். இதற்கு மற்றொரு தீர்வு உள்ளது: இந்த வேலையே பண்ணாமல் இருப்பது. நான் என்னிடம் யார் புத்தகம் அனுப்பி அதைப் பற்றி எழுதக் கேட்டாலும் பண்ண மாட்டேன். வெளிப்படையாகக் கூட சொல்லி விடுவேன் – எனக்கு பிடித்திருந்தால் நானே எழுதுவேன், என்னிடம் கேட்டால் கட்டாயமாக எழுத மாட்டேன் என எனக்கு நெருக்கமான நண்பர்களிடமே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் என் படைப்புக்கே நான் விளம்பரம் பண்ணுவதில்லை. அதில் எனக்கு அருவருப்பு உள்ளது. இங்கு கவனிக்க வேண்டியது விளம்பரம் என்பதே – ஏனென்றால் இலக்கிய விமர்சனம் இங்கு விளம்பர எழுத்து ஆகி விட்டது. ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தால் நானே அப்படைப்பை பாராட்டி விரிவாக எழுதுகிறேன். இல்லாவிட்டால் கடந்து விடுகிறேன்.

சினிமா மொழி தெரியாமல் ஏன் தமிழ் எழுத்தாளன் அங்கு பணியாற்ற வருகிறான் எனக் கேட்கிறீர்கள் அருண் – சினிமாவை விடுங்கள் நாடக நடிப்பு பின்னணி இல்லாத, நடிப்பின் அரிச்சுவடி தெரியாதவர்கள் நடிகர்களாக தமிழ் சினிமாவுக்கு வருவதில்லையா? நோட்ஸ் கூட எழுதத் தெரியாமல் இளையராஜா இசையமைக்க வரவில்லையா? ஏ.ஆர் ரஹ்மான் பின்னணி இசை அறிவின்றி வரவில்லையா? எம்.டி வாசுதேவன் நாயரும் உண்ணி.ஆரும் என்ன திரைக்கதையை முறையாகப் பயின்று விட்டா மலையாள சினிமாவில் எழுதினார்கள்? பலதரப்பட்ட திறமையாளர்களை தேவையானபடி பயன்படுத்திக் கொள்வதே இயக்குநரின் பணி. ரஞ்சித் மட்டுமே தமிழ்ப்பிரபாவைப் போல ஒரு எழுத்தாளனை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என சாரு சித்ரா லஷ்மணின் பேட்டியில் சொல்வதில் உண்மையுள்ளது. தமிழ் சினிமாவுக்குள் நிறைய கதை வறுமை உள்ளது. அங்கு பகுதி நேர பீட்சா டெலிவரிப் பையனை போல பணிசெய்யும் ஒரு எழுத்தாளன் தன் பங்களிப்பை சரிவர செய்ய முடிவதில்லை. ஒரு கதை இலாகாவை நிறுதி அதில் பல படைப்பாளிகளை தொடர்ந்து பணியாற்ற அழைத்தால், அவர்களை சரிவர இயக்குநர் பயன்படுத்தவும் செய்து, அவர்களும் போகப்போக தம்மை தகவமைக்கவும் செய்தால் இப்பிரச்சனை சரி ஆகி விடும். தமிழில் என்ன நடக்கிறது? கார்த்திக் சுப்புராஜ் அ.முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவலை படமாக்கும் உரிமையை வாங்கிக் கொள்கிறார். அதை வைத்து ஒரு தனி படம் இயக்கும் முன்பே வெளிவரும் “ஜகமே தந்திரத்தில்” அந்நாவலில் இருந்து சில காட்சிகளை பிய்த்துப் போட்டு பயன்படுத்திக் கொள்கிறார். முத்துலிங்கத்துக்கு படத்தின் கிரெடிட்ஸில் எந்த அங்கீகாரமும் இல்லை. “அதான் மொத்தமா காசு கொடுத்தாச்சே” எனும் மனப்பான்மை. இதுவே ராம் அ.முத்துலிங்கத்தின் ஒரு சிறுகதையின் ஊக்கத்தில் ஜன்னல் கண்ணாடியை கவனிக்காமல் அங்கு தொடர்ந்து மோதி உயிர்விடும் பறவையின் சித்திரத்தை “தரமணி” படத்தின் ஒரு பாடல் காட்சியில் வைத்திருப்பார். அக்கதைக்கும் ராமின் கதைக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஆனாலும் ராம் நாணயமாக அதை பாடலின் நடுவில் குறிப்பிட்டு அ.முத்துலிங்கத்தை அங்கீகரித்திருப்பார். அவர் எங்கே கார்த்திக் சுப்புராஜ் எங்கே? தமிழ் சினிமா இப்படித்தான் எழுத்தாளனை பொதுவாக மதிக்கிறது.

