திரையில் விரியும் இந்திய மனம் -15

கி.ராஜநாராயணனின் “கனிவு” என்ற சிறுகதையில், ஒரு கிராமத்தில் புதிதாகத் திருமணமான தம்பதி இருப்பார்கள். அந்த ஊர் வழக்கப்படித் திருமணம் முடித்தவுடன் முதல் இரவு என்ற ஏற்பாட்டைப் பெரியவர்கள் செய்விப்பது இல்லை. கனிந்தவுடன் மணமக்கள் தாங்களாகவெ ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலை உண்டாக அவரவர் மனப்பக்குவத்தின்படி வாரக்கணக்கோ மாசக்கணக்கோ ஆகிவிடும். அதோடு சீக்கிரம் இணங்கிவிடுகிற பெண்ணை சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது. பெண்ணுக்கு ஆணும் இளைத்தவனில்லைதானே?! இந்த விளையாட்டைக் குடும்பத்தின் பெரியவர்கள் பார்க்காததுபோல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தித் திரைப்படம் Love and Shukla. சித்தார்த்த் ஜாட்லா இயக்கி உள்ள இப்படத்தில் பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த மும்பை மாநகரத்தின் ஆட்டோ டிரைவரான சுக்லாவின் வாழ்வியல் விரிகிறது. சுக்லாவுக்குப் பெண் உடல் குறித்த நேரடி அனுபவம் இல்லை. வீட்டில் அவனுக்கு லட்சுமி என்கிற அழகிய இளம் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பாக போர்ன் படங்கள் பார்ப்பது, நண்பர்களின் கேலியும் தவறுமான அறிவுரைகள் ஆகியவற்றின் வாயிலாகவே உடல் உறவு குறித்த அறிவின் போதாமையோடு இருக்கிறான். அப்பா அம்மாவோடு தாராவியில் வசிக்கும் சற்றே பெரிய புறாக்கூண்டு அளவிலான வீட்டில் வசிக்கிறான். தனி அறை இல்லாத அவ்வீட்டில் அப்பா அம்மாவோடும் புதிதாக மணம் புரிந்த லட்சுமியோடும் அவனது நாட்கள் நகரும் அவஸ்தையைக் காட்சிப்படுத்தி இருப்பதில் நேர்மையும் உண்மையும் இருக்கிறது. லட்சுமி வெட்கம் மிகுந்த பெண்ணாக இருப்பதும், வீட்டுச் சூழலும் அவர்களை உடல், மனதளவில் நெருங்கவிடாமல் செய்கிறது.

கூடுதலாக சுக்லாவின் சகோதரியும் திருமணமான கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு சுக்லா வீட்டுக்குத் திரும்பி வருகிறாள். ஒரு பறவைக் கோணக் காட்சியை இயக்குநர் வைத்திருப்பார். அப்பா அம்மாவும் படுத்திருக்க, அருகில் சுக்லாவின் சகோதரி படுத்திருக்கிறாள். மூன்று சூட்கேஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்ட தடுப்பைத் தொடர்ந்து சுக்லாவும் மனைவியும். இந்த ஒரு காட்சியே கதையைத் தெளிவுறப் பேசிவிடும்.

சுக்லாவின் அம்மா, வீட்டின் சர்வாதிகாரியாக சாதா பேசும் கதாபாத்திரம். அப்பாவோ மந்திரம் சொல்ல மட்டுமே வாய் திறப்பவர். சுக்லாவின் மனைவி வாயே திறக்காதவள். சுக்லாவின் சகோதரி காய்கறிக் கடையில் வைத்துத் தன் அந்தரங்கத்தைப் பேசுபவள். இந்த முரணான கதாபாத்திரங்களுக்கு இடையே கெட்டிக்காரத்தனமும் இல்லாத, அப்பாவியாகவும் இல்லாத ஒரு கதாபாத்திரம் சுக்லா.

வாடகைக்கு ஓட்டும் ஆட்டோரிக்​ஷாவில் அவனுக்கு மிகவும் பிடித்த நடிகை சோனாக்​ஷி சின்ஹாவின் படத்தை நிறைத்து சுக்லா ஒட்டி வைத்திருப்பான். பிராமண அம்மாவின் அறிவுரைப்படி பெண்களை ஏறிட்டும் பார்க்காதவன் செல்ஃபோனில் போர்ன் படங்களைத் தொடர்ந்து ரசிப்பவன். அதுகுறித்து கேள்வி கேட்கும் நண்பர்களிடம் அவன் கூறும் பதில் நகைப்புக்குரியது. ஆபாசப் படங்களில் வருவது நம்நாட்டுப் பெண்கள் அல்ல என்று அவன் கூறும்போது அந்தப் பாத்திரத்தின் சித்தரிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே சுக்லா ஒரு கட்டத்தில் வேறு மாதிரியானவனாக மாற விழைகிறான்.

இந்தப் படத்தில் எல்லா பாத்திரங்களும்  பூ, தலை என்று இரண்டு பக்கங்கள் கொண்ட நாணயங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தனது நண்பர்கள் சொல்லும் உடலுறவு குறித்த தவறான அறிவுரைகளால் குழம்புவது, பிரயாணிகளிடம் பணத்தைப் பெறமுடியாமல் ஏமாறுவது என்று இருக்கும் சுக்லா, தன் மனைவியை நெருங்குவதற்காக எல்லாரிடமும் வாதாடும் இடங்களில் தெளிவுடன் இருக்கிறான்.

