நாம் வாழும் காலம் – 8

பள்ளி நண்பர்களில் சிலர் மாரத்தான் ஓட்டங்களில் சொல்லிவைத்துக்கொண்டு குழுவாகப் பங்குபெறுவார்கள். சில நேரம், வெவ்வேறு நகரங்களில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பாகவும் அமையும். இறுதி இலக்கைத் தொட்டு மெடல்களோடு எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களையும் எத்தனை தூரத்தை எத்தனை மணிநேரத்தில் என்ன வேகத்தில் கடந்தார்கள் என்ற தகவல்களையும் வாட்ஸப் குழுமத்தில் பகிர்வார்கள். எண்பது பேர் இருக்கும் குழுமத்தில் ஏழெட்டு பேர்தான் ஓட்டக்காரர்கள். மீதிப் பேரெல்லாம் ஓடியவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் புகைப்படங்களில் இருக்கும் பழைய நண்பர்கள் மூன்று பத்தாண்டுகள் கடந்த பின்னரும் எப்படி பள்ளியில் பார்த்ததுபோலவே இருக்கிறார்கள் என்று சிலாகிப்போம். (எனக்கு ஒரு சிலரைப் பள்ளியில் பார்த்த நினைவுகூட இருக்காது என்பது தனிக்கதை.) அவர்களின் ஓட்டத்தைவிடவும் அவர்கள் சாப்பிடப்போன உணவகத்தின் பெயரைக் குறித்துவைத்துக்கொண்டு அடுத்த சந்திப்புக்கு அங்கே போவது எனப் பேசிக்கொள்வதில் ஆர்வம் அதிகமாகத் தொனிக்கும்.

மெய்நிகர் மாரத்தான் ஓட்டம்

கோவிட்-19 தொற்றினால் மாரத்தான் ஓட்டங்கள் நேரடியாகப் பொதுவெளியில் நடைபெறுவது முடக்கப்பட்டாலும் ஒரு சில மாதங்களில் சுதாரித்துக்கொண்டு மெய்நிகர் உலகில் தொடர்ந்து நடைபெறத் துவங்கின. அதெப்படி மாரத்தான் ஓட்டத்தை மெய்நிகர் உலகில் நடத்தமுடியும் என்ற கேள்வி எனக்கும் எழுந்தது. ஓட்டக்காரர்கள் அவரவர் தேர்ந்தெடுத்த இடத்தில் இருந்தபடியே ஓடலாம். ஒரு குறிப்பிட்ட நாளோ சில நாட்களோ போட்டிக்கான காலமாக அறிவிக்கப்படும். மாரத்தான் ஓடுபவர் பெயரைப் பதிவுசெய்து, கட்டணத்தைச் செலுத்தி, எத்தனை தூர ஓட்டம் என எல்லாத் தகவலையும் இணையத்தில் பதிவேற்றம் செய்வதோடு வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள இடத்தையோ அல்லது வீட்டில் உள்ள ட்ரெட்மில்லையோ ஓடப்போகும் இடமாகக் குறிப்பிடலாம். மாரத்தானை ஓடி முடித்த நேரத்தையும் தான் ஓடியதற்கான சாட்சியாகப் படத்தொகுப்பையும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். ஃபிட்பிட் அல்லது ஸ்மார்ட்ஃபோன் செயலியில் இருந்தும் தகவலை அனுப்பலாம். ஒருங்கிணைப்பாளர்கள் நீங்கள் அனுப்பிய தகவல்களைச் சரிபார்த்துவிட்டுப் பதக்கத்தை அனுப்பிவைப்பார்கள். இப்படி என்ன நடந்தாலும் மாரத்தான் ஓட்டத்தை நிறுத்துவதில்லை என்ற நண்பர்களின் மன உறுதி நிச்சயம் பாராட்டுக்குரியது. பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாமே முடங்கிக் கிடந்தபோது இதுபோன்ற மெய்நிகர் நிகழ்வுகள்தாம் கொஞ்சமாவது உற்சாகத்தோடு இருக்க உதவின.

மாரத்தான் ஓட்டம் தொடங்கிய கதை

மாரத்தான் ஓட்டத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள 2500 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா.

காலம்: கி. மு. 490. பண்டைய கிரேக்கத்தின்மீது படையெடுத்து வந்த பாரசீகப் படை மில்சியாதஸ் என்ற படைத்தலைவனின் திறமையால் தோற்கடிக்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தகவலை ஏதென்ஸ் நகரத்தில் இருந்த ஆட்சியாளர்களிடம் தெரிவிக்க மாரத்தான் போர்க்களத்தில் இருந்து புறப்பட்டார்  ஃபிடிப்பிடெஸ் என்ற தூதுவர். இந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான 40 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் ஒரே ஓட்டமாக ஓடிக் கடந்தார். ஏதென்ஸ் ஆட்சியாளர்களிடம் “மகிழ்ச்சிகொள்ளுங்கள், நாம் வெற்றி பெற்றோம்” என்று தான் சொல்லவந்த தகவலைச் சுருக்கமாகச் சொல்லிமுடித்ததும் மயங்கி விழுந்து உயிர்நீத்தார்.

ஃபிடிப்பிடெஸ் நெடுந்தூர ஓட்டத்துக்குப் புதியவரல்ல. தகவல்களைத் தாங்கிச் செல்லும் நெடுந்தூர ஓட்டக்காரராகப் பயிற்சிபெற்றவர். மாரத்தான் சமவெளியில் இருந்து ஏதென்ஸுக்கு வெற்றித் தகவலைச் சொல்ல ஓடுவதற்கு முன்னால் பாரசீகப் படையை எதிர்கொள்வதற்காக ஸ்பார்ட்டா நகர ஆட்சியாளர்களின் படை உதவிகேட்டு 240 கிலோமீட்டருக்கு ஓடி முடித்திருந்தார். வரலாற்றில் இந்த நிகழ்வுகள் எப்படிப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று புரட்டிப் பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது.

கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடெட்டஸ் உதவிகேட்டுச் சென்ற முதல் ஓட்டத்தைப் பற்றிமட்டுமே தன்னுடைய நூலில் பதிவுசெய்தார், வெற்றித் தகவலை எடுத்துச் செல்லும் இரண்டாவது ஓட்டத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்று ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்போ இரண்டாவது நிகழ்வினைப் பதிவுசெய்தவர் கிரேக்க அங்கத எழுத்தாளரான லூசியான் என்கிறது. இன்னுமொரு தரப்போ ப்ளூடார்க் என்ற கிரேக்க எழுத்தாளர் இந்த நிகழ்வினைப் பற்றி எழுதியிருக்கிறார் என்றும் ஆனால் வெற்றிபெற்ற தகவலை எடுத்துச்சென்ற தூதுவரின் பெயர் தெர்ஸிப்பஸ் அல்லது யூக்ளிஸ் என்கிறது.

எது எப்படியோ. கிட்டத்தட்ட 2400 ஆண்டுகளுக்குப் பிறகு 1879-இல் ராபர்ட் ப்ரவுனிங் என்ற ஆங்கிலேயக் கவி இந்த நிகழ்வினை மையமாகக் கொண்டு ‘ஃபிடிப்பிடெஸ்’ என்ற கவிதையை எழுதினார். ஃபிடிப்பிடெஸ் தான் ஓடிமுடித்த இரண்டு ஓட்டங்களைப் பற்றியும் விவரிக்கும் உணர்ச்சிமிகுந்த கவிதை. ‘அறுவடை முடிந்த வயலில் பற்றியெரியும் நெருப்பைப்போல ஓடினான் என்றும் வெற்றிச் செய்தியைச் சொல்லும்போது மண்பாண்டத்தில் ஊறும் மதுவைப்போல களிப்பு அவன் இரத்தத்தில் ஊறி இதயத்தை விம்மச் செய்த பேருவகையில் கீழே விழுந்து உயிர்நீத்தான்’ என்றும் வர்ணிக்கிறார் கவிஞர்.

இந்தக் கவிதை ஏற்படுத்திய தாக்கத்தால் மைக்கேல் ப்ரியல் என்பவரின் முயற்சியால் 1896-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட தற்கால ஒலிம்பிக்ஸில் மாரத்தான் ஓட்டமும் ஒரு போட்டியாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மாரத்தான் ஓட்டம் இடம்பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.

தற்கால ஒலிம்பிக்ஸில் மாரத்தான் ஓட்டம்

தற்கால ஒலிம்பிக்ஸின் முதல் மாரத்தான் ஓட்டம் பண்டைய மாரத்தான் சமவெளியில் இருந்து ஏதென்ஸ் நகரில் இருந்த பண்டைய ஒலிம்பிக்ஸ் விளையாட்டரங்கில் முடிந்தது. மொத்தம் பதினேழு ஓட்டக்காரர்கள் சுமார் 40 கிலோமீட்டர் (24.8 மைல்) தூரத்தைக் கடந்தனர். குதிரையிலும் மோட்டார் பைக்கிலும் சவாரிசெய்த அறிவிப்பாளர்கள் விளையாட்டரங்கில் இருந்த ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பந்தயம் குறித்த தகவல்களைக் கொண்டுசேர்த்தனர்.

பந்தயம் துவங்கியபோது முன்னிலையில் இருந்த பிரெஞ்சு வீரர் இன்னும் எட்டு கிலோமீட்டரை மட்டுமே கடக்கவேண்டும் என்றபோது போட்டியில் இருந்து விலகினார். அடுத்து முன்னிலை வகித்த ஆஸ்திரேலிய வீரர் வழியில் மயங்கி விழுந்தார். இப்போது எல்லோரையும் முந்திச் செல்வது யாரென்று எல்லோரும் ஆவலோடு காத்திருந்தபோது அவர் ஒரு கிரேக்க வீரர் என்பது தெரியவந்தது. அவர் பெயர் ஸ்பைரிடன் லூயி, வயது 23. அதுவரையிலும் நடைபெற்ற எந்த விளையாட்டிலும் கிரேக்க விளையாட்டு வீரர்கள் வெற்றிபெறவில்லை என்று சோகமாக இருந்த கிரேக்க மக்களை உற்சாகம் தொற்றிக்கொண்டது. “ஹெலேன், ஹெலேன்”, என்று கத்தத் துவங்கினார்கள். (ஹெலேன் என்றால் கிரேக்கர் என்று பொருள்).

ஸ்பைரிடன் லூயி வெற்றி இலக்கைத் தொடப்போவது தெரிந்ததும் பார்வையாளர்களாக வந்திருந்த கிரேக்க அரச குடும்பத்தின் முடி இளவரசரும் அவரது தம்பியும் தடகளத்தில் இறங்கி அவருடன் ஓடத் துவங்கினார்கள். அரங்கத்தில் இருந்தவர்கள் ‘லூயி, லூயி’ என்று உற்சாகத்துடன் கத்தியபடி பூக்களையும் தொப்பிகளையும் அவர்மீது வீசி எறிந்தனர். கிரேக்க  நாட்டு அரசர் இருக்கையைவிட்டு எழுந்து நின்று கைதட்டினார். மற்றவர்கள் லூயியைக் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

முதல் மாரத்தான் வெற்றியாளரின் கதை   

ஸ்பைரிடன் லூயி வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை ஏதென்ஸ் நகரில் கனிம நீரை விநியோகம் செய்யும் தொழிலைச் செய்துவந்தார். லூயி தந்தைக்கு உதவியாக இருந்தார். இராணுவத்தில் பணிபுரிந்தபோது லூயியின் கர்னலாக இருந்தவருக்கு அவருடைய ஓட்டத் திறமை தெரியவந்தது. ஒலிம்பிக்ஸில் இடம்பெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என லூயிக்கு உற்சாகமூட்டியவர் அவர்தான்.

வெற்றிபெற்றதும், “என்ன பரிசு வேண்டும்,” என லூயியிடம் அரசர் கேட்டார். எதை வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம் என்றாலும் ஏற்கனவே செய்துகொண்டிருந்த கனிம நீர் விநியோகத்துக்கு உதவியாக கழுதை பூட்டப்பட்ட வண்டி வேண்டும் என்று கேட்டாராம். இதை என்னவென்று சொல்வது. போதுமென்ற மனமா, அசட்டுத்தனமா, இல்லை என்ன கேட்பது என்று தெரியாமல் உளறிவிட்டாரா ⎯ இனி எப்போதும் அந்தக் காரணத்தை அறிந்துகொள்ளமுடியாது.

தங்கம் வென்ற உற்சாக மிகுதியில் கிரேக்க மக்கள் லூயிக்கு விதவிதமான பரிசு தர முன்வந்தார்கள். ஒரு சவரக்கடையில் வாழ்நாள் முழுவதும் இலவசமாகச் சவரம் செய்துகொள்ளலாம் என்று சொன்னார்கள். இவற்றையெல்லாம் லூயி ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவில்லை. இன்றளவும் கிரேக்கத்தில் லூயியின் பெயரில் பல விளையாட்டு அமைப்புகளும் ஏதென்ஸ் நகரின் விளையாட்டரங்கம் ஒன்றும் இருக்கின்றன. ஆனால் லூயி அந்த முதல் ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு விளையாட்டைவிட்டே விலகினார். 1936-ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்ஸில் கிரேக்க முடி இளவரசருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் சரி. மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றதற்காக லூயிக்கு வழங்கப்பட்ட வெள்ளிக் கோப்பை 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸின்போது க்றிஸ்டீஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. அதை 860,000 அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கிய கிரேக்க நிறுவனம் ஒன்று அதை இப்போது ஏதென்ஸில் இருக்கும் கலாச்சார மையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.

பாஸ்டன் மாரத்தான் ஓட்டம் 

ஒலிம்பிக்ஸில் ஒரு விளையாட்டாக மாரத்தான் சேர்த்துக்கொள்ளப்பட்ட அடுத்த ஆண்டு (1897) அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் துவங்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்ததும் புகழ்பெற்றதும் பாஸ்டன் மாரத்தான்தான். இரண்டு உலகப் போர்கள் நடந்தபோதும் அமெரிக்காவில் மாபெரும் பொருளாதாரத் தொய்வு ஏற்பட்டபோதும்கூட பாஸ்டன் மாரத்தான் நிறுத்தப்படவில்லை. 2020-ஆம் ஆண்டு ஊரடங்கின்போது மட்டும் வழக்கமாக நடக்கும் தேதியில் இருந்து ஒத்திவைக்கப்பட்டு மெய்நிகர் ஓட்டமாக நடந்தது. இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 125-வது பாஸ்டன் மாரத்தான் நேரடி ஓட்டமாகவும் மெய்நிகர் வடிவிலும் நடைபெறப்போகிறது.

மாரத்தானில் ஓடிய பெண்கள்

இன்று வட துருவம் தென் துருவம் சீனப் பெருஞ்சுவர் முதல் விண்வெளி வரையிலும் எல்லா இடத்திலும் மாரத்தான் ஓட்டங்கள் நடக்கின்றன. ஒரு வருடத்தில் சுமார் 1000 மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போது பரவலாக நடைபெறும் மாரத்தான் பந்தயங்களில் ஆரம்பக் காலத்தில் ஆண்கள் மட்டுமே பங்குபெற முடியும். நீண்ட தூரம் ஓடுவது பெண்களுடைய உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று நினைத்தார்கள். நெடுந்தூர ஓட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமென பெண்கள் ஆர்வமாக இருந்தாலும் இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்களால் தடுக்கப்பட்டார்கள்.

1896-இல் நடைபெற்ற முதல் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில் கலந்துகொள்ள ஸ்டமட்டா ரெவிதி என்ற முப்பது வயதுப் பெண் விருப்பம் தெரிவித்தார். அதிகாரிகள் போட்டியில் பங்குகொள்ள அவருக்கு அனுமதி வழங்க மறுத்தார்கள். ரெவிதி அசரவில்லை. ஆண்களின் பந்தயம் நடந்துமுடிந்த மறு நாள் தன்னந்தனியராக ஓடினார். புறப்படும் இடமான மாரத்தான் நகரில் ஓட்டத் துவக்க நேரத்தைக் குறிப்பிட்டு மேயர், ஆசிரியர், நீதிபதி ஆகியோரின் கையழுத்தை அத்தாட்சியாகப் பெற்றுக்கொண்டார். ஐந்தரை மணிநேரத்தில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்து ஏதென்ஸ் நகர விளையாட்டரங்கினுள் நுழையப்போனபோது தடுத்து நிறுத்தப்பட்டார். உடனே அங்கிருந்த இராணுவ அதிகாரிகளிடம் தான் வந்துசேர்ந்த நேரத்தைக் குறிப்பிட்டுக் கையெழுத்திட்டுத் தரச் சொன்னார். பிறகு கூடியிருந்த செய்தியாளர்களிடம் கிரேக்க ஒலிம்பிக்ஸ் கழகத்தின் அதிகாரிகளைச் சந்தித்துத் தன்னுடைய சாதனையை அங்கீகரிக்க வேண்டுமென்று கேட்கப்போவதாகச் சொன்னார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த பதிவுகள் எதுவுமில்லை. ஸ்டமட்டா ரெவிதியோடு மெல்பொமெனே என்ற பெண்ணும் ஓடியதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் ஒருவரேதான் என்று வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர்.

பாஸ்டன் மாரத்தான் துவங்கி 76 வருடங்கள் முடிந்த பின்னர் 1972-ஆம் ஆண்டில் பெண்கள் கலந்துகொள்வதை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த நீனா குஸ்கிக் அதன் முதல் பெண் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே மூன்று முறை பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொண்டிருக்கிறார் என்பது சுவாரசியமான தகவல். அவருக்கு முன்னர் 1966-ஆம் ஆண்டில் ராபெர்ட்டா கிப், 1967-இல் கேத்தரின் ஸ்விட்ஸர் எனப் பல பெண்கள் பாஸ்டன் மாரத்தான் குழுவின் அனுமதியில்லாமல் கலந்துகொண்டிருக்கின்றனர். ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் துவங்க இன்னும் பத்தாண்டுகளுக்கு அதிகமாக ஆனது. 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான முதல் மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் பென்வா தங்கப் பதக்கம் வென்றார்.

இதெல்லாம் இருக்கட்டும். மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே நடக்கும் மாரத்தானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸில் 1980-ஆம் ஆண்டு முதல் மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் இடையே மாரத்தான் பந்தயங்கள் நடந்துவருகின்றன. பந்தயத்தில் கலந்துகொள்ளும் குதிரைகளை ஓட்டிச் செல்வதும் மனிதர்கள்தாம். மலைப்பாங்கான நிலத்தில் நடைபெறும் இந்தப் பந்தயத்தின் தூரம் 35 கிலோமீட்டர் (22 மைல்). 2004-ஆம் ஆண்டில் ஹூ லாப் என்பவர் குதிரையைத் தோற்கடித்த முதல் மனிதர் என்ற சிறப்பைப் பெற்றார்.

என்னைப் போன்றோருக்கெல்லாம் தினசரி வாழ்க்கையே மாரத்தான் ஓட்டம்தான். வாரக் கடைசியில்தான் கொஞ்சம் ஓய்வு, அதிலும் பல அலுவல்களும் பிரியமான விஷயங்களும் ‘என்னைச் செய்’ என்று வரிசைகட்டி நிற்கும். எல்லாமே முடங்கிப்போன இந்த ஊரடங்கில் ஓய்வு நேரம் முழுவதையும் எழுத்துக்கும் புத்தகத்துக்கும் மெய்நிகர் உலக சந்திப்புகளுக்கும் ஒதுக்கியாயிற்று. இந்த மாரத்தானுக்கும் வேறுவிதமான மன உறுதி தேவைப்படுகிறதல்லவா.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நாம் வாழும் காலம் – 27 : தையல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் யார்? -கார்குழலி
  2. நாம் வாழும் காலம் – 25 :ஆதிமனிதனின் தையல் கருவி - கார்குழலி
  3. நாம் வாழும் காலம் – 24 : சீனர்களின் முயல் ஆண்டு - கார்குழலி
  4. நாம் வாழும் காலம் – 23 : பிரிட்டிஷ் மணிமுடியும் ட்விட்டர் எமோஜியும் - கார்குழலி
  5. வெகுமக்கள் விளையாட்டான கால்பந்து - கார்குழலி
  6. மணலில் இருந்து கண்ணாடியா, கண்ணாடியில் இருந்து மணலா - கார்குழலி
  7. குவாதமாலாவின் வண்ணமலர்க் கோலங்கள் - கார்குழலி
  8. ஜௌமௌ சூப்–விடுதலைச் சின்னமான எளியவர்களின் உணவு - கார்குழலி
  9. நாம் வாழும் காலம் – 18 : பாலைவனக் கப்பலின் பிறப்பிடம் அமெரிக்கா - கார்குழலி
  10. நாம் வாழும் காலம் - 17 : ஹோண்டுராஸின் புதையுண்ட நகரம் - கார்குழலி
  11. நாம் வாழும் காலம்–16 : ஹாலோவீன்: மூதாதையர் வழிபாட்டில் துவங்கிய கொண்டாட்டம் - கார்குழலி 
  12. நாம் வாழும் காலம் - 15 :  வானில் பறக்கும் வெற்றி வீராங்கனைகள் - கார்குழலி
  13. கீஸா: தோண்டி எடுக்கப்பட்ட சூரியக் கப்பல் - கார்குழலி 
  14. வானவில் : வானில் ஒரு தீபாவளி…. - கார்குழலி
  15. பெரு நாட்டின் அற்புத மலரும் தொங்கு பாலமும் : கார்குழலி 
  16. மரங்கள் பேசும் மவுன மொழி : கார்குழலி
  17. நிலவுப் பயணத்தில் அமெரிக்கர்களை முந்திய ஆமைகள் : கார்குழலி
  18. மூளைக்கு வேலைதரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் : கார்குழலி 
  19. உங்களுக்குச் சீழ்க்கையடிக்கத் தெரியுமா? : கார்குழலி 
  20. வெற்றிச் சின்னமாகும் எவரெஸ்ட் சிகரம் : கார்குழலி
  21. வெறும் விளையாட்டல்ல, வாழ்க்கையின் எதிரொளிப்பு : கார்குழலி
  22. மண்ணில் விளையும் நவமணிகள் : கார்குழலி 
  23. பழங்களின் அரசனின் பயணக் கதைகள் :  கார்குழலி             
  24. வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளும் வளரவேண்டிய உரிமையாளர்களும் : கார்குழலி 
  25. நாம் வாழும் காலம் : கார்குழலி