 நான் மீண்டும் சொல்லுகிறேன் – ஒரு நாவலாசிரியன் திரைக்கதையின் உத்தியை சிறப்பாக அறிந்திருக்க அவசியம் இல்லை. அவன் திரைக்கதைக்கு உதவுகிற ஒரு கரட்டு வடிவத்தை சிறு நாவலாகவோ அல்லது தன் பாணியிலான வடிவ நேர்த்தியற்ற திரைக்கதையாகவோ எழுதி வழங்கலாம் (தமிழ்ப்பிரபா “சார்பட்டாவுக்கு” செய்ததைப் போல). அதை வைத்து தொடர்ந்து விவாதித்து, திருத்தி தன் திரைக்கதையை இயக்குநர் உருவாகிக் கொள்ளலாம். ஹாலிவுட்டில் ஒரு எழுத்தாளனின் நாவல் படமாக்க உரிமை பெறுகிறவர்கள் அதை ஒரு சினிமா வடிவில் எழுதி அவனிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதில் மேலும் வேலை செய்து மெருகேற்றுகிறார்கள். ஆம், அங்கு தனியான திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு. எழுத்தாளர்களுக்கு மரியாதை அளித்து, கூலி கொடுக்கும் வழக்கமும் உண்டு. தமிழ் சினிமாவில் நடப்பது குழந்தைகளை கடத்தி வந்து கண்ணைப் பற்றி பிச்சையெடுக்க வைப்பது போன்ற அநீதி. நிறைய எழுத்தாளர்கள் எப்படி தாம் விவாதங்களிலும், ஆரம்ப கட்ட திரைக்கதை எழுத்திலும் பயன்படுத்தப்பட்டு படம் நிறைவடையாமல் போனாலோ கைவிடப்பட்டாலோ கூலியே இன்றி துரத்தப்படுகிறார்கள் என என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார்கள். கௌதம் மேனன் தனக்கு அதை எப்படிச் செய்தார் என சித்ரா லஷ்மணனின் பேட்டியில் சாரு வெளிப்படையாகவே சொல்கிறார். இதை ஒரு தொழிநுட்ப கலைஞனுக்கோ, நடிகனுக்கோ, இசைக்கலைஞனுக்கோ இந்த இயக்குநர்கள் செய்வதுண்டா? இல்லை, மாட்டார்கள்.

இருந்தும், புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தானே நீங்கள் சினிமாவுக்குப் போகிறீர்கள் எனக் கேட்கிறீர்கள் அருண். நீங்கள் இக்கேள்வியை ஜெயமோகனை மனதில் வைத்து தான் எழுப்புகிறீர்கள் என தெரியும். ஆனால் பொதுவாக பதில் சொல்லுகிறேன் – எழுத்தாளன் பணத்தையும் புகழையும் நாடுவதில் எந்த தவறும் இல்லை. ஜெயமோகன் தான் வேலை பார்க்கும் படங்கள் மோசமாக வர வேண்டும் என திட்டமிட்டா மோசமாக திரைக்கதை எழுதுகிறார்? இல்லை. அவருடைய பங்களிப்பை எழுத்தாளனாக அளிக்கும் போது அதை இயக்குநர் சரிவர பயன்படுத்த முடியாவிட்டால் அது அவர் தவறா? இல்லை. அவர் எங்காவது தன்னை ஒரு தொழில்முறை திரைக்கதையாளனாக முன்வைத்ததுண்டா? எஸ்.ரா அப்படி செய்ததுண்டா? இல்லையே. அடுத்து, நீங்கள் அவர்களுடைய “சினிமா ஆத்மசுத்தியை” கேள்வி கேட்கிறீர்கள். அவர்கள் இலக்கியத்தில் ஒரு தூய்மைவாதத்தை முன்வைக்கிறார்கள் என்றால் அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. சினிமாவில் அவர்களால் அதே தூய்மைவாத அணுகுமுறையுடன் படங்களைத் தேர்வு செய்ய முடியுமா? இங்கு ஒரு வியாபார நோக்கமற்ற மாற்று சினிமா உள்ளதா? இருந்தால் தானே தேர்வு செய்ய. நீங்கள் ரோட்டில் போகிறீர்கள். அங்கு குப்பையாக இருக்கிறது. அப்போது அவ்வழி வரும் ஒரு துப்புரவுப் பணியாளப் பெண்ணிடம் “ஏம்மா உன் வீட்டை இப்படித்தான் சுத்தமில்லாம வச்சிருப்பியா? ரோட்டுக்கு ஒரு நியாயம், உன் வீட்டு ஒரு நியாயமா?” எனக் கேட்பது போல உள்ளது இது. எப்படி மொத்த சாலையின் பரிசுத்தத்துக்கும் ஒரு துப்புரவுத் தொழிலாளி பொறுப்பாக முடியாதோ அதே போல ஒரு வணிகப்படம் குப்பையாக போய் முடிவதற்கு ஒரு எழுத்தாளன் பொறுப்பேற்று கழுவேற முடியாது. எனக்கு ஜெயமோகன் மீது பல விமர்சனங்கள் உள்ளது; ஆனால் இவ்விசயத்தில் நீங்கள் வைக்கிற குற்றச்சாட்டை நான் ஏற்க முடியாது. அதே போல ஜெ.மோ மீதுள்ள கோபத்தில் நீங்கள் கடனே என “ரோட்டைப் பெருக்க நேர்ந்த” எல்லா எழுத்தாளர்களையும் துடைப்பக்கட்டையால் அடிக்கக் கூடாது. அதைப் படிக்கும் பலர் எந்த எழுத்தாளனுக்கும் அறிவோ சுரணையோ இல்லை என நினைத்துக் கொள்வார்கள்.

இறுதியாக, வேறு பலரும் ஏன் இலக்கியவாதிகள் சினிமாவை இவ்வளவு சீரியஸாக எடுத்து எழுதுகிறார்கள் என (அருணைப் போல) பேஸ்புக்கில் வினவுகிறார்கள். சாருவும் பல இடங்களில் “தமிழர்களுக்கு சினிமா ஒரு மதம் போல உள்ளது” என்று சொல்லி இருக்கிறார். நமக்கு உண்மையில் சினிமா போதை அதிகமாகி விட்டதா? இதைப் பற்றி பேச விரும்பும் நண்பர்களுக்கு நான் ஆனி டிலார்ட் எழுதிய The Writing Life எனும் நூலை பரிந்துரைக்கிறேன். டிலார்ட் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர். தோரோவைப் போல இயற்கையை முன்வைத்து இருப்பு குறித்து சிலாகிப்புடன் கவித்துவத்துடன் தேன் சொட்ட சொட்ட எழுதக் கூடியவர். டிலார்டுக்கு பூச்சியியலும் ஆர்வம் அதிகம். அவர் தனது சுயானுபவக் கட்டுரைகளில் பூச்சிகள், பறவைகள், விமான சாகச விளையாட்டுகள் ஆகியவற்றை எழுத்தாளனின் படைப்பாக்க உளவியலுடன் ஒப்பிட்டு எழுதுவார். மேற்சொன்ன நூலில் ஓரிடத்தில் அவர் ஒரு அறிவியல் பரிசோதனையைப் பற்றி பேசுகிறார் – விஞ்ஞானிகள் ஒரு ஆண் பட்டாம்பூச்சியை பெண் பட்டாம்பூச்சியின் அருகே கொண்டு வைக்கிறார்கள். சற்று நேரத்தில் அவை இணக்கமாகின்றன. ஆண் பெண்ணை நோக்கி ஈர்க்கப்பட்டு தன் மையலை வெளிப்படுத்துகிறது. பெண் அதை ஏற்று தன்னை புணர்ச்சிக்கு ஒப்புக்கொடுக்கிறது. ஆண் பெண்ணுடன் இணையும் சமயம் விஞ்ஞானிகள் ஒரு கார்ட்போர்டால் ஆன பெரிய, வண்ணமூட்டிய பட்டாம்பூச்சியை அங்கே வைக்கிறார்கள். அதைக் கண்டு ஈர்க்கப்படும் ஆண் தன் இணையை விட்டு விட்டு அந்த கார்ட்போர்டு பட்டாம்பூச்சியிடம் சென்று அதன் மீது ஏறி புணர முயல்கிறது. இந்த முயற்சி பல நிமிடங்கள் தொடர்கிறது. இதைப் பற்றி சொல்லும் டிலார்ட் உடனடியாக ஈர்க்கிற, வண்ணமயமான பெரிய உருவகங்கள், அசைவுகளை நோக்கி தன்னை செலுத்துவது உயிர்களின் அடிப்படையான இயல்பு, ஒரு வணிக திரைப்படத்தை நோக்கி ஆர்வம் கொள்ளும் மனிதர்களும் அப்படியே என்கிறார்.

உயிருள்ள பெண் பட்டாம்பூச்சி இலக்கியம் என்றால் கார்ட்போர்டு பட்டாம்பூச்சி சினிமா. இலக்கிய நூலையும் ஒரு விஜய் படத்தையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்தால் தமிழன் விஜய் படத்தைப் பார்க்கவே விரும்புவான். எழுத்தாளனும் இந்த பட்டியலில் வருவான். (அவனும் மனிதன் தானே.) ஆனால் இதன் பொருள் நாம் சதாசர்வ காலமும் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறோம் என்றல்ல. சினிமாவின் எல்லை எதுவென அடிப்படையான அறிவு கொண்ட எவருக்கும் தெரியும். தன் நுண்ணுணர்வுக்கு, அறிவுத்தேடலுக்கு, கற்பனைக்கு இலக்கியத்தாலே தீனி போட முடியும் என மனிதர்களுக்குத் தெரியும் என்று சொல்லும் டிலார்ட் அந்த பரிசோதனையின் முடிவையும் சொல்லுகிறார் – அந்த ஆண் பட்டாம்பூச்சி சிறிது நேரத்தில் சோர்வுற்று இது வேலைக்காகாது என நிஜப் (பெண்) பட்டாம்பூச்சியிடம் சென்று தன் “ஜீவநோக்கத்தை” முடித்துக் கொண்டது. மக்களும் வணிக சினிமா பார்த்து முடித்ததும் வாழ்வின் அடிப்படைகளை அறிய இலக்கியம் நோக்கியே திரும்பியாக வேண்டும்.

முக்கியமான விசயம், டிலார்ட் சொல்கிறார், ஒரு நிஜப்பட்டாம்பூட்டி கார்ட்போர்டு பட்டாம்பூச்சியைக் கண்டு பொறாமைப்படக் கூடாது. வணிக சினிமா பக்கமாக கரை ஒதுங்கும் படைப்பாளிகளும் இதை அறிவார்கள். உடனே “நீங்களும் சினிமாவை நீச்சக்கலை” எனச் சொல்கிறார்களா எனக் கேட்காதீர்கள் அருண். திரும்பவும் முதலில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்க முடியாது.