பிராமணர் குடும்பமாக இருந்தாலும் நகரத்தின் நெருக்கடி மிகுந்த குடியிருப்பில் வசிப்பது, ஆட்டோ டிரைவர் தொழிலாலும் தோற்றத்தாலும் ஏளனத்துக்குள்ளாவது என்று இப்படம் வர்க்க அரசியலைப் பேசுகிறது. மகள், மருமகளிடம் காட்டும் வேறுபாட்டைத் தனது அம்மாவுக்கு சுக்லா புரியவைத்தவுடன் அவள் மனம் மாறுவது நாடக பாவனையாக இருக்கிறது. பல சமூக, உளவியல் பிரச்சனைகள் ஆழமாகவும் சில பிரச்சனைகள் மேலோட்டமாகவும் அணுகப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பார்வையாளன் முயற்சி செய்தால், தானே ஒரு புரிதலைக் கண்டடைய முடியும்.

படத்தில் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் சுக்லா உரையாடும் இடங்கள் புத்துணர்ச்சியாக இருக்கின்றன. ஒளிப்பதிவின் நேர்த்தி நெருக்கடி மிகுந்த இடத்தில் வசிக்கும் உணர்வைத் தருகிறது. சுக்லா தொடக்கத்தில் அவளை உடல்ரீதியாகவே அடைந்துவிட முயல்கிறான். அதற்கான சூழலை வீடும் மனிதர்களும் பகல் இரவு பாராமல் தர மறுக்கின்றனர். வேறு வழியின்றி அவளோடு வீட்டுக்கு வெளியே நிகழ்த்தும் சந்திப்பில் அவன் பாத்திரம் அவனுக்கே தெரியாமல் ஒரு மனமுதிர்வை வெளிக்கொணர்கிறது.

சுக்லாவின் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் பல்வேறு மனநிலைகளை ஒரே காட்சியில் படம் இயல்பாக வெளிப்படுத்துகிறது. பயணங்களில்தான் எத்தனை விதமான மனிதர்கள் தட்டுப்படுகின்றனர்?! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அறிமுகமாகின்றனர்.

கூச்சமிகுந்த லட்சுமி தானாகக் கனிந்து வருவதற்காக சுக்லாவும், கைவிட்டுப் போன கணவன் திரும்பி வருவதற்காக சுக்லாவின் சகோதரியும், இழந்த வீட்டு அதிகாரத்தை அன்பின் முயற்சியால் சமன்செய்ய சுக்லாவின் அம்மாவுமாகப் பலரும் உறவு கனியும் தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

பொருளாதாரம் ஒரு மனிதரின் வாழ்வின் அந்தரங்கத்துக்குள் நுழைகிறது. அதை உடைக்கிறது. எல்லாம் தாண்டி, இந்தியச் சூழலில் மிகை உணர்ச்சியுடன் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கும் கூட்டுக் குடும்ப மாயையைப் படம் தகர்க்கிறது. ஒரு காட்சியில் வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களைக் காட்டிவிட்டுக் கேமரா மேலெழும்பும். கூண்டுகளாக காட்சிதரும் வீடுகள் திரைமுழுக்க நிரம்பும். வீட்டுக்கு வீடு எண்ணிலடங்கா பொருளாதாரப் பிரச்சனைகளும் உறவுச் சிக்கல்களும் உள்ளன என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஒவ்வொரு மனிதரின் அந்தரங்கமும் முக்கியமானது. உறவை முன்னிறுத்திக் கூட எவரும் தலையிடக்கூடாது. நடைபாதையில் விண்மீன் பார்க்க முடிவதெல்லாம்  கவிதைகளில் மட்டுமே ரசிக்கத்தக்கவை. சுற்றி இருக்கும் நான்கு சுவர்களின் நம்பிக்கையில் திளைத்து உடலுறவு கொள்வதும் மனம் விட்டு உறவாடுவதும் ஆண்-பெண் உறவைக் கனிவுக்குள் வைக்கிறது. குடும்ப உறவின் சிக்கல்களில் இருந்து விடுபடும் அதே நேரம், உறவு இழந்துவிடாமலும் பேண வேண்டியிருக்கிறது. இது பொருளாதாரம், சமூக அரசியல் சார்ந்த ஒரு செயல்பாடு. இதற்கு தனிமனிதர்களின் பக்குவங்களும் மனமுதிர்ச்சியும் தேவைப்படுகின்றன. மனைவிக்கு வளையல் வாங்கித் தருவதற்குக் கூட அந்தரங்கம் இல்லாத சூழலில் உறவுகள் என்னவாகின்றன என்பதைப் பேசியிருக்கும் வகையில் முக்கியமான திரைபப்டம் இது.

மின்னஞ்சல்: stalinsaravanan@gmail.com

Movie: Love and Shukla

Year: 2017

Language: Hindi

Platform: Netflix

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
  2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
  3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
  4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
  5. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
  6. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
  7. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
  8. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
  9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
  10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
  11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
  12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
  13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
  14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
  15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
  16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
  17